Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குற்றச்செயலுக்குத் தீர்வு உண்டா?

குற்றச்செயலுக்குத் தீர்வு உண்டா?

குற்றச்செயலுக்குத் தீர்வு உண்டா?

“குற்றச்செயலில் வாடிக்கையாக ஈடுபடுகிற பெரும்பாலோர் சிறைவாசத்தை அனுபவித்த பின்பும்கூட மக்களுக்குத் தொடர்ந்து தொல்லை தருவார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன; அதனால் வரும் நஷ்டத்தை டாலர் கணக்கில் மட்டுமே அளவிட முடியாது. அது விண்ணைத் தொடுமளவுக்கு அதிகரித்துக் கொண்டே போகும்.” —டாக்டர் ஸ்டான்டன் ஈ. சாமனோ எழுதிய குற்றவாளியின் மனதிற்குள்ளே (ஆங்கிலம்).

இவ்வுலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி, நெஞ்சைப் பதறவைக்கும் புதுப்புது குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவதுபோல் தெரிகிறது. ஆகவே, இவ்வாறு கேட்பது நியாயம்தான்: கடும் அபராதங்கள், சிறை தண்டனைகள் போன்றவை குற்றச்செயலில் ஈடுபடாதபடி மக்களைத் தடுக்கின்றனவா? சிறைவாசம், குற்றவாளிகளை நல்லவர்களாக மாற்றுகிறதா? மிக முக்கியமாக, இன்றைய சமுதாயம் குற்றச்செயலுக்கான ஆணிவேரைக் கண்டறிந்து அதைப் பிடுங்கியெறிய முயன்றிருக்கிறதா?

குற்றச்செயலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் குறித்து டாக்டர் ஸ்டான்டன் ஈ. சாமனோ இவ்வாறு எழுதுகிறார்: “[ஒரு குற்றவாளி] ஒருமுறை சிறைக்குச் சென்று வந்த பிறகு, இன்னும் தந்திரமாகவும் படு ஜாக்கிரதையாகவும் நடக்க ஆரம்பிக்கலாம்; அதே சமயத்தில், அவன் தொடர்ந்து மற்றவர்களை ஏமாற்றி குற்றச்செயல்களில் ஈடுபடலாம். மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் புள்ளிவிவரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், மறுபடியும் பிடிபடுகிற ஒரு குற்றவாளி கவனமில்லாமல் செயல்பட்டு மாட்டிக்கொள்வதே.” அப்படியானால், சிறைச்சாலைகள் உண்மையில் குற்றவாளிகளுக்கான பயிற்சிக்கூடங்களாகவே ஆகிவிடுகின்றன; சமூகவிரோத செயல்களைப் புரிவதற்கான திறமைகளை வளர்த்துவிடும் இடங்களாக அவை ஆகிவிடுகின்றன.—பக்கம் 7-ல் உள்ள “ சிறைகள் ‘குற்றங்களைக் கற்றுத்தரும் பள்ளிகளா?’” என்ற பெட்டியைப் பாருங்கள்.

இன்னும் சொல்லப்போனால், குற்றங்களில் ஈடுபடுகிற பலர் அதற்குரிய தண்டனையைப் பெறுவது கிடையாது; ஆகவே, குறுக்குவழியில் சென்றால் நல்ல ஆதாயம்தான் என்ற எண்ணம் கேடிகளின் மனதில் துளிர்விடுகிறது. இந்த எண்ணம் அவர்களை இன்னும் ஆபத்தானவர்களாக ஆக்கலாம்; துணிந்து செயலில் இறங்கத் தூண்டலாம். ஞானமுள்ள அரசர் ஒருவர் ஒருசமயம் இவ்வாறு எழுதினார்: “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.”—பிரசங்கி 8:11.

குற்றம் புரிவோர்—சூழ்நிலைக் கைதிகளா, விரும்பித் தேர்ந்தெடுத்தவர்களா?

