Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பகல் இரவானது”

“பகல் இரவானது”

“பகல் இரவானது”

பெனினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“ஆஹா, அற்புதம்! சூரிய கிரகணத்தை பார்த்த லட்சக்கணக்கானோர் மலைத்துப்போனார்கள்.” மார்ச் 29, 2006-ல் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாள் கானாவின் டெய்லி க்ராஃபிக் செய்தித்தாளில் இது தலைப்புச் செய்தியாக வெளியானது. இந்தக் கிரகணம் முதலில் பிரேசிலின் கிழக்கு கோடியில் தென்பட்டது. பிறகு மணிக்கு சுமார் 1,600 கி.மி. வேகத்தில் அட்லாண்டிக் கடலை கடந்து, கிட்டத்தட்ட காலை 8 மணி அளவில் கானா, டோகோ, பெனின் ஆகிய கடலோர நாடுகளில் தோன்ற ஆரம்பித்தது. ஆப்பிரிக்காவின் இந்த மேற்கத்திய நாடுகளில் சூரிய கிரகணம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது?

இதற்கு முன்பு கானாவில் 1947-ல் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் 27 வயதாய் இருந்த தீயடோர் இப்போது சொல்வதாவது: “அந்தச் சமயத்தில் இருந்தவர்கள் கிரகணத்தை அதுவரை பார்த்திராததால் என்ன நடக்கிறதென்றே அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, ‘பகல் இரவானது’ என்றார்கள்.”

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பதால் வரும் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்பதற்காக அரசாங்கம் பிரச்சாரங்களை மேற்கொண்டது. டோகோவில் பளிச்சிடும் சுவரொட்டிகள், “பார்வை போய்விடும்! கண்கள் ஜாக்கிரதை!” என்று எச்சரித்தன.

சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு அரசதிகாரிகள் இரண்டு வழிகளை பரிந்துரைத்தார்கள். ஒன்று, வீட்டில் இருந்தபடி டிவியில் பாருங்கள். அல்லது வெளியே சென்று பார்க்கவேண்டுமென்றால் அதற்கென்று விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை போட்டுக்கொண்டு பாருங்கள். லட்சக்கணக்கானோர் டிவி முன்னாடியும் கம்ப்யூட்டர் முன்னாடியும் உட்கார்ந்து இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். என்னதான் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் பார்த்தாலும் நேரில் பார்க்கும்போது இருக்கிற சுவாரஸ்யமே தனி. ஏனென்றால், கிரகணம் ஏற்படுவதற்கு சற்று முன்பும் கிரகணத்தின் போதும் மக்கள் மத்தியில் ஏற்படும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் அவற்றால் முழுவதுமாகப் படம்பிடிக்க முடியாதே. சரி, சூரிய கிரகணம் எப்படி இருந்ததென்று ‘பார்க்கலாம்’ வாருங்கள்.

எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது

மேற்கு ஆப்பிரிக்காவில், அந்த நாளும் எல்லா நாட்களையும் போல்தான் விடிந்தது. சூரியன் பிரகாசித்தது, வானம் தெளிந்திருந்தது. இதைப் பார்த்த சிலர் கிரகணம் ஏற்படுமா என்றும்கூட சந்தேகித்தனர். கிரகணம் ஏற்படுவதற்கான நேரம் நெருங்க நெருங்க அதை வேடிக்கை பார்க்க காத்துக்கொண்டிருந்த மக்கள் விசேஷ கண்ணாடியை போட்டுக்கொண்டு வானத்தையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தனர். இன்னும் சிலர் மற்ற இடங்களில் இருந்த நண்பர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, கிரகணம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 3,50,000 கி.மீ. உயரத்தில் இருந்த சந்திரன், முதலில் கண்ணுக்குத் தென்படவில்லை என்றாலும் கிரகணம் ஏற்படவிருந்த இடத்தை நோக்கி அதிவேகமாக நகர்ந்துகொண்டே இருந்தது. திடீரென்று அது கருப்பு வட்டம் போல் காட்சியளித்து, சூரியனை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க ஆரம்பித்தது. அந்தக் காட்சி தெளிவாகத் தெரிய தெரிய அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்தார்கள்.

முதல் ஒரு மணி நேரத்திற்குப் பார்வையாளர்கள், அவர்களைச் சுற்றி பெரிதாக எந்த ஒரு மாற்றத்தையும் பார்க்கவில்லை. ஆனால், சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை மறைக்க மறைக்க வானம் விசித்திரமாக காட்சியளித்து. நீல வானம் கருக்க ஆரம்பித்தது. வெப்பம் குறைந்தது. வானம் நடுநிசி போல் இருண்டபோது தானியங்கி தெரு விளக்குகளும் பாதுகாப்பு விளக்குகளும் உயிர் பெற்றன. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. கடைகள் அடைக்கப்பட்டன. பறந்துகொண்டிருந்த பறவைகள் கூட்டுக்குள் ஓடி அடங்கின, விலங்குகள் உறங்குவதற்கு இடம் தேடி அலைந்தன. வெளிச்சம் குறைய குறைய அந்த இடத்தை இருள் ஆக்கிரமித்தது. இதோ, மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முழு சூரிய கிரகணம் கடைசியாகத் தென்பட்டது. இந்த அதி அற்புத காட்சியைப் பார்த்தவர்கள் வாயடைத்து நின்றார்கள்.

