Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி?

ஆசைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

ஆசைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி?

கேரன் அந்தப் பார்ட்டிக்குப் போய் பத்து நிமிஷம்கூட ஆகலை. அதற்குள், இரண்டு பையனுங்க பெரிய பெரிய பெட்டிகளைத் தூக்கிட்டு வந்தாங்க. அது ஒன்றும் பரம இரகசியமல்ல. பார்ட்டியில் ‘நிறைய சரக்கு இருக்கும்னு’ அந்தப் பசங்க சொன்னது ஏற்கெனவே கேரனின் காதில் விழுந்திருந்தது. ஆனால், இந்த விஷயத்தை அப்பா அம்மாவுக்குச் சொல்லாமல் மறச்சிட்டாள். அந்தப் பையனுங்க சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்கன்னு நினச்சிக்கிட்டாள். அநேகமாக அங்கு பெரியவங்கக்கூட இருப்பாங்கன்னு யாரோ அவளிடம் சொல்லியிருந்தாங்க.

திடீரென, அவளுக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல் காதில் விழுகிறது. “என்ன, நீ பேக்கு மாதிரி நின்னுட்டிருக்கிறே?” திரும்பிப் பார்த்தால் ஜெஸிக்கா, இரண்டு கையிலும் பீர் பாட்டில்களுடன். ஒன்றை கேரனின் முகத்துக்கு நேராக நீட்டி, “ஐயோ, எனக்கு வேண்டாம், நான் குடிக்க மாட்டேன்னு கொஞ்சிக்கிட்டு இருக்காதே” என்று சொல்கிறாள்.

கேரன் குடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறாள். ஆனால், வற்புறுத்தல் அதிகமாக இருப்பதால் அவளால் தட்டிக்கழிக்க முடியல. பீர் மீது ஆசைப்பட்டதால் அல்ல, ஆனால் அவளுடைய ஃபிரண்ட் அப்படிச் சொல்லிட்டாலே என்பதற்காக அவள் குடிக்கிறாள். அதுமட்டுமல்ல, ஜெஸிக்கா ரொம்ப நல்ல பொண்ணு என்று அவளுக்குத் தெரியும். அவளே குடிக்கிறாள், நான் குடித்தாலென்ன என்று அவள் மனம் சொல்கிறது? ‘நான் என்ன போதை பொருளையா சாப்பிடுகிறேன், அல்லது நான் என்ன செக்ஸில் ஈடுபடுகிறேனா, போயும்போயும் பீர்தானே குடிக்கிறேன்’ என்று சொல்லி கேரன் தன்னையே சமாதானம் பண்ணிக்கொள்கிறாள்.

வாலிப வயதில் உங்களுக்கு பல விதமான சபலங்கள் ஏற்படலாம். பெரும்பாலும், அது எதிர்பாலாரிடமிருந்து வரும் தூண்டுதலாக இருக்கலாம். “பையன்கள மடக்கிப்போடுறதல என் ஸ்கூல் பொண்ணுங்க கில்லாடிங்க. a முதல்ல கிட்ட வருவாங்க, அப்புறம் தொட்டுப் பார்ப்பாங்க, நீங்க எந்தளவுக்கு இடங்கொடுக்கிறீங்கன்னு ‘டெஸ்ட்’ பண்ணுவாங்க. இப்படி செய்றதெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னாலும் விடமாட்டாங்க” என்கிறார் 17 வயது ராமன். 17 வயது டியானாவுக்கும் இதே மாதிரி நடந்தது. “ஒரு பையன் நேரா வந்து என் தோள்மேல கையைப் போட்டான், நல்லா ஒன்னு கொடுத்தேன், என்ன செய்ற நீ, உன்னை யாருன்னே எனக்குத் தெரியாது! என்று கேட்டேன்” என்கிறாள் டியானா.

உங்களுக்கும் பல பிரச்சினைகள் வந்திருக்கலாம். ஒருவேளை அதற்கு முடிவே இல்லாததுபோல் தோன்றலாம். “‘தொந்தரவு செய்யாதீர்’ என்று போர்டு மாட்டினாலும் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும் ஒருவரைப் போல பிரச்சினையும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்” என்கிறார் ஒரு கிறிஸ்தவர். அதேபோல் நீங்கள் விரும்பாவிட்டாலும் கதவு தட்டும் சத்தம் உங்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறதா? உதாரணமாக, இதுபோன்ற தூண்டுதல் உங்களுக்கு ஏற்படுகிறதா?