பிழைப்புக்கு வேறு வழியே இல்லாததால்தான் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? “கடும் ஏழ்மையிலும், பொருளாதார நெருக்கடியிலும், நம்பிக்கையிழந்த மனநிலையிலும் தவிப்பவர்களே குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்றும் அதனால் குற்றங்கள் புரிவது சகஜம்தான் என்றும் அதில் எந்தத் தவறும் இருக்காது என்றும் நான் நினைத்தேன்” என்று சாமனோ ஒப்புக்கொள்கிறார். என்றாலும், அதைக் குறித்து பல ஆராய்ச்சிகளைச் செய்த பிறகு அவர் தன் மனதை மாற்றிக்கொண்டார். “குற்றம் புரிபவர்கள் விரும்பித்தான் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குற்றச்செயலுக்கு ‘காரணம்’ [ஒருவருடைய] வாழ்க்கைச் சூழல் அல்ல, ஆனால் அவருடைய மனதில் எழும் சிந்தனைகளே” என்று அவர் முடிவாகச் சொன்னார். “ஒருவருடைய சிந்தனையே அவருடைய செயலாக வடிவம்கொள்கிறது. எந்தவொரு செயலையும் அதைச் செய்வதற்கு முன்பே சிந்திக்கிறோம், அதைச் செய்யும்போதும் சிந்திக்கிறோம், அதைச் செய்த பிறகும் சிந்திக்கிறோம்” என்றும் அவர் தொடர்ந்து சொன்னார். ஆகவே, குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதுவதற்குப் பதிலாக “அவர்கள் விரும்பித்தான் அவ்வாறு நடக்கிறார்கள், மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்ற முடிவுக்கு அவர் வந்தார். a

“விரும்பித்தான் . . . நடக்கிறார்கள்” என்பதே இதில் முக்கியமான விஷயம். சொல்லப்போனால், சமீபத்தில் வெளிவந்த பிரிட்டிஷ் செய்தித்தாளின் தலைப்புச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “குற்றச்செயல்களே, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் நகர்புற வாலிபர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைப்பணியாக இருக்கிறது.” எதையும் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் திறன் மனிதருக்கு இருக்கிறது, அதோடு கஷ்டமான சூழ்நிலையிலும்கூட தங்களுக்குப் பிடித்தமான வழியை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும். உண்மைதான், லட்சக்கணக்கானோர் சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் அநீதியோடும், வறுமையோடும் தினம்தினம் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்; ஒருவருக்கொருவர் ஒட்டுறவில்லாத குடும்பங்களில் அவர்கள் ஒருவேளை வாழ்ந்து வரலாம்; ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளாக ஆவது கிடையாது. “குற்றச்செயல்கள் நடப்பதற்குக் காரணம் குற்றவாளிகளே ஒழிய சுற்றுவட்டாரத்தில் உள்ள மோசமான ஆட்களோ, கையாலாகாத பெற்றோரோ, . . . வேலையில்லாத் திண்டாட்டமோ அல்ல. குற்றங்கள் மனிதரின் மனதிற்குள் குடியிருக்கின்றன, சமுதாய சூழ்நிலைகளை அதற்கு காரணங்காட்ட முடியாது” என்று சாமனோ சொல்கிறார்.

குற்றங்கள் மனதுக்குள் உருவெடுக்கின்றன

ஒரு நபர் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அவருடைய மனமே காரணம், சந்தர்ப்ப சூழ்நிலை அல்ல என்று பைபிள் தெரிவிக்கிறது. ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கிறது’ என்று யாக்கோபு 1:14, 15 கூறுகிறது. ஒரு நபர் கெட்ட விஷயங்களையே சதா நினைத்துக் கொண்டிருக்கும்போது, தவறான ஆசைகள் அவருடைய மனதில் வேர்பிடித்து வளருகின்றன. இத்தகைய ஆசைகள் மோசமான செயல்களுக்கு வழிநடத்தலாம். உதாரணமாக, ஆபாசக் காட்சிகளை அவ்வப்போது பார்ப்பது ஒரு நபரின் மனதுக்குள் வக்கிர ஆசையை வளர்க்கலாம். காலப்போக்கில், மனதில் தோன்றிய ஆசைகளின்படி அவர் செயல்படலாம்; ஒருவேளை சட்டவிரோதமான வழியிலும்கூட தன் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள அவர் தூண்டப்படலாம்.

