Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?

மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?

பைபிளின் கருத்து

மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?

கடவுளுடைய முக்கியமான குணங்களில் இரக்கமும் ஒன்று. (சங்கீதம் 86:15) அவர் எந்தளவுக்கு இரக்கம் காட்டுகிறார்? “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” என்று ஒரு சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 130:3, 4) இன்னொரு சங்கீதத்தில், “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்றும் எழுதினார்.—சங்கீதம் 103:12-14.

இதிலிருந்து, யெகோவா முழுமையாகவும் தாராளமாகவும் மன்னிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் இரக்கம் காட்டுகையில், நாம் “மண்” என்பதை, அதாவது நம்முடைய வரையறைகளையும் குறைபாடுகளையும் கவனத்தில் வைக்கிறார். கடவுள் எந்தளவுக்கு இரக்கம் காட்டுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் சில பைபிள் உதாரணங்களைச் சிந்திப்போம்.

அப்போஸ்தலன் பேதுரு மூன்று தரம் கிறிஸ்துவை மறுதலித்தார். (மாற்கு 14:66-72) கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். கிறிஸ்துவின் சீஷர்களில் யாரையாவது கொல்ல வேண்டுமானால் அதற்கு இவர் ஆதரவளித்தார். அப்படி ஒருவர் கொல்லப்பட்டபோது அதற்கு இவர் உடந்தையாகவும் இருந்தார். (அப்போஸ்தலர் 8:1, 3; 9:1, 2, 11; 26:10, 11; கலாத்தியர் 1:13) கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, கொரிந்திய சபையிலிருந்த சிலர் குடிவெறியராகவும் கொள்ளைக்காரராகவும் திருடர்களாகவும் இருந்தார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) இருப்பினும், இவர்கள் எல்லாருமே காலப்போக்கில் கடவுளுடைய தயவைப் பெற்றார்கள். அவர்களை கடவுள் ஏன் மன்னித்தார்?

கடவுளுடைய இரக்கத்தைப் பெற மூன்று படிகள்

“நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்” என்று பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 1:13) பவுல் வெளிப்படையாகச் சொன்ன இந்தக் குறிப்பிலிருந்து, கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கு நாம் எடுக்க வேண்டிய முதலாவது படியைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆம், யெகோவாவையும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய நெறிமுறைகளையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதே முதலாவது படியாகும்; இந்த அறிவெனும் ஒளியைப் பெறுவதன்மூலம் அறியாமை எனும் இருளை விரட்ட வேண்டும். (2 தீமோத்தேயு 3:16, 17) நம்முடைய படைப்பாளரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ளாவிட்டால் நம்மால் அவரைக் கண்டிப்பாகப் பிரியப்படுத்த முடியாது. எனவேதான் தம்முடைய பிதாவிடம் இயேசு ஜெபம் செய்தபோது, “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று சொன்னார்.—யோவான் 17:3.

இந்த அறிவை நல்மனமுள்ளவர்கள் பெறும்போது, கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி மனம் நொந்துபோகிறார்கள்; அதனால் அவர்கள் உண்மையிலேயே மனந்திருந்தத் தூண்டப்படுகிறார்கள். இதுவே, கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்குரிய இரண்டாவது படியாகும். “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள் [“மனம் வருந்தி, உங்கள் வழிகளைவிட்டு முழுமையாய்த் திரும்புங்கள்,” NW]” என்று அப்போஸ்தலர் 3:20 சொல்கிறது.

அந்த வசனமே, மன்னிப்பைப் பெறுவதற்குரிய மூன்றாவது படியைப்பற்றி, அதாவது, தங்கள் வழிகளைவிட்டு முழுமையாய்த் திரும்புவதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. தங்களுடைய வழிகளைவிட்டு முழுமையாய்த் திரும்புவது என்பது, முந்தைய பழக்கவழக்கங்களையும் மனப்பான்மைகளையும் முற்றிலும் விட்டுவிலகி, கடவுளுடைய நெறிமுறைகளையும் கண்ணோட்டத்தையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. (அப்போஸ்தலர் 26:20) சுருங்கச் சொன்னால், “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கடவுளிடம் சொல்லும்போது அந்த வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல, உள்ளத்திலிருந்து பிறந்தன என்பதைத் தன்னுடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன்மூலம் ஒருவர் காட்டுகிறார்.

