Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேரள காயலில் படகு பயணம்

கேரள காயலில் படகு பயணம்

கேரள காயலில் படகு பயணம்

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சகல வசதிகளும் உள்ள அழகான படகு வீட்டில் சவாரி செய்ய ஆசையா? அந்தப் படகில் அமர்ந்தபடி 44 நதிகளின் கழிமுகங்களைச் சுற்றிவர விருப்பமா? இதோ, இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் காயல் உங்களை வரவேற்கிறது. 900 கிலோமீட்டர் தூரம் நீண்டுகிடக்கிற இந்தக் காயலில் அதாவது, கடலோடு கலக்கும் உப்புநீர் ஏரிகளில் உல்லாசப் பயணம் செய்வது சுகமான ஓர் அனுபவம், அதை விவரிக்க வார்த்தைகள் போதாது! இயற்கையின் மடியில் மிதப்பதுபோன்று இருக்கும். உங்கள் படகு மெதுவாகச் செல்கையில், தென்னை மரங்கள் சுற்றி நிற்கும் உப்புநீர் ஏரிகளையும், பச்சை கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் நெல் வயல்களையும், இயற்கையாய் அமைந்துள்ள ஏரிகளையும், மனிதன் உருவாக்கிய கால்வாய்களையும் பார்த்துப் பார்த்து ரசிப்பீர்கள். நேஷனல் ஜியாக்ரஃபிக் டிராவெல்லர் என்ற புத்தகம், “வாழ்க்கையில் கண்டுகளிக்க வேண்டிய ‘50 இடங்களில் [கேரளாவும்] ஒன்று’” என குறிப்பிட்டதற்கு இந்தக் காயலே காரணமாக இருக்க வேண்டும்.

அங்குள்ள பல கால்வாய்களின் கரையோரத்தில் வசிக்கும் மக்களும் நம் கவனத்தைக் கவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகளோ ஐந்து நட்சத்திர உணவகங்களோ இல்லாத காலத்தை எண்ணிப் பார்க்கிறார்கள். அதற்கென்று, அவர்களுடைய வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டதாகவும் சொல்ல முடியாது. அவர்களில் சிலர் அங்கு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களிலோ சுற்றுலா நிறுவனங்களிலோ வேலை செய்கிறார்கள். மற்றபடி அவர்களுடைய கலாச்சாரத்திலோ தொழிலிலோ பெரிதாக எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. தங்களுடைய நெல் வயல்களிலும் தென்னந்தோப்புகளிலும் வேலை செய்வதோடு மீன் பிடிக்கவும் செல்கிறார்கள். இவையே அவர்களுக்கு உணவையும் வருமானத்தையும் அளிக்கின்றன.

காயலில் மீன் பிடிக்கிறார்கள்

மீன் பிடிப்பது இங்கு தினசரி வாழ்க்கையின் பாகமாகும். இங்குள்ள பெண்கள் தங்கள் கைகளாலேயே கரிமீன் என்ற ஒருவகை மீனைப் பிடிக்கும் காட்சியை வேறெங்குமே பார்க்க முடியாது. கேரளத்தின் காயலில் மட்டுமே கிடைக்கும் இந்த கரிமீனை இந்தியர்களும் சரி வெளிநாட்டவரும் சரி, விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த மீனைப் பிடிப்பதற்காக பெண்கள் காயலில் இறங்குகிறார்கள். குடங்கள் பின்னே மிதந்துவர மீனைத் தேடி இவர்கள் முன்னே செல்கிறார்கள். இந்தப் பெண்களைப் பார்த்தவுடன் மீன்கள் நீருக்கடியில் சென்று மணலில் புதைந்துகொள்கின்றன. இந்தப் பெண்களோ மீன்களைவிட கில்லாடிகள். அவை ஒளிந்திருக்கும் இடங்களைத் தங்கள் பாதங்களாலேயே உணர்ந்து சட்டென்று தண்ணீரில் மூழ்கி, தப்பித்துவிட்டோம் என்று நினைக்கும் மீன்களை ‘கப்பென்று’ பிடித்துவிடுகிறார்கள். பிடித்த மீன்களைப் பானைகளில் போட்டுக்கொள்கிறார்கள். போதுமானளவு மீன்களைப் பிடித்த பிறகு கரைக்கு வந்து, அங்கு ஆசையாய் காத்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்கள். விலை அதிகமுள்ள பெரிய மீன்கள், ஐந்து நட்சத்திர உணவகங்களில் பணக்காரர்களுக்குப் பரிமாறப்படுகின்றன; சிறிய மீன்களோ நடுத்தர வர்க்கத்தினருக்கு ருசியான உணவாகின்றன.

