Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குற்றச்செயல் கைமீறிப் போய்விட்டதா?

குற்றச்செயல் கைமீறிப் போய்விட்டதா?

குற்றச்செயல் கைமீறிப் போய்விட்டதா?

◼ மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மாணவன், இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளுடன் வந்து தன் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுத்தள்ளுகிறான்.

◼ மழலை மொழி மாறாத மகள் கடத்தப்பட்டதால் பெற்றோர் மாளா துயரத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

◼ ஒரு டீனேஜ் பையன், துடிதுடித்துச் சாவதைப் பார்த்து ரசிப்பதற்காக ஒருவரைக் கொன்றதாகவும், அந்தப் பிரேதத்தை தன் நண்பர்களுக்குக் காட்டியதாகவும் ஒத்துக்கொள்கிறான்; அதை அவனுடைய நண்பர்கள் பல வாரங்களுக்கு வெளியே சொல்லாமல் கமுக்கமாக வைத்திருந்தார்கள்.

◼ பிள்ளைகளைப் பாழாக்கி தங்களது காமப்பசியைத் தீர்த்துக்கொள்ளத் துடிப்போருக்கு இன்டர்நெட்டில் டிப்ஸ் வழங்குகிறான் காமவெறி பிடித்த ஒருவன்.

இப்போதெல்லாம் இதுபோன்ற திடுக்கிட வைக்கும் செய்திகளே மீடியாக்களில் அதிகம் அடிபடுகின்றன. நீங்கள் வசிக்கும் பகுதியில் எந்தப் பதற்றமுமின்றி பத்திரமாய் இருப்பதாக நினைக்கிறீர்களா, அதுவும் முக்கியமாய் இரவு நேரங்களில்? உங்களையோ உங்கள் குடும்பத்தாரையோ குற்றச்செயல் பாதித்திருக்கிறதா? உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோர், ஏன், ஒருசமயம் ஓரளவு பாதுகாப்பு நிலவியதாக கருதப்பட்ட நாடுகளில் வசிப்போரும்கூட சதா குற்றச்செயலைப் பற்றிய பயத்தில் வாழ்கிறார்கள். பல நாடுகளிலிருந்து வரும் பின்வரும் சுருக்கமான அறிக்கைகளைப் பாருங்கள்.

ஜப்பான்: ஏஷியா டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “ஒரு காலத்தில், உலகின் பாதுகாப்புமிக்க நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது ஜப்பான். . . . அங்கு மக்கள் பயமின்றி பத்திரமாய் வாழ்ந்த காலமெல்லாம் இப்போது மலையேறிப்போய்விட்டது; பாதுகாப்பான நாட்டில் வாழ்கிறோம் என்ற உணர்வு அவர்களுடைய மனதிலிருந்து அகன்று அதற்குப் பதிலாக, குற்றச்செயலையும் உலகளாவிய தீவிரவாதத்தையும் குறித்த பயமே குடிகொண்டிருக்கிறது.”

லத்தீன் அமெரிக்கா: சாவோ போலோவில், நகர்ப்புறங்களிலுள்ள கொரில்லாக் குழுக்கள் போரில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக அங்குள்ள முக்கியப் பிரமுகர்கள் கணித்திருக்கிறார்கள்; இதை 2006-ல் வெளியான ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. அவ்வப்போது வாரக்கணக்கில் நீடித்த வன்முறைகளின் காரணமாக, நகர வீதிகளில் படைவீரர்களை உடனடியாக காவலுக்கு நிறுத்தும்படி நாட்டின் பிரெஸிடென்ட் உத்தரவிட்டார். மத்திய அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும், “கிட்டத்தட்ட 50,000 பேரைக்கொண்ட இளம் ரவுடி கும்பல்களால், அப்பகுதியிலுள்ள அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள்” என டியம்போஸ் டெல் முன்டோ செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை கூறுகிறது. “2005-ஆம் வருடத்தில் மட்டுமே எல் சால்வடார், ஹோண்டுராஸ், குவாதமாலா ஆகிய நாடுகளிலுள்ள இளம் ரவுடி கும்பல்களால் சுமார் 15,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்” என்றும் அந்தச் செய்தித்தாள் கூறுகிறது.

