Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் ஞானம் தேவை

பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் ஞானம் தேவை

பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் ஞானம் தேவை

“எங்கள் மகனுக்கும் மகளுக்கும் நல்ல அறிவுரை கொடுக்க வேண்டுமென்று ரொம்ப முயற்சி செய்கிறோம். ஆனால், எப்போதும் அவர்களைத் திட்டிக்கொண்டே இருப்பதுபோல் எங்களுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறோமா அழிக்கிறோமா என்றுகூட சில சமயங்களில் யோசித்திருக்கிறோம். எந்தளவுக்கு அவர்களைக் கண்டிக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.”—ஜார்ஜ், லாரன் தம்பதி, ஆஸ்திரேலியா.

பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வயதின் காரணமாக அவர்களில் ஏற்படுகிற மாற்றங்களைச் சமாளிப்பது ஒருபக்கம் இருக்க, அவர்கள் வளர்ந்த பிறகு தங்களை விட்டு போய்விடுவார்களே என்ற கவலையும் பெற்றோருக்கு இருக்கலாம். “பிள்ளைகள் என்றைக்காவது ஒருநாள் எங்களை விட்டு போய்விடுவார்கள் என்பதை யோசிக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் இனியும் நம் கைக்குள் இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை” என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிராங்க் என்ற தந்தை.

இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லியா சொல்கிறாள்: “என் மகனை ஒரு பெரிய பையனைப் போல் நடத்துவது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் அவனை சிறு பிள்ளையாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னவோ நேற்றுத்தான் முதன்முதலாக அவன் பள்ளிக்குச் சென்றதுபோல் இருக்கிறது.”

பருவ வயதினர் இனியும் சிறு பிள்ளைகள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. வாழ்க்கையில் பொறுப்புள்ளவர்களாய் ஆக இது அவர்களுக்குப் பயிற்சி காலம். பெற்றோரே அவர்களுடைய ஆசிரியர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். ஜார்ஜ் லாரன் தம்பதி சொன்னபடி, பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் அழிப்பதும் பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. பிள்ளைகளை எந்தளவுக்குக் கண்டிக்க வேண்டுமென்பதை பெற்றோர் எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு பைபிளில் நல்ல ஆலோசனைகள் இருக்கின்றன. (ஏசாயா 48:17, 18) அவற்றில் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம்.

பேசுவதற்கு முன்பு காதுகொடுத்து கேளுங்கள்

கிறிஸ்தவர்கள் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்கும்படி பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19) எல்லா வயது பிள்ளைகளின் விஷயத்திலும் இது அவசியமாய் இருந்தாலும் பருவ வயது பிள்ளைகளின் விஷயத்தில் இது ரொம்பவே அவசியமாக இருக்கிறது. ஆனால், அதைச் செய்வதற்கு அதிக முயற்சி தேவை.

“என்னுடைய மகன்கள் பருவ வயதை அடைந்தபோது அவர்களிடம் எப்படிப் பேச வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது நானும் என் மனைவியும் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டதால் அவர்களிடம் விஷயங்களைப் புரியவைத்து, எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்க வேண்டியிருக்கிறது, அவர்களாகவே யோசித்து ஒரு முடிவுக்கு வர உதவ வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் மனதைத் தொடும் விதத்தில் பேச வேண்டியிருக்கிறது” என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் என்ற தந்தை.​—2 தீமோத்தேயு 3:14.

கருத்து வேறுபாடுகள் நிலவுகையில் காதுகொடுத்து கேட்பது மிகவும் அவசியம். (நீதிமொழிகள் 17:27) இது எவ்வளவு உண்மை என்பதை பிரிட்டனைச் சேர்ந்த டான்யெல் என்ற தாய் கண்டிருக்கிறார். அவர் சொல்கிறார்: “என்னுடைய ஒரு மகள் என்னிடம் பேசின விதம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுவாள். ஆனால், நான் எப்போதும் அவளைத் திட்டுவதாகவும், ‘அதைச் செய் இதைச் செய்’ என்று அதிகாரம் செய்வதாகவும் அவள் என்னிடம் சொன்னாள். எங்களுக்குள் இருந்த இந்த மனஸ்தாபத்தை நாங்கள் பேசித் தீர்த்துக்கொண்டோம். அவள் சொல்வதை நானும், நான் சொல்வதை அவளும் நன்றாய்க் காதுகொடுத்து கேட்டோம். நான் பேசின விதம் அவள் மனதை எப்படிப் பாதித்தது என்பதை அவள் விளக்கினாள். அவளுடைய பேச்சு என்னை எந்தளவு நோகடித்தது என்பதை நானும் சொன்னேன்.”