இன்றைய உலகம் சுயநலத்திற்கும், பணத்திற்கும், சுகபோகத்திற்கும், ஆசைகளை உடனுக்குடன் திருப்தி செய்துகொள்வதற்கும் முக்கியத்துவம் தருவது நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயமாக இருக்கிறது. நாம் வாழும் காலத்தைக் குறித்து பைபிள் இவ்வாறு முன்னுரைத்தது: ‘கடைசிநாட்களில் . . . மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3:1-5) வருத்தகரமான விஷயம் என்னவென்றால், திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், புத்தகங்கள், முன்னுதாரணமாய் திகழ வேண்டியவர்களின் கெட்ட நடத்தைகள் ஆகியவற்றின் மூலம் இந்த உலகம் மோசமான சுபாவத்தை ஊக்குவிக்கிறது; இதனால் குற்றச்செயல்கள் இன்னும் தழைத்தோங்குகின்றன. b இருந்தாலும், தனிப்பட்ட விதமாக ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், ஒருகாலத்தில் இப்படிப்பட்ட காரியங்களுக்கு அடிபணிந்த சிலர் தங்களுடைய கண்ணோட்டத்தையும் வாழ்க்கை முறையையும் முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள்.

மாற்றம் சாத்தியமே!

ஒருமுறை குற்றம் புரிந்தவர் எப்போதும் குற்றம் புரிபவராகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குற்றச்செயல் புரிவதை வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்திருப்பதுபோல, “புதிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும், தன் கடமைகளைச் சரிவர செய்யவும் [அவன் அல்லது அவள்] கற்றுக்கொள்ள முடியும்” என்று குற்றவாளியின் மனதிற்குள்ளே என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.

மக்களுடைய பின்னணி எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி அவர்களால் மாற முடியுமென்பதை அனுபவம் காட்டுகிறது. c ஒருவர் தன் மனநிலையையும் எண்ணங்களையும் சிந்திக்கும் விதத்தையும் மாற்றிக்கொள்ள மனமுள்ளவராக இருப்பது அவசியம்; அப்போதுதான் நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கும் மனித நெறிகளை அல்ல, ஆனால் ஒருபோதும் மாறாத படைப்பாளரின் நெறிகளை அவர்களால் பின்பற்ற முடியும். சொல்லப்போனால், நம்மைப்பற்றி எல்லாம் தெரிந்தவர் படைப்பாளரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல், மனித குடும்பத்துக்கு எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை கடவுளுக்கு இருக்கிறது, அல்லவா? இதற்காகவே, தேவ பயமுள்ள சுமார் 40 பேரைக் கொண்டு மனிதருக்காக ஒரு வழிகாட்டு நூலை எழுதும்படி அவர் செய்திருக்கிறார். இன்று அதை நாம் பரிசுத்த பைபிள் என்று அழைக்கிறோம். மனிதன் சந்தோஷத்தோடும் நல்ல நோக்கத்தோடும் வாழ்வதற்காக கடவுள் தந்த வழிகாட்டி என இந்நூலை நாம் அழைப்பது சாலப் பொருத்தமானதே.—2 தீமோத்தேயு 3:16, 17.

பாவம் செய்வதற்கான நம் இயல்புடன் போராட வேண்டியிருப்பதால், கடவுளுக்குப் பிடித்தமான நபர்களாக நம்மைநாமே மாற்றிக்கொள்வது கடினமாக இருக்கலாம். சொல்லப்போனால், ஒரு பைபிள் எழுத்தாளர் அவருடைய மனதிற்குள் நடைபெறும் இம்மோதலை ‘போராட்டம்’ என விவரித்தார். (ரோமர் 7:21-25) இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு அவர் தன்னுடைய சொந்த பலத்தில் சார்ந்திருக்கவில்லை; மாறாக, கடவுளின் பலத்தில் சார்ந்திருந்தார்; ஏனெனில், கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தையே ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.

சத்தான “உணவு” தரும் சக்தி

உடல் ஆரோக்கியமாக இருக்க சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். அதோடு, அந்த உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், அது ஜீரணமாகவும் வேண்டும்; இதற்கு நேரமும் முயற்சியும் தேவை. அதுபோலவே, நாம் ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமாக இருக்க கடவுளுடைய வார்த்தையை நன்றாக “மென்று” சாப்பிட வேண்டும்; அப்போதுதான் நம் மனமும் இருதயமும் அதைக் கிரகித்துக்கொள்ளும். (மத்தேயு 4:4) ‘உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். . . . அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்’ என்று பைபிள் சொல்கிறது.—பிலிப்பியர் 4:8, 9.

