Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பழங்காலக் கையெழுத்துப்பிரதிகளின் வயதைக் கணித்தல்

பழங்காலக் கையெழுத்துப்பிரதிகளின் வயதைக் கணித்தல்

பழங்காலக் கையெழுத்துப்பிரதிகளின் வயதைக் கணித்தல்

பைபிள் அறிஞர் கான்ஸ்டன்டீன் ஃபான் டிஷன்டார்ஃப், எகிப்திலுள்ள சீனாய் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள செ. காத்தரீன் மடத்திற்கு 1844-ல் சென்றிருந்தார். அங்கிருந்த நூலகங்களில் இருந்த புத்தகங்களைத் துழாவிப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் குறிப்பிடத்தக்க தோற்சுருள்கள் அவருடைய கண்ணில் பட்டன. இவர் தொல்லெழுத்துக் கலை a பயின்றிருந்ததால் அந்தச் சுருள்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார். அவை கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின் அல்லது ‘பழைய ஏற்பாட்டின்’ தாள்கள்; சுருங்கச் சொன்னால் செப்டுவஜின்ட் தாள்கள் என்று அவர் கண்டுகொண்டார். “எனக்குத் தெரிந்து இந்த சினியாட்டிக் தாள்கள்தான் இருப்பதிலேயே மிகப் பழமையானவை” என்று அவர் எழுதினார்.

டிஷன்டார்ஃப்பின் கண்ணில் பட்ட இந்தத் தோற்சுருள்கள் பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை, பிற்பாடு சினியாட்டிக் கையெழுத்துப்பிரதி (கோடெக்ஸ் சினியாட்டிகஸ்) என்று அழைக்கப்பட்ட தோற்சுருள்களின் பாகமாக ஆயின. அறிஞர்களின் ஆராய்ச்சிகளுக்குக் கைகொடுக்கிற எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமத்தின் ஆயிரக்கணக்கான பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றுதான் இந்த சினியாட்டிக் கையெழுத்துப் பிரதி.

கிரேக்கத் தொல்லெழுத்துக் கலையில் முன்னேற்றம்

செ. பெனிடிக்டு நிறுவிய மதப் பிரிவில் துறவியாக இருந்த பெர்னார் ட மோங்ஃபோகான் (1655-1741) என்பவரே கிரேக்கத் தொல்லெழுத்தை முறைப்படி பயின்ற முதல் நபர் ஆவார். அவருக்குப் பிறகு மற்ற அறிஞர்களும் தங்கள் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டார்கள். பைபிளின் மிகப் பழமையான கிரேக்கக் கையெழுத்துப்பிரதிகளை ஐரோப்பாவின் நூலகங்களில் கண்டுபிடித்து அவற்றைப் பட்டியலிடும் மாபெரும் பணியில் டிஷன்டார்ஃப் களமிறங்கினார். அதுமட்டுமல்ல, பலமுறை மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து, அங்குள்ள ஆவணங்கள் பலவற்றை ஆய்வுசெய்து அவற்றின் முடிவுகளைப் பிற்பாடு வெளியிட்டார்.

தொல்லெழுத்துக் கலைஞர்களுக்கு உதவியாக 20-ஆம் நூற்றாண்டில் கூடுதல் உபகரணங்கள் கிடைத்தன. அதில் ஒன்று, மார்செல் ரீஷார் பட்டியல் ஆகும். சுமார் 900 அதிகாரப்பூர்வ பட்டியல்கள் அதில் காணப்பட்டன. இவை, 55,000 கிரேக்கக் கையெழுத்துப்பிரதிகளைப் பற்றி விவரிக்கின்றன; அவற்றில் சில பைபிள் சார்ந்தவை, சில பைபிள் சாராதவை. இந்தக் கையெழுத்துப்பிரதிகள், தனி நபர்களிடமும் 820 நூலகங்களிலும் இருந்தன என்று அந்தப் பட்டியல் தெரிவித்தது. இந்த ஏராளமான தகவல் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. கையெழுத்துப்பிரதிகள் குறிப்பாக எப்போது எழுதப்பட்டன என்பதைக் கண்டுபிடிக்கத் தொல்லெழுத்துக் கலைஞர்களுக்கும் இந்தத் தகவல் துணைபுரிகிறது.

