Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குற்றச்செயல் இல்லாத காலம்—விரைவில்

குற்றச்செயல் இல்லாத காலம்—விரைவில்

குற்றச்செயல் இல்லாத காலம்—விரைவில்

“இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்.”—சங்கீதம் 37:10.

நம்முடைய படைப்பாளராகிய யெகோவா தேவன் மனிதகுலத்தின்மீது ஆழ்ந்த அக்கறை உள்ளவர். சிலர் நினைப்பதுபோல் அவர் மனிதரிடம் எந்த ஒட்டுறவுமின்றி ஒதுங்கியிருப்பவர் அல்லர். (சங்கீதம் 11:4, 5) அதேசமயத்தில், மனிதர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் ஒவ்வொரு அநியாயத்தையும் அவர் பார்க்கிறார், மனிதரின் கண்களுக்குத் தப்புகிற காரியங்களையும்கூட அவர் பார்க்கிறார். “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.” (நீதிமொழிகள் 15:3) ஆகவே, அநியாயம் அக்கிரமம் செய்கிறவர்கள் ‘சறுக்கலான இடங்களில் நிற்கிறார்கள்’ என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.—சங்கீதம் 73:12, 18.

நேர்மையானவர்களும் ஒழுக்கசீலர்களும் ஒருவேளை ஏழைகளாக இருக்கலாம், மற்றவர்களால் மட்டம் தட்டப்படலாம்; என்றாலும் அவர்களுக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு [அதாவது, எதிர்காலம்] சமாதானம்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 37:37) இன்று வாழும் நமக்கு இவ்வார்த்தைகள் மனதுக்கு இதமூட்டும் அருமருந்தாக இருக்கலாம். ஏனென்றால், விரைவில் இந்த எதிர்பார்ப்பு உலகெங்கும் நிறைவேறுவதைக் காணும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம்

சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு, இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அவரிடம் ‘உலகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டார்கள். அன்று அவர்கள் கேட்ட இந்தக் கேள்வி நம் நாட்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. (மத்தேயு 24:3) இதற்கு இயேசு கொடுத்த விவரமான பதிலை பைபிளில் மத்தேயு 24-ஆம் அதிகாரத்திலும், மாற்கு 13-ஆம் அதிகாரத்திலும் லூக்கா 21-ஆம் அதிகாரத்திலும் காணலாம். தற்போதைய உலகின் கடைசி நாட்களில் போர், பஞ்சம், நோய், பெரும் பூமியதிர்ச்சிகள் ஆகியவை ஏற்படும் என்றும் அக்கிரமம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்றும் இந்த மூன்று சுவிசேஷ புத்தகங்களும் விவரிக்கின்றன.

இயேசு முன்னறிவித்த இப்படிப்பட்ட கொடிய காரியங்கள் 1914-ல் ஆரம்பமாயின. ஏஜ் ஆஃப் எக்ஸ்ட்ரீம்ஸ் என்ற புத்தகத்தில் 20-ஆம் நூற்றாண்டு, “சரித்திரத்தின் ஏடுகளில் பெரிதும் இரத்தக்கறை படிந்த நூற்றாண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என சரித்திராசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுகிறார்.

இன்று கட்டுக்கடங்காமல் பெருகிவரும் தீமையைக் குறித்து பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.” (சங்கீதம் 92:7) ஆம், அத்தாட்சி அதையே காட்டுகிறது. அறுவடைக்குத் தயாராய் நிற்கும் பயிரைப்போல அக்கிரமம் தழைத்தோங்கியிருப்பது அதன் அழிவு சமீபம் என்பதையே காட்டுகிறது. இது ஒரு நற்செய்தி, அல்லவா?—2 பேதுரு 3:7.

‘நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்’

“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என சங்கீதம் 37:29 சொல்கிறது. எல்லாவித குற்றச்செயல்களும் அநீதிகளும் சுவடுதெரியாமல் மறைந்துபோகும். ஆகவே, குற்றச்செயலோடு சம்பந்தப்பட்டவை, அதாவது, எச்சரிக்கை ஒலியெழுப்பும் கருவிகள், பூட்டுகள், நீதிமன்றங்கள், வக்கீல், போலீஸ், சிறைச்சாலைகள் என எதுவும் இருக்காது. “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—ஏசாயா 65:17.

ஆம், இந்தப் பூமியிலும் மனித சமுதாயத்திலும் முன்னொருபோதும் இராதளவுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படும். (ஏசாயா 11:9; 2 பேதுரு 3:13) இதுவே, யெகோவாவின் சாட்சிகள் கொண்டிருக்கிற உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். பரிசுத்த பைபிளை எழுதும்படி தமது ஆவியினால் தூண்டியவர் “பொய் கூறாத கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்.—தீத்து 1:3, பொது மொழிபெயர்ப்பு. (g 2/08)

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

சிறைவாசிகளுக்கு ஆன்மீக உதவி

கடந்த பல வருடங்களாகவே அமெரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சிறைவாசிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு கடிதம் எழுதியவர்கள் 4,169 சிறைச்சாலைகளிலும் கைதிகளுக்கான மருத்துவமனைகளிலும் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களிலும் உள்ளவர்கள். சிலர், பைபிள் பிரசுரங்களைக் கேட்டும் இன்னும் சிலர் தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டும் அந்தக் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். இதற்கான தகுதிகளைப் பெற்ற யெகோவாவின் சாட்சிகள் அவர்களைப் போய்ச் சந்திக்கிறார்கள். சொல்லப்போனால், உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆன்மீக உதவியை நாடிய ஆண் கைதிகளுக்கும் பெண் கைதிகளுக்கும் தவறாமல் பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இவர்களில் பலரும் தங்களுடைய சுபாவத்தில் பெரும் மாற்றங்களைச் செய்து, முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதோடு, சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் நபர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.