Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

பள்ளிக்கூடத்தில் வரும் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது?

பள்ளிக்கூடத்தில் வரும் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது?

“பள்ளிக்கூடத்தில வரும் தொல்லைகள் பள்ளிப் படிப்போடு முடிந்துவிடுமென நினைக்காதீங்க, அது தொடர்ந்து வேறு வேறு ரூபத்தில் வரும்.”​​—⁠ஜேம்ஸ், நியுஜிலாந்து. a

“பள்ளிக்கூடத்தில எனக்கு எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா, சில சமயங்களில் அழுகை அழுகையா வரும், கத்திக்கூச்சல் போடலாம் போல இருக்கும்.”​​—⁠ஷாரன், அமெரிக்கா.

பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை அப்பா அம்மா கொஞ்சம்கூட புரிந்துகொள்வதில்லை என நினைக்கிறீர்களா? ‘உனக்கென்ன கடன்தொல்லையா? வீட்டுக்கு தேவையானதெல்லாம் வாங்கி போடணுமா? ஆபிசர் தொல்லையா?’ என்று அவர்கள் உங்களைக் கேட்கலாம். ஆனால், உங்கள் அப்பா அம்மாவுக்கு இருக்கிற மாதிரியே உங்களுக்கும் பள்ளியில் ஏகப்பட்ட கஷ்டங்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஒருவேளை அதைவிட ஜாஸ்தியாகவே இருப்பதாக நினைக்கலாம்.

ஸ்கூலுக்குப் போய்விட்டு வருவதே உங்களுக்குப் பெரிய தலைவலியாக இருக்கலாம். “ஸ்கூல் பஸ்ஸிலேயே சண்டை ஆரம்பித்துவிடும். பாதியிலேயே பஸ்ஸை நிறுத்திவிட்டு டிரைவர் அவர் பாட்டுக்கு இறங்கி போய்விடுவார், நாங்கள் எல்லாரும் அடிச்சுபுடிச்சு ஸ்கூலுக்கு போவதற்குள் அரை மணிநேரம் லேட்டாகிவிடும்” என்கிறாள் அமெரிக்க வாசி தாரா.

சரி, ஸ்கூலுக்குப் போய் சேர்ந்ததும் எல்லா பிரச்சினையும் முடிந்துவிடுமா? ம்ஹும். ஏன்? ஒருவேளை இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம்:

ஆசிரியர்களின் தொல்லை.

“‘நீ நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கணும், ‘ஃபர்ஸ்ட் ரேங்க்’ எடுக்கணும்’ என்று என்னுடைய டீச்சருங்க சொல்லிட்டே இருப்பாங்க. இப்ப, எனக்கு அவர்களைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற டென்ஷன் வந்துவிடும்.”​—⁠ஸான்ட்ரா, பிஜி.

“படிப்பில் யாராவது கெட்டிக்காரனாக இருந்துட்டா போதும் ஆசிரியர்களின் தொல்லை தாங்க முடியாது. ‘நல்ல மார்க் எடுக்கணும், ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும்’ என்று சொல்லி சொல்லி எங்களை ஒரு வழி பண்ணிடுவாங்க.”​—⁠ஏப்ரல், அமெரிக்கா.

“வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல நல்ல இலட்சியங்கள் இருக்கலாம். அப்படியிருந்தாலும்கூட படிப்பு விஷயத்தில் உங்கள் டீச்சர் சொல்கிற இலக்குகளை வைக்கலைனா அவ்வளவுதான். ‘நீ ஒரு கழிசடை, ஒன்னுக்கும் லாயக்கில்லாதவ,’ என்று சொல்லி மனச நோகடிச்சிடுவாங்க.”​—⁠நேயோமி, அமெரிக்கா.

ஆசிரியர்களின் தொல்லையினால் நீங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

சக மாணவர்களின் தொல்லை.

“ஹை ஸ்கூல்ல பசங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதால் அவர்கள் ரொம்ப அடாவடித்தனம் பண்ணுவாங்க. அவர்களோடு சேரலைன்னா நம்மை ஒதுக்கி வச்சிடுவாங்க.”​—⁠கெவின், அமெரிக்கா.

