Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி நாட்கள் எப்போது ஆரம்பித்தன?

கடைசி நாட்கள் எப்போது ஆரம்பித்தன?

கடைசி நாட்கள் எப்போது ஆரம்பித்தன?

“சுமார் நூறு கோடி வருடங்களுக்குள் பூமி கருகி, வறண்ட புழுதி காடாக மாறிவிடும் என எதிர்பார்க்கிறோம். அப்போது உயிரினங்களெல்லாம் எப்படித்தான் தாக்குப்பிடிக்குமோ?” என்கிறது வானமும் தொலைநோக்கியும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் சமீபத்திய இதழ். ஏன்? “சூரியனின் வெப்பம் அதிகரிக்கையில் கடல் நீர் வற்றி, கண்டங்கள் பாளம் பாளமாக வெடித்துவிடும் . . . பயங்கரமான இந்தக் காட்சி உண்மையில் நடக்கப்போகிறது. இதுதான் நம்முடைய முடிவு, இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்கிறது வானவியல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை.

ஆனால், ‘தேவன் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தார், எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) பூமியைப் படைத்த கடவுளால் அது அழியாதபடி நிச்சயம் பாதுகாக்கவும் முடியும். சொல்லப்போனால், மனிதர்கள் ‘குடியிருக்கவே’ அதைப் படைத்தார். (ஏசாயா 45:18) ஆனால், அதில் குடியிருப்பவர்கள் கெட்டவர்களாக இருக்கவோ இறந்துபோகவோ வேண்டுமென அவர் விரும்பவில்லை. தானியேல் 2:44-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல் கடவுள், தம்முடைய அரசாங்கத்தின் மூலமாக மீண்டும் தம்முடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்கு ஒரு காலத்தைக் குறித்திருக்கிறார்.

கடவுளுடைய அரசாங்கத்தைக் குறித்து இயேசு போதித்தார். தேசங்களையும் ஜனங்களையும் நியாயம் தீர்க்கும் காலத்தைக் குறித்து அவர் பேசினார். இதுவரை சம்பவித்திராத மகா உபத்திரவம் வருமென்று எச்சரித்தார். இன்று நாம் வாழும் இந்த உலகத்தின் முடிவை குறிப்பதற்காக பல அம்சங்கள் அடங்கிய ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.​—மத்தேயு 9:35; மாற்கு 13:19; லூக்கா 21:7–11; யோவான் 12:31.

இயேசுவைப் போன்ற ஒரு முக்கியமான நபர் இதைப்பற்றி சொல்லியிருப்பதால் அநேகர் இதைக் குறித்து யோசித்திருக்கிறார்கள். இவை எல்லாம் எப்போது சம்பவிக்கும்? பைபிள் தீர்க்கதரிசனத்தையும் காலக்கணக்கையும் கவனமாகப் படிப்பதன் மூலம் முடிவு எப்போது வருமென திட்டவட்டமாகக் கணக்கிட சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித மேதையான சர் ஐசக் நியூட்டனும் ஒருவர். இவர் புவியீர்ப்பு சக்தியையும் கால்குலஸ் என்ற நுண்கணிதத்தையும் கண்டுபிடித்தவர்.

இயேசு தம் சீஷர்களிடம், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 1:7, பொது மொழிபெயர்ப்பு) தம்முடைய “வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம்” கொடுக்கையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” (மத்தேயு 24:3, 36) நோவா காலத்தில் பொல்லாத மக்களுக்கு வந்த அழிவையும் “மனுஷகுமாரன் வருங்காலத்தில்” நடக்கவிருக்கும் அழிவையும் ஒப்பிட்டுப் பேசும்போது இயேசு இவ்வாறு கூறினார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.”​—மத்தேயு 24:39, 42.

‘உலகத்தின் முடிவு’ சரியாக எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், ‘கடைசி நாட்கள்’ எப்போது ஆரம்பித்தது என்பதை இயேசு கொடுத்த அந்த ‘அடையாளத்திலிருந்து’ தெரிந்துகொள்ள முடிகிறது. (2 தீமோத்தேயு 3:1) ‘இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நாம் தப்பவேண்டுமானால்’ நாம் இப்போது ‘விழித்திருக்க’ வேண்டும்.​—லூக்கா 21:36.

அடையாளங்களைக் கொடுப்பதற்கு முன்பு இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.”​—லூக்கா 21:8, 9.

அந்த அடையாளம் என்ன?

நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை உலகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று இயேசு சொன்னார். “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்” என்று அவர் சொன்னார். (லூக்கா 21:10, 11) அதேசமயம், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்றும் சொன்னார். (மத்தேயு 24:14) இயேசு குறிப்பிட்ட போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவை ஒன்றும் புதிதல்ல. இவை ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்பதே.

‘இயேசு சொன்ன அந்த அடையாளத்தின் அனைத்து அம்சங்களும் எந்தச் சகாப்தத்தில் சம்பவித்திருக்கின்றன?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். 1914-ல் இருந்து கொடூரமான உலகப் போர்கள்; சுனாமி போன்ற பெரும் அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான பூமி அதிர்ச்சிகள்; உலகத்தையே உலுக்கிய மலேரியா, ஸ்பானிய காய்ச்சல், எய்ட்ஸ் போன்ற கொள்ளைநோய்கள்; லட்சக்கணக்கான மக்கள் பசிப்பட்டினிக்கு இரையாதல்; லட்சோபலட்ச உயிர்களைக் குடிக்கும் திறன்மிக்க அணு ஆயுத கருவிகளாலும் தீவிரவாதத்தாலும் உலகெங்கும் பரவியுள்ள திகில்; கடவுளுடைய பரலோக அரசாங்கத்தைப் பற்றிய அருமையான செய்தியை யெகோவாவின் சாட்சிகள் உலகமுழுவதும் அறிவித்தல் ஆகிய அனைத்தையுமே நாம் பார்த்திருக்கிறோம். இயேசு சொன்ன விதமாகவே இவைகளெல்லாம் நடந்திருக்கின்றன.

‘கடைசி நாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியதையும் நினைவில் வையுங்கள். (2 தீமோத்தேயு 3:1–5) ‘கொடிய காலங்களில்’ திரும்பும் திசையெல்லாம் அக்கிரமக்காரர்கள், கடவுள்பக்தி இல்லாதவர்கள், கொடூர இருதயமுள்ளவர்கள், சுயநலத்தால் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறவர்கள் போன்றவர்களே இருப்பார்கள். a

முடிவுக்கு முன் வரவேண்டிய ‘கடைசி நாட்கள்’ எதிர்காலத்தில் ஆரம்பிக்குமா? அது எப்போது ஆரம்பிக்கும் என்பதற்கு வேறு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?

‘முடிவுகாலம்’ எப்போது ஆரம்பித்தது?

பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றிய தரிசனத்தைப் பெற்ற பிறகு தீர்க்கதரிசியான தானியேலிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: ‘உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் [இயேசு கிறிஸ்து] அக்காலத்திலே [தானியேல் 11:40-ல் குறிப்பிடப்பட்ட அந்த ‘முடிவுகாலத்திலே’] எழும்புவார்.’ (தானியேல் 12:1) மிகாவேல் என்ன செய்வார்?

மிகாவேல் ராஜாவாக இருக்கும் சமயத்தில் என்ன செய்வார் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று அது சொல்கிறது.​—வெளிப்படுத்துதல் 12:7–9, 12.

பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறபடி, சாத்தானையும் அவனுடைய பேய் பட்டாளத்தையும் பரலோகத்திலிருந்து வெளியேற்ற நடந்த இந்த யுத்தத்தின் விளைவாக பூமிக்கு மிகுந்த ஆபத்து உண்டாகும். ஏனென்றால், இந்தப் பூமியை ஆட்சி செய்வதற்கான காலம் வெகு விரைவில் முடியப்போகிறது என்பது பிசாசுக்கு நன்கு தெரியும். கடைசி நாட்களில் அவனுடைய கோபம் அதிகரிக்கும். அர்மகெதோனில் அவன் முற்றிலும் தோல்வியடையும் வரை அவன் கோபம் அதிகரித்துக்கொண்டே போகும்.​—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11, 15; 20:1–3.

பரலோக யுத்தத்தின் முடிவை அறிவித்த பிறகு அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.” (வெளிப்படுத்துதல் 12:10) கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் கடவுளுடைய ராஜ்யம் நிறுவப்படும் என்று இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? ஆம், அந்தப் பரலோக ராஜ்யம் அதாவது அரசாங்கம், 1914-ல் நிறுவப்பட்டது. b என்றாலும், கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சி செய்வதுபோல் பூமியிலேயும் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் வரை, இயேசு தம் ‘சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்து’ வருவார் என்று சங்கீதம் 110:2 சொல்கிறது.​—மத்தேயு 6:10.

கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பின்னர் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி தீர்க்கதரிசியான தானியேலிடம் கூறிய தேவதூதர் இதையும் தெரிவித்தார்: “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.” (தானியேல் 12:4) நாம் ‘முடிவுகாலத்தில்’ இருக்கிறோம் என்பதற்கு இதுவும் ஓர் அத்தாட்சி. ஏனென்றால், இந்தத் தீர்க்கதரிசனங்களின் அர்த்தம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது; இப்போது உலகெங்கும் அறிவிக்கப்பட்டும் வருகிறது. c

‘கடைசி நாட்கள்’ எப்போது முடிவடையும்?

கடைசி நாட்கள் எப்போது முடிவடையும் என்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. ஆனால், சாத்தானுக்கு விடப்பட்டிருக்கும் காலம் குறைந்துகொண்டே வருவதால் கடைசி நாட்களில் உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகும். “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் முன்னமே எச்சரித்திருந்தார். (2 தீமோத்தேயு 3:13) இனி நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி குறிப்பிடுகையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.”​—மாற்கு 13:19, 20.

“மிகுந்த உபத்திரவம்,” அர்மகெதோன் யுத்தம், அதோடு சாத்தானும் அவனுடைய பேய் பட்டாளமும் பூமியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாத விதத்தில் அவர்களைச் செயலற்ற நிலையில் வைப்பது ஆகியவை எதிர்காலத்தில் நடக்கப் போகிற சம்பவங்களில் சில ஆகும். (மத்தேயு 24:21) இவை எல்லாம் நிச்சயம் நடக்கும் என்று ‘பொய்யுரையாத தேவன்’ உறுதியளித்திருக்கிறார். (தீத்து 1:3) அர்மகெதோன் யுத்தத்திற்கும் சாத்தானை செயலற்ற நிலையில் தள்ளுவதற்கும் கடவுளே காரணமாக இருப்பார்.

கடவுள் கொண்டுவரப்போகும் அழிவுக்கு சற்று முன்பு குறிப்பாக என்ன சம்பவிக்கும் என்று அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியின் உதவியோடு நமக்குத் தெரியப்படுத்துகிறார். “காலங்களையும் வேளைகளையும் பற்றி” சொல்லும்போது அவர் இவ்வாறு எழுதினார், “இரவில் திருடன் வருகிற விதமாக யெகோவாவின் நாள் வருமென்று நீங்களே நன்கு அறிந்திருக்கிறீர்கள். ‘இதோ! சமாதானம், பாதுகாப்பு!’ என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வேதனை வருவதுபோல் அழிவு திடீரென்று அவர்கள்மீது வரும்; அவர்களால் தப்பிக்கவே முடியாது.” (1 தெசலோனிக்கேயர் 5:1–3, NW) ‘சமாதானமும் பாதுகாப்பும்’ இல்லாத சமயத்தில் அவை இருக்கின்றன என்று சொல்வதற்கான காரணத்தை பைபிள் குறிப்பிடவில்லை. இதற்குக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால், வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தத் தீர்க்கதரிசனங்கள் உண்மையானவை என்று நாம் நம்பினால் அதற்காக ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். எந்த விதத்தில்? அதற்கு பேதுரு பதிலளிக்கிறார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.” (2 பேதுரு 3:11, 12) ‘இப்படிச் செய்வதால் எனக்கு என்ன பயன்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். பதிலைத் தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரையை வாசித்துப் பாருங்கள். (g 4/08)

[அடிக்குறிப்புகள்]

a நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்குக் கூடுதல் அத்தாட்சி வேண்டுமா? யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! ஏப்ரல் 2007 பக்கங்கள் 8-10, காவற்கோபுரம் செப்டம்பர் 15, 2006 பக்கங்கள் 4-7, காவற்கோபுரம் அக்டோபர் 1, 2005, பக்கங்கள் 4-7-ஐப் பாருங்கள்.

b பைபிள் காலக்கணக்கைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் பக்கங்கள் 215-18-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தையும் யெகோவாவின் சாட்சிளுடைய இயர்புக் 2008-ல் பக்கங்கள் 31-9-ஐயும் பாருங்கள்.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

‘அந்த நாளும் அந்த நாழிகையும்’ கடவுள் ஒருவருக்கே தெரியும் என்று இயேசு சொன்னார்

[பக்கம் 4-ன் படம்]

சர் ஐசக் நியூட்டன்

[படத்திற்கான நன்றி]

© A. H. C./age fotostock

[பக்கம் 7-ன் படங்கள்]

இயேசு கொடுத்த அடையாளம் 1914-லிருந்து நிறைவேறி வருகிறது

[படங்களுக்கான நன்றி]

© Heidi Bradner/Panos Pictures

© Paul Smith/Panos Pictures