கையெழுத்துப்பிரதிகளின் வயது கண்டுபிடிக்கப்பட்ட விதம்

ஒரு பழைய வீட்டின் பரணையை நீங்கள் சுத்தம் செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். யாரோ கைப்பட எழுதிய ஒரு கடிதம் உங்கள் கண்ணில் படுகிறது. காலத்தால் பழுப்பேறிய அந்தக் கடிதத்தில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ‘இந்தக் கடிதம் எப்போது எழுதப்பட்டது?’ என்று நீங்கள் யோசிக்கலாம். சுத்தம் செய்துகொண்டே இருக்கையில் இன்னொரு பழைய கடிதமும் உங்கள் கண்ணில் படுகிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கும் விதம், கையெழுத்து, நிறுத்தக்குறியீடுகள், இன்னும் இதுபோன்ற பிற அம்சங்களைப் பார்க்கும்போது இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதைக் கவனிக்கிறீர்கள். ஆனால், இரண்டாவதாக நீங்கள் கண்டுபிடித்த இந்தக் கடிதத்தில் தேதி இருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைகிறீர்கள். இப்போது, முதல் கடிதம் எழுதப்பட்ட தேதியை உங்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும் அது குத்துமதிப்பாக எப்போது எழுதப்பட்டிருக்கலாம் என்பதைக் கணிக்க இந்த இரண்டாவது கடிதம் உங்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கலாம்.

பழங்காலத்தில் பைபிளை நகலெடுத்தவர்களில் பெரும்பாலோர் அந்தக் கையெழுத்துப்பிரதிகளில், எழுதி முடிக்கப்பட்ட தேதியைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். அவை எந்தச் சமயத்தில் எழுதப்பட்டன என்பதை உத்தேசமாகக் கண்டுபிடிப்பதற்காக, அறிஞர்கள் அவற்றை மற்ற கையெழுத்துப்பிரதிகளுடன், சில சமயம் பைபிள் சாராத கையெழுத்துப்பிரதிகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்; இவற்றில் எழுதி முடிக்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளன. அதோடு, இவற்றிலுள்ள கையெழுத்து, நிறுத்தக்குறியீடு, சுருக்கக்குறியீடு போன்றவற்றை அடிப்படையாக வைத்து தேதியிடப்படாத கையெழுத்துப்பிரதிகள் எப்போது எழுதப்பட்டன என்பதை அறிஞர்கள் கண்டறிகிறார்கள். எனினும், தேதியிடப்பட்ட கையெழுத்துப்பிரதிகள் நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தப் பிரதிகள் பொ.ச. 510-லிருந்து பொ.ச. 1593 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

கையெழுத்தை வைத்து காலத்தைக் கணித்தல்

கையெழுத்து நிபுணர்கள், பண்டைய கிரேக்கக் கையெழுத்தை இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று, புத்தகக் கையெழுத்து; இது, நேர்த்தியாகவும் அச்சில் வடிப்பது போலவும் எழுதியதைக் குறிக்கிறது. இரண்டாவது, கூட்டெழுத்து; இது, எழுத்துக்களைச் சேர்த்துக் கோர்வையாக எழுதியதைக் குறிக்கிறது; இவ்வகைக் கையெழுத்து இலக்கியச் சார்பற்ற ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க மொழியில் பைபிளை நகலெடுத்தவர்கள் வெவ்வேறு விதமான கையெழுத்துகளையும் பயன்படுத்தினார்கள். அவற்றை, பெரிய எழுத்துக்கள், வட்ட வடிவ எழுத்துக்கள் (இதுவும் ஒருவித பெரிய எழுத்துதான்), கூட்டெழுத்துக்கள், சிற்றெழுத்துக்கள் என வகைவகையாகப் பிரிக்கலாம். புத்தகக் கையெழுத்து வகையைச் சேர்ந்த வட்ட வடிவக் கையெழுத்து, பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்தது. புத்தகக் கையெழுத்திலேயே சிறிய வகையைச் சேர்ந்த சிற்றெழுத்து என்ற கையெழுத்து வகையானது, பொ.ச. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 15-வது நூற்றாண்டின் மத்திய பாகம்வரை வழக்கில் இருந்தது. அந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில், எழுத்துக்களை அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. சிற்றெழுத்தைப் பயன்படுத்துகையில் சீக்கிரமாகவும் அதேசமயம், கச்சிதமாகவும் எழுத முடியும். இவ்வெழுத்து, நேரத்தை மட்டுமல்ல தோற்சுருள்களையும் மிச்சப்படுத்தியது.