“டிரிங்க்ஸ் அடிக்கச் சொல்லி, செக்ஸ் வைத்துக்கொள்ள சொல்லி ஃபிரண்ட்ஸுங்க ஓயாமல் தொல்லை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அப்படிப்பட்ட சமயங்களில், ஆசைக்கு இணங்கிவிடாம உறுதியாக இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கும்.”​—⁠ஆரன், நியுஜிலாந்து.

“இப்போ எனக்கு 12 வயசு. எனக்கு இருக்கிற பெரிய தலைவலி, ‘பாய் ஃபிரண்ட் வச்சிக்கோ’ என்று என் ஃபிரண்ட்ஸ் வற்புறுத்துறாங்க. ‘எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒண்டிக்கட்டையா இருக்கப்போறே? என்று சொல்லி என் ஸ்கூல் பிள்ளைங்க எல்லாரும் கேலி செய்றாங்க.’ ”​—⁠அலெக்ஸாண்டிரியா, அமெரிக்கா.

“நான் யாரையாவது காதலித்தே ஆகணும்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஒற்றைக் காலில் நின்றாங்க. மாட்டேன்னு மறுத்துவிட்டபோது ‘லெஸ்பியன்’ என்று சொல்லி எனக்குப் பட்டம் குத்திட்டாங்க. அப்போ எனக்கு வெறும் பத்து வயசுதான்.”​—⁠கிரிஸ்டா, ஆஸ்திரேலியா.

சக மாணவர்களின் தொல்லையினால் நீங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

உங்கள் மத நம்பிக்கைகளைப் பற்றி சொன்னால் பள்ளித் தோழர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்.

“கிளாஸ் பசங்களிடம் உங்கள் மத நம்பிக்கைகளைச் சொல்வது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், அதற்குப் பிறகு உங்களைப் பற்றி அவங்க என்ன நினைப்பாங்க என்ற கவலை உங்களுக்கு வந்துவிடலாம். உங்களை ஒரு விசித்திர பேர்வழின்னு நினைத்துவிடுவார்களோ என்றுகூட பயப்படலாம்.”​—⁠காரெல், ஹவாய்.

“மிடில் ஸ்கூல்லயும் ஹை ஸ்கூல்லயும் போதைப்பொருள், செக்ஸ், டிரிங்க்ஸ் எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம். ஆனால், பைபிள் சொல்றபடி நடக்கும்போது நீங்கள் வித்தியாசமாக இருக்கிறதனால பசங்க எல்லாரும் உங்களை கேலி கிண்டல் செய்வாங்க. அது உங்கள் மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும்.”​—⁠ஸூஸன், அமெரிக்கா.

சக மாணவர்களின் தொல்லையினால் நீங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

தொல்லை தரும் வேறு விஷயங்கள். உங்களை ரொம்பவே பாதிக்கிற விஷயத்திற்கு பக்கத்தில் ‘டிக்’ செய்யுங்கள். இதைத் தவிர வேறு ஏதாவது தொல்லை இருந்தால் அதையும் எழுதுங்கள்.

 

  • ❑ நெருங்கிவரும் பரிட்சைகள்

  • ❑ வீட்டுப் பாடம்

  • ❑ பெற்றோரின் பெரிய பெரிய கனவுகள்

  • ❑ உங்களுடைய சக்திக்கு மிஞ்சிய இலக்குகள்

  • ❑ ரௌடிகள், காமுகர்களின் தொல்லைகள்

  • ❑ மற்றவை

தொல்லைகளைக் குறைக்க ஐந்து வழிகள்

எதார்த்தத்தில், எந்தத் தொல்லையும் இல்லாமல் பள்ளிப் படிப்பை முடித்துவிடலாமென எதிர்பார்க்க முடியாது. இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், தொல்லை மேல் தொல்லை வந்தாலும் திணறிவிடுவோம். ‘இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்’ என்கிறார் ஞானியான சாலொமோன் ராஜா. (பிரசங்கி 7:7) ஆனால், இந்தத் தொல்லைகளெல்லாம் உங்களைப் பைத்தியக்காரனாக்கும்படி விடவேண்டியதில்லை. இந்தத் தொல்லைகளைத் திறம்பட்ட விதத்தில் சமாளிக்க கற்றுக்கொள்வதே வெற்றியின் இரகசியம்.

