Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாவுதான் பிரச்சினைக்குத் தீர்வா?

சாவுதான் பிரச்சினைக்குத் தீர்வா?

இளைஞர் கேட்கின்றனர்

சாவுதான் பிரச்சினைக்குத் தீர்வா?

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் அதற்குப் பலியாகியிருக்கிறார்கள். இன்றைக்கு இளைஞர் மத்தியில் தற்கொலை சர்வசாதாரணமாக இருப்பதால் “விழித்தெழு!” பிரசுரிப்பாளர்கள் இந்த விஷயத்தைக் குறித்து அலசுவது அவசியமென நினைக்கிறார்கள்.

“நான் செத்துப்போகிறேன். உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல்.” இதைச் சொன்னது யார்? கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? கடவுளை வணங்குவதை விட்டுவிட்டவரா? அல்லது கடவுளால் கைவிடப்பட்டவரா? இவர்கள் யாருமே இல்லை. இதைச் சொன்னது கடவுள் பக்தியுள்ள ஆனால், மனமுடைந்த நிலையில் இருந்த யோனா என்பவர். a (யோனா 4:3, டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன்) யோனா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக பைபிள் சொல்லவில்லை. ஆனால், விரக்தியடைந்த நிலையில் இவர் செய்த ஜெபத்திலிருந்து ஓர் உண்மை தெரிகிறது; அதாவது கடவுளுக்குச் சேவை செய்யும் ஒருவர்கூட தாங்க முடியாத வேதனையில் துவண்டுவிடலாம் என்பது தெரிகிறது.​—⁠சங்கீதம் 34:19.

தாங்க முடியாத துயரத்தில் இருக்கும்போது, ‘இனி வாழ்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என சில இளைஞர் நினைக்கிறார்கள். 16 வயது லாராவைப் போலவே அவர்களும் உணரலாம். b “பல வருஷமாக எனக்கு மனச்சோர்வு இருந்தது. இதனால் நான் அடிக்கடி கஷ்டப்பட்டிருக்கிறேன். எத்தனையோ முறை செத்துப் போய்விடலாம் என்று யோசித்திருக்கிறேன்” என்கிறாள் லாரா. தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிற யாராவது ஒருவர் உங்களிடம் இப்படிச் சொல்வதை நீங்கள் கேட்கும்போது அல்லது உங்களுக்கே இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்போது நீங்கள் என்ன செய்யலாம்? முதலில், ஏன் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றன என்பதைச் சற்று உன்னிப்பாக ஆராயலாம்.

தற்கொலைக்குத் துணிய என்ன காரணம்?

ஏன் சிலர் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கிறார்கள்? இதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணம், ‘சமாளிப்பதற்கு கடினமான கொடிய காலங்களில்’ நாம் இன்று வாழ்கிறோம். அதனால் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் இளைஞர் திணறுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) மனித குறைபாடுகளின் காரணமாக, தங்களைப் பற்றியும் தங்களைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் சதா தவறான எண்ணங்களே சிலருடைய மனதில் இருக்கலாம். (ரோமர் 7:22–24) சில சமயம், மற்றவர்கள் தங்களை மோசமாக நடத்துவதால் இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் மனதில் எழலாம்; அல்லது, ஏதாவது உடல்நல பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் மனநலப் பிரச்சினையில் அவதிப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. c

யாருமே துன்பங்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. உண்மையில், “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 8:22, NW) இதில் இளைஞரும் உட்படுகிறார்கள். சொல்லப்போனால், இளைஞரே பிரச்சினைகளைக் கண்டு மிகவும் நொந்துப்போகிறார்கள். உதாரணத்திற்கு, பின்வரும் சம்பவங்கள் அவர்களை ரொம்பவே பாதிக்கலாம்:

உறவினர், நண்பர் அல்லது செல்லப்பிராணியின் இறப்பு

குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகள்

பரீட்சையில் தோல்வி

காதல் தோல்வி

மோசமாக நடத்தப்படுதல் (கொடுமைப்படுத்தப்படுதல் அல்லது பாலியல் தொந்தரவுக்கு ஆளாதல்)

