Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

“சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் 1970-களிலிருந்து 1990-களுக்குள் மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்குப் புவிச்சூடும் காரணமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதும் காரணமாக இருக்கலாம்.”—தி எக்கானமிஸ்ட், பிரிட்டன். (g 2/08)

அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸின் அரசாங்கம், துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான அனுமதியை பத்து மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு வழங்கியிருக்கிறது. அதற்கான அனுமதி கேட்டு அந்தக் குழந்தையின் அப்பா விண்ணப்பித்தார். அந்த அனுமதி ஆவணத்தில் அந்தக் குழந்தையின் உயரம் இரண்டு அடி மூன்று அங்குலம்; எடை, கிட்டத்தட்ட 9 கிலோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஊரில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்காக விண்ணப்பிக்கிறவர்களுக்கு எந்த வயது வரம்பும் இல்லை.—கேபிள் நியூஸ் நெட்வர்க், அ.ஐ.மா. (g 2/08)

கிரீஸில் “16 வயதிற்குட்பட்ட 62 சதவிகித பிள்ளைகள், ஆபாச படங்களை தங்களுடைய செல்போன்களில் ‘டெளன்லோட்’ செய்திருப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.”—எலஃபதரோட்டைபியா, கிரீஸ். (g 3/08)

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் கலந்துகொண்டவர்களில், “82 சதவீதத்தினர் மதம்தான் எல்லா பிரிவினைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணம்” என்று கருதுகிறார்கள்.—த கார்டியன், பிரிட்டன். (g 3/08)

ஜார்ஜியாவில் மத சுதந்திரம் மீண்டும் உறுதியளிக்கப்பட்டது

மதம் என்ற பெயரில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டும்காணாததுபோல் இருந்ததற்காக, ஜார்ஜியா நாட்டு அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்துள்ளது மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம். சாட்சிகளுக்கு இருக்கும் மத சுதந்திரத்தை அந்த நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. அதாவது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக வணக்கத்திற்காகக் கூடிவருவதற்கும் பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்திற்கு மீண்டும் உறுதியளித்தது. அதோடு, வழக்குத் தொடுக்கப்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட செலவுகளுக்காகவும் உடல் சேதத்திற்காகவும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அக்டோபர் 1999-லிருந்து நவம்பர் 2002-க்குள் 138 தடவை யெகோவாவின் சாட்சிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜியா அதிகாரிகளிடம் 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் இந்த வழக்குகளை விசாரிப்பதில் அலட்சியமாக நடந்துகொண்டனர். சாட்சிகள் தாக்கப்படுகையில் அதைத் தடுத்து அவர்களைப் காப்பாற்றுவதற்குக்கூட காவலதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், நவம்பர் 2003-லிருந்து சாட்சிகள் மீதான தாக்குதல் ரொம்பவே குறைந்திருக்கிறது. (g 2/08)

பெண்களைப் புண்படுத்தும் படங்கள்

“பத்திரிகைகளின் அட்டை படத்தில் கவர்ச்சியான உடையில் ஊசிப்போன்ற உடலை உடைய பெண்களைப் பார்க்கையில் எல்லா பெண்களுமே பொறாமையில் புழுங்குகிறார்கள். தாங்கள் குண்டோ ஒல்லியோ குட்டையோ நெட்டையோ சிறியவர்களோ பெரியவர்களோ எப்படி இருந்தாலும் இதுபோன்ற படங்களைப் பார்த்து எல்லா பெண்களுமே பெருமூச்சு விடுகிறார்கள்” என்கிறது அமெரிக்காவிலுள்ள மிஸ்சௌரி-கொலம்பியா என்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை. கல்வி, பள்ளி மற்றும் மனோதத்துவத்தில் அறிவுரை வழங்கும் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் லாரி மின்ட்ஸ் சொல்வதாவது: “மீடியாக்களில் கச்சிதமான உடற்கட்டு என்று சித்தரிக்கப்படும் பெண்களின் படங்களைப் பார்க்கும்போது ஒல்லியாக இருக்கும் பெண்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் அதிகமாய் வருத்தப்படுகிறார்கள் என்று மக்கள் நினைத்தார்கள்.” ஆனால், உண்மையில் “குண்டாக இருந்தாலும் சரி ஒல்லியாக இருந்தாலும் சரி இதுபோன்ற படங்களைப் பார்க்கையில் எல்லாப் பெண்களுமே புண்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம்” என்கிறார் மின்ட்ஸ். (g 2/08)