பழைய சுபாவத்தைக் களைந்துபோட்டு புதிய சுபாவத்தைத் தரித்துக்கொள்ள வேண்டுமென நாம் விரும்பினால், கடவுளின் சிந்தனைகளையே நாமும் ‘சிந்தித்துக் கொண்டிருக்க’ வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இதற்கு பொறுமை அவசியம்; ஏனென்றால், ஆன்மீக வளர்ச்சி ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது.—கொலோசெயர் 1:9, 10; 3:8-10.

ஒரு பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள்; அவள் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானாள்; பின்னர், போதை மருந்துக்கும், மதுவுக்கும், புகையிலைக்கும் அடிமையானாள்; அதோடு பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டாள்; அதனால் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாள். சிறையில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள்; தான் கற்றுக்கொண்ட சத்தியத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள். இதனால் கிடைத்த பலன்? தன் பழைய சுபாவத்தை அவள் படிப்படியாக மாற்றி, கிறிஸ்துவைப் போன்ற புதிய சுபாவத்தை வளர்த்துக் கொண்டாள். இப்போது தீங்கிழைக்கும் எண்ணங்களையும் கெட்ட பழக்கங்களையும் அவள் அறவே விட்டொழித்துவிட்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த பைபிள் வசனங்களில் ஒன்று 2 கொரிந்தியர் 3:17. “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என்று அவ்வசனம் கூறுகிறது. ஆம், அவள் சிறையில் அடைபட்டிருந்தாலும், முன்னொருபோதும் கிடைத்திராத விடுதலையை அனுபவித்து வருகிறாள்.

கடவுள் இரக்கமுள்ளவர்

யெகோவா தேவனின் பார்வையில், திருந்தவே திருந்தாத பேர்வழி என்று யாருமே கிடையாது. d “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” என்று கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து கூறினார். (லூக்கா 5:32) உண்மைதான், பைபிளிலுள்ள நெறிமுறைகளின்படி வாழ்க்கையை மாற்றுவது சவாலாக இருக்கலாம். இதில் வெற்றிகாண பொறுமை அவசியம்; அதோடு கடவுள் செய்திருக்கும் அன்புள்ள ஏற்பாடுகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். ஆன்மீக சிந்தையுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பான ஆதரவும்கூட கடவுள் நமக்கு செய்திருக்கும் ஓர் ஏற்பாடுதான். (லூக்கா 11:9-13; கலாத்தியர் 5:22, 23) பைபிளிலுள்ள நெறிமுறைகளின்படி மக்கள் தங்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்கள்; உலகெங்குமுள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று நல்மனமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்; இவ்வாறு பைபிளைப் படிக்கும் பலர் ஒருகாலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள். e சிறைகள் பலவற்றில் சாட்சிகள் வாரந்தோறும் கூட்டம் நடத்துகிறார்கள்.—எபிரெயர் 10:24, 25.

முன்னாள் கேடிகள் சிலர் திருந்தி உண்மைக் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்; இருந்தாலும், ‘அக்கிரமம் மிகுதியாகும்’ என்று பைபிள் வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. (மத்தேயு 24:12) பைபிளிலுள்ள முக்கியமான ஒரு தீர்க்கதரிசனத்தின் பல அம்சங்களில் இது ஒன்று; அதில் சில நற்செய்திகளும் உள்ளன, அவற்றை நாம் அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம். (g 2/08)

[அடிக்குறிப்புகள்]

a மனநிலை பாதிப்பே சில குற்றச்செயல்களுக்குக் காரணமாயிருக்கலாம்; குறிப்பாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தெருக்களில் திரிவதற்கும் விடப்பட்ட நாடுகளில் இவை நடக்கின்றன. என்றாலும், இந்தச் சிக்கலான விஷயத்தைப்பற்றி பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

b குற்றச்செயலைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு விழித்தெழு! பிப்ரவரி 22, 1998, பக்கம் 3-9-ல் “குற்றச்செயல் இல்லா ஓர் உலகம்—எப்பொழுது?” என்ற கட்டுரையையும் ஆகஸ்ட் 8, 1985, பக்கங்கள் 3-12-ல் உள்ள “நம் தெருக்களில் குற்றச்செயல் ஒழியும் காலம் வருமா?” என்ற ஆங்கில கட்டுரையையும் பாருங்கள்.

c பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு ரவுடித்தனமான வாழ்க்கையை விட்டுவிட்டவர்களின் அனுபவங்கள், இப்பத்திரிகையிலும் இதன் துணைப் பத்திரிகையான காவற்கோபுரத்திலும் அடிக்கடி வெளிவந்திருக்கின்றன. விழித்தெழு! ஜூலை 2006, பக்கங்கள் 11-13 மற்றும், அக்டோபர், 8, 2005, பக்கங்கள் 20-21-ஐயும், காவற்கோபுரம், ஜனவரி 1, 2000, பக்கங்கள் 4-5; அக்டோபர் 15, 1998, பக்கங்கள் 27-29; பிப்ரவரி 15, 1997, பக்கங்கள் 21-24-ஐயும் பாருங்கள்.

d பக்கம் 29-ல் உள்ள “பைபிளின் கருத்து: மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

e பக்கம் 9-ல் உள்ள “சிறைவாசிகளுக்கு ஆன்மீக உதவி” பெட்டியைப் பாருங்கள்.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

வறுமையில் வாடும் லட்சக்கணக்கானோர் குற்றச்செயல் புரிவதில்லை

[பக்கம் 6, 7-ன் பெட்டி/படம்]

“இரண்டு வருடங்களில் மீண்டும் சிறையில்”

இங்கிலாந்தில், லண்டன் மாநகரில் வெளிவரும் த டைம்ஸ் செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்தியே இது. பிரிட்டனில், வீடு புகுந்து கொள்ளையடிப்பது, திருடுவது ஆகியவற்றிற்காக சிறை தண்டனை பெற்றவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு வருடங்களில் மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறார்கள். போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான நபர்களே இத்தகைய அநேக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்; கெடுதி நிறைந்ததும், எக்கச்சக்கமான விலையுமுள்ள இந்த போதை மருந்துக்களை வாங்க அவர்களுக்கு பணம் தேவைப்படுவதே அதற்குக் காரணம் என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.

[பக்கம் 7-ன் பெட்டி]

 சிறைகள் ‘குற்றங்களைக் கற்றுத்தரும் பள்ளிகளா’?

“சிறைகள் குற்றங்களைக் கற்றுத்தரும் பள்ளிகளே” என்று யூசிஎல்ஏ லா ரிவ்யூ பத்திரிகையில் பேராசிரியர் ஜான் ப்ரேத்வேட் எழுதுகிறார். குற்றவாளியின் மனதிற்குள்ளே என்ற ஆங்கில புத்தகத்தில், “பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அனுபவப்பாடம் கிடைத்துவிடுகிறது” என்று டாக்டர் ஸ்டான்டன் ஈ. சாமனோ சொல்கிறார். ஆனால், அவர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென சமுதாயம் விரும்புகிறதோ அதைக் கற்றுக்கொள்ளாமல், சமுதாயத்திற்கு கெடுதல் விளைவிப்பவற்றையே கற்றுக்கொள்கிறார்கள். “குற்றம்புரிவதில் கில்லாடிகளாவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நிறைய நேரமும் வாய்ப்பும் சிறையில் ஒரு நபருக்குக் கிடைக்கிறது. . . . சொல்லப்போனால், சிலர் கடைந்தெடுத்த அயோக்கியர்களாகி விடுகிறார்கள்; குற்றச்செயலில் மும்முரமாக இறங்கிவிடுகிறார்கள்; அதேசமயத்தில் மாட்டிக்கொள்ளாத அளவுக்கு படு சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள்.”

அப்புத்தகத்தின் பிற்பகுதியிலுள்ள ஓர் அத்தியாயத்தில் சாமனோ இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு குற்றவாளியை சிறையில் அடைப்பதால் அவனுடைய இரத்தத்தில் ஊறிய குணங்கள் மாறுவது கிடையாது. அவன் சிறைக்கு உள்ளே இருந்தாலும்சரி, வெளியே இருந்தாலும்சரி புதுப்புது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்கிறான், ‘தொழில்’ சம்பந்தமாக புதுப்புது உத்திகளைக் கற்றுக்கொள்கிறான், தனக்குத் தெரிந்த சில தகவல்களை மற்ற குற்றவாளிகளுக்குக் கொடுக்கிறான்.” “சிறையில் இருந்ததால், எப்படி குற்றம் புரிவதென கற்றுக்கொடுக்கும் வாத்தியாராவதற்கான தகுதிகள் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்று ஓர் இளம் குற்றவாளி கூறினான்.