Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?

மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?

பைபிளின் கருத்து

மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?

விமான பயணத்தில் தனக்குக் கண்டம் இருப்பதாகக் குறிசொல்பவர் சொல்லியிருந்ததால் பத்திரிகையாளர் ஒருவர் ஓராண்டு காலமாக விமானத்தில் பயணிக்கவே இல்லை. அரசியல்வாதிகள், வியாபாரப் புள்ளிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் என எல்லாத் தரப்பினரும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஊறிப்போயிருக்கிறார்கள். என்ன நடக்கும், ஏது நடக்கும் என தெரியாதபோதும், நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும்போதும், கவலையில் தத்தளிக்கும்போதும் இத்தகைய நம்பிக்கைகள் தங்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் என்றோ இலட்சியங்களை அடைய துணைபுரியும் என்றோ அவர்கள் நினைக்கிறார்கள்.

பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் மனிதர் மனதுக்குத் தெம்பூட்டுபவையாகத் தோன்றலாம்; அவை பழங்கால பாரம்பரியமாகவோ தீங்கு விளைவிக்காதவையாகவோ தோன்றலாம். “நினைப்பது நடக்க வேண்டுமென்றும் கெட்டது நடக்காமல் தடுக்க வேண்டுமென்றும் நாம் எந்தளவு ஆசைப்படுகிறோம் என்பதை மூடநம்பிக்கைகள் காட்டுகின்றன. மூடநம்பிக்கைகளை நாம் உண்மையிலேயே நம்பாவிட்டாலும், அவற்றைப் பின்பற்றும்போது அடிமைப்பட்ட உணர்வு இல்லாமலேயே மனோரீதியாக நன்மைகளைப் பெற உதவுகின்றன” என்று மறைந்த மானிடவியல் வல்லுநரான மார்க்கிரட் மீட் சொன்னார். எனினும், ‘மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?’ என்ற கேள்வியை கடவுளைப் பிரியப்படுத்த தீர்மானமாய் இருப்பவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கையின் பிறப்பிடம்

பொதுவாக மனிதர்கள் பல்வேறு பயங்களால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள். மரணபயம், மரணத்தைப்பற்றிப் புரியாததால் வரும் பயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை பற்றிய பயம் போன்றவற்றால் வாதிக்கப்படுகிறார்கள். கடவுளை எதிர்க்கிற கலகக்காரனான சாத்தான் மக்களை அடிமைப்படுத்தத் தீர்மானமாய் இருக்கிறான், இத்தகைய பயங்கரமான பொய்களைச் சொல்லி மக்களின் மனங்களில் பயத்தை விதைக்கிறான். (யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9) மக்களை ஏமாற்றி கடவுளிடமிருந்து பிரிக்கும் வேலையில் அவன் தன்னந்தனியாய் ஈடுபடுவதில்லை. சாத்தானை ‘பிசாசுகளின் தலைவன்’ அதாவது, பேய்களின் தலைவன் என்று பைபிள் அழைக்கிறது. (மத்தேயு 12:24-27) அப்படியானால் யார் இந்தப் பேய்கள்? நோவாவின் காலத்தில், எண்ணற்ற தேவதூதர்கள் சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்து பேய்களானார்களே அவர்கள்தான். அதுமுதற்கொண்டு, அவர்கள் மக்களின் மனங்களை அடக்கி ஆள முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகளில் ஒன்றுதான் மூடநம்பிக்கை.—ஆதியாகமம் 6:1, 2; லூக்கா 8:2, 30; யூதா 6.

சாத்தானுடைய பொய்களில் ஒன்று, மூடநம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. அது, மரணத்திற்குப் பிறகும் உடலின் ஏதோவொரு பாகம் வாழ்வதாகவும், உயிரோடிப்பவர்களைத் தொல்லைப்படுத்த அது திரும்பவும் வரலாம் என்றும் நம்புவதே. ஆனால், “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் சொல்கிறது. ஒருவர் இறந்த பிறகு, “செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை” என்றும் அது சொல்கிறது.—பிரசங்கி 9:5, 10.

