சூறாவளியைவிட சக்திவாய்ந்த அன்பு!
சூறாவளியைவிட சக்திவாய்ந்த அன்பு!
2005-ல் ஐக்கிய மாகாணங்களின் வளைகுடா பகுதியை கட்ரீனா சூறாவளியும் ரீட்டா சூறாவளியும் தாக்கியதில் பயங்கர பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் பாதிக்கப்பட்டார்கள்.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் இயங்கும் நிவாரண குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினார்கள். லூயிஸியானாவில் 13 நிவாரண மையங்களையும், 9 சேமிப்பு அறைகளையும், 4 எரிபொருள் கிடங்குகளையும் நிறுவினார்கள். 80,000 சதுர கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவி செய்தார்கள். ஐக்கிய மாகாணங்களின் எல்லா பகுதிகளிலிருந்தும் 13 தேசங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 17,000 சாட்சிகள் அவசர உதவி அளிப்பதற்கும் கட்டுமான பணியில் கைகொடுப்பதற்கும் முன்வந்தார்கள். சூறாவளியைவிட கிறிஸ்தவ அன்பு சக்திவாய்ந்தது என்பதற்கு அவர்கள் செய்த சேவையே சாட்சி.—1 கொரிந்தியர் 13:1–8.
இந்தக் குழுவினர், சக கிறிஸ்தவர்களுடைய வீடுகளில் 5,600-க்கும் அதிகமான வீடுகளையும் கூட்டங்கள் நடத்த யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தும் ராஜ்ய மன்றங்களில் 90 மன்றங்களையும் பழுது பார்த்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், சேதமான எல்லா சாட்சிகளின் வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் அவர்கள் சரிசெய்தார்கள். ‘யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்’ என்று கலாத்தியர் 6:10 சொல்கிறபடி, யெகோவாவின் சாட்சி அல்லாதவர்களுக்கும் உதவி செய்தார்கள்.
நிவாரண பணியில் ஈடுபடுவது என்பது சாதாரண விஷயமல்ல, நிறைய தியாகம் தேவை; ஆனால், அதன் பலன்கள் ஏராளம். இந்தப் பணியின் பல்வேறு அம்சங்களில் பொறுப்பேற்ற ஏழு சாட்சிகள் என்ன சொல்கிறார்கள் என கேட்போம்.
“நான் பொக்கிஷமாய்க் கருதுகிறேன்”
ராபர்ட்: நிவாரண குழுவில் சேவை செய்ய எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியத்தை நான் பொக்கிஷமாய்க் கருதுகிறேன். எனக்கு 67 வயதாகிறது. இந்தக் குழுவிலேயே நான்தான் வயதானவன். சேவை மனமுள்ள சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் இளமைத் துடிப்பும் ஆன்மீக சிந்தையும் உடைய இளைஞர்களே. இந்த இளம் வயதில் யெகோவாவுக்கும் சக கிறிஸ்தவர்களுக்கும் இவர்கள் காட்டும் சுயநலமற்ற அன்பை பார்க்கும்போது மெய்சிலிர்த்துப் போகிறது.
என் மனைவி வெரோனிக்கா எனக்கு வலதுகை போல இருக்கிறாள். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக சந்தோஷமாய் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு நிவாரண பணியில் ஈடுபட நான் தீர்மானித்தபோது அவளும் சம்மதம் தெரிவித்தாள். இப்போது வாரத்துக்கு ஒரு நாள், இரவு நேரத்தில் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். குறைந்த வருமானத்தில் வாழ கற்றுக்கொண்டிருக்கிறோம்; எளிமையான வாழ்க்கை வாழ்வதில் எங்களுக்கு சந்தோஷம் கிடைத்திருக்கிறது. யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்வதால் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்துக்கு முதலிடம் கொடுப்பது எப்படி என்பதை நன்றாகவே தெரிந்து கொண்டோம். (மத்தேயு 6:33) யெகோவா தமது மக்களை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொள்கிறார் என்பதை அநேகமுறை கண்ணார கண்டிருக்கிறோம்.