தொல்லெழுத்துக் கலைஞர்கள் தங்களுக்கே உரிய முறைகளைப் பயன்படுத்தி கையெழுத்துப்பிரதிகள் எக்காலத்தில் எழுதப்பட்டன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். முதலில், என்ன வகையான கையெழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று மேலோட்டமாகப் பார்க்கிறார்கள். பிறகு, அவற்றிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் உன்னிப்பாக ஆராய்கிறார்கள். இவ்வாறு கையெழுத்துப்பிரதிகளை ஆராய்வதன்மூலம், அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், திட்டவட்டமாக அவை எப்போது எழுதப்பட்டன என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், கையெழுத்தில் சிறிய மாற்றங்கள் நிகழ்வதற்குக்கூட நீண்ட காலம் எடுத்தது.

சந்தோஷகரமாக, கையெழுத்துப் பிரதிகள் எழுதப்பட்ட தேதியை இன்னும் நுட்பமாகக் கண்டுபிடிப்பதற்கு வேறு வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று, குறிப்பிட்ட சில கையெழுத்து முறைகளை அடையாளம் கண்டுகொண்டு, அவை எப்போதுமுதல் அவ்வாறு எழுதப்பட ஆரம்பித்தன என்பதைக் கண்டுபிடிப்பதே. உதாரணத்திற்கு, பொ.ச. 900-க்குப் பிறகு எழுதப்பட்ட கிரேக்கப் பிரதிகளை நகலெடுத்தவர்கள் இணை எழுத்து முறையை (இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எழுத்துக்களை இணைத்து எழுதும் முறை) அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அதோடு, இன்ஃப்ராலீனியர் என்ற எழுத்து முறையையும் (சில கிரேக்க எழுத்துக்களை வரிக்குக் கீழே எழுதும் முறை) உச்சரிப்புக் குறியீடுகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஒரு நபரின் கையெழுத்து, அவருடைய வாழ்நாள் முழுவதும் பொதுவாக ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே, எந்த ஒரு குறிப்பிட்ட கையெழுத்துப்பிரதியும் குறிப்பிட்ட 50 வருட காலப்பகுதிக்குள் எழுதப்பட்டிருக்கும் என்றுதான் சொல்ல முடியும். அதுமட்டுமல்ல, பைபிளை நகலெடுத்தவர்கள் சில சமயங்களில் முந்தின காலத்து கையெழுத்துப்பிரதிகளை மாதிரிப் படிவங்களாக வைத்து அதே விதமாக எழுத முயன்றார்கள்; இதனால், அந்தக் கையெழுத்துப்பிரதிகள் உண்மையில் எழுதப்பட்ட காலத்திற்கும் முன்னதாக எழுதப்பட்டதைப் போலத் தோன்றின. இதுபோன்று ஏகப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், பல முக்கியமான பைபிள் கையெழுத்துப்பிரதிகள் எப்போது எழுதப்பட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பைபிளின் முக்கிய கிரேக்கக் கையெழுத்துப்பிரதிகளின் வயதைக் கணித்தல்

அறிஞர்களுக்குக் கிடைத்த முக்கியமான பல பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் முதன்முதலாகக் கிடைத்தது அலெக்ஸாண்டிரின் கையெழுத்துப்பிரதியே (கோடெக்ஸ் அலெக்ஸாண்டிரினஸ்); இது, தற்போது பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. இதில் பைபிளின் பெரும்பாலான பகுதி உள்ளது. இது வெல்லம் என்ற சன்னமான தோற்சுருளில் எழுதப்பட்டிருக்கிறது. கிரேக்க மொழியில், வட்ட வடிவ எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த கோடெக்ஸ் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வட்ட வடிவ எழுத்து நடையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு, வியன்னாவைச் சேர்ந்த தேதியிடப்பட்ட டையஸ்கோரடீஸ் ஆவணம் உதாரணமாக இருக்கிறது. b இதே மாற்றங்களை அலெக்ஸாண்டிரின் கோடெக்ஸிலும் பார்க்க முடிவதால் அதுவும் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