‘யெகோவாவுக்கு அருவருப்பானவன்’

சாத்தானுடைய பொய்யை அநேகர் நம்புகிறார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு, மூடநம்பிக்கைபற்றி தம்முடைய மக்களான இஸ்ரவேலருக்குத் தெளிவான கட்டளைகளை கடவுள் கொடுத்திருந்தார். “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] அருவருப்பானவன்” என அவருடைய வார்த்தை சொல்கிறது.—உபாகமம் 18:10-12.

இஸ்ரவேலர் அநேக சமயங்களில் இந்த எச்சரிக்கைக்குக் கீழ்ப்படியத் தவறினார்கள். உதாரணத்திற்கு, ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில், அமோக விளைச்சலைப் பெற ‘காத் [அதாவது, அதிர்ஷ்டம்] என்னும் தெய்வத்தைத்’ திருப்திப்படுத்த வேண்டுமென சிலர் நினைத்தார்கள்; இந்த மூடநம்பிக்கையால் படுமோசமான விளைவுகளைச் சந்தித்தார்கள். இதனால், அவர்கள் யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் இழந்தார்கள்.—ஏசாயா 65:11, 12.

கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகும்கூட, மூடநம்பிக்கை பற்றிய யெகோவாவின் மனப்பான்மை மாறவில்லை. மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிய லீஸ்திரா பட்டணத்தாரிடம், ‘இந்த வீணான தேவர்களைவிட்டு [“பயனற்ற பொருள்களைவிட்டு,” பொது மொழிபெயர்ப்பு], வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பும்படி’ அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார்.—அப்போஸ்தலர் 14:15.

மூடநம்பிக்கை எனும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிதல்

மூடப் பழக்கவழக்கங்களுக்கு கணக்குவழக்கே இல்லை. ஆனால், அவற்றில் எதையுமே அறிவுப்பூர்வமாக விளக்க முடியாது என்பது அவற்றுக்குள்ள பொதுவான விஷயம். அவற்றின் மோசமான பாதிப்புகளில் ஒன்று, தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, தங்களுடைய துரதிர்ஷ்டமே காரணமென பழிபோடுவதாகும்.

பலர் இந்த மூடநம்பிக்கைகளின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது சந்தோஷத்தைத் தருகிறது. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) பிரேசிலைச் சேர்ந்த கிளமென்டீனா என்பவர் 25 வருடங்களாக குறிசொல்லிப் பிழைப்பு நடத்தி வந்தவர். “குறிசொல்வதில் கிடைத்த காசை வைத்துத்தான் என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால், பைபிள் சத்தியம் என்னை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவித்தது” என்று அவர் சொல்கிறார். உண்மையில், பைபிளைத் தவறாமல் படிப்பதும், யெகோவாவிடம் உருக்கமாய் ஜெபம் செய்வதும்தான் மனோபலத்தைப் பெற நமக்கு உதவும். இந்த மனோபலம், நிதானமாகவும், நியாயமாகவும் சிந்திக்க வைக்கும். இப்படிச் சிந்திப்பது, துன்பத்தைத் தவிர்த்து, கவலையைத் தணிக்கும் விதத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கத் துணைபுரியும்.—பிலிப்பியர் 4:6, 7; 13, NW.

“ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் [சாத்தானுக்கும்] இசைவேது?” என்று பைபிள் கேட்கிறது. எனவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போதும் மூடநம்பிக்கைகளைவிட்டு விலகியிருக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 6:14-16. (g 3/08)

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ ஏசாயாவின் காலத்தில், மூடநம்பிக்கையைப் பின்பற்றி வந்த இஸ்ரவேலர் கடவுளுக்குப் பதிலாக யார்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்?ஏசாயா 65:11, 12.

◼ மூடநம்பிக்கையைப் பின்பற்றி வந்த லீஸ்திரா பட்டணத்தார் என்ன செய்யும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார்?அப்போஸ்தலர் 14:15.

◼ மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?2 கொரிந்தியர் 6:14-16.