ஃபிராங்க்: பாடன்ரோஜ் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தின் உணவு இலாகாவில் மேற்பார்வையாளராக சேவை செய்கிறேன். வேலை செய்பவர்களுக்கு உணவளிப்பது ஆரம்பத்தில் ரொம்ப சிரமமாக இருந்தது; வாரத்தில் ஏழு நாளும் 10 முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அதில் கிடைத்த ஆசீர்வாதமோ எண்ணில் அடங்காதது. கிறிஸ்தவ அன்புக்கு இருக்கும் சக்தியைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
உணவு இலாகாவில் ஒரு வாரத்திற்கு சேவை செய்த அநேகர், மறுபடியும் சேவை செய்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டு எழுதினார்கள். இப்படி உதவி செய்வதற்கு வாய்ப்பளித்ததற்காக சிலர் அஞ்சல் அட்டைகள் மூலம் அல்லது ஃபோன் மூலம் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள். அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையைப் பார்த்து நானும் என் மனைவி வெரோனிக்காவும் ரொம்பவே நெகிழ்ந்து போனோம்.
அவருடைய ரோமங்கள் சிலிர்த்து நின்றன
கிரகரி: நானும் என் மனைவி காத்தியும் நிவாடாவிலுள்ள லாஸ் வேகாஸிலிருந்த எங்கள் சொந்த வீட்டை விற்றுவிட்டு சின்ன டிரக்கையும் டிரெய்லரையும் வாங்கினோம். இப்போது அதுதான் எங்கள் வீடு. எங்கள் வாழ்க்கையை எளிமையாக மாற்றிக்கொண்டதால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிவாரண பணிக்கு எங்களை அர்ப்பணிக்க முடிந்திருக்கிறது. மல்கியா 3:10-ல் (ஈஸி டு ரீட் வர்ஷன்) உள்ள வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை என் வாழ்நாளிலேயே இப்போதுதான் அதிகமாய்ப் பார்க்கிறேன்: ‘என்னைச் சோதனை செய். . . . [அப்போது] உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும்’ என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
மற்றவர்கள் எங்களைப் பார்த்து, “எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறீர்கள்” என்று சொல்லும்போது மனதுக்குள் சிரித்துக்கொள்வோம்; எங்களுக்கு அது பெரிய தியாகமாகத் தோன்றவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு நானும் காத்தியும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டோம்; ஆனால், அந்தச் சமயத்தில் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருந்தது. கடவுளுடைய சேவையில் நிறைய செய்ய வேண்டும் என்ற எங்கள் ஆசையை இந்த நிவாரண பணி நிவிர்த்தி செய்துவிட்டது. மிகவும் திறமை வாய்ந்த சாட்சிகள் சிலருடன் வேலை செய்யும் அரும்பெரும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. உதாரணமாக, மிகப் பெரிய ஹோட்டலில் தலைமை சமையற்காரராக வேலை செய்த ஒருவரும், இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு சமையல் செய்த மற்றொருவரும் எங்களோடு வேலை செய்தார்கள்.
நிவாரணப் பணியில் ஈடுபட்டது அநேகருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த அனுபவத்தைக் குறித்து 57 வயதான ஒருவர் சொன்னபோது அவருடைய ரோமங்கள் சிலிர்த்து நின்றன. பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து உதவி செய்ய முடியாத சில சாட்சிகள்கூட உற்சாக ஊற்றாக திகழ்ந்தார்கள். உதாரணத்திற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களிலிருந்து பூஞ்சணங்களை அகற்றும் வேலையைச் செய்துகொடுத்த இரண்டு சாட்சிகள் ஒரு பெரிய ‘பேனரை’ எங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரான நெப்ராஸ்காவில் உள்ள மூன்று சபையைச் சேர்ந்த பிள்ளைகள் உட்பட அனைவரும் அதில் கையெழுத்து போட்டு அனுப்பியிருந்தார்கள்.
‘தளர்ந்த உள்ளங்களுக்கு கடவுள் தெம்பளித்ததைப் பார்த்தோம்’
வென்டல்: சூறாவளி தாக்கிய அடுத்த நாள் ஐக்கிய மாகாண கிளை அலுவலகத்திடமிருந்து எனக்கு அழைப்பு கிடைத்தது. லூயிஸியானாவிலும் மிஸ்ஸிசிப்பியிலும் எத்தனை ராஜ்ய மன்றங்கள், எத்தனை யெகோவாவின் சாட்சிகளின் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன என்பதைக் கணக்கெடுக்கும் வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து வேலைக்கு வேலையாகவும் அனுபவத்திற்கு அனுபவமாகவும் இருந்து வருகிறது. ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகமாய் தேவைப்படுகிற இடத்தில் 32 வருடங்களாக நானும் என் மனைவி ஜனினும் சேவை செய்திருக்கிறோம். அப்போது, யெகோவா தம் மக்களுக்கு உதவுவதை கண்ணார கண்டிருக்கிறோம். இப்போதோ, அதை பெரிய அளவில் பார்க்கிறோம்.