தொல்லையைச் சமாளிப்பதை பளு தூக்குவதற்கு ஒப்பிடலாம்; சரியான விதத்தில் தூக்கினால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்

தொல்லையைச் சமாளிப்பதை பளு தூக்குவதற்கு ஒப்பிடலாம். பளு தூக்கும் ஒருவர் போட்டியில் வெற்றிபெற தன்னை முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டும். சரியான விதத்தில் பளுவை தூக்கினால் அது ரொம்ப கனமாக இருக்காது. அப்படிப் பயிற்சி செய்யும்போதுதான் அவருடைய உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது, அது கட்டுக்கோப்பாகவும் இருக்கும். இப்படிச் செய்யாவிட்டால், தசைநார்கள் கிழிந்துவிடலாம் அல்லது எலும்பு முறிந்துவிடலாம்.

அதேபோல உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் நீங்களும் தொல்லைகளைச் சமாளித்து, செய்யவேண்டிய வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க முடியும். எப்படி? பின்வருமாறு செய்யுங்கள்:

  1. பிரச்சினைக்கான முக்கிய காரணத்தைக் கண்டுபிடியுங்கள். “அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால், அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்” என்று ஒரு பழமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாலொழிய உங்களை வாட்டியெடுக்கும் தொல்லையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. முன்பு நீங்கள் எழுதிய பதில்களை பாருங்கள். எந்த விஷயம் உங்களை மிக அதிகமாகப் பாதிக்கிறது?

  2. ஆராய்ச்சி செய்யுங்கள். வீட்டுப் பாடங்கள் தலைக்கு மேல் இருப்பதாக நினைத்தால், பிப்ரவரி 8, 2004 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர்​—⁠ஹோம்வர்க் செய்ய நேரமில்லையே, என்ன செய்வது?” என்ற கட்டுரையிலுள்ள ஆலோசனைகளைப் படித்து பாருங்கள். கிளாஸில் படிக்கும் யாருடனாவது செக்ஸ் வைத்துக்கொள்ளும்படி உங்கள் ஃபிரண்ட்ஸ் வற்புறுத்தினால், மார்ச் 2007 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர்​—⁠‘ஹூக் அப்’பிற்கு யாராவது அழைத்தால் என்ன செய்வது?” என்ற கட்டுரையிலுள்ள ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.

  3. என்ன பதில் சொல்வதென யோசியுங்கள். உங்கள் மத நம்பிக்கைகள் நண்பர்களுக்குத் தெரியவந்த பிறகு அவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், அந்தத் ‘தர்மசங்கடமான’ நிலைமை வரும்வரை காத்திருக்காதீர்கள். என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்பதை முன்னமே யோசித்து வையுங்கள். (நீதிமொழிகள் 29:25) இதைக் குறித்து கெல்சி சொல்வதைக் கேளுங்கள்: “அவங்க கேள்வி கேட்பதற்கு முன்னாடியே என் மத நம்பிக்கைகளை அவங்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்பதை யோசிச்சு வச்சிருந்தேன். அது எனக்கு உதவியா இருந்துச்சு.” பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 18 வயது ஆரனும் இப்படித்தான் செய்தார். “அவங்க என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்பாங்க, அதற்கு நான் எப்படிப் பதில் சொல்லலாம்னு முன்னாடியே யோசிச்சு வச்சிருந்தேன். நான் மட்டும் அப்படிச் செய்யலேன்னா என் நம்பிக்கைகளைப் பற்றி அவங்களிடம் சொல்ல எனக்குத் தைரியமே வந்திருக்காது” என்று அவர் சொல்கிறார்.