நினைவில் பதிந்த முழு சூரிய கிரகணம்

நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக்கொண்டு இருந்தன. சூரியனின் விளிம்பு, முத்துப்போல் ஜொலித்தது. கருப்பு நிலவைச் சுற்றி பிரகாசிக்கும் ஒளிவட்டம்போல் அது இருந்தது. நிலவின் விளிம்பிலுள்ள மேடு பள்ளங்களின் ஊடே சூரிய ஒளி கசிந்தது. இந்த ஒளியை பெய்லியின் முத்துக்கள் என்று அழைப்பார்கள். a கிட்டத்தட்ட முழு சூரியனும் மறைந்து ஒரு சிறிய பகுதி மட்டும் பிரகாசமாக மினுமினுத்துக்கொண்டு இருந்தது. பார்ப்பதற்கு வைர மோதிரம் போல் இது காட்சியளித்தது. சூரியனுடைய விளிம்பின் உட்பகுதிக்குள்ளிருந்து இளஞ்சிவப்பு கதிர்கள் பீறிட்டன. “இதுபோன்ற அரிதிலும் அரிதான காட்சியை நான் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. இயற்கையின் இந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க ஒருவர் சொன்னார்.

முழு சூரிய கிரகணம் சுமார் 3 நிமிடங்கள்வரை நீடித்தது. பிறகு, மளமளவென நிலாவின் மறைப்பு விலகி சூரியன் புலப்பட ஆரம்பித்தது. அதைப் பார்த்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். வானம் மெல்ல பளிச்சிட ஆரம்பித்தது. நட்சத்திரங்கள் மறைய ஆரம்பித்தன. சட்டென மறையும் காலை நேர பனியைப்போல் அந்த அமைதியான சூழல் கலைந்து சகஜநிலை திரும்பியது.

நிலா, ‘ஆகாயமண்டலத்தின் உண்மையான சாட்சியாக’ இருப்பதால் கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே துல்லியமாகக் கணக்கிட முடிகிறது. (சங்கீதம் 89:37) இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக மேற்கு ஆப்பிரிக்கா கிட்டத்தட்ட 60 வருடங்கள் காத்திருந்தது. அடுத்த சூரிய கிரகணம் மீண்டும் 2081-ஆம் ஆண்டு இங்கு நிகழ இருக்கிறது. ஆனால், நீங்கள் வசிக்கும் பகுதியில் அதற்கு முன்பேகூட இதுபோன்ற மறக்கமுடியாத ஒரு சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். (g 3/08)

[அடிக்குறிப்பு]

a 1836-ல் தென்பட்ட கிரகணத்தை முதன்முதலில் படம்பிடித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த வானாராய்ச்சியாளரான பிரான்சிஸ் பெய்லி. இவருடைய பெயரே அதற்கு வைக்கப்பட்டுள்ளது.

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

இயேசு மரித்த சமயத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டதா?

“ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று” என்று மாற்கு 15:33 சொல்கிறது. மதியம் 12 மணியிலிருந்து மாலை 3 மணிவரை இருள் சூழ்ந்திருந்தது ஆச்சரியமான விஷயம். இது சூரிய கிரகணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், சூரிய கிரகணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்சம் 7.5 நிமிடங்கள்தான் பூரணமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாள்காட்டியின்படி, இயேசு இறந்தது நிசான் மாதம் 14-ஆம் தேதி. நிசான் மாதத்தின் முதல் நாள், அமாவாசையைப் பொறுத்துதான் கணக்கிடப்பட்டது. அந்தச் சமயத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் இருப்பதால் கிரகணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிசான் மாதம் 14-ஆம் தேதி வருவதற்குள் நிலா பூமியை சுற்றிவரும் பாதையில் பாதி தூரம் கடந்திருக்கும். இந்தச் சமயத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருப்பதால் சந்திரன் சூரியனிலிருந்து வரும் ஒளியை மறைப்பதற்குப் பதிலாக அதை முழுவதுமாகப் பிரதிபலிக்கும். இப்படியாக நாம் முழு நிலவை பார்க்க முடிகிறது. இப்படி, பெளர்ணமி அன்று இயேசுவின் மரண நாளை ஆசரிப்பது பொருத்தமாக இருக்கிறது.

[படம்]

நிசான் 14-ஆம் தேதி, பௌர்ணமி அன்று அல்லது அதற்கு முன்போ பின்போதான் வரும்

[பக்கம் 10, 11-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சூரிய கிரகணம் கடந்து சென்ற பாதை

⇧ ஆப்பிரிக்கா

பெனின் ●

டோகோ ●

கானா ●

[படத்திற்கான நன்றி]

வரைபடம்: Based on NASA/Visible Earth imagery

[பக்கம் 28-ன் படம்]

2006 மார்ச் 29 அன்று ஏற்பட்ட முழு சூரிய கிரகணம்

[பக்கம் 28-ன் படம்]

விசேஷ பாதுகாப்பு கண்ணாடிகளின் உதவியால் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடிந்தது