Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?

‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?

‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?

“இன்றே கடைசி நாள், முந்துங்கள்!” ஒரு கடைக்கு முன்பு இப்படி எழுதிவைக்கப்பட்டிருக்கிறது என வைத்துகொள்ளுங்கள். அதைப் படித்தவுடனேயே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஒன்று, அது தள்ளுபடி விற்பனையின் கடைசி நாளாக இருக்கலாம்; அல்லது அந்தக் கடையையே மூடப்போகிறார்கள் என்று அர்த்தப்படலாம். அப்படியென்றால், “நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம்” என்று யாராவது சொன்னால் அதன் அர்த்தமென்ன?

‘கடைசிநாட்கள்,’ ‘முடிவுகாலம்’ ஆகிய பதங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பைபிளில் குறிப்பிடப்பட்டன. (2 தீமோத்தேயு 3:1; தானியேல் 12:4) கிட்டத்தட்ட 2,500 வருடங்களுக்கு முன்பு உலக வல்லரசுகளைப் பற்றிய தரிசனங்களும் ‘முடிவுகாலம்’ வரை அவற்றுக்கு இடையே ஏற்படவிருக்கும் சண்டைகளைக் குறித்த தரிசனங்களும் தீர்க்கதரிசியான தானியேலுக்கு கொடுக்கப்பட்டன. இந்தத் தரிசனங்களுக்கான விளக்கம் முடிவு காலத்தில் கொடுக்கப்படுமென அவரிடம் சொல்லப்பட்டது. (தானியேல் 8:17, 19; 11:35, 40; 12:9) “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என்றும் தானியேல் எழுதினார்.​—தானியேல் 2:44.

இயேசு, “[தம்முடைய] வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன” என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது ‘முடிவு’ காலத்தைப் பற்றி குறிப்பிட்டார். (மத்தேயு 24:3–42) தானியேல், இயேசு இருவருமே ஒரு முடிவு காலத்தைக் குறித்து பேசியதாகத் தெரிகிறது. பூமியில் இப்போது வாழ்பவர்களையும் இதற்கு முன் வாழ்ந்தவர்களையும் பாதிக்கப்போகும் பயங்கரமான மாற்றத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. பூமியிலுள்ள எல்லா அரசாங்கங்களுக்கும் வரப்போகிற முடிவைக் குறித்து தானியேல் எழுதினார். இயேசு, ‘இந்த உலகத்தின் முடிவை’ பற்றி பேசினார்.

கடைசி நாட்களின் அர்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியமா? ஆம், ரொம்பவே முக்கியம். முழு மனிதவர்க்கமே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நாம் ஒவ்வொருவரும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அநேகர் இதில் அக்கறை காட்டுவதில்லை. “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்” என்று பைபிள் முன்னமே சொல்லியிருக்கிறது. (2 பேதுரு 3:3, 4) ‘சரித்திரத்தில் ஏற்கெனவே நடந்த விஷயங்களே இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய வாழ்க்கையும் இப்படியேதான் போய்கொண்டிருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது’ என சிலர் நினைக்கலாம்.

கடைசி நாட்கள் என்று பைபிள் அழைக்கும் காலப்பகுதியில்தான் உண்மையிலே நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா? அடுத்த கட்டுரை இதற்குப் பதில் அளிக்கும். (g 4/08)