Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

பைபிளின் கருத்து

கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

ஓய்வுஒழிச்சல் இல்லாத இந்த வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் தலைக்குமேல் இருக்கின்றன. சில நேரங்களில், நம்முடைய கடமைகளையெல்லாம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆனாலும், ஒரு விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நம்முடைய உயிர், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசு. (சங்கீதம் 36:9) அப்படியென்றால், நாம் கடவுளுக்காக எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்? இதற்கு பைபிள் தருகிற பதில் நியாயமாகவும் இருக்கிறது, ஆறுதலாகவும் இருக்கிறது.

கடவுள் மனிதரிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பது வேறு யாரையும்விட அவருடைய மகன் இயேசுவுக்குத்தான் நன்றாகத் தெரிந்திருந்தது. (மத்தேயு 11:27) கட்டளைகளிலேயே முக்கியமான கட்டளை எதுவென்று ஒருவன் இயேசுவிடம் கேட்டபோது, “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மாற்கு 12:30, NW) இதன் அர்த்தம் என்ன? கடவுள் நம்மிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறாரா?

கடவுள்மீது முழு மூச்சோடு அன்புகாட்டுதல் என்றால் என்ன?

கடவுள் நமக்காகச் செய்திருக்கிற ஏராளமான நன்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது அவர்மீது நமக்கு அன்பு பெருக்கெடுக்கும். நாம் அவரை முழு மூச்சோடு, அதாவது உயிருக்கு உயிராக நேசித்தால், நம்மிடம் இருப்பவற்றில் சிறந்ததை அவருக்குக் கொடுப்போம். அதோடு, ஒரு பைபிள் எழுத்தாளர் சொன்னதுபோல், “யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைமாறு செய்வேன்?” என்று சொல்வோம். (சங்கீதம் 116:12) கடவுள்மீது நமக்கு இப்படிப்பட்ட அன்பு இருந்தால் நம் நேரத்தை எப்படிச் செலவிடுவோம்?

ஒவ்வொரு வாரமும் கடவுளுக்காக எத்தனை மணிநேரம் செலவிட வேண்டுமென்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. ஆனாலும், எந்தெந்த காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் தர வேண்டுமென்றும் அதற்கான காரணத்தையும் அது விளக்குகிறது. உதாரணத்திற்கு, ‘நித்திய ஜீவனை’ அதாவது சாவில்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கு கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இயேசு சொன்னார். (யோவான் 17:3) தம்மைப் பின்பற்றுகிறவர்கள், கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அதன் மூலம் சாவில்லாத வாழ்க்கையைப் பெற உதவிசெய்ய வேண்டுமென்றும்கூட அவர் சொன்னார். (மத்தேயு 28:19, 20) யெகோவாவை வணங்குகிற மற்றவர்களுடன் நாம் தவறாமல் கூடிவர வேண்டுமென்றும் பைபிள் சொல்கிறது. அப்படிச் செய்யும்போது, கடவுளுடைய சேவையில் உறுதியாக இருப்பதோடு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் முடியும். (எபிரெயர் 10:24, 25) இதையெல்லாம் செய்வதற்கு நேரம் வேண்டும்.

அப்படியென்றால், நாம் வாழ்க்கையில் வேறு எதுவும் செய்யாமல் சதா சர்வகாலமும் ‘கடவுள் கடவுள்’ என்றே வாழ வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறாரா? இல்லவே இல்லை! வாழ்க்கையை ஓட்டுவதற்கு அன்றாட அலுவல்களையும் நாம் கவனிக்க வேண்டும். கணவன்மார் தங்கள் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை பைபிள் எடுத்துக்காட்டுகிறது; “ஒருவன் தன்னை நம்பியிருப்பவர்களை, முக்கியமாகத் தன் குடும்ப அங்கத்தினர்களை, கவனிக்கவில்லை என்றால் அவன் . . . விசுவாசமில்லாதவனைவிட மோசமானவனாக இருப்பான்” என்று அது சொல்கிறது.​—⁠1 தீமோத்தேயு 5:8, NW.

வாழ்க்கையை அனுபவித்து மகிழவே மனிதனைக் கடவுள் படைத்தார். ஆகவே, நம் சொந்தபந்தங்களோடும் சிநேகிதர்களோடும் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வதிலோ பயனுள்ள விதத்தில் பொழுதைப் போக்குவதிலோ தவறில்லை. சாலொமோன் என்ற ராஜா இப்படி எழுதினார்: ‘மனிதன் தான் உயிரோடிருக்கும்போது, இன்பம் அனுபவித்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவனுக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன். உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனை அனுபவிக்கிற இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.’​—⁠பிரசங்கி [சபை உரையாளர்] 3:12, 13, பொது மொழிபெயர்ப்பு.

மனிதருக்கு இருக்கிற குறைபாடுகளையும் யெகோவா தேவன் அறிந்திருக்கிறார்; நாம் ‘மண் என்று அவர் நினைவுகூருகிறார்.’ (சங்கீதம் 103:14) நாம் போதுமான அளவுக்கு ஓய்வு எடுப்பதும் அவசியம் என்று பைபிள் சொல்கிறது. ஒருமுறை, இயேசு மணிக்கணக்கில் ஊழியம் செய்த பின்பு தம்முடைய சீஷர்களிடம், ‘தனிமையான ஓர் இடத்திற்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்’ என்று சொன்னார்.​—⁠மாற்கு 6:31, NW.