அறிஞர்களுக்குக் கிடைத்த முக்கியமான இரண்டாவது கையெழுத்துப்பிரதி, சினியாட்டிக் கையெழுத்துப்பிரதி (கோடெக்ஸ் சினியாட்டிகஸ்) ஆகும். செ. காத்தரீன் மடத்திற்கு டிஷன்டார்ஃப் சென்றபோது அவருக்கு இது கிடைத்தது. இதுவும் கிரேக்க மொழியில் வட்ட வடிவ எழுத்து நடையுடன் தோற்சுருளில் எழுதப்பட்டிருக்கிறது. இது, கிரேக்க செப்டுவஜின்ட்டைச் சேர்ந்த எபிரெய வேதாகமத்தின் ஒரு பகுதியையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதையும் உள்ளடக்குகிறது. இந்த கோடெக்ஸின் 43 தாள்கள் ஜெர்மனியிலுள்ள லீப்ஜிக்கிலும், 347 தாள்கள் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலும், 3 தாள்களின் துண்டுகள் ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கிலும் இருக்கின்றன. இந்தக் கையெழுத்துப்பிரதி பொ.ச. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. செசரியாவைச் சேர்ந்த நான்காம் நூற்றாண்டு சரித்திராசிரியரான யூசிபியஸ், சுவிசேஷங்களில் வழங்கியுள்ள ஓரக் குறிப்புகள் இதற்குச் சான்றளிக்கின்றன. c

முக்கியமான மூன்றாவது கையெழுத்துப்பிரதி, வாட்டிகன் கையெழுத்துப்பிரதி எண் 1209 (கோடெக்ஸ் வாட்டிகானஸ்) ஆகும். இதில் முழு பைபிளும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த கோடெக்ஸ், 1475-ல் வாட்டிகன் நூலகத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் முதன்முதல் காணப்பட்டது. இதுவும் கிரேக்க மொழியில் வட்ட வடிவ எழுத்து நடையுடன் வெல்லம் என்ற சன்னமான தோற்சுருளின் 759 தாள்களில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கோடெக்ஸில் பைபிளின் பெரும்பகுதி இருக்கிறது. ஆதியாகமத்தின் பெரும் பகுதியும், சங்கீதத்தில் சிலவும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் சில பகுதிகளும் தவிர பைபிளின் பெரும்பகுதிகளை இது உள்ளடக்குகிறது. இந்தக் கையெழுத்துப்பிரதி பொ.ச. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருப்பதாக அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். எதன் அடிப்படையில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? இதன் எழுத்து நடை சினியாட்டிக் கையெழுத்துப்பிரதியின் எழுத்து நடையை ஒத்திருக்கிறது. இந்த சினியாட்டிக் கையெழுத்துப்பிரதியும் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. என்றாலும், சினியாட்டிக் கையெழுத்துப்பிரதியோடு ஒப்பிட வாட்டிகானஸ் சற்று பழமையானதாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய அம்சங்கள் காணப்படுவதில்லை, உதாரணத்திற்கு யூசிபியஸின் குறுக்கு வசனப் பட்டியல்கள் இதில் இல்லை.

குப்பையில் கிடந்த “குண்டுமணி”

பண்டைய எகிப்தின் குப்பைக் குவியலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பாப்பிரஸ் நாணல் தாள்கள் 1920-ல் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜான் ரைலன்ட்ஸ் நூலகத்திற்கு வந்துசேர்ந்தன. இவற்றில் கடிதங்கள், ரசீதுகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. இவற்றையெல்லாம் ஆராய்ந்தவரான அறிஞர் கோலன் ராபெர்ட்ஸ், ஒரு சுருளில் சில வசனங்கள் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தார். அவை யோவான் 18-ஆம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனங்களென அடையாளம் கண்டார். அதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் அவையே மிகப் பழமையான கிறிஸ்தவ கிரேக்க வாசகங்கள் ஆகும்.