பாடன்ரோஜ் நிவாரண குழுவின் தலைவராக சேவை செய்வதை பாக்கியமாய்க் கருதுகிறேன். இந்த வேலை சவாலாக இருந்தாலும் அதிக திருப்தி அளிக்கிறது. இந்த
மீட்பு பணியில் எங்கள் குழு ஈடுபட்டபோது கடவுள் எங்களோடுகூட இருந்து பிரச்சினைகளைத் தீர்த்ததையும், புதுப்புது வாய்ப்புகளை அளித்ததையும், தளர்ந்தவர்களுக்குத் தெம்பளிப்பதையும் பார்த்தோம். சர்வ வல்லமையுள்ள, அன்பான தகப்பனாய் இருந்து, நாங்கள் நினைத்தே பார்க்காத விதத்தில் எங்களுக்கு உதவினார்.“நீங்களும் உங்கள் மனைவியும் இந்த நிவாரண குழுவில் சேர்ந்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதே, எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வாழ்க்கை எப்போதுமே சுமூகமாக இருக்கவில்லை; நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், எப்போதும் ‘கண்களைத் தெளிவாக’ வைத்திருப்பதால் நிறைய பலன்கள் உண்டு என்பதைக் கண்ணார கண்டிருக்கிறோம்.—மத்தேயு 6:22.
நியூ ஆர்லியன்ஸில், சூறாவளியிலிருந்து உயிர் தப்பியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவும் வேலையைத் தொடங்கியபோது ஓய்வெடுக்கவே நேரம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, நகரத்தில் ஒரே குழப்பமும் கலவரமும் இருந்ததால் இராணுவ வீரர்கள் வேறு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எங்கள் முன் இருந்த வேலையைப் பார்த்தபோது எங்களுக்குத் தலையே சுற்றியது.
பொருளையும் சொந்த பந்தங்களையும் இழந்த ஆயிரக்கணக்கான சாட்சிகளைச் சந்தித்தோம். அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்து, ஆறுதல் சொல்ல முயற்சி செய்தோம். பின்னர், யெகோவாவின் உதவியோடு வேலையில் இறங்கினோம். சில சமயங்களில், இங்கு வேலை செய்த இரண்டு வருடங்களில் நான் இரண்டு ஆயுசுகாலம் வாழ்ந்துவிட்டதுபோல் தோன்றும்.
உடலளவிலும் மனதளவிலும் நான் சோர்வாக உணரும்போதெல்லாம் மீட்பு பணியில் உதவுவதற்காக சாட்சிகளின் ஒரு படையே வந்திறங்கும்; அவர்களில் சிலர், சில மாதங்களுக்கு, இன்னும் சிலர் நிரந்திரமாக சேவை செய்ய வருவார்கள். சந்தோஷமாக மனமுவந்து சேவை செய்ய வரும் இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, முக்கியமாய் அதிலுள்ள இளைஞர்களைப் பார்க்கும்போது போன தெம்பெல்லாம் திரும்ப வந்துவிடும்.
பலமுறை யெகோவா எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். நாங்கள் இங்கு வந்திறங்கிய சமயத்தில், சாட்சிகளின் வீடுகளில் 1000-க்கும் அதிகமானவற்றின் மேல் மரங்கள் விழுந்துகிடந்தன. அந்த மரங்களை அகற்றுவதற்குத் தேவையான கருவியோ, ஆட்களோ எங்களிடம் இல்லாததால் எங்கள் குழுவினர் உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தோம். அடுத்த நாளே, அதற்கு ஏற்ற கருவியையும் தன்னுடைய டிரக்கையும் எடுத்துக்கொண்டு ஒரு சகோதரர் வந்து எங்களுக்கு உதவினார். இன்னொரு சந்தர்ப்பத்தில், எங்களுடைய ஜெபத்திற்கு 15 நிமிடங்களில் பதில் கிடைத்து. மற்றொரு சந்தர்ப்பத்தில், நாங்கள் ஒரு கருவி வேண்டுமென கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தோம்; நாங்கள் ஆமென் சொல்வதற்கு முன் யெகோவா அதை எங்களுக்குக் கொடுத்துவிட்டார்! யெகோவா உண்மையிலேயே ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று நிரூபித்தார்.—“யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்”
மாத்யூ: சூறாவளி தாக்கிய அடுத்த நாள், 15 டன் எடையுள்ள உணவையும், தண்ணீரையும் மற்ற அத்தியாவசிய பொருள்களையும் பகிர்ந்தளிக்கும் வேலையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. தாங்கள் தாராள குணம் படைத்தவர்கள் என்பதை யெகோவாவின் ஜனங்கள் செயலில் காட்டினார்கள்.
