Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துருதுரு கோட்டி

துருதுரு கோட்டி

துருதுரு கோட்டி

பிரேசிலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அடர்ந்த கானகத்தில் காலார நடந்து செல்கிறீர்கள். திடீரென உங்களுக்கு எதிரே கோட்டிகளின் கும்பல் படையெடுத்து வருகிறது. உங்கள் இதயம் படபடக்கிறது. இது கடிக்குமா? என்ற பயம் உங்களைக் கவ்விக்கொள்கிறது. பயப்படாதீர்கள்! பொதுவாக இந்தப் பிராணி கடிக்கும். ஆனால், இப்போது வருவது உங்களைக் கடிப்பதற்கு அல்ல, பைக்குள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்குத்தான். இந்தச் சிறிய பிராணிகள் சரியான தீனி பண்டாரங்கள். 24 மணி நேரமும் இரை தேடியே திரிந்துகொண்டிருக்கும். சொல்லப்போனால், கையில் கிடைக்கிற எதையும் விட்டுவைக்காது. புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், ஏன், பறவைகளின் முட்டைகள் என எல்லாவற்றையும் கபளீகரம் செய்கின்றன.

இந்த கோட்டிகள், இரவில் நடமாடும் மாமிசப்பட்சிணியான ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இதன் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால் அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது. இது ஒரு வெப்பமண்டல பாலூட்டி; பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட அர்ஜென்டினா வரையுள்ள பகுதிகளைப் பட்டா போட்டு சுற்றி வருகிறது.

பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாக ரோந்து செல்கின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும். ஆண் கோட்டிகளோ தனிமை விரும்பிகள். இனப்பெருக்க காலத்தின்போது ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்துகொள்ளும். கர்ப்பிணி கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மரங்களில் கூடு கட்ட கிளம்பிவிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு வாரிசுகள் பிறக்கும். பிரசவம் முடிந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக்கொண்டு பழைய கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டி கோட்டிகள் பார்ப்பதற்கு பந்து உருண்டு வருவது போல் காட்சியளிக்கும்.

காடுகளில் உணவு தேடி திரியும்போது இந்த கோட்டிகள் எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டும் மண்ணை தோண்டிக்கொண்டும் இருக்கும். விவசாயிகளுக்கு இவற்றைக் கண்டாலே ஆகாது. சோள காடுகளும் கோழி பண்ணைகளும் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அவற்றை ஒரு கை பார்த்துவிடும். வேட்டைக்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதில் இவை மன்னன்கள். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்துவிடும். அப்படி முடியாவிட்டால், துப்பாக்கி சத்தம் அல்லது கைதட்டும் சத்தம் கேட்டவுடன் கீழே விழந்து செத்துவிட்டதுபோல் நடிக்கும். அதை எடுத்து செல்ல வேட்டைக்காரன் கிட்டே வருவதற்குள் ஒரே ஓட்டமாய் ஓடிவிடும்!

அடுத்த முறை நீங்கள் பிரேசிலுக்கு வந்தால், கோட்டி கூட்டத்தைச் சந்திக்கலாம். அந்தச் சமயத்தில் பயந்துவிடாதீர்கள். அவை உங்களை ஒன்றும் செய்யாது. உங்களிடம் ஏதாவது தின்பண்டம் இருந்தால் அதற்கு போடுங்கள், சந்தோஷமாய் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்! (g 7/08)