❑ சிகரெட்

❑ குடி

❑ போதைப்பொருள்

❑ ஆபாச காட்சிகள்

❑ செக்ஸ்

❑ வேறு சில .....

இவற்றில் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திழுத்தால் நீங்கள் கிறிஸ்தவனாக இருக்கவே லாயக்கில்லை என்று முடிவுகட்டிவிடாதீர்கள். கெட்ட ஆசைகளையும் சபலங்களையும் கட்டுப்படுத்த உங்களால் கற்றுக்கொள்ள முடியும். எப்படி? நீங்கள் கவர்ந்திழுக்கப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று காரணிகளைக் கவனியுங்கள்.

1. உங்களிடம் பாவத்தன்மை ஒட்டியிருக்கிறது. பாவிகளாக இருக்கிற நம் எல்லாருக்குமே தவறு செய்வதற்கான தூண்டுதல் அதிகமாக இருக்கிறது. ஏன் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரான அப்போஸ்தலன் பவுலும்கூட, “நான் நன்மை செய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது” என்று ஒளிவுமறைவில்லாமல் சொன்னார். (ரோமர் 7:21) கண்ணியமான மனிதர்களுக்குக்கூட ‘உடலின் இச்சையும், கண்களின் இச்சையும்’ எப்போதாவது பொங்கி எழும் என்பது இதிலிருந்து தெரிகிறது. (1 யோவான் 2:16, NW) ஆனால், கவர்ச்சியான காரியங்களையே மனதில் அசைபோடுவது ஆசையைத்தான் மூட்டிவிடும். பைபிளும் அதைத்தான் சொல்கிறது. “இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”​—யாக்கோபு 1:⁠15.

2. வெளியிலிருந்து வரும் தூண்டுதல்கள். இன்றைக்கு தூண்டுதல்கள் எல்லா பக்கங்களிலுமிருந்து வரலாம். இதுபற்றி ட்ரூடி சொல்வதைக் கேளுங்கள்: “பள்ளியிலும் வேலை செய்யுமிடத்திலும் செக்ஸ் பற்றியே எல்லாரும் பேசிக்கிட்டு இருப்பாங்க. டிவியிலும் சினிமாக்களிலும் அது எப்போதும் கவர்ச்சியாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் சித்தரித்துக் காட்டுறாங்க. ஆனால், அதன் பின்விளைவுகளைக் காட்டுவதே இல்லை!” அந்த மாதிரியான காட்சிகளெல்லாம் எவ்வளவு வசீகரமாக இருக்கும் என்பதை ட்ரூடி அனுபவத்தில் கண்டிருக்கிறாள். “16 வயசுல நான் ஒரு பையனை விரும்பினேன். அது காதலென்றுதான் நினைக்கிறேன்” என்று சொல்கிறாள். “ஒருநாளு அம்மா என்கிட்ட வந்து, ‘சொல்ற பேச்சு கேட்காம நீ இப்படியே செஞ்சிட்டிருந்தா கடைசியில வாயும் வயிறுமாகத்தான் வந்து நிக்கப்போற’ என்று சொன்னாங்க. எங்க அம்மா வாயிலிருந்து இப்படியொரு வார்த்தை வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை! ஆனால், இரண்டு மாசத்திற்குப் பின்னாடி அதுதான் நடந்தது.”

3. ‘இளவயதின் இச்சைகள்’ (2 தீமோத்தேயு 2:22, பொது மொழிபெயர்ப்பு) பொதுவாக ஒருவருக்கு இளவயதில் வரும் எல்லா இச்சைகளையும் இது குறிக்கிறது. உதாரணத்திற்கு, மற்றவர்களின் அங்கீகாரத்தை பெற வேண்டுமென்ற ஏக்கம், உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை போன்றவை இதில் உட்படுகின்றன. இந்த ஆசைகள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இந்த ஆசைகள் அத்துமீறி போனால், சபலங்கள் வருகையில் உறுதியாக இருப்பது கடினமாகிவிடும். சொல்லப்போனால், உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை பெற வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டால் பெற்றோர் சொல்லிக்கொடுத்த நல்ல பண்புகளையெல்லாம் நீங்கள் உதறித்தள்ளிவிடலாம். 17 வயது ஸ்டீவுக்கும் அதுதான் நடந்தது. “என் அப்பா அம்மா பேச்சை நான் கேட்கவில்லை, எதையெல்லாம் செய்ய வேண்டாமென்று சொன்னாங்களோ அதையெல்லாம் செய்தேன்; அதுவும் ஞானஸ்நானம் எடுத்து சில காலத்திற்குப் பிறகு இதெல்லாம் நடந்தது” என்று அவர் சொல்கிறார்.

பாவத்தன்மை, வெளியிலிருந்து வரும் தூண்டுதல்கள், இளவயதின் இச்சைகள் ஆகிய இவையெல்லாம் சக்திவாய்ந்தவைதான். என்றாலும், உங்களுக்கு வரும் தூண்டுதல்களை நீங்கள் எதிர்க்க முடியும். எப்படி?

முதலாவது, எந்த ஆசை உங்களை ரொம்ப அதிகமாகச் சுண்டியிழுக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். (நீங்கள் ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்திருக்கலாம்.)

அடுத்து, ‘எந்தெந்த சந்தர்ப்பங்களில் அந்த ஆசை எனக்கு அதிகமாக வருகிறது?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை ‘டிக்’ செய்யுங்கள்:

❑ பள்ளிக்கூடத்தில்

❑ வேலையிடத்தில்

❑ தனிமையில்

❑ மற்ற சூழலில் .....

அந்த ஆசை உங்களுக்கு எப்போதெல்லாம் வருகிறதென்று கண்டுபிடித்தால் அதை அடியோடு தவிர்க்க முடியும். ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட அந்தக் கற்பனை சம்பவத்தை கொஞ்சம் மனதில் ஓடவிடுங்கள். அந்த பார்ட்டிக்கு போனால் வரும் ஆபத்தைக் குறித்து கேரனுக்கு என்ன ‘சிக்னல்’ கிடைத்தது? ஆரம்பத்திலேயே அவள் எப்படி அந்தத் தூண்டுதலைத் தவிர்த்திருக்கலாம்?

இப்போது, (1உங்கள் ஆசைக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள், (2அது எப்போதெல்லாம் வருகிறது என்பதையும் தெரிந்துகொண்டீர்கள், நடவடிக்கை எடுக்க தயாராய் இருக்கிறீர்கள். இப்போது, நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது, அந்தத் தூண்டுதலைக் குறைப்பது எப்படி அல்லது அடியோடு தவிர்ப்பது எப்படி என்பதை யோசித்துப் பார்ப்பதே. அதற்காக நீங்கள் என்ன செய்யலாம் என்பதைக் கீழே எழுதுங்கள்.

.....

.....

(உதாரணங்கள்: தினமும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வருகிற வழியில் பள்ளித் தோழர்கள் அவர்களோடு சேர்ந்து ‘தம்’ அடிக்கச் சொல்லி உங்களை வற்புறுத்தினால் அவர்கள் கண்களில் படாதிருக்க வேறு வழியில் செல்லலாம். இன்டர்நெட்டில், திடீரென ஆபாச காட்சிகள் எட்டிப் பார்த்தால், அவற்றை அனுப்பும் நபரிடமிருந்து உங்களுக்கு வரும் எல்லா தகவல்களையும் அப்படிப்பட்ட எல்லா இணையதளங்களையும் திறக்காதிருக்க உதவும் புரோக்ராம்களை இன்ஸ்டால் செய்யலாம். ‘ஸேர்ச் எஞ்சினில்’ எதையாவது தேடுவதற்கு வார்த்தைகளை டைப் செய்கையில் குறிப்பான வார்த்தைகளையே பயன்படுத்தலாம்.)