உண்மைதான், பொதுவாக எல்லா இளைஞருமே இன்றோ நாளையோ இதுபோன்ற சூழ்நிலைமைகளை வாழ்க்கையில் சந்திக்கலாம். ஆனால், ஏன் சிலரால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க முடிகிறது? பிரச்சினைகளை எதிர்த்து போராடாமல் விட்டுவிடுகிற இளைஞர் ஆதரவற்றவர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் உணர்வதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். வேறு வார்த்தையில் சொன்னால், இப்படிப்பட்ட இளைஞர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையைச் சரிப்படுத்தவே முடியாது என நினைக்கிறார்கள். அதோடு, நிலைமை முன்னேறும் என்ற எந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு இருப்பதில்லை. “இவர்கள் பெரும்பாலும் பிரச்சினைக்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென விரும்புகிறார்களே தவிர வாழ்க்கைக்கு அல்ல” என்று டாக்டர் கேத்லீன் மக்காய் விழித்தெழு! நிருபரிடம் கூறினார்.

வேறு வழியே இல்லையா?

‘ஒன்று, இந்தப் பிரச்சினை தீர வேண்டும்; இல்லையென்றால் நான் சாகவேண்டும்’ என்று யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? அப்படிச் சொல்லியிருந்தால் நீங்கள் அவருக்கு எப்படி உதவலாம்?

சாகவேண்டுமென நினைக்கும் அளவுக்கு உங்களுடைய நண்பர் வேதனையில் சிக்கியிருந்தால், உதவி பெறும்படி அவரைத் தூண்டுங்கள். பிறகு, அவர் என்ன நினைத்தாலும் சரி, பொறுப்புள்ள ஒரு நபரிடம் அவருடைய நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். அதனால் உங்கள் நட்பு முறிந்துவிடும் என்று கவலைப்படாதீர்கள். இப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் ‘உண்மையான நண்பராக,’ அதாவது ‘இக்கட்டில் உதவிசெய்ய பிறந்திருக்கிற சகோதரனாக’ இருப்பீர்கள். (நீதிமொழிகள் 17:17, NW) இதன்மூலம் அவருடைய உயிரைக் காப்பாற்றுவீர்கள்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒருவேளை உங்களுக்கே இருந்தால் என்ன செய்வது? டாக்டர் மக்காய் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால்: “உதவியை நாடுங்கள். உங்கள் உணர்ச்சிகளை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை அக்கறையுடன் காதுகொடுத்து கேட்கிற ஒருவரிடம் பேசுங்கள்; அவர் உங்கள் பெற்றோராகவோ உறவினராகவோ நண்பராகவோ ஆசிரியராகவோ கடவுளுடைய ஊழியராகவோ இருக்கலாம். இவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமாய் கருதும் ஆட்களிடம் பிரச்சினையை எடுத்துச் சொல்லி உங்களுக்கு உதவுவார்.”

உங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் பேசுவதால் எதையும் இழக்க மாட்டீர்கள், சொல்லப்போனால் நன்மைதான் அடைவீர்கள். இந்த பைபிள் உதாரணத்தைச் சிந்தித்துப்பாருங்கள். யோபு என்ற நேர்மையுள்ள மனிதர் ஒரு சமயத்தில், “வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்” என்று சொன்னார். இருந்தாலும், “என் முறையீட்டைத் தாராளமாய்ச் சொல்வேன், என் மனக்கசப்பை வெளிப்படுத்துவேன்” என்று பிறகு கூறினார். (யோபு 10:1, கத்தோலிக்க பைபிள்) யோபு விரக்தியடைந்த நிலையில் இருந்தார். அவர் தன்னுடைய வேதனையைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டியிருந்தது. அதேபோல் நீங்களும் அனுபவமுள்ள ஒரு நண்பரிடம் பேசினால் மனபாரம் குறையும்.

மனவேதனையில் இருக்கிற கிறிஸ்தவர்கள் உதவிபெற இன்னொரு வழி, சபை மூப்பர்களிடம் பேசுவதாகும். (யாக்கோபு 5:14, 15) உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் பேசும்போது எல்லாமே பஞ்சாகப் பறந்துவிடாது. ஆனால், பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு அது உதவி செய்யும். அதோடு, நம்பிக்கையுள்ள ஒரு நபரிடம் உதவிபெறுவது நடைமுறையான சில தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் வழி செய்யும்.

