Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுவை உணர்வு

சுவை உணர்வு

யாருடைய கைவண்ணம்?

சுவை உணர்வு

உங்களுக்குப் பிடித்தமான உணவை வாயில் வைத்தவுடன், உங்கள் நாக்கு ருசிக்க ஆரம்பித்துவிடுகிறது. அற்புதமான இந்த சுவை உணர்வு எப்படி ஏற்படுகிறது?

சிந்தனைக்கு: சுவை மொட்டுக்கள் என்று அழைக்கப்படும் சரும செல்கள் நம்முடைய நாவில் மட்டுமல்ல, வாயிலும் தொண்டையிலும்கூட கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை நாவின் மேற்பரப்பில் காணப்படும் நுண் காம்புகளில் (papillae) தங்கியுள்ளன. ஒரு சுவை மொட்டில் மட்டுமே, கிட்டத்தட்ட நூறு உள்வாங்கி செல்கள் (receptor cells) வாழ்கின்றன. இவை ஒவ்வொன்றும் நான்கு வகை சுவைகளில் ஒன்றை, அதாவது புளிப்பு, உவர்ப்பு, இனிப்பு, கசப்பு ஆகிய சுவைகளில் ஒன்றை கண்டுபிடிக்க முடியும். a ஆனால் காரமோ இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. காரசாரமான மசாலாப் பொருள்கள் சுவை மொட்டுக்களை அல்ல, வலி உள்வாங்கிகளையே (pain receptors) தூண்டுகின்றன. எப்படியிருந்தாலும் சரி, சுவை உள்வாங்கி செல்கள் உணர்வு நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் செல்கள் உணவிலுள்ள ரசாயனங்களால் தூண்டப்படும்போது உடனடியாக மூளையின் கீழ் தண்டுக்கு செய்தி அனுப்புகின்றன.

உங்கள் சுவையுணர்வு வாயில் மட்டுமே பிறப்பதில்லை. உங்களுடைய மூக்கில் உள்ள 50 லட்சம் வாசனை உள்வாங்கிகள் (odor receptors) சுமார் 10,000 வாசனைகளை முகர முடியும். உங்கள் நாவுக்குச் சுவை அளிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சாப்பாடு ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்கிறோம், ஆனால், அந்தச் சுவையில் சுமார் 75 சதவீதம் முகரும்போதே கிடைத்துவிடுகிறது.

விஞ்ஞானிகள் மின்ரசாயன முறையில் இயங்கும் ஒரு மூக்கை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயற்கை முகர்வு கருவி ரசாயன வாயு உணர்விகளை (chemical gas sensors) பயன்படுத்தி வாசனைகளைக் கண்டுபிடிக்கிறது. என்றாலும், “இயற்கையை காப்பியடித்து மனிதன் உருவாக்கும் எந்தவொரு கருவியும் ‘ஒரிஜினல்’ கிட்டவே நெருங்க முடியாது. இயற்கையில் காணப்படும் ஒவ்வொன்றும் அற்புதமானது, சிக்கலானது” என்று பென்சில்வேனியா தேசிய பல்கலை செய்த ஆராய்ச்சியில் நரம்பு இயங்கியல் வல்லுநரான ஜான் கார் சொல்கிறார்.

நமக்கு சுவை உணர்வு இருப்பதால் உணவை ருசித்து சாப்பிட முடிகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலர் ஒருவகை உணவை சப்புக்கொட்டி சாப்பிடுகிறார்கள், அதேசமயம் இன்னொரு வகை உணவைச் சீண்டுவதே இல்லை. இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறுகிறார்கள். “மனித உடல் செயல்படுகிற விதம் சம்பந்தமாக விஞ்ஞானிகள் பல அடிப்படை விஷயங்களைக் கண்டுபிடித்திருந்தாலும், நம்முடைய சுவை உணர்வும் முகரும் உணர்வும் அவர்களுக்குப் புரியாப் புதிராகவே இருக்கின்றன” என்கிறது ஸையன்ஸ் டெய்லி.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு சுவை உணர்வு தானாக வந்துவிட்டதா? அல்லது அது படைப்புக்கு அத்தாட்சியா? (g 7/08)

[அடிக்குறிப்பு]

a சமீப ஆண்டுகளில், சுவை பட்டியலில் உமாமி என்ற சுவையையும் சில விஞ்ஞானிகள் சேர்த்திருக்கிறார்கள். மாமிச சுவையும் உப்பு, காரம் கலந்த சுவையும் கொண்டதுதான் உமாமி. புரதங்களில் காணப்படும் குளுடாமிக் அமிலத்திலுள்ள உப்புகள் மட்டுமே இந்தச் சுவையை அளிக்கின்றன. இந்த உப்புகளில் ஒன்றுதான் உணவுக்கு சுவையூட்டும் மோனோசோடியம் குளுடாமேட்.

[பக்கம் 14-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நாக்கின் குறுக்குவெட்டு தோற்றம்

[படம்]

நுண் காம்புகள்

[படத்திற்கான நன்றி]

© Dr. John D. Cunningham/Visuals Unlimited