Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“என் பிள்ளையா இப்படி?”

“என் பிள்ளையா இப்படி?”

“என் பிள்ளையா இப்படி?”

ஸ்காட், ஸான்ட்ரா தம்பதியினரின் a 15 வயது பெண் ஒருநாள் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் அப்படியே வாயடைத்துப்போனார்கள். பொன்னிரமாக இருந்த அவளுடைய முடி இப்போது சிகப்பு நிறத்தில் இருந்தது. அதைவிட, அவள் சொன்ன பதிலைக் கேட்டு அவர்கள் இன்னும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

“யாரைக் கேட்டு நீ தலைக்குச் சாயம் பூசிக்கொண்டாய்?”

“பூசக்கூடாதென்று நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே.”

“எங்களை ஏன் ஒருவார்த்தை கேட்கவில்லை?”

“கேட்டாலும் வேண்டாமென்றுதான் சொல்வீர்கள், அதனால்தான்.”

பருவ வயது என்பது பிள்ளைகளுக்கும் சரி அவர்களுடைய பெற்றோருக்கும் சரி, குழப்பமான அதேசமயம் பதற்றமான காலம்தான். இதை ஸ்காட்டும் ஸான்ட்ராவும்கூட ஒத்துக்கொள்வார்கள். பிள்ளைகள் பருவ வயதை எட்டும்போது அவர்களுடைய உடலிலும் மனதிலும் ஏற்படுகிற அதிரடி மாற்றங்களைச் சமாளிக்க அநேக பெற்றோர் கொஞ்சமும் தயாராய் இருப்பதில்லை. கனடாவில் உள்ள ஒரு தாய் இவ்வாறு சொல்கிறார்: “என் பிள்ளையா இப்படி மாறிவிட்டாள்? இதை நினைக்கும்போது எப்படி இருக்கிறது தெரியுமா? நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளை யாரோ தூக்கிக்கொண்டு போய், அவளுக்குப் பதிலாக வேறு யாரையோ கொண்டுவந்து விட்டதுபோல் இருக்கிறது.”

பார்பாரா மட்டும் இல்லை, உலகிலுள்ள எல்லா பெற்றோரும் இப்படித்தான் உணருகிறார்கள். இதைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் சில பெற்றோர் சொன்னதைக் கேளுங்கள்.

“எங்கள் மகன் எப்போது பருவ வயதை எட்டினானோ, அப்போதுமுதல் தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் நடந்துகொள்கிறான். நாங்கள் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறான். எங்கள் பேச்சுக்கு மரியாதையே கொடுப்பதில்லை.”—லீயா, பிரிட்டன்.

“எங்கள் மகள்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கே ரொம்ப நேரம் செலவழிக்கிறார்கள்.”—ஜான், கானா.

“என் மகன் வரவர சொந்தமாகத் தீர்மானம் எடுக்க விரும்புகிறான். ‘இதைச் செய், அதைச் செய்’ என்று சொன்னால் அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கிறதில்லை.”—செலீனா, பிரேசில்.

“இப்போதெல்லாம் எங்கள் மகள், நாங்கள் அவளை ஆசையாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை விரும்புவதில்லை.”—ஆன்ட்ரு, கனடா.

“எங்கள் மகன்கள் ரொம்ப எதிர்த்துப் பேசுகிறார்கள். இதுவரைக்கும் எங்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் இப்போது எங்களையே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.”—ஸ்டீவ், ஆஸ்திரேலியா.

“எங்கள் மகள், மனந்திறந்து எங்களிடம் பேசுவதில்லை. எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு பூட்டிவைத்துக்கொள்கிறாள். மீறி எதாவது கேட்டாள் என் மீதே எறிந்து விழுகிறாள்.”—ஜோவான், மெக்சிகோ

“எங்கள் பிள்ளைகள் இப்போதெல்லாம் நிறைய விஷயங்களை எங்களிடமிருந்து மறைக்கிறார்கள். அவர்களுடைய விஷயத்தில் யாருமே தலையிடக் கூடாதென்று நினைக்கிறார்கள். எங்களோடு இருப்பதைவிட நண்பர்களோடு இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.”—டான்யெல், பிலிப்பைன்ஸ்.

பருவ வயது பிள்ளையின் பெற்றோராய் இருக்கும் நீங்களும் இவர்களில் சிலர் உணர்வது போலவே உணரலாம். ஆனால் கவலைப்படாதீர்கள், உங்களோடு இருக்கும் இந்த “புதிய நபரை,” பருவ வயது பிள்ளையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்த விஷயத்தில் பைபிள் உங்களுக்கு கைகொடுக்கும். எப்படி?

ஞானமும் புரிந்துகொள்ளுதலும்

“ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்” என்கிறது பைபிளிலுள்ள ஒரு பழமொழி. (நீதிமொழிகள் 4:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) பருவ வயது பிள்ளையை வளர்ப்பதற்கு இந்த இரண்டு குணங்களுமே தேவை. உங்கள் பிள்ளைகள் வித்தியாசமாக நடந்துகொள்வதற்கான காரணத்தை உணர உங்களுக்குப் புரிந்துகொள்ளுதல் அவசியம். உங்கள் பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பதற்கு உங்களுக்கு ஞானமும் அவசியம்.

உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் மத்தியில் பெரிய இடைவெளி இருப்பதாகத் தோன்றினாலும் அதற்காக நீங்கள் அவர்களுக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். உண்மையைச் சொன்னால், சவால்மிகுந்த இந்த வயதில்தான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் உதவி தேவை, அவசியமும்கூட. அவர்களை நல்வழியில் நடத்த ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உங்களுக்கு எவ்வாறு உதவும்? (g 6/08)

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.