நிலைமைகள் மாறிவிடும்

மனவேதனையில் வாடிக்கொண்டிருக்கும்போது இதை நினைவில் வையுங்கள்: பிரச்சினை எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் சரி, காலப்போக்கில் நிலைமைகள் மாறிவிடும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த தாவீது என்பவர் ஜெபத்தில் இவ்வாறு சொன்னார்: “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.” (சங்கீதம் 6:6) என்றாலும், இன்னோரு இடத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்.”​—சங்கீதம் 30:11.

வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்து போகும் என்பதை தாவீது அறிந்திருந்தார். உண்மைதான், சில பிரச்சினைகள் அப்போதைக்கு பூதாகரமாகத் தோன்றலாம். ஆனால், பொறுமையுடன் இருங்கள். நாளடைவில் எல்லாம் நல்லபடியாக மாறிவிடலாம். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் நினைத்துப் பார்த்திராத விதத்தில் பிரச்சினைகள் பனிப்போல் உருகிவிடலாம். இன்னும் சில சமயங்களில், பிரச்சினையைச் சமாளிப்பதற்கு ஒரு புது வழி உங்களுக்குத் தோன்றலாம். மொத்தத்தில், பிரச்சினைகள் என்றைக்கும் அப்படியே இருக்காது என்பதே கவனிக்கவேண்டிய விஷயம்.​2 கொரிந்தியர் 4:17.

ஜெபம் முக்கியமானது

உங்களுடைய மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைப்பதற்கு சிறந்த வழி ஜெபம் செய்வதாகும். தாவீதைப் போலவே நீங்களும் கடவுளிடம் இப்படி ஜெபிக்கலாம்: ‘இறைவா! நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து அறியும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். உம்மை வருத்தும் வழியில் நான் செல்கிறேனா என்று பாரும்; நித்திய வழியில் என்னை நடத்தியருளும்.’​—⁠சங்கீதம் 139:23, 24, NW.

ஜெபம் என்பது வெறுமனே ஒரு சடங்கு அல்ல. உங்களுடைய பரலோக தகப்பனிடம் மனம்விட்டு பேசுவதைக் குறிக்கிறது. ‘உங்களுடைய உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிடும்படி’ கடவுள் சொல்கிறார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 62:8, பொது மொழிபெயர்ப்பு) அவரைப் பற்றிய சில உண்மைகளைச் சிந்தித்துப் பாருங்கள்:

உங்களுக்கு வேதனை உண்டாக்குகிற சூழ்நிலைமைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார்.​—⁠சங்கீதம் 103:14.

நீங்கள் உங்களை அறிந்திருப்பதைவிட அவர் உங்களை நன்கு அறிந்திருக்கிறார்.​—⁠1 யோவான் 3:20.

‘அவர் உங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார்.’​—1 பேதுரு 5:7, NW.

தம்முடைய புதிய உலகில், உங்களுடைய ‘கண்ணீர் யாவையும் அவர் துடைப்பார்.’​—வெளிப்படுத்துதல் 21:4.

உங்களுக்கு உடல்நல பிரச்சினை இருந்தால்?

ஏற்கெனவே சொன்னபடி, தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு பெரும்பாலும் ஏதாவது ஒரு வியாதி காரணமாக இருக்கிறது. உங்களுடைய பிரச்சினையும் இதுதான் என்றால் உதவியை நாடத் தயங்காதீர்கள். நோயாளிக்கு மருத்துவர் தேவை என்பதை இயேசுவும்கூட ஒத்துக்கொண்டார். (மத்தேயு 9:12) இன்று பெரும்பாலான வியாதிகளைக் குணப்படுத்திவிடலாம் என்பது சந்தோஷமான செய்தி. சிகிச்சை பெறும்போது அதன் பலனை நீங்களே பார்க்கலாம்!

கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்கிறவர்கள், “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லமாட்டார்கள் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (ஏசாயா 33:24) அதுவரை, வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். ஜெர்மனியில் வசிக்கும் ஹேடி என்பவர் இதைத்தான் செய்தார். அவர் சொல்கிறார்: “சில சமயங்களில் எனக்கு பயங்கர மனச்சோர்வு ஏற்படும். அந்த நேரத்தில் செத்துவிடலாம் என நினைப்பேன். ஆனால், மனம் சோர்ந்துவிடாமல் அடிக்கடி ஜெபம் செய்தேன், சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன். அதனால் இப்போது எல்லாரையும்போல இயல்பான வாழ்க்கை வாழ்கிறேன்.” உங்களாலும் நிச்சயம் அப்படி வாழ முடியும்! d (g 5/08)

அடுத்த கட்டுரை, உடன் பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி சிந்திக்கும்

www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் இளைஞர் கேட்கின்றனர் தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ நீங்கள் தற்கொலை செய்துகொள்வதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை; மாறாக மற்றவர்களிடம் தள்ளிவிடுகிறீர்கள் என்பதே உண்மை. எப்படிச் சொல்லலாம்?

◼ நீங்கள் தாங்க முடியாத வேதனையில் தவித்தால் யாரிடம் பேசலாம்?

[அடிக்குறிப்புகள்]

a ரெபெக்காள், மோசே, எலியா, யோபு ஆகியோரும் இதேபோன்ற உணர்ச்சிகளை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.​—⁠ஆதியாகமம் 25:22; 27:46; எண்ணாகமம் 11:15; 1 இராஜாக்கள் 19:4; யோபு 3:21; 14:13.

b இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c மனநலப் பிரச்சினை உடைய இளைஞர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்துகொள்வதில்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

d மனச்சோர்வைச் சமாளிப்பதற்கு கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள, “மனச்சோர்வடைந்த டீனேஜர்களுக்கு உதவி” (செப்டம்பர் 8, 2001), “மனநிலைக் கோளாறுகளைப் புரிந்துகொள்வது” (ஜனவரி 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளை ஆங்கில விழித்தெழு! இதழ்களில் காண்க.

[பக்கம் 28-ன் பெட்டி/படம்]

பெற்றோருக்கு ஒரு குறிப்பு

சில நாடுகளில் இளைஞர் தற்கொலை செய்துகொள்வது தினசரி செய்தியாகிவிட்டது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் 15-லிருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர் இறப்பதற்கு மூன்றாவது முக்கிய காரணம் தற்கொலையாகும். கடந்த இருபது வருடங்களில் 10-14 வயதுக்கு உட்பட்டவர்களில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. மனநலப் பிரச்சினையால் தவிப்பவர்கள், ஏற்கெனவே தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆகியோர் தற்கொலை செய்துகொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. ஓர் இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் என்றால், அதன் அறிகுறிகளை முன்னமே தெரிந்துகொள்ளலாம். அவற்றில் சில:

◼ குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிப் போவார்கள்

◼ சரியாகச் சாப்பிடவோ தூங்கவோ மாட்டார்கள்

◼ முன்பு விரும்பி செய்த காரியங்களில் ஆர்வம்காட்ட மாட்டார்கள்

◼ அவர்களுடைய குணங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்

◼ போதைப்பொருளுக்கு அல்லது மதுபானத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்

◼ உயர்வாய் மதித்த பொருள்களை யாருக்காவது தூக்கி கொடுத்துவிடுவார்கள்

◼ மரணத்தைப்பற்றி அல்லது அதோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி அடிக்கடி பேசுவார்கள்

இந்த அறிகுறிகளையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிடுவதே பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு என்று டாக்டர் கேத்லீன் மக்காய் விழித்தெழு! நிருபரிடம் கூறினார். “எந்தப் பெற்றோரும், தங்கள் பிள்ளையிடம் பிரச்சினை இருப்பதாக நினைக்கவே விரும்புவதில்லை. அதனால்தான், தங்கள் பிள்ளையிடம் பிரச்சினை இருப்பதை சில பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. ‘இந்த வயது அப்படி,’ ‘கொஞ்ச நாள் ஆனபிறகு எல்லாம் சரியாகிவிடும்’ அல்லது ‘என் மகள் எப்போதும் வித்தியாசமாகத்தான் நடந்துகொள்வாள்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி யோசிப்பது ரொம்ப ஆபத்தானது. பிள்ளையிடம் காணப்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனியுங்கள், அசட்டை செய்துவிடாதீர்கள்” என்று அவர் சொல்கிறார்.