சீன மீன்பிடி வலைகள்

காயலின் கரையோரங்களில் சீன நாட்டு மீன்பிடி வலைகளைப் போன்ற வலைகள் பரவலாகக் காணப்படுகின்றன. எழில்மிகு இந்த வலைகளைப் பார்த்து ரசிக்கவே சுற்றுலாப் பயணிகளும் அங்கு வருகிறார்கள்.

கூப்ல கானின் அரசவையிலிருந்து வந்த சீன வர்த்தகர்கள் 14-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கொச்சினுக்கு (இப்போது கொச்சி) இந்த வலைகளைக் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது. கைகளால் இயக்க வேண்டிய இந்த வலைகளை முதலில் சீனர்களும் பிறகு அங்கு குடியேறிய போர்ச்சுகீஸியர்களும் பயன்படுத்தினார்களாம். 600 வருடங்களுக்கும் முன்பு இருந்ததுபோலவே இன்றும் இந்த வலைகள் பல இந்திய மீனவர்களுக்குப் பிழைப்பூட்டுவதோடு எண்ணற்ற மக்களின் பசியையும் ஆற்றுகின்றன. இந்த வலைகளின் விசேஷம் என்னவென்றால், ஒரேவொரு வீச்சில் கிடைக்கும் மீன்களை வைத்து ஒரு முழு கிராமத்திற்கே உணவளித்துவிடலாம். காயவைக்கப்பட்ட வலைகள் சூரியன் மறைகையில் மிக அழகாய் காட்சியளிக்கும் என்பதால் அவற்றைப் படம் பிடிக்க விரும்புகிறார்கள் அங்கு வரும் அநேக சுற்றுலாப் பயணிகள்.

வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த சீன வலைகளைப் பார்ப்பதற்கு மட்டுமே இங்கு வருவதில்லை. பாரம்பரிய பாம்புப் படகு போட்டிகள் போன்ற சுவாரஸ்யமான மற்ற சாகசங்களைக் கண்டுகளிக்கவும் இங்கு அலைமோதுகிறார்கள்.

படகுப் போட்டிகள்

பாம்புப் படகுகள் பார்ப்பதற்கு நீளமான, குறுகலான தோணிகள் போல் தோற்றமளிக்கும். படகின் பிற்பகுதி நாகப்பாம்பு படமெடுப்பது போல் காட்சியளிப்பதால் அதற்கு அந்தப் பெயர். முற்காலத்தில், இங்கு போரிட்ட ராஜாக்கள் அறுவடைக்குப் பின் நடந்த போர்களுக்காக இந்தப் படகுகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்தப் போர்களெல்லாம் முடிந்தபிறகு அந்தப் படகுகளுக்கான தேவை இல்லாமல் போனது. கோயில் திருவிழாக்களில் மட்டுமே இந்தக் கம்பீரமான படகுகள் பயன்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்தில், எக்காள முழக்கம் பின்னணியில் ஒலிக்க, அலங்காரம் செய்யப்பட்ட இந்தப் படகுகள் மக்களைச் சுமந்துகொண்டு காயலில் வலம் வந்து பாரம்பரியத்தை நினைவுபடுத்தின. திருவிழா காலங்களில், விசேஷ விருந்தினர்களுக்காகப் படகு போட்டிகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது.

பொதுவாக இந்தப் போட்டிகளில் கிட்டத்தட்ட 20 படகுகள் பங்கேற்கும். அவை ஒவ்வொன்றிலும் 100 முதல் 150 பேர் இருப்பார்கள். அவர்களில் 100-க்கும் அதிகமானோர் சிறிய துடுப்புடன் இரண்டு நீள் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். நான்கு படகோட்டிகள் படகின் பின்புறம் நீண்ட துடுப்புகளுடன் நின்றிருப்பார்கள். இரண்டு பேர் படகின் மத்திய பகுதியில் நின்றுகொண்டு துடுப்பு போடுகிறவர்களுக்கு நேரத்தைக் குறிப்பிட்டு காட்டும் வகையில் தாளம் போடுவார்கள். இந்தத் தாள சத்தம் ஒருபக்கம் கேட்க, பக்கத்திலேயே இன்னொரு சிறிய படகில் பயணிக்கும் சுமார் ஆறு பேர் ஒருசேர எழுப்பும் உற்சாகக் குரலும் சேர்ந்து ஒரே ஆரவாரமாக இருக்கும். இவர்கள், கைதட்டி, விசிலடித்து, கூச்சல்போட்டு, விசேஷமான பாடலைப் பாடி வேகமாய்த் துடுப்புப் போடும்படி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் தாளத்துக்கு ஏற்றபடி துடுப்புப்போட்ட இந்த வாலிபர்கள், எல்லையைத் தொடவிருக்கும் சமயத்தில் மீதமுள்ள சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி தாளத்தை மறந்து துடுப்பை வேகமாய்ப் போடுவது பரவசமான காட்சி.