அந்தச் சுருள் காலப்போக்கில் ஜான் ரைலன்ட்ஸ் பாப்பிரஸ் 457 என்று அறியப்பட்டது; சர்வ தேச அளவில் P52என்று பெயரிடப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள இந்தச் சுருளில் வட்ட வடிவ எழுத்து நடை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது, யோவான் சுவிசேஷத்தின் மூலப் பிரதி எழுதப்பட்டு சில பத்தாண்டுகளுக்குள்ளேயே இது எழுதப்பட்டிருக்கிறது! இந்தச் சுருளில் உள்ள வசனங்கள் பின்னர் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகளில் உள்ள வசனங்களுடன் பெரும்பாலும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பழமையானாலும் திருத்தமானது!

சர் ஃபிரெட்ரிக் கென்யன் என்ற உரை விமர்சகர், தி பைபிள் அண்டு ஆர்க்கியாலஜி என்ற தனது புத்தகத்தில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைக் குறித்து இவ்வாறு எழுதியிருந்தார்: “புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் நம்பத்தகுந்தவை, கருத்து மாறாமல் எழுதப்பட்டவை என உறுதியாகச் சொல்லலாம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.” அதுபோலவே, எபிரெய வேதாகமத்தின் திருத்தமான தன்மையைக் குறித்து அறிஞர் வில்லியம் எச். கிரீன் இவ்வாறு சொன்னார்: “எந்தவொரு பழமையான புத்தகமும் இந்தளவு பிழையின்றி திருத்தமாக எழுதப்பட்டு, வினியோகிக்கப்படவில்லை. இது மறுக்க முடியாத உண்மை.”

இந்தக் கூற்றுகள் அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன: “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.”—1 பேதுரு 1:24, 25. (g 2/08)

[அடிக்குறிப்புகள்]

a “பண்டைய மற்றும் இடைக்கால எழுத்துக்களைப்பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு . . . தொல்லெழுத்துக் கலை என்று பெயர். இக்கலை முக்கியமாக, நாணற்புல், தோல், காகிதம் போன்ற அழியக்கூடிய பொருள்களில் எழுதியுள்ளவற்றை ஆய்வு செய்வதாகும்.”—த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா.

b வியன்னாவின் டையஸ்கோரடீஸ் என்ற ஆவணம், ஜூல்யானா ஆனிஸீயா என்ற பெண்மணிக்காக எழுதப்பட்டது. இவர் பொ.ச. 527-ல் அல்லது பொ.ச. 528-ல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த ஆவணம், “வெல்லம் என்ற தோற்சுருளில் பதிவாகியுள்ள வட்ட வடிவ எழுத்துநடைக்கு மிகப் பழமையான எடுத்துக்காட்டு. இதன் எழுத்து நடையை வைத்து இது எழுதப்பட்ட காலத்தையும் ஓரளவு கணக்கிட முடிகிறது.”—இ. எம். தாம்ஸன் எழுதிய கிரேக்க மற்றும் லத்தீன் தொல்லெழுத்து ஆய்விற்கு முன்னுரை.

c யூசிபியஸின் அதிகாரப்பூர்வ பட்டியல்கள் என்று அழைக்கப்படுகிற இந்த ஓரக் குறிப்புகள், குறுக்கு வசனப் பட்டியலைக் குறிக்கின்றன. இவை, “ஒவ்வொரு சுவிசேஷத்திலும், எந்தெந்த வசனங்கள் மற்ற சுவிசேஷத்திலுள்ள வசனங்களுக்கு இணையாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.”—புரூஸ் எம். மெட்ஸ்கர் எழுதிய கிரேக்க பைபிள் கையெழுத்துப்பிரதிகள்.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

தொல்லெழுத்துக் கலைஞர்கள், தேதியிடப்பட்ட கையெழுத்துப்பிரதிகளைக் கவனமாக ஆராய்வதன்மூலம் தேதியிடப்படாத கையெழுத்துப்பிரதிகளின் தேதியைக் கண்டுபிடிக்கிறார்கள்

[பக்கம் 16-ன் பெட்டி]

ஏசாயா சவக்கடல் சுருளின் வயது?

