வருங்கால சந்ததிக்கு இந்தப் பூமி வாழ்வளிக்குமா?
வருங்கால சந்ததிக்கு இந்தப் பூமி வாழ்வளிக்குமா?
கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
◼ சில வல்லுநர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உலகின் முக்கிய சூழியல் அமைப்புகளை நான்கு ஆண்டுகளாகத் தீவிரமாய் ஆராய்சி செய்து தங்கள் முதலாவது அறிக்கையை வெளியிட்டார்கள். ஆயிரமாண்டு சூழியல் கணிப்பு (Millennium Ecosystem Assessment [MA]) என்ற ஆராய்ச்சியில் பங்கேற்ற இவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் சில இதோ: கடந்த 50 ஆண்டுகளில், உணவு, நன்னீர், மரம், நூலிழை, எரிபொருள் ஆகியவற்றுக்கான தேவை கிடுகிடுவென அதிகரித்திருப்பதால் பூமியின் சூழியல் அமைப்புகள் படுபயங்கரமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், வருங்கால சந்ததிக்கு வாழ்வளிக்க முடியாத நிலைக்கு இந்தப் பூமி வந்துவிட்டது. காலங்காலமாக இயற்கையே பயிர்களில் மகரந்த சேர்க்கையை நடத்திவந்தது, காட்டுச் செடிகள் மூலம் காற்றைச் சுத்தப்படுத்தி ஆக்ஸிஜனை அளித்தது; சமுத்திரங்கள் மூலம் ஊட்டச்சத்தை மறுசுழற்சி செய்தது. ஆனால், இப்போது பூமி அதன் சக்தியை இழந்து வருவதால் இனிமேலும் இவையெல்லாம் நடைபெற முடியாதுபோல் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, எண்ணற்ற விலங்கினங்களும் அடியோடு அழியும் ஆபத்தில் இருக்கின்றன.
“மனிதன் இந்தக் கிரகத்தை எந்தளவுக்குக் கெடுத்து வந்திருக்கிறான் என்றால், திடீரென இயற்கையே சீர்குலைந்து போகும் நிலையில் இருக்கிறது. இதனால் வியாதிகள் பரவலாம், காடுகள் அழியலாம், கடல் வாழ் பிராணிகள் இறக்கலாம்” என்று கனடா நாட்டு செய்தித்தாளான குளோப் அண்டு மெயில் கூறியது. “எல்லா உயிரினங்களுக்கும் காற்றையும் தண்ணீரையும் ஊட்டச்சத்தையும் சுழற்சி முறையில் சுத்தம் செய்து அளித்து வந்த சதுப்பு நிலங்களும் காடுகளும் வெப்ப மண்டல புல்வெளிகளும் கழிமுகங்களும் கடலோர மீன்பிடி இடங்களும் இதுபோன்ற மற்ற இடங்களும் மீண்டும் சரிசெய்ய முடியாதளவு பாழாக்கப்பட்டு வருகின்றன” என்று அந்தப் பத்திரிகை மேலும் சொன்னது. சூழியல் அமைப்புகளைச் சீரழிக்காமல் பாதுகாப்பது மனிதன் கையில்தான் இருக்கிறது என்று MA குழு தலைவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அப்படியானால், “இயற்கையை கெடுப்பதை நிறுத்தி மனிதன் தன்னுடைய நடவடிக்கையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டும்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இந்தப் பூமி கிரகத்தை அழியாமல் பாதுகாக்க முடியுமா? நிச்சயம் முடியும்! கடவுளுடைய படைப்பைப் பராமரிக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதால், சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும். (சங்கீதம் 115:16) என்றாலும், கடவுள் தலையிட்டால்தான் இந்தச் சூழியல் அமைப்புகள் பழைய நிலைக்குத் திரும்பும். நம்முடைய “மகத்தான படைப்பாளர்” இந்தப் பூமியின் மீது தமது கவனத்தைத் திருப்பி அதைச் ‘செழிப்பாக்குவதாக’ உறுதி அளித்திருக்கிறார். (யோபு 35:10; சங்கீதம் 65:9–13, NW) இதில் கடல்களும் அதிலுள்ள சகலமும் அடங்கும். ஏனென்றால், படைப்பாளரான யெகோவா தேவனுக்குக் கடலும் கட்டுப்படும். (சங்கீதம் 95:5; 104:24–31) அவர் ‘பொய் உரையாத’ தேவன், அவர் அளித்திருக்கும் அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாய் நிறைவேறும்.—தீத்து 1:2, 3.
இந்தப் பூமி வருங்கால சந்ததிக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது. கடவுளுடைய ஞானத்தையும், வல்லமையையும், நற்குணத்தையும், அன்பையும், சகல படைப்புகளையும் பார்க்கும்போது கடவுள் பயமுள்ள அனைவரும் அவரைப் போற்றி புகழ தூண்டப்படுகிறார்கள்.—சங்கீதம் 150:1–6. (g 7/08)
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
Globe: NASA photo