கடவுளுடைய மன்னிப்பிற்கும் ஓர் எல்லை உண்டு

சிலருடைய பாவங்களை கடவுள் மன்னிப்பதில்லை. “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” என்று பவுல் எழுதினார். (எபிரெயர் 10:26, 27) ‘மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்வது’ என்ற வார்த்தை, தீமையை விட்டு வெளிவர ஒருவர் வேண்டுமென்றே மறுப்பதை, உண்மையிலேயே அவருக்குப் பொல்லாத இருதயம் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது.

அத்தகைய இருதய நிலையை யூதாஸ்காரியோத்து வளர்த்துக்கொண்டான். “அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 26:24, 25) அவருடைய காலத்திலிருந்த மதத் தலைவர்கள் சிலரைக் குறித்து, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; . . . அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” என்று சொன்னார். (யோவான் 8:44) சாத்தானைப் போலவே, அவர்கள் தீமையின் உருவாய் இருந்தார்கள். தங்களுடைய செயலுக்காக அவர்கள் மனம் வருந்தாமல், தங்களுடைய தீய வழிகளில் இன்னும் தீவிரமாய் மூழ்கினார்கள். a அபூரணத்தினாலும் பலவீனத்தினாலும் உண்மைக் கிறிஸ்தவர்கள்கூட பாவம் செய்துவிடுகிறார்கள், சிலசமயங்களில் மோசமான பாவங்களைக்கூட செய்துவிடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் செய்த தவறுகளை வைத்து, முழுக்க முழுக்க அவர்கள் தீய மனப்பான்மை உள்ளவர்களென சொல்லிவிட முடியாது.—கலாத்தியர் 6:1.

இறுதிவரை இரக்கம்

பாவத்தை மட்டுமல்ல, அதைச் செய்தவரின் மனநிலையையும் யெகோவா பார்க்கிறார். (ஏசாயா 1:16-19) இயேசுவுக்கு அருகில் கழுமரத்தில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுடைய சூழ்நிலையைச் சற்று சிந்திப்போம். உண்மையில், இருவருமே மோசமான குற்றங்களைச் செய்திருந்தார்கள். அவர்களில் ஒருவன், “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ [இயேசுவோ] தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்று சொன்னதன்மூலம் தன் குற்றத்தை மற்றவனிடம் ஒப்புக்கொண்டான். அவன் இயேசுவைப்பற்றி ஏதோ கொஞ்சம் அறிந்திருந்தான் என்பது அவனுடைய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. ஒருவேளை, அந்த அறிவு அவனுடைய மனப்பான்மை மாறுவதற்கு வழிவகுத்திருக்கலாம். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று அடுத்து அவன் சொன்னதிலிருந்து அவன் மனப்பான்மை மாறியிருந்தது தெரிகிறது. அவனுடைய உள்ளப்பூர்வமான வேண்டுகோளுக்கு கிறிஸ்து என்ன பதில் அளித்தார்? “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று அவர் சொன்னார்.—லூக்கா 23:41-43; NW.

இந்த வார்த்தைகளை, மரண தண்டனை பெறத் தகுந்தவனென ஒப்புக்கொண்ட அந்த மனிதனிடம் இயேசு சொன்னார். இதைச் சற்று எண்ணிப் பாருங்கள்: கடைசி நேரத்தில், ஒரு மனிதராக இயேசு சொன்னவற்றில் அவருடைய இரக்கம் வெளிப்பட்ட இந்த வார்த்தைகளும் அடங்கும். இது மனதுக்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! எனவே, மேற்குறிப்பிடப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்திருந்தாலும் இப்போது உண்மையிலேயே மனம் வருந்துகிற அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய தகப்பனான யெகோவாவும் இரக்கம் காட்டுவார்கள் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—ரோமர் 4:7. (g 2/08)

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ கடவுளுடைய இரக்கத்தை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?சங்கீதம் 103:12-14; 130:3, 4.

◼ கடவுளுடைய தயவைப் பெற ஒருவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?யோவான் 17:3; அப்போஸ்தலர் 3:19.

◼ கழுமரத்தில் அறையப்பட்ட கள்வனுக்கு இயேசு என்ன வாக்குறுதி அளித்தார்?லூக்கா 23:43, NW.

[அடிக்குறிப்பு]

a 2007, ஜூலை 15, பக்கங்கள் 16-20-ல் “பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறீர்களா?” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைக் காண்க.