1952-ல் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஆலப்புழாவிற்குச் சென்றார். காயலில் அமைந்துள்ள இந்த முக்கியப் பட்டணத்தில் ஒரு படகுப் போட்டியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். எந்தளவு அதில் மனதைப் பறிகொடுத்தார் என்றால், தன் பாதுகாப்பு வளையத்தைவிட்டு, வெற்றியடைந்த படகில் குதித்து, அவர்களுடன் சேர்ந்து கைத்தட்டி, பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து டில்லிக்குத் திரும்பிய பிறகு, அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்பிவைத்தார். வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு சிறிய பாம்புப் படகில் கையொப்பமிட்டு, “பாரம்பரியத்தை நினைவூட்டும் படகு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு” என்ற முத்திரையைப் பதித்திருந்தார். இந்த வெள்ளிப் படகு வருடாவருடம் நடைபெறும் நேரு பதக்கப் பந்தயத்தில் வெற்றி பெறுகிறவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற போட்டிகளைக் கண்டுகளிக்க ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து குவிகிறார்கள். பொதுவாகச் சலனமற்று விளங்கும் காயல், இந்தச் சமயத்தில் களைகட்டிவிடுகிறது.

மிதக்கும் அரண்மனையில் ஓர் உல்லாசப் பயணம்

பாம்புப் படகுகள் மட்டுமல்ல, இந்தக் காயலில் மிதக்கும் அரிசி படகுகளும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைக் கவருகின்றன. பழங்காலத்துப் பாணியில் கட்டப்பட்ட இந்தப் படகுகள் இப்போது சொகுசான படகு வீடுகளாக உருவெடுத்திருக்கின்றன.

இன்று சுற்றுலாப் பயணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அநேக அரிசி படகுகள் புதிதாய் கட்டப்பட்டிருந்தாலும் 100-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அரிசி படகுகளின் மவுசு இன்றும் குறையாமல் இருக்கிறது; ஆனால், அவை இப்போது சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் அவற்றை கெட்டுவல்லம் என்று அழைத்தார்கள்; “முடிச்சுகள் நிறைந்த படகு” என்று அதற்கு அர்த்தம். இந்தப் படகு ஒருவகை விசேஷ மரப் பலகைகளால் கட்டப்பட்டது; ஒரு ஆணிகூட பயன்படுத்தப்படாமல் சணல் கயிறு முடிச்சுகளால் பலகைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. அரிசியையும் மற்ற சரக்குகளையும் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு எடுத்துச் செல்லவும் மசாலாப் பொருள்களை தூர இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்தப் படகுகள் பயன்படுத்தப்பட்டன. நவீனகால வாகனங்களின் வருகையால் இந்தப் படகுகளுக்கான மவுசு குறைந்துவிட்டது. பிறகு ஒரு தொழில் முனைவரின் மனதில் அருமையான ஓர் யோசனை உதித்தது. சுற்றுலாவுக்காக இவற்றைப் படகு வீடுகளாக மாற்றலாமென அவர் நினைத்தார். மேல்மாடங்கள், சொகுசான படுக்கை அறைகள், கழிப்பறை வசதிகள், அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறைகள் ஆகிய அனைத்தும் அடங்கிய படகு வீடுகளை மிதக்கும் உணவகங்கள் என்று அழைத்தால் மிகையாகாது. நீங்கள் போக ஆசைப்படும் இடங்களுக்கு படகை ஓட்டிச் செல்லவும் உங்களுக்குப் பிடித்த உணவை சமைத்துத் தரவும் படகில் ஆட்கள் இருப்பார்கள்.

பொழுது சாய்ந்த பிறகு இந்தப் படகுகள் கரையோரங்களில் அல்லது தனிமைப் பிரியர்களுக்காக ஏரியின் நடுவே நிறுத்திவைக்கப்படும். அந்தச் சமயத்தில் சலனமற்ற இந்த ஏரியின் அமைதியை அனுபவித்து மகிழலாம். தூங்காத மீன்களின் உற்சாகத் துள்ளல் எப்போதாவது ஒருமுறை உங்கள் காதில் விழலாம்.

காயல் பகுதிகளில் வசிக்கும் எல்லாருமே அந்தளவு சாவகாசமாக இருப்பதில்லை. இங்கு வசிக்கும், ‘மனிதர்களைப் பிடிப்பவர்கள்’ சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

காயலில் ‘மனிதர்களைப் பிடிப்பது’

‘மனிதர்களைப் பிடிக்கிறவர்கள்’ என்ற சொற்றொடர் எங்கிருந்து வந்தது? இயேசுவின் சீஷர்களாக மாறிய மீனவர்களிடம் அவர் கூறிய வார்த்தைகளே இவை. “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்று அவர் சொன்னார். மக்கள் தம் சீஷர்களாய் ஆவதற்கு உதவும் வேலையையே இயேசு இங்கு குறிப்பிட்டார். (மத்தேயு 4:18, 19; 28:19, 20) இயேசு கொடுத்த இந்த வேலையை இன்று யெகோவாவின் சாட்சிகள் உலக முழுவதிலும் மும்முரமாகச் செய்துவருகிறார்கள், இந்தக் காயலைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட.