64 வருடங்களாகத் தலைவலி

60 வருடங்களுக்கும் அதிகமாகத் தன்னை வாட்டி வதைத்த “தீரா தலைவலிக்கான” காரணத்தை கடைசியாகக் கண்டுபிடித்துவிட்டார் அந்த சீனப் பெண்மணி. மூன்று சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு தோட்டாவை டாக்டர்கள் தன் தலையிலிருந்து எடுத்தபோதுதான் அவருடைய தலைவலிக்கான காரணமே அவருக்குத் தெரிந்தது. செப்டம்பர் 1943-ல் அவருக்கு 13 வயதாக இருந்தபோது ஸின்யி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஜப்பானியர்கள் படையெடுத்து வந்த சமயத்தில் இவருடைய தலையில் காயமேற்பட்டது. அவருடைய தலைவலிக்கு தோட்டாதான் காரணமென்று யாரும் கற்பனைக்கூட செய்துபார்க்கவில்லை. நாளுக்குநாள் தலைவலி அதிகரித்ததால், எக்ஸ்ரே எடுத்துப்பார்த்ததில் தலையில் ஒரு குண்டு இருப்பது தெரியவந்தது என்று ஷின்ஹாவா நியூஸ் ஏஜென்ஸி தெரிவிக்கிறது. இப்போது 77 வயதாயிருக்கும் அந்தப் பெண்மணி “நல்ல ஆரோக்கியத்தில்” இருக்கிறார் என்று அந்த நியூஸ் ஏஜென்ஸி தெரிவிக்கிறது. (g 3/08)

பல்லாண்டு வாழ்ந்த திமிங்கலம்

அலாஸ்கா நாட்டு வேட்டைக்காரர்கள் 2007-ல் போஹெட் வேல் (bowhead whale) என்று அழைக்கப்படும் தகட்டெலும்புகள் உடைய ஒரு திமிங்கிலத்தை வேட்டையாடினார்கள். இந்தத் திமிங்கிலத்தின் உடம்பில், மண்டா (harpoon) என்ற பழமையான ஈட்டியின் முனையும் சில துணுக்குகளும் சிக்கியிருந்தது தெரியவந்தது. இவை “[மாஸசூஸெட்ஸ், அமெரிக்கா] நியூ பெட்ஃபோர்டு என்ற நகரத்தில் 1800-களின் இறுதியில் திமிங்கிலத்தை வேட்டையாடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஈட்டிபோன்ற வெடிகுண்டின் சில பாகங்கள்” என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதென த பாஸ்டன் க்ளோப் செய்தித்தாள் தெரிவிக்கிறது. இந்த வகையான கருவி காலப்போக்கில் உபயோகத்தில் இல்லாமற்போனது. எனவே, “1885 முதல் 1895 வரையுள்ள காலப்பகுதியில் எப்போதாவதுதான்” இந்த திமிங்கிலம் வேட்டையாடப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நியூ பெட்ஃபோர்டு வேலிங் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சரித்திராசியர்கள் வந்திருக்கிறார்கள். அப்படியானால், சாகும்போது இந்தத் திமிங்கிலத்தின் வயது, குறைந்தது 115-ஆக இருந்திருக்க வேண்டும். “பாலூட்டி இனத்திலேயே போஹெட் திமிங்கலம்தான் கிட்டத்தட்ட 150 வருடங்கள்வரை வாழும் நீண்ட ஆயுசுள்ள பிராணி என்று வெகுகாலமாக நிலவி வந்த நம்பிக்கைக்கு இந்தக் கண்டுபிடிப்பு மேலும் உறுதியளிக்கிறது” என்கிறது க்ளோப் செய்தித்தாள். (g 3/08)