சவக்கடல் சுருள் என அழைக்கப்பட்ட ஏசாயா புத்தகத்தின் முதல் தோற்சுருள் 1947-ல் கண்டுபிடிக்கப்பட்டது. எபிரெய மொழியில் இருந்த அந்தச் சுருளில் காணப்பட்ட கையெழுத்து, மசோரெட்டுகள் காலத்திற்கு முன்னான காலத்தைச் சேர்ந்தது. இது பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருப்பதாக அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த முடிவுக்கு வந்தார்கள்? இந்தச் சுருளில் உள்ள கையெழுத்தை, மற்ற எபிரெய உரைகளுடனும் கல்வெட்டுகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்து, இது பொ.ச.மு. 125-க்கும் பொ.ச.மு. 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். கார்பன்-14 காலக் கணிப்பும் இதை ஊர்ஜிதப்படுத்தியது.

ஆச்சரியகரமாக, இந்தச் சவக்கடல் சுருள்களையும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மசோரெட்டுகள் என்றழைக்கப்பட்ட பிரிவினரால் நகலெடுக்கப்பட்ட சுருள்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கோட்பாடு சம்பந்தமான எந்த வேறுபாடுகளும் காணப்படுவதில்லை. d அப்படியே வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை இலக்கணம் அல்லது எழுத்துக்கூட்டல் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், டெட்ராக்ராமட்டன், அதாவது யெகோவா என்ற புனிதப் பெயரின் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் ஏசாயாவின் சுருளில் எங்கெல்லாம் இடம்பெற வேண்டுமோ அங்கெல்லாம் எவ்வித மாற்றமுமின்றி இடம்பெற்றிருக்கின்றன.

[அடிக்குறிப்பு]

d இந்த மசோரெட்டுகள், மிகக் கவனமாக பைபிளை நகலெடுத்த யூதர்கள் ஆவர். இவர்கள் பொ.ச. 500-க்கும் பொ.ச. 1,000-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.

[பக்கம் 16, 17-ன் அட்டவணை/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கிரேக்கக் கையெழுத்து

புத்தகக் கையெழுத்து (வட்ட வடிவ எழுத்துக்கள்)

பொ.ச.மு. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. 8-ஆம் அல்லது 9-ஆம் நூற்றாண்டுவரை

சிற்றெழுத்து

பொ.ச. 8-ஆம் அல்லது 9-ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. 15-ஆம் நூற்றாண்டுவரை

முக்கியக் கையெழுத்துப்பிரதிகள்

400

200

சவக்கடல் சுருள்

பொ.ச.மு. 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி

பொ.ச.மு.

பொ.ச.

100

ஜான் ரைலன்ட்ஸ் பாப்பிரஸ் 457

பொ.ச. 125

300

வாட்டிகன் கையெழுத்துப்பிரதி எண் 1209

4-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்

சினியாட்டிக் கையெழுத்துப்பிரதி

4-ஆம் நூற்றாண்டு

400

அலெக்ஸாண்டிரின் கையெழுத்துப்பிரதி

5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்

500

700

800

[பக்கம் 15-ன் படங்கள்]

மேலே: கான்ஸ்டன்டீன் ஃபான் டிஷன்டார்ஃப்

வலது: பெர்னார் ட மோங்ஃபோகான்

[படத்திற்கான நன்றி]

© Réunion des Musées Nationaux/ Art Resource, NY

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

சவக்கடல் சுருள்: Shrine of the Book, Israel Museum, Jerusalem

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

Typographical facsimile of Vatican Manuscript No. 1209: From the book Bibliorum Sacrorum Graecus Codex Vaticanus, 1868; Reproduction of Sinaitic Manuscript: 1 Timothy 3:​16, as it appears in the Codex Sinaiticus, 4th century C.E.; Alexandrine Manuscript: From The Codex Alexandrinus in Reduced Photographic Facsimile, 1909, by permission of the British Library