தன் மகள் சொன்னதைத் ‘தீவிரமாகக் காது கொடுத்து கேட்டதால்’ அவள் அப்படிப் பேசுவதற்கான உண்மையான காரணத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்பதை டான்யெல் உணர்ந்தார். “இப்போதெல்லாம் என் மகளிடம் பொறுமையுடன் நடந்துகொள்ள முயற்சி செய்கிறேன், என் கோபமெல்லாம் தனிந்த பிறகே அவளிடம் பேசுகிறேன். அதனால், இப்போது நாங்கள் ஒருவரையொருவர் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் சொல்கிறார்.

“காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் [பதில்] சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்” என்று நீதிமொழிகள் 18:13 சொல்கிறது. இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக் என்ற தந்தை தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார். “சில சமயம் எங்கள் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் இடையே பிரச்சினை வருவதற்கு காரணம் என்னவென்றால் முதலில் அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல் நானும் என் மனைவியும் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிடுவோம்” என்கிறார் அவர். “அவர்களுடைய கருத்துகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும், அவர்கள் மனதிலிருப்பதை எங்களிடம் முதலில் சொல்ல அனுமதித்த பிறகு அவர்களுக்குத் தேவையான ஆலோசனையையோ அறிவுரையையோ கொடுப்பது ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டோம்” என்று அவர் மேலும் சொல்கிறார்.

பிள்ளைகளுக்கு எவ்வளவு சுதந்தரம் கொடுப்பது?

இந்த விஷயத்தில்தான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வருகின்றன. ஒரு தகப்பன் சொல்கிறார்: “என் மகளுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேலே ஏறிவிடுவாளோ என்று சில சமயம் பயந்திருக்கிறேன்.”

இளைஞர்களை அவர்கள் இஷ்டப்படி விட்டுவிட்டால் அது ஆபத்தில்தான் முடிவடையும். “இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என்று பைபிளும் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 29:15) எந்த வயது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குத் திட்டவட்டமான அறிவுரைகள் அவசியம். குடும்ப விதிகளுக்குப் பிள்ளைகள் கீழ்ப்படியாமல் போகும்போது அவர்களைக் கண்டிக்கையில் பெற்றோர் கனிவாகவும் அதேசமயம் உறுதியாகவும் இருக்க வேண்டும். (எபேசியர் 6:4) இருந்தாலும், இளைஞர்களுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்கள் இப்போதே தயாராவார்கள்.

நீங்கள் முதன்முதலில் நடக்க கற்றுக்கொண்டதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கைக்குழந்தையாக இருந்தபோது உங்களை யாராவது தூக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், வளர வளர நீங்கள் தவழ்ந்து செல்ல ஆரம்பித்தீர்கள், பிறகு தத்தித்தத்தி நடக்க ஆரம்பித்தீர்கள். ஆனாலும், குழந்தையை இஷ்டத்திற்கு நடக்கவிடுவதும் ஆபத்துதான். எனவே, உங்கள் பெற்றோர் எப்போதும் உங்கள்மேல் ஒரு கண் வைத்திருந்தார்கள். சில சமயங்களில் படிக்கட்டு போன்ற ஆபத்தான இடங்களில் நீங்கள் தவறி கீழே விழுந்துவிடாதபடி தடுப்புகளும் போட்டிருப்பார்கள். இப்படியெல்லாம் செய்தாலும் நீங்களாகவே நடக்கவும் உங்களை அனுமதித்தார்கள். ஏனென்றால், பல முறை கீழே விழுந்தாலும் போகப்போக நீங்களாகவே நடக்க பழகுவீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

சுதந்திரம் பெறுவதும்கூட இதுபோலத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில், பெற்றோர் தங்கள் கைக்குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். அதாவது, தங்கள் பிள்ளைகளுக்காகத் தீர்மானங்களைச் செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு பெற்றோர் அவர்களைத் தவழ்ந்து செல்ல விடுகிறார்கள். அதாவது, அவர்களாகவே சில தீர்மானங்களை எடுக்க விடுகிறார்கள். இந்த எல்லாக் கட்டத்திலும் பிள்ளைகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க பெற்றோர் சில தடுப்புகள் வைக்கிறார்கள். பிள்ளைகள் பக்குவமடைந்த பிறகு அவர்களாகவே “நடக்க” அதாவது, சுயமாய்த் தீர்மானங்களை எடுக்க பெற்றோர் அனுமதிக்கிறார்கள். அப்போதுதான், அவர்கள் பெரியவர்களாக ஆனபிறகு தங்களுடைய ‘பாரத்தைச் சுமக்க’ தயாராய் இருப்பார்கள்.​—கலாத்தியர் 6:5.

பைபிள் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

பருவ வயதை எட்டுவதற்கு முன்பு இயேசுவுக்கு அவருடைய பெற்றோர் ஓரளவு சுதந்திரம் கொடுத்திருக்க வேண்டும். இருந்தாலும், தம்மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் குலைத்துப்போடவில்லை. மாறாக, ‘ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தபோதிலும்’ தம்முடைய பெற்றோருக்கு எப்போதும் “பணிந்து நடந்தார்.”​—லூக்கா 2:51, 52, பொது மொழிபெயர்ப்பு.