ஆகவே, கடவுளுக்குப் பிரியமானபடி வாழ்வதற்கு ஆன்மீகக் காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை, வேறு பல காரியங்களையும் செய்யலாம். ஆனால், நாம் எதைச் செய்தாலும், அது வழிபாடு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, கடவுளை நாம் முழு மூச்சோடு நேசிக்கிறோம் என்பதை அவை வெளிக்காட்ட வேண்டும். “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என பைபிள் சொல்கிறது.​—⁠1 கொரிந்தியர் 10:31.

முக்கியமானவற்றிற்கு முதலிடம் தருதல்

வாழ்க்கையில் கடவுளுக்கு முதலிடம் தருவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறீர்களா? அல்லது, உங்கள் சக்திக்கு மிஞ்சியது என்று நினைக்கிறீர்களா? கடவுள் எதிர்பார்க்கிறபடி நாம் நேரத்தை செலவழிப்பதற்குச் சில மாற்றங்களை, சொல்லப்போனால் சில தியாகங்களைக்கூடச் செய்ய வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அன்புள்ள நம் படைப்பாளர், நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி நம்மிடம் சொல்வதே இல்லை. உண்மையில், அவர் விரும்புகிறபடி நாம் வாழ்வதற்காக நமக்கு ஏராளமான உதவிகளைச் செய்கிறார். ‘தேவன் தந்தருளும் பலத்தில்’ நாம் சார்ந்திருந்தால் அவர் விரும்புகிறதை நம்மால் செய்ய முடியும்.​—⁠1 பேதுரு 4:11.

அன்றாடக் காரியங்களோடு ஆன்மீகக் காரியங்களுக்கும் நேரத்தை ஒதுக்க நீங்கள் முயற்சியெடுக்கும்போது, ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அப்படியென்றால், ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவா தேவனிடம் அடிக்கடி பேசுங்கள். (சங்கீதம் 65:2) எப்படிப்பட்ட கவலை வந்தாலும் அவரிடம் சொல்லுங்கள், ஏனென்றால், ‘அவர் உங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார்.’ (1 பேதுரு 5:7, NW) தாவீது ராஜா ஜெபம் செய்கையில், “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்” என்றார். (சங்கீதம் 143:10) அவரைப் போலவே நீங்களும், உங்களுடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்ய கடவுளிடம் உதவி கேட்கலாம்.

“கடவுளிடம் நெருங்கிவாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கிவருவார்” என்று பைபிள் அன்போடு அழைக்கிறது. (யாக்கோபு 4:8) கடவுளுக்குப் பிடித்த காரியங்களை நீங்கள் செய்ய ஆரம்பிக்கும்போது, உதாரணத்திற்கு பைபிளைப் படிக்கும்போதும் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போகும்போதும் கடவுளிடம் நெருங்கி வருவீர்கள். அவரும் உங்களைப் பலப்படுத்தி, இன்னுமதிக முன்னேற்றம் செய்ய உங்களுக்கு உதவுவார்.

ஜெலனா என்பவர் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிளைப் படித்துவருகிறார்; தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் தர முயற்சி எடுத்ததைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “அது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனால், கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்ததுமே, பைபிள் சொல்கிறபடி வாழ்வதற்கு எனக்குப் பலம் கிடைத்தது. அதோடு, மற்றவர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.” நாம் கடவுளுக்குச் சேவை செய்யும்போது பல நன்மைகளை அனுபவிப்போம், அதனால் இன்னுமதிகமாக அவருக்குச் சேவை செய்யத் தூண்டப்படுவோம். (எபேசியர் 6:10) ஜெலனா சொல்கிறார்: “இப்போதெல்லாம் என் கணவரோடு நல்ல விதமாக வாழ்க்கை நடத்துகிறேன், என் பிள்ளைகளையும் நல்ல விதமாகக் கண்டித்து வளர்க்கிறேன்.”

இன்றைய உலகில் பிரச்சினைகள் உங்களை ஆட்டிப்படைப்பது உண்மைதான். இருந்தாலும், என்னென்ன காரியங்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் ‘நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு’ யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவருடைய வல்லமைவாய்ந்த சக்தி உங்களைத் தூண்டுவிக்கும், அதற்குத் தேவையான பலத்தையும் தரும். (எபேசியர் 3:16; 5:15-17, NW) இயேசு சொன்னபடி, “மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களைக் கடவுளால் செய்ய முடியும்.”​—⁠லூக்கா 18:27, NW. (g 4/08)

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ கடவுள் விரும்புவதைச் செய்வதற்கு உங்கள் வாழ்க்கையில் ஏன் முதலிடம் தர வேண்டும்? ​—⁠சங்கீதம் 116:12; மாற்கு 12:30.

◼ நீங்கள் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்? ​—⁠மத்தேயு 28:19, 20; யோவான் 17:3; எபிரெயர் 10:24, 25.

◼ கடவுளைப் பிரியப்படுத்த நீங்கள் எப்படி முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் தர முடியும்? ​—⁠எபேசியர் 5:15-17; யாக்கோபு 4:8.

[பக்கம் 14-ன் படம்]

கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு அன்றாட காரியங்களையும் ஆன்மீக காரியங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும்