ஒருவரை பட்டப்பெயரால் அழைப்பது சரியா?
பைபிளின் கருத்து
ஒருவரை பட்டப்பெயரால் அழைப்பது சரியா?
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கவனித்து வந்ததோடு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும் அறிவித்து வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பல அரசு ஊழியர்களைச் சந்தித்திருப்பார்கள். அவர்களில் சிலர், சாதாரண பதவியையும் இன்னும் சிலர் உயர் பதவியையும் வகித்தார்கள். இயேசுவின் சீடர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய அந்தஸ்தையோ பதவியையோ சுட்டிக்காட்ட அவர்களுக்கென்று எந்தவொரு பட்டப்பெயரும் இருக்கவில்லை. ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்களை பட்டப்பெயரால் அழைப்பது அந்தக் காலத்து வழக்கம். உதாரணத்திற்கு, ரோம பேரரசரை “மாண்புமிக்கவரே” என்று மக்கள் அழைத்தார்கள்.—அப்போஸ்தலர் 25:21, NW.
அப்படியானால், இயேசுவின் சீடர்கள் அரசாங்க அதிகாரிகளைப் பட்டப்பெயரால் அழைத்தார்களா? அவர்களை நாம் எப்படி அழைக்க வேண்டும்?
மரியாதை கொடுப்பார்கள், அங்கீகரிக்க மாட்டார்கள்
“அனைவருக்கும் நீங்கள் செலுத்த வேண்டியவற்றைச் செலுத்துங்கள் . . . யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அவருக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். (ரோமர் 13:7, NW) அதிகாரிகளை பட்டப்பெயரால் அழைப்பதும் இதில் அடங்கும். இன்றும் அரசாங்க அதிகாரிகளை மாண்புமிகு ......., கனம்பொருந்திய ....... போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தி அழைப்பது சகஜம். ஆனால், சிலர் இப்படிக் கேட்கலாம்: ‘ஒருவருடைய நடத்தை சரியில்லை என்றால், நான் எப்படி அவரை இத்தகைய பட்டப்பெயர்களால் அழைப்பது?’
அரசாங்க அதிகாரிகள் அநேகர் தங்களுடைய பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றினாலும் அவர்கள் எல்லாருமே நம்பகமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும், “கர்த்தர் நிமித்தம்,” அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கீழ்ப்படியும்படி பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (1 பேதுரு 2:13, 14) கடவுள் அனுமதித்திருப்பதாலேயே அவர்கள் எல்லாரும் பதவியில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால், அவர்களுக்கு மரியாதையும் உரிய கனத்தையும் கொடுப்போம்.—ரோமர் 13:1.
இப்படி மரியாதை கொடுப்பதற்கு அந்த அதிகாரியின் நடத்தை முக்கியமில்லை. ஓர் அரசாங்க அதிகாரியை பட்டப்பெயரால் அழைக்கிறோம் என்றால் அவருடைய நடத்தையை நாம் அங்கீகரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
பவுல் அரசதிகாரிகளை எப்படி அழைத்தார்?
பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அப்போஸ்தலன் பவுல் எருசலேமில் கைது செய்யப்பட்டு யூதேயாவின் ஆளுநரான பேலிக்ஸ் முன்பு நிறுத்தப்பட்டார். பேலிக்ஸ் அப்போஸ்தலர் 24:26.
ஒன்றும் உத்தமமான அரசதிகாரி அல்ல. பேலிக்ஸை பற்றி ரோம சரித்திராசிரியரான டாஸிடஸ் எழுதினபோது, “தண்டனை பெறாமலேயே எல்லாவித அக்கிரமங்களையும் செய்யலாமென நினைப்பவர்” என்று குறிப்பிட்டார். நீதி வழங்குவதைவிட லஞ்சம் வாங்குவதிலேயே பேலிக்ஸ் குறியாய் இருந்தார். அப்படியெல்லாம் இருந்தாலும், பவுல் இரண்டு வருடம் சிறையிலிருந்தபோது இந்த ஆளுநருக்கு மரியாதை கொடுத்தார். அவர்கள் இருவரும் பல முறை பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம், பவுலிடமிருந்து பேலிக்ஸ் லஞ்சம் வாங்க பார்த்தார்; ஆனால், அது அவருக்குக் கிடைக்கவில்லை. பவுலோ பேலிக்ஸிடம் பிரசங்கிப்பதற்காக அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.—பேலிக்ஸுக்கு அடுத்ததாக பெஸ்து பதவியேற்றபோது அவர் செசரியாவில் பவுலை விசாரணை செய்தார். யூத மதத் தலைவர்களின் தயவைப் பெறுவதற்காக, பவுலை எருசலேமில் விசாரணை செய்யலாமென பெஸ்து ஆலோசனை கூறினார். ஆனால், அங்கு தனக்கு நியாயம் கிடைக்காது என்பதை அறிந்து, பவுல் தனது ரோம குடியுரிமையைப் பயன்படுத்தி, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்” என்று அறிவித்தார்.—அப்போஸ்தலர் 25:11, NW.
பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சீஸருக்கு எப்படி விளக்குவது என்று பெஸ்துவுக்குத் தெரியாமல் இருந்த சமயத்தில் இரண்டாம் அகிரிப்பா ராஜா பெஸ்துவைப் போய்ச் சந்தித்தார். அந்த வழக்கு சம்பந்தமாக தெரிந்துகொள்ளவும் விரும்பினார். அடுத்த நாள் அகிரிப்பா ராஜா படைத் தளபதிகளும் உள்ளூர் பிரமுகர்களும் புடைசூழ மக்களவை கூடத்திற்கு பகட்டாக வந்தார்.—அப்போஸ்தலர் 25:13–23.
பவுல் பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது “ராஜாவே” என்று அகிரிப்பாவை அழைத்தார். யூதர்களின் முறைமைகளையும் சர்ச்சைகளையும் அகிரிப்பா நன்கு அறிந்தவர் என்று சொல்லி அவரை புகழ்ந்தார். (அப்போஸ்தலர் 26:2, 3, NW) அந்தச் சமயத்தில், அகிரிப்பா தன் தங்கையுடன் முறைகேடான தொடர்பு வைத்திருந்ததாக பரவலாக அறியப்பட்டிருந்தது. அகிரிப்பா ராஜா ஒழுக்கங்கெட்டவர் என்று பெயரெடுத்திருந்ததை பவுல் அறிந்திருந்தாலும் ஒரு ராஜாவுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையைச் செலுத்தினார்.
பவுல் தன் தரப்பில் வாதிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” என்று பெஸ்து கத்தினார். அதைக் கேட்டு பவுல் கோபப்படாமல் “மாண்புமிகு பெஸ்து அவர்களே” என்று ஆளுநரிடம் சாந்தமாகப் பதிலளித்தார். (அப்போஸ்தலர் 26:24, 25, NW) அவருடைய ஸ்தானத்துக்கு தகுந்த மரியாதையை பவுல் காண்பித்தார். என்றாலும், இந்த உதாரணங்கள் ஒரு கேள்வியை எழுப்புகின்றன: மரியாதை செலுத்தும் விஷயத்தில் ஏதாவது வரம்பு இருக்கிறதா?
மரியாதை கொடுப்பதில் வரம்பு
ரோமர் 13:1 (NW) சொல்கிறபடி அரசாங்க அதிகாரங்களுக்கு மரியாதைக் கொடுப்பதில் நமக்கு வரம்பு இருக்கிறது. ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களை . . . தமக்குக் கீழ்ப்பட்ட அதிகாரத்தில் இருக்கும்படி கடவுள் அனுமதித்திருக்கிறார்’ என்று அந்த வசனம் சொல்கிறது. அதனால், அரசாங்க பிரதிநிதிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதைக்கு எல்லை இருக்கிறது. மற்றவர்களைக் கனப்படுத்தும் விஷயத்தில் இயேசு ஒரு வரம்பை விதித்தார்: “நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாதீர்கள்; ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்; நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, பூமியிலுள்ள ஒருவரையும் ‘தந்தை’ என்று அழைக்காதீர்கள், பரலோகத்தில் இருக்கிற ஒருவர்தான் உங்கள் தந்தை. ‘தலைவர்’ என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்.”—மத்தேயு 23:8–10, NW.
அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்களுக்கும் மதத் தலைவர்களுக்குச் சூட்டப்படும் பட்டப்பெயர்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதால் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் விஷயத்தில் வரம்பு இருக்கிறது என்பது தெரிகிறது. அரசாங்க அதிகாரிகள், மதப் பட்டப்பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக்கொண்டால் பவுல் சொன்னபடி, அவர்களுக்குக்குரிய மதிப்பை நாம் கொடுக்க முடியாது. பைபிள் அறிவுரையைப் பின்பற்றும் ஒருவர் அப்படிப்பட்ட உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்துவார். ஆனால், மதப் பட்டப்பெயரால் அவரை அழைப்பதற்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய மனசாட்சி அனுமதிக்காது. ஏனென்றால், ‘தேவனுடையதை தேவனுக்கு செலுத்த’ அவர் கடமைப்பட்டிருக்கிறார்.—மத்தேயு 22:21. (g 9/08)
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ இயேசுவைப் பின்பற்றியவர்கள் அரசதிகாரிகளை எவ்வாறு கருதினார்கள்?—ரோமர் 13:7.
◼ அப்போஸ்தலன் பவுல், அரசதிகாரிகளைப் பட்டப்பெயர்களால் அழைத்தாரா?—அப்போஸ்தலர் 25:11; 26:2, 25.
◼ எப்படிப்பட்ட பட்டப்பெயர்களை இயேசு அங்கீகரிக்கவில்லை?—மத்தேயு 23:8–10.
[பக்கம் 23-ன் படம்]
அகிரிப்பாவை பவுல் என்ன சொல்லி அழைத்தார்?