கனடா: “ரவுடி கும்பல்களின் எண்ணிக்கை அதிரவைக்குமளவுக்கு அதிகரித்திருப்பதாக குற்றவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்” என 2006-ல் யுஎஸ்ஏ டுடே குறிப்பிட்டது. “போலீசார் . . . டோரான்டோவில் 73 ரவுடி கும்பல்களை இனங்கண்டுள்ளனர்” எனவும் அது குறிப்பிட்டது. நகர்ப்புறங்களில் ரவுடி கும்பல்கள் பெருகிவருவதைத் தடுத்து நிறுத்துவது அவ்வளவு சாமானியமல்ல என்று டோரான்டோவிலுள்ள போலீஸ் அதிகாரி சொன்னதாகவும் அது குறிப்பிட்டது.

தென் ஆப்பிரிக்கா: “குற்றச்செயல்களைப் பற்றிய பீதியால் தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார்கள்” என ஃபினான்ஷியல் மெய்ல் பத்திரிகையில் குற்றவியல் ஆய்வாளரான பாட்ரிக் பர்ட்டன் குறிப்பிடுகிறார். “ஆயுத முனையில் திருடுவது, கடத்திச் செல்வது, வங்கியை கொள்ளையடிப்பது போன்ற வன்முறை செயல்கள்” இதில் அடங்கும் என அது கூறுகிறது.

பிரான்சு: வீட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கிற பலர் ஒவ்வொரு நாளும் பயத்திலேயே வாழ்கிறார்கள். “இடிந்து கிடக்கும் மாடிப்படிகளில் ஏறும்போதும், ஆபத்தான இடங்களாக மாறிவரும் கார் நிறுத்தங்களுக்குப் போகும்போதும், இருட்டிய பிறகு பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும்” அவர்கள் தினம்தினம் பயந்து சாகிறார்கள்.—கார்டியன் வீக்லி.

அமெரிக்கா: ரவுடி கும்பல்களால் குற்றச்செயலின் விகிதாச்சாரம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. அங்குள்ள ஒரு மாகாணத்தில் சுமார் 700 ரவுடி கும்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் ஆண்கள் பெண்கள் என கிட்டத்தட்ட 17,000 இளைஞர்கள் இருப்பதாகவும் போலீசார் நடத்திய ஆய்வு காட்டியது. அதோடு, நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 10,000 பேர் அதிகரித்திருக்கிறார்கள் என்றும் த நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

பிரிட்டன்: சின்னஞ்சிறுசுகளை வன்முறை எப்படிப் பாதிக்கிறது என்பது சம்பந்தமாக யுனசெஃப் தருகிற அறிக்கையைப்பற்றி லண்டனில் வெளிவரும் த டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “பிரிட்டனிலுள்ள அதிகமதிகமான இளசுகள் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறார்கள். . . . இப்போதெல்லாம் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறவர்களும்சரி துப்பாக்கிக்கு இரையாகிறவர்களும்சரி, பொடிசுகள்தான்.” இங்கிலாந்திலும் வேல்ஸ்ஸிலும் கைதிகளின் எண்ணிக்கை சுமார் 80,000-மாக அதிகரித்திருக்கிறது.

கென்யா: சந்தடிமிக்க நெடுஞ்சாலையில் ஒரு தாயும் மகளும் தங்களுடைய காரிலிருந்து சட்டென்று இறங்காததால், கார் கடத்தும் ஆசாமிகள் அவர்களைச் சுட்டுத் தள்ளினர் என்று குறிப்பிடுகிறது ஒரு செய்தி அறிக்கை. கார்களைக் கடத்துவது, தாக்கிக் கொள்ளையடிப்பது, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குற்றச்செயலில் ஈடுபடுவது போன்ற எல்லா வகையான வன்முறைகளுக்கும் கென்யாவின் தலைநகரான நைரோபி பேர்போனதாக ஆகிவருகிறது.

அப்படியானால், குற்றச்செயலைக் கட்டுப்படுத்துவதற்கு வழியே இல்லையா? குற்றச்செயலுக்கு அடிப்படை காரணம் என்ன? உண்மையான சமாதானத்தோடும் பாதுகாப்போடும் மக்கள் வாழ்வார்கள் என நம்புவதற்கு ஆதாரம் இருக்கிறதா? அடுத்து வரும் கட்டுரைகள் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன. (g 2/08)