உங்கள் மகனோ மகளோ மனச்சோர்வினால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது மனநல குறைபாடினால் பாதிக்கப்பட்டிருந்தால் உதவியை நாட தயங்காதீர்கள். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உங்கள் பருவ வயது பிள்ளையிடம் தென்படுகிறது என்ற சந்தேகம் எழுந்தால் அதைப்பற்றி பிள்ளையிடம் பேசுங்கள். தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களிடம் அதைப்பற்றி பேசினாலே அது அவர்களை இன்னும் தூண்டிவிடும் என்பது தவறான அபிப்பிராயம். உண்மையில், பெற்றோர் அந்த விஷயத்தைப்பற்றி பேசுவது அநேக இளைஞருக்கு உதவியாய் இருந்திருக்கிறது. எனவே, உங்கள் பருவ வயது பிள்ளை தற்கொலை செய்துகொள்ள நினைப்பதாக உங்களிடம் சொன்னால், எப்படிச் செய்துகொள்ள நினைக்கிறான்/ள், என்ன திட்டங்கள் போட்டிருக்கிறான்/ள் என்பதைக் கேளுங்கள். திட்டத்தை விலாவாரியாக உங்களிடம் விளக்கினால் அதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். e

மனச்சோர்வு தானாகச் சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள். அப்படியே அது சரியாகிவிட்டதாகத் தோன்றினாலும் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக யோசிக்காதீர்கள். இந்தச் சமயத்தில்தான் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென சில நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏன்? “மனச்சோர்வினால் படுபயங்கரமாகப் பாதிக்கப்பட்ட பருவ வயதினருக்குத் தற்கொலை செய்துகொள்ள தெம்பே இருக்காது. மனச்சோர்விலிருந்து மீண்ட பிறகு தற்கொலை செய்துகொள்வதற்குத் தேவையான தெம்பு அவர்களுக்கு வரலாம்” என்கிறார் டாக்டர் மக்காய்.

விரக்தியினால் சில இளைஞர் தற்கொலை செய்துகொள்ள நினைப்பது வருத்தகரமான விஷயம். அவர்களிடம் காணப்படும் அறிகுறிகளைக் கவனமாய் பார்த்து, நடவடிக்கை எடுப்பதன்மூலம் பெற்றோரும் அவர்கள்மீது அக்கறையுள்ள மற்றவர்களும் ‘திடனற்று’ இருக்கும் அவர்களைத் ‘தேற்றி’ அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரராய் இருக்க முடியும்.​—⁠1 தெசலோனிக்கேயர் 5:14. (g 5/08)

[அடிக்குறிப்பு]

e சில மருந்துகளை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் அது உயிருக்கே உலைவைத்துவிடும். அப்படிப்பட்ட மருந்துகள் அல்லது குண்டுகளால் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் வீட்டில் இருந்தால் அவை ஆபத்தானவை. வீட்டில் துப்பாக்கி வைக்கும் விஷயத்தைப்பற்றி தற்கொலையைத் தடுப்பதற்கான அமெரிக்க நிறுவனம் (American Foundation for Suicide Prevention) இவ்வாறு குறிப்பிடுகிறது: “வீட்டில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி பெற்றிருப்பவர்களில் அநேகர் ‘பாதுகாப்புக்காக’ அல்லது ‘தற்காப்புக்காக’ அதை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களுடைய வீடுகளில் துப்பாக்கியால் சாகிறவர்களில் 83 சதவீதத்தினர், தற்கொலைச் செய்துகொள்வதற்காக அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக துப்பாக்கியின் சொந்தக்காரரைவிட அந்த வீட்டில் உள்ள வேறு யாராவதுதான் அப்படிச் செய்திருக்கிறார்கள்.”

[பக்கம் 27-ன் படம்]

உங்களுடைய மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைப்பதற்கு சிறந்த வழி ஜெபம் செய்வதாகும்