பிள்ளைகள் தங்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொண்டால் அவர்களுக்கு இன்னுமதிக சுதந்திரம் அளிக்கலாம் என்பதை இந்த உதாரணத்திலிருந்த பெற்றோர் கற்றுக்கொள்ளலாம். இதைப் பற்றி சில பெற்றோர் சொல்வதைக் கேளுங்கள்.

“முன்பெல்லாம் என் பிள்ளைகளுடைய செயல்களில் ரொம்பவே தலையிட்டேன். பிறகு, விஷயங்களை கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்க்க அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். அதன் அடிப்படையில் அவர்கள் தீர்மானம் எடுக்க அனுமதித்தேன். அப்படிச் செய்தபோது, அவர்கள் நன்கு யோசித்து தீர்மானங்கள் எடுப்பதைக் கவனித்தேன்.”—ஸுஹையன், கொரியா.

“நானும் என் கணவரும் எங்கள் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்க பயந்தோம். அதற்கென்று கொடுக்காமலும் இருந்துவிடவில்லை, கொடுத்தோம். அதன் காரணமாக எங்கள் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை மதித்து பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள்.”—டார்யா, பிரேசில்.

“என் மகனுக்கு நான் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை அவன் நல்ல விதத்தில் பயன்படுத்துவதால் அவனைப் பாராட்டுவது அவசியமென கண்டிருக்கிறேன். அவன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேனோ அதை நானும் செய்கிறேன். உதாரணத்திற்கு, நான் எங்கே போகிறேன், என்ன செய்கிறேன் என்பதையெல்லாம் அவனிடம் சொல்கிறேன். நான் வீட்டுக்கு வர தாமதமாகும் என்றால் அவனுக்குத் தெரியப்படுத்திவிடுவேன்.”—ஆனா, இத்தாலி.

“சுதந்திரம் என்பது உங்களுக்கு இருக்கும் உரிமை அல்ல, ஆனால், ஒழுங்காக நடந்துகொள்வதற்காக உங்களுக்குக் கிடைக்கும் பரிசு என்று எங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்லுவோம்.”—பீட்டர், பிரிட்டன்.

பின்விளைவுகளைச் சந்திக்க விடுங்கள்

‘தன் இளம்பிராயத்தில் நுகத்தை [பாரத்தை] சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது’ என்று பைபிள் சொல்கிறது. (புலம்பல் 3:27) ஓர் இளைஞன் பொறுப்பு எனும் பாரத்தைச் சுமப்பதற்கு ஒரு சிறந்த வழி என்ன? “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற வார்த்தைகள் நூற்றுக்குநூறு உண்மை என்பதை தன் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதே..​—கலாத்தியர் 6:7.

சில பெற்றோர், தங்கள் பிள்ளைகள் யோசிக்காமல் எதையாவது செய்துவிட்டாலும் அதன் பின்விளைவுகளால் கஷ்டப்படாதபடி அவர்களைப் பாதுகாக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்லெண்ணத்தால் இப்படிச் செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு மகன் காசைத் தண்ணீர் போல் செலவுசெய்து கடைசியில் கடனாளியாக ஆகிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பையன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அப்பா அம்மாவே கடனைக் கட்டிவிட்டார்கள் என்றால் அவன் கெட்டுப்போய்விடுவான் இல்லையா? அதற்குப் பதிலாக அந்தப் பையனே எப்படிக் கடனைக் கட்டலாம் என்பதை அவனுடைய அப்பா அம்மா சொல்லிக்கொடுத்தார்கள் என்றால் அது அவனுக்குப் பிரயோஜனமாக இருக்குமல்லவா?

பிள்ளைகள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கையில் அதன் பின்விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி பெற்றோர் விட்டுவிட வேண்டும். இல்லையென்றால், பிள்ளைகள் ஒருநாளும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள்; பொறுப்புள்ளவர்களாகவும் வளர மாட்டார்கள். அதற்குப் பதிலாக, எதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டாலோ ஏதாவது தவறு செய்துவிட்டாலோ அப்பா அம்மா பார்த்துக்கொள்வார்கள் என்று நினைப்பார்கள். பருவ வயது பிள்ளைகள் எதாவது தவறு செய்தால் அதன் பின்விளைவுகளை அனுபவிக்கவும் அவர்களாகவே பிரச்சினையைச் சரிசெய்யவும் பெற்றோர் அனுமதிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவி இதுதான். இப்படிச் செய்வது, “நன்மை தீமையின்னதென்று . . . பகுத்தறிய” அவர்களுக்கு மிகவும் உதவியாயிருக்கும்.​—எபிரெயர் 5:14.

