பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் புரிந்துகொள்ளுதல் தேவை
பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் புரிந்துகொள்ளுதல் தேவை
பாஷை தெரியாத ஓர் ஊருக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஊர் மக்களிடம் பேச நீங்கள் ரொம்ப கஷ்டப்படுவீர்கள்; ஆனால், அவர்களோடு பேசவே முடியாதென்று சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு புத்தகத்தை வாங்கி அந்த மொழியின் ஒருசில முக்கியமான வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது அந்த ஊர் பாஷை தெரிந்த ஒருவர் இருந்தால் நீங்கள் சமாளித்துவிடலாம். நீங்கள் பேசுவதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவும் மற்றவர்கள் பேசுவதை நீங்கள் புரிந்துகொள்ளவும் அவர் உங்களுக்கு உதவலாம்.
பருவ வயது பிள்ளைகளை வளர்க்கிற பெற்றோரும் சில சமயங்களில் அப்படித்தான் உணருகிறார்கள். வேறு நாட்டு மொழியைப் புரிந்துகொள்வது எப்படிக் கடினமாய் இருக்கிறதோ அதேபோல் பருவ வயது பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதும் கடினமாய் இருக்கலாம். ஆனால், அதைப் புரிந்துகொள்ளவே முடியாதென்று சொல்ல முடியாது. அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த இரண்டுங்கெட்டான் வயதில் பெற்றோருக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, ஒருபக்கம் ஆச்சரியமாகவும் இருக்கும் இன்னொரு பக்கம் குழப்பமாகவும் இருக்கும். இந்தச் சமயத்தில் பிள்ளைகளுக்கு என்ன ஆகிறது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள்?
பருவ வயது பிள்ளைகள் எதையும் தாங்களாகவே தீர்மானித்து செய்ய வேண்டுமென விரும்பலாம். உங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எப்போதும் அப்படிச் செய்வதில்லை. “மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்து கொள்ளுவான்” என்று பைபிள் சொல்வதை நினைவில் வையுங்கள். (ஆதியாகமம் 2:24, ஈஸி டு ரீட் வர்ஷன்) தீர்மானங்கள் எடுப்பதில் பருவ வயது பிள்ளைகளுக்கு ஓரளவு அனுபவம் இருந்தால்தான் பெரியவர்களான பிறகு தங்களுக்கு வரும் பெரிய பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராய் இருப்பார்கள்.
முந்தைய கட்டுரையில் தங்களுடைய பருவ வயது பிள்ளைகளிடம் ஏற்பட்ட திடீர் மாற்றங்களைப் பற்றி சில பெற்றோர் சொன்னார்கள். அந்தப் பிள்ளைகள் அப்படி நடந்துகொள்வதற்கான காரணத்தை இப்போது பார்க்கலாம்.
பிரிட்டனைச் சேர்ந்த லியாவின் புலம்பல்: “எங்கள் மகன், தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் நடந்துகொள்கிறான். நாங்கள் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறான். எங்கள் பேச்சுக்கு மரியாதையே கொடுப்பதில்லை.”
சிறு பிள்ளைகளைப் போல் பருவ வயது பிள்ளைகளும், ‘ஏன்? எதற்கு?’ என்று ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால், சிறு பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் சாதாரணமாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டால் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அதற்கு என்ன காரணம்? அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போல . . . யோசித்தேன்.” (1 கொரிந்தியர் 13:11) வளர வளர, பருவ வயது பிள்ளைகளின் யோசிக்கும் திறன் அதிகரிப்பதால் அவர்களுக்கு விளக்கமாகப் பதில் சொன்னால்தான் அவர்களுடைய “பகுத்தறியும் திறன்கள்” கூர்மையாகும்.—எபிரெயர் 5:14, NW.
கானாவைச் சேர்ந்த ஜான் சொல்வதாவது: “எங்கள் மகள்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கே ரொம்ப நேரம் செலவழிக்கிறார்கள்.”
பிள்ளைகள் சீக்கிரமாக அல்லது தாமதமாக அல்லது சரியான சமயத்தில் பருவமடைகிறார்கள். அந்தச் சமயத்தில் தங்களுடைய நடை உடை பாவனைக்கு அளவுக்குமீறி கவனம் செலுத்துகிறார்கள். பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடைய உடலில் ஏற்படும் வளைவு நெளிவுகளைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படலாம் அல்லது பயந்து போகலாம். அல்லது, இவை இரண்டும் கலந்த ஒருவிதமான உணர்வு அவர்களுக்குள் ஏற்படலாம். அதோடு, தங்கள் முகத்தில் பருக்கள் வருவதைக் கவனிக்கலாம், அலங்காரம் செய்துகொள்ள ஆரம்பிக்கலாம். இதற்காகவே அவர்கள் கண்ணாடி முன்பு மணிக்கணக்காக நேரத்தைக் கழிக்கலாம். புத்தகமும் கையுமாக இருக்க வேண்டிய வயதில் அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த டான்யெலின் வருத்தம்: “எங்கள் பிள்ளைகள் இப்போதெல்லாம் நிறைய விஷயங்களை
எங்களிடமிருந்து மறைக்கிறார்கள். அவர்களுடைய விஷயத்தில் யாருமே தலையிடக் கூடாதென்று நினைக்கிறார்கள். எங்களோடு இருப்பதைவிட நண்பர்களோடு இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.”பிள்ளைகள் உங்களிடமிருந்து எதையாவது மறைக்கிறார்கள் என்றால் அது ஆபத்து. (எபேசியர் 5:12) இருந்தாலும், சில சமயங்களில் தனியாக இருக்க விரும்புகிறார்கள் என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. அதன் அவசியத்தை இயேசுவும்கூட உணர்ந்தார். அதனால்தான், “யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார்.” (மத்தேயு 14:13, ERV) பிள்ளைகள் வளர்ந்து வருகையில் அவர்களும் கொஞ்சம் தனிமையை விரும்பலாம். பெரியவர்கள் அதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். பருவ வயது பிள்ளைகளைக் கொஞ்சமாவது தனியாக இருக்க விடவேண்டும். அப்போதுதான் அவர்களால் ஒரு விஷயத்தை ஆழமாய் யோசிக்க முடியும். இந்த யோசிக்கும் திறன் அவர்கள் பெரியவர்களாக ஆனபிறகும் உதவியாக இருக்கும்.
அதேவிதமாக, நட்பு வட்டத்தை விரிவாக்கிக்கொள்வதும் அவர்களுடைய வளர்ச்சியின் அறிகுறியே. “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்” என்பது உண்மைதான். (1 கொரிந்தியர் 15:33, ERV) அதேசமயம், “நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17, கத்தோலிக்க பைபிள்) நல்ல நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதும் அவர்களுடைய நட்பை தக்கவைத்துக்கொள்வதும் எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். அவர்கள் பெரியவர்களாய் ஆனபிறகும் இது அவர்களுக்கு உதவியாயிருக்கும்.
இதுபோன்ற ஒரு மாற்றத்தை உங்கள் பிள்ளைகளிடமும் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் செய்வதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் பருவ வயது பிள்ளைகளைப் புரிந்துகொள்வதோடு ஞானமாகவும் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, பிள்ளைகளிடம் நீங்கள் பார்க்கும் திடீர் மாற்றங்களைக் குறித்து உணர்ச்சி வசப்படாமல் நல்லபடியாக அவர்களிடம் பேச வேண்டும். பருவ வயது பிள்ளைகளின் பெற்றோர் இதை எப்படிச் செய்யலாம்? (g 6/08)
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
வளர வளர, பருவ வயது பிள்ளைகளின் யோசிக்கும் திறன் அதிகரிப்பதால் குடும்ப சட்டங்களைப்பற்றி அவர்களுக்கு விளக்கமான பதில் தேவை