மீட்பு பணியில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதற்காக நானும் என் மனைவி டார்லினும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அருகே குடிமாறிச் சென்றோம்; நாங்கள் இருந்த இடத்திலிருந்து இரண்டு மணிநேரத்தில் அங்கு சென்றுவிட முடியும். அந்த ஊரில் இருந்த ஒரு சாட்சி எங்களுக்கு பகுதி நேர வேலை அளித்தார்; மீட்பு பணியில் அதிக நேரம் செலவிட இது எங்களுக்குப் பெரிதும் உதவியது. அங்கிருந்த இன்னொரு சாட்சி எங்களுக்கு வீடு கொடுத்து உதவினார். இப்படிப்பட்ட ஓர் அன்பான உலகளாவிய குடும்பத்தில் இருப்பதை நினைக்கும்போதெல்லாம் பூரித்துப் போகிறேன். எனவே, யெகோவாவின் சாட்சியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
டெட்: கட்ரீனா சூறாவளிக்குப் பிறகு, நானும் என் மனைவி டெபியும் நிவாரண பணியில் ஈடுபட எங்கள் பெயர்களைக் கொடுத்தோம். சில நாட்களுக்குள் எங்களுடைய ஜெபத்திற்கு விடையாக 9 மீட்டர் நீளமான, ஒரு பழைய ட்ரெயிலர் கிடைத்தது; எங்கள் டிரக் இழுத்து செல்லுமளவுக்கு அது கனம் குறைந்ததாகவும் இருந்தது; சொல்லப்பட்ட விலையில் பாதி விலைக்கே கிடைத்துவிட்டது; மொத்தத்தில் எங்கள் பட்ஜெட்டுக்குள்ளேயே அமைந்தது. இந்த டிரெயலரில்தான் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக குடியிருக்கிறோம்.
கொஞ்ச நாள் வேலையில்லாமல் இருந்தபோது எங்களுடைய வீட்டை விற்றுவிட்டோம், எங்களிடம் இருந்த முக்கால்வாசி பொருள்களையும் விற்றுவிட்டோம். இதனால் நியூ ஆர்லியன்ஸில் நிறைய சேவை செய்ய எங்களுக்கு வசதியாக இருந்தது. அங்கு நான் திட்ட ஒருங்கிணைப்பாளராக சேவை செய்கிறேன். தமக்குச் சேவை செய்கிறவர்களுக்கு யெகோவா எப்படி ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாயிருக்கிறார்’ என்பதைப் பார்ப்பதே எங்களுக்குக் கிடைத்த சிறந்த அனுபவம். அநேகர் வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் மட்டும் இழக்கவில்லை, தங்கள் ஊரைவிட்டு வெளிவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சபையிலிருந்த சகோதர சகோதரிகளையும், ஏன், அவர்கள் ஊழியம் செய்த இடங்களையும்கூட இழந்தார்கள்.—2 கொரிந்தியர் 1:3.