கேரளாவில் 132 யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் உள்ளன; அவற்றில் 13, காயல் பகுதிகளைச் சுற்றி உள்ளன. இந்தச் சபைகளில் உள்ள அநேகர் மீனவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஒருசமயம் மீன்பிடிக்கச் சென்றபோது கூட இருந்த ஒருவரிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசினார். அந்த நபர், சர்ச்சில் கற்பிக்கப்படும் விஷயங்களுக்கும் பைபிளிலுள்ள விஷயங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார். அவருடைய மனைவியும் நான்கு பிள்ளைகளும்கூட பைபிள் விஷயத்தில் ஆர்வம் காட்டினார்கள். அவர்களுடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் வேகமாக முன்னேற்றம் செய்தார்கள். அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் ஆறு பேரில் இப்போது நான்கு பேர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் இரண்டு பிள்ளைகள் அதற்காகத் தயாராகி வருகிறார்கள்.

ஒரு சபையினர் சிறிய தீவு ஒன்றில் பிரசங்கிப்பதற்காகப் படகில் சென்றார்கள். அந்தத் தீவிற்குப் படகுகள் வந்துபோவது அபூர்வம் என்பதால் அந்த ஊர் மக்கள் அதை கடமகுடி என்று அழைத்தார்கள்; “உள்ளே சென்றால் வெளியேவர முடியாது” என்பது அதன் அர்த்தம். அங்கே, ஜானியையும் அவரது மனைவி ராணியையும் சாட்சிகள் சந்தித்தார்கள். அவர்கள் கத்தோலிக்க மதத்தினராக இருந்தாலும் ஒரு தியான ஆசிரமத்தின் அங்கத்தினர்களாக இருந்தார்கள்; தங்களால் முடிந்த நன்கொடையை அதற்கு அளித்து வந்தார்கள். ஜானி, பைபிள் சத்தியத்திடம் அதிக ஆர்வம் காட்டியதால் அவரோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர் பைபிளிலிருந்து புதிதாய் கற்ற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார். புகையிலைக்கும் மதுபானத்திற்கும் அடிமையாகியிருந்த அவரை பைபிள் சத்தியம் மாற்றிவிட்டது.

ஜானி செய்துவந்த வேலை பைபிளுக்கு விரோதமாக இருந்ததால் அதிலும் அவர் மாற்றங்களைச் செய்தார். இதனால், ஆரம்பத்தில் அவர்களுக்குப் பணக்கஷ்டம் இருந்தது. ஆனால், சீக்கிரத்தில் அவர் நண்டுகளைப் பிடித்து விற்கும் தொழிலை ஆரம்பித்தபோது அவரால் தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடிந்தது. செப்டம்பர் 2006-ல் அவர் ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் 2007-ல் ஞானஸ்நானம் பெற்றார்கள். பூங்காவன பூமியில் என்றென்றுமாக வாழப்போகும் வாக்குறுதி, வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு இருந்த கண்ணோட்டத்தை அடியோடு மாற்றிவிட்டது.​—சங்கீதம் 97:1; 1 யோவான் 2:17.

கேரளாவின் காயலில் வலம்வருவது நிச்சயம் மறக்கமுடியாத ஓர் அனுபவம்தான். அங்கு சீன மீன்பிடி வலைகள், பாம்புப் படகுகள், படகு வீடுகள் ஆகியவற்றோடு ‘மனிதர்களைப் பிடிக்கிறவர்களான’ யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளும் இருப்பதுதானே அதற்குக் காரணம். (g 4/08)

[பக்கம் 10, 11-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இந்தியா

கேரளா

[பக்கம் 11-ன் படம்]

மீன்பிடிப்பது கேரளாவில் தினசரி வாழ்க்கையின் பாகமாகும்

[படத்திற்கான நன்றி]

மேல் படம்: Salim Pushpanath

[பக்கம் 11-ன் படம்]

பெண்கள் கைகளாலேயே மீன்களைப் பிடிக்கும் காட்சி

[பக்கம் 12-ன் படம்]

பாம்புப் படகு போட்டி

[பக்கம் 12-ன் படம்]

“கெட்டுவல்லம்”

[பக்கம் 12, 13-ன் படம்]

படகுவீடு

[பக்கம் 12, 13-ன் படம்]

ஜானியும் அவரது மனைவி ராணியும்

[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]

Salim Pushpanath