அதேசமயம், எல்லா தூண்டுதல்களையும் நீங்கள் தவிர்க்க முடியாது. எதிர்பாராத சமயத்தில், ஏதாவதொரு தூண்டுதல் வரத்தான் செய்யும். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

தயாராய் இருங்கள். சாத்தானிடமிருந்து வந்த ‘சோதனைக்கு’ இயேசு கொஞ்சமும் இடம்கொடுக்கவில்லை. (மாற்கு 1:13) ஏனென்றால், என்ன செய்ய வேண்டுமென்று இயேசு முன்பே அறிந்திருந்தார். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இயேசு ஒரு ரோபோவாக இருக்கவில்லை. அவர் ஒருவேளை சோதனைக்கு இணங்கியிருக்கலாம். ஆனால், எல்லா சமயத்திலும் தன்னுடைய அப்பாவுக்கு கீழ்ப்படிய வேண்டுமென அவர் தீர்மானித்திருந்தார். (யோவான் 8:28, 29) “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்” என்று இயேசு வெறுமனே சொல்லவில்லை, நடந்துகாட்டினார்.​—யோவான் 6:⁠38.

நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சோதனைகளை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதையும் அவ்வாறு செய்வதற்கு நீங்கள் தீர்மானித்திருக்கும் இரண்டு வழிகளையும் கீழே எழுதுங்கள்.

1. .....

2. .....

சோதனைக்கு இடம்கொடுக்கும்போது உங்கள் ஆசைக்கு அடிமையாகிவிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (தீத்து 3:3) ஆசைகள் உங்களைக் கட்டுப்படுத்த ஏன் இடம்கொடுக்கிறீர்கள்? அவற்றைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள், அவை உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.​—கொலோசெயர் 3:5. (g 8/08)

இளைஞர் கேட்கின்றனர் . . .  என்ற தொடர் கட்டுரைகளுக்கு www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் காண்க

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே.

சிந்திப்பதற்கு

எந்தப் பாவமும் இல்லாத பரிபூரண சிருஷ்டிகளுக்குக்கூட சோதனை வருமா?​—⁠ஆதியாகமம் 6:1–3; யோவான் 8:⁠44.

நீங்கள் சோதனையை எதிர்த்து உண்மையாய் நடந்துகொள்ளும்போது அது மற்றவர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?​—⁠நீதிமொழிகள் 27:11; 1 தீமோத்தேயு 4:⁠12.

[பக்கம் 29-ன் பெட்டி]

இப்படிச் செய்துபாருங்கள்

ஒரு திசைமானியை எடுத்துக்கொண்டு, அதன் முள் வடக்கு நோக்கி இருக்கும்படி செய்யுங்கள். இப்போது ஒரு காந்தத்தை அதன் அருகில் கொண்டு செல்லுங்கள். என்ன ஆகும்? அந்த முள் வடக்கு நோக்கி காட்டாமல், காந்தம் இருக்கும் திசைக்குத் திரும்பிவிடும்.

உங்களுடைய மனசாட்சியும் அந்தத் திசைமானியைப் போலத்தான் இருக்கிறது. அதை சரியாகப் பயிற்றுவித்தால், அது “வடக்கு” நோக்கி காட்டும். நீங்கள் சரியான தீர்மானங்களை எடுக்க உதவும். ஆனால், கெட்ட சகவாசம் ஒரு காந்தத்தைப் போல உங்களுடைய மனதைக் கெடுத்துப்போடும். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? உங்களுடைய உயர்ந்த ஒழுக்க நெறிகளை சீர்குலைக்கும் ஆட்களையும் சூழல்களையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.​—⁠நீதிமொழிகள் 13:⁠20.

[பக்கம் 29-ன் பெட்டி]

ஆலோசனைகள்

தவறு செய்யும்படி யாராவது உங்களைத் தூண்டும்போது என்ன சொல்லலாம் என்பதை முன்பே யோசித்து வையுங்கள். கவலைப்படாதீர்கள். உங்களைப் பெரிய யோக்கியன் போல் காட்டிக்கொள்ளும் விதத்தில் பதில் சொல்ல வேண்டியதில்லை. சாதாரண, ஆனால் உறுதியான பதிலே போதுமானது. உதாரணமாக, உங்களோடு படிக்கும் மாணவன் உங்களிடம் ஒரு சிகரெட்டை நீட்டினால், “நீ எனக்கு கொடுக்கிறது ‘வேஸ்ட்,’ நான் குடிக்கமாட்டேன்!” என்று சொல்லலாம்.

[பக்கம் 30-ன் படம்]

நீங்கள் சோதனைக்கு இடம்கொடுக்கும்போது உங்கள் ஆசைக்கு அடிமையாகிவிடுகிறீர்கள்