“வளர்ச்சியின் பாதையில் பிள்ளை”

பருவ வயது பிள்ளைகளை உடைய பெற்றோருக்கு அவர்களை வளர்ப்பது சவாலான ஒரு விஷயம்தான். ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்க்க’ பெற்றோர் கடினமாய் முயற்சி செய்கையில் சில சமயம் விரக்தியடைந்து கண்ணீர் வடிக்கலாம்.​—எபேசியர் 6:4.

ஆகமொத்தத்தில், நல்ல பெற்றோராய் இருப்பது என்றால், பிள்ளைகளை அடக்கி ஆளுவதைக் குறிப்பதில்லை. மாறாக, கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றைச் சொல்லிக்கொடுத்து அவற்றை அவர்களுடைய மனதில் ஆழமாய்ப் பதிய வைப்பதைக் குறிக்கிறது. (உபாகமம் 6:6–9) இதைச் சுலபமாகச் சொல்லிவிடலாம், ஆனால், செய்வதுதான் கடினம் என்று தோன்றுகிறதா? நீங்கள் நினைப்பது உண்மைதான். “வளர்ச்சியின் பாதையில் இருக்கும் நம் பிள்ளைகள் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், இந்தப் புதிய நபரை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டு, அவருக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட கிரேக்.

இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் அளவுக்கதிமாக எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாய் இருப்பது மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று பைபிள் சொல்கிறது.​—நீதிமொழிகள் 22:6. (g 6/08)

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

சுதந்திரம் பெறுவது நடைபழகுவதற்குச் சமமாக இருக்கிறது; இரண்டிற்குமே காலமெடுக்கும்

[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]

பருவ வயதை எட்டுவதற்கு முன் இயேசுவுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டது

[பக்கம் 23-ன் பெட்டி]

“பிள்ளைகளுக்கு உங்கள் வழிநடத்துதல் தேவை”

நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உங்கள் பருவ வயது பிள்ளைகள் முரண்டு பிடிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களைக் கட்டுப்படுத்தவே கூடாது என்று அர்த்தமில்லை. பருவ வயதினருக்கு அனுபவம் போதாது, எனவே அவர்களுக்கு வழிநடத்துதல் தேவை என்பதை நினைவில் வையுங்கள்.​—⁠நீதிமொழிகள் 22:15.

நியு பேரன்ட் பவர்! என்ற தனது புத்தகத்தில் ஜான் ரோஸ்மன்ட் இவ்வாறு எழுதினார்: “பிள்ளைகளின் உணர்ச்சி கொந்தளிப்பால் பெற்றோர் கலக்கமடைகையில், பிரச்சினை வராமல் இருப்பதற்காக அவர்களுக்கு அளவுக்கதிகமான சுதந்திரத்தை கொடுத்துவிடலாம். ஆனால், பெற்றோர் அதற்கு நேர்மாறாகத்தான் செய்ய வேண்டும். பிள்ளைகள், உங்கள் வழிநடத்துதலை அசட்டைசெய்ய அனுமதிக்காமல் அது அவர்களுக்குத் தேவை என்பதைப் புரியவைப்பதற்கு இதுதான் சமயம். இதைப் பிள்ளைகள் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால், தங்களை நல்வழிப்படுத்த பெற்றோர் தயாராய் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவும் இதுவே சமயம்.”

[பக்கம் 24-ன் பெட்டி]

கூடுதல் சுதந்திரம் கொடுங்கள்

பொதுவாக பருவ வயது பிள்ளைகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைவிட அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம், சில பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தைவிட குறைவாகவே கொடுக்கிறார்கள். இந்த இரண்டிற்கும் இடையேதான் சமநிலை உள்ளது. அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? இதற்கு முதல் படியாக கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள். எந்தெந்த விஷயங்களில் உங்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள்?

❑ நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில்

❑ உடைகளைத் தேர்ந்தெடுப்பதில்

❑ பணம் செலவிடுவதில்

❑ இரவில் நேரத்தோடு வீடு திரும்புவதில்

❑ வீட்டு வேலைகளை முடிப்பதில்

❑ பள்ளிப் பாடங்களை முடிப்பதில்

❑ மன்னிப்பு கேட்பதில்

❑ மற்ற விஷயங்களில்

மேலே பார்த்த அநேக விஷயங்களில் உங்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் அதிக சுதந்திரம் கொடுப்பதைப்பற்றி நீங்கள் ஏன் யோசித்துப் பார்க்கக்கூடாது?

[பக்கம் 23-ன் படம்]

புத்திமதியோ ஆலோசனையோ கொடுப்பதற்கு முன்பு பிள்ளைகள் மனதில் இருப்பதை முதலில் சொல்லவிடுங்கள்