‘அவர்களுடைய விசுவாசம் எங்கள் மனதைத் தொட்டது’
ஜஸ்டின்: அக்டோபர் 2005-ல் வளைகுடா பகுதியில் நிவாரண பணிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் என் மனைவி டிஃபனியும் உடனடியாக எங்கள் விண்ணப்பத்தாள்களைப் பூர்த்தி செய்து கொடுத்தோம். பிப்ரவரி 2006-ல் எங்களுக்கு அழைப்பு வந்தது. நியூ ஆர்லியன்ஸ் அருகில் அமைக்கப்பட்ட கென்னர் நிவாரண மையத்தின் கூரைபோடும் குழுவில் சேர்ந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாட்சியின் வீட்டுக்கு கூரைபோட்டு கொடுத்தோம். அவர்களுடைய விசுவாசத்தையும் கடவுள்மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் கண்டு வியந்துபோனோம். பொருள் செல்வங்கள்மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டோம். யெகோவா தமது மக்களுக்கு உதவியிருப்பதை பார்த்தபோதும் சக கிறிஸ்தவர்களுக்கு நாங்கள் உதவியபோதும் எங்களுக்குக் கிடைத்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. (g 8/08)
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
நிவாரண மையத்தில் ஒரு நாள்
நிவாரண மையத்தின் சமையலறையில் வேலை செய்பவர்களுக்கு காலை 4:30 மணிக்கே வேலை ஆரம்பித்துவிடும். ஏழு மணி அளவில், சாப்பிடும் இடத்திற்கு மீட்பு படையினர் வருவார்கள். காலை உணவுக்கு முன்பு 10 நிமிடம் தினவசனத்தை படித்து சிந்திப்பார்கள். யாராவது புதிதாக வந்திருந்தால் அந்தக் கூட்டத்தை நடத்துபவர் அந்தச் சமயத்தில் அவர்களை வரவேற்பார். சமீபத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்.
கடவுளுக்கு நன்றி சொன்ன பிறகு, எல்லாரும் சந்தோஷமாய் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். சிலர் மையத்திலேயே இருந்து அலுவலகங்களிலோ, துணி துவைக்கும் இலாகாவிலோ, சமையலறையிலோ வேலை செய்வார்கள். சமையல் செய்யும் சகோதரர்கள், மதிய உணவை பொட்டலம் கட்டி தயாராய் வைத்திருப்பார்கள். வேறு இடங்களில் வேலை செய்கிற ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து இந்தப் பொட்டலங்களை எடுத்துச்செல்வார்.
மீட்பு பணியில் ஈடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளும் ஒவ்வொரு திங்கட் கிழமையும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட காவற்கோபுர பத்திரிகையை படித்து ஆராயக் கூடிவருவார்கள். இப்படிச் செய்வது, அவர்கள் ஆன்மீக ரீதியில் திடமாய் இருப்பதற்கு உதவுகிறது. எந்தச் சவாலையும் சந்தோஷமாய் சந்திக்கவும், அவர்கள் செய்யும் வேலையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் துணைபுரிகிறது.—மத்தேயு 4:4; 5:3.
[பக்கம் 21-ன் பெட்டி]
“உங்களைப்பற்றி நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்”
நியூ ஆர்லியன்ஸில் வசிக்கும் ஒரு பெண்மணி தன் வீட்டுக் கதவில், “யெகோவாவின் சாட்சிகளே, கதவைத் தட்டாதீர்கள்” என்று எழுதி பலகை மாட்டியிருந்தாள். ஒருநாள் வாலண்டியர் தொகுதியினர் அவளுடைய வீட்டிற்கு எதிரிலிருந்த, சூறாவளியால் சேதமடைந்த வீட்டை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் அன்பாகவும் சிநேகமாகவும் பழகியதைத் தினமும் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒருநாள் இருப்புக்கொள்ளாமல் அங்கு என்னதான் நடக்கிறதென பார்க்கச் சென்றாள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை அறிந்ததும் சூறாவளிக்குப் பிறகு தன் சர்ச்சிலிருந்து ஒருவர்கூட தனக்கு ஃபோன் செய்யவில்லையென சொன்னாள். “உங்களைப் பற்றி நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்” என்றாள். அதன் பிறகு என்ன நடந்தது? அவள் கதவில் மாட்டி வைத்த பலகையை எடுத்துவிட்டாள். தன் வீட்டுக்கு வரும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுக்கொண்டாள்.
[பக்கம் 18, 19-ன் படம்]
ராபர்ட், வெரோனிக்கா
[பக்கம் 18, 19-ன் படம்]
ஃபிராங்க், வெரோனிக்கா
[பக்கம் 19-ன் படம்]
கிரகரி, காத்தி
[பக்கம் 19-ன் படம்]
வென்டல், ஜனின்
[பக்கம் 20-ன் படம்]
மாத்யு, டார்லின்
[பக்கம் 20-ன் படம்]
டெட், டெபி
[பக்கம் 20-ன் படம்]
ஜஸ்டின், டிஃபனி