  4. தள்ளிப்போடாதீர்கள். பிரச்சினைகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் அவை மறைந்துவிடாது. பொதுவாக, அவை இன்னும் மோசமாகி உங்கள் கவலைகளை அதிகரித்துவிடும். உதாரணமாக, நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தால், முடிந்தளவு சீக்கிரத்திலேயே நீங்கள் யார் என்பதை சொல்லிவிடுவதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு. இப்போது 20 வயதாயிருக்கும் மார்ஷே சொல்கிறார்: “பைபிள் நெறிமுறைகளை நான் மீற மாட்டேன் என்பதை ஸ்கூல் ஆரம்பத்திலேயே வகுப்பு மாணவர்களிடம் சொல்லிவிடுவேன். இதைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தபோது பிரச்சினை இன்னும் மோசமானது. இப்படி ஆரம்பத்திலேயே என் நம்பிக்கைகளைச் சொல்லிவிட்டு, கடைசிவரை அப்படியே நடந்துகொண்டபோது எனக்கு நல்ல பலன் கிடைத்தது.”

  5. உதவிக்காக கேளுங்கள். பளு தூக்குவதில் பல பதக்கங்களை வென்ற ஒருவருக்கு வரம்புகள் இருப்பது போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால், எல்லா பளுவையும் நீங்களே சுமக்க வேண்டியதில்லை. (கலாத்தியர் 6:2) பெற்றோரிடமோ முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களிடமோ இதைப் பற்றி நீங்கள் ஏன் பேசக்கூடாது? இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய பதில்களை அவர்களுக்குக் காட்டுங்கள். நீங்கள் எதிர்ப்படும் தொல்லைகளைச் சமாளிப்பதற்கு அவர்களிடம் உதவி கேளுங்கள். அயர்லாந்திலுள்ள லிஸ், ஃபிரண்ட்ஸிடம் தன் மத நம்பிக்கைகளைப் பற்றி பேச பயமாக இருப்பதாக தன் அப்பாவிடம் சொன்னாள். அவளுடைய அப்பா என்ன செய்தார்: “என்னை ஸ்கூல்ல விடுவதற்கு முன்பு தினமும் என்னோடு எங்க அப்பா ஜெபம் செய்வாங்க. அது எனக்கு ரொம்ப தைரியத்தை கொடுத்தது” என்று லிஸ் சொல்கிறாள்.

தொல்லையிலும் ஒருவகை நன்மை

நீங்கள் தொல்லையாக நினைப்பது உங்களுக்கு நன்மையையே செய்கிறது. இதை நம்புவதற்கு உங்களுக்கு ஒருவேளை கடினமாக இருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை. எப்படி? நீங்கள் கவனமாய் இருக்கிறீர்கள் என்பதற்கும் உங்கள் மனசாட்சி மழுங்கிப் போகவில்லை என்பதற்கும் இது அறிகுறியாக இருக்கலாம். தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென நினைக்கும் ஒருவரைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்: “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப் போலவும் வரும்.”​—நீதிமொழிகள் 6:9–11.

இதுவரை சிந்தித்தவற்றைப் பற்றி 16 வயது ஹைடி, இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறாள். “பள்ளிக்கூடம் என்றாலே உங்களுக்கு அலர்ஜியா இருக்கலாம். ஆனால், அங்கே நீங்க எதிர்ப்படுகிற பிரச்சினையைத்தான் வேலை செய்ற இடத்திலேயும் எதிர்ப்படுவீங்க” என்று அவள் சொல்கிறாள். பிரச்சினைகளை சமாளிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமல்ல. ஆனால், அவற்றைத் தகுந்த முறையில் சமாளித்தால், அது உங்களைச் சீரழிக்காது, மாறாக செதுக்கி சீராக்கும். (g 9/08)

 

a இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.

சிந்திப்பதற்கு

  •   பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்பதை என்னென்ன அறிகுறிகள் சுட்டிக்காட்டலாம்?

  •   எதையும் நூற்றுக்கு நூறு சரியாகச் செய்ய வேண்டுமென்று நினைப்பது உங்களுடைய கவலையை எப்படி அதிகரிக்கும்?

  •   பிரச்சினைகளில் நீங்கள் சிக்கித் தவித்தால் யாரிடம் போய் பேசலாம்?