Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

இயேசு எப்போது பிறந்தார்?

இயேசு எப்போது பிறந்தார்?

“இயேசு பிறந்த தேதி யாருக்குமே துல்லியமாகத் தெரியாது” என்று பூர்வ கிறிஸ்தவத்தைப் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) சொல்கிறது. இருந்தாலும், உலகெங்கிலும் கோடானுகோடி “கிறிஸ்தவர்கள்” டிசம்பர் 25-ஐ இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடுகிறார்கள். ஆனால், இயேசு இந்தத் தேதியில் பிறந்ததாக பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. உண்மையிலேயே இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தாரா?

இயேசுவின் பிறந்த நாளை பைபிள் குறிப்பிடாதபோதிலும், அவர் டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. அதோடு, ஏன் டிசம்பர் 25 இயேசுவின் பிறந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு மற்ற புத்தகங்களும் விளக்கம் அளிக்கின்றன.

ஏன் டிசம்பர் அல்ல?

பெத்லகேம் என்ற யூதேயா நகரத்தில் இயேசு பிறந்தார். ‘அங்கு மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்’ என்று லூக்கா சுவிசேஷம் அறிவிக்கிறது. (லூக்கா 2:4–8) இதெல்லாம் அங்கு சகஜம்தான். “வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் மந்தைகள் வெட்ட வெளியிலே தங்க வேண்டியிருந்தது” என இயேசுவின் நாளில் அன்றாட வாழ்க்கை (ஆங்கிலம்) என்ற நூலும் குறிப்பிடுகிறது. ஆனால், நடுநடுங்க வைக்கும் டிசம்பர் மாத குளிரில், இராத்திரி நேரத்தில், மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளுடன் வெட்ட வெளியில் தங்கியிருப்பார்களா? அதே புத்தகம் மேற்கொண்டு சொல்கிறது: “குளிர் காலத்தில் அவர்கள் வீட்டில்தான் தங்கியிருப்பார்கள்; எனவே, பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தேதி தவறு என்று இதிலிருந்தே சொல்லலாம்; ஏனென்றால், மேய்ப்பர்கள் வயல்வெளிகளில் தங்கியிருந்ததாக சுவிசேஷம் சொல்கிறது.”

லூக்கா சுவிசேஷத்தில் உள்ள மற்றொரு பதிவும் இதற்கு சான்றளிக்கிறது: “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகுஸ்து ராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.”​—லூக்கா 2:1–3.

வரி விதிப்பதற்காகவும் இராணுவ சேவைக்கு ஆட்கள் எடுப்பதற்காகவும் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கும்படி அகஸ்து ராயன் கட்டளையிட்டார் எனத் தெரிகிறது. மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு தன்னுடைய கணவன் யோசேப்புடன் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த பெத்லகேமுக்கு நாசரேத்திலிருந்து பயணம் செய்தாள். இப்போது இதை சிந்தித்துப் பாருங்கள். அரசாங்க விவகாரங்களில் அதிகமாய்த் தலையிடாத அகஸ்து ராயன், தன் ஆட்சிக்கு விரோதமாக ஏற்கெனவே கலகம் செய்துகொண்டிருந்த மக்களை குளிர்காலத்தில் இப்படி நீண்ட பயணம் செய்ய கட்டளையிட்டிருப்பாரா?

பெரும்பாலான சரித்திர ஆசிரியர்களும் பைபிள் அறிஞர்களும் டிசம்பர் 25-ஐ இயேசு பிறந்த தேதியாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது. எந்தக் கலைக்களஞ்சியத்தை நீங்கள் புரட்டிப் பார்த்தாலும் இதைத் தெரிந்துகொள்ளலாம். “டிசம்பர் 25-⁠ல் இயேசு பிறக்கவில்லை என்பது பொதுவாக எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை” என ஆர் சன்டே விசிட்டர்ஸ் கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது.

டிசம்பரில் இயேசு பிறக்கவில்லை என்பதற்கு பைபிள் அத்தாட்சி அளிக்கிறது

ஏன் டிசம்பர் 25?

இயேசு இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே டிசம்பர் 25 அவருடைய பிறந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏன்? இப்போது கிறிஸ்மஸ் சீசன் என்றழைக்கப்படும் காலத்தில்தான் முன்பெல்லாம் புறமதப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டதாக சரித்திர ஆசிரியர்கள் பலர் நம்புகிறார்கள்.

உதாரணமாக, என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பொதுவாகக் கொடுக்கப்படும் விளக்கம் என்னவென்றால், டிசம்பர் 25-ஆம் தேதியில் ‘வெல்லமுடியாத சூரியனின் பிறந்த நாள்’ (டைஸ் சாலிஸ் இன்விக்டி நேட்டி) கொண்டாடப்பட்டது; இதுவே கிறிஸ்தவ மதப் பண்டிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; இந்த நாளில்தான், சூரியனின் மறுபிறப்புக்கு அடையாளமாக குளிர்கால சங்கராந்தி ரோம சாம்ராஜ்யத்தில் பிரபலமாகக் கொண்டாடப்பட்டது; குளிர்காலம் போய் வசந்த காலமும் கோடை காலமும் மீண்டும் பிறந்துவிட்டதை அறிவிப்பதற்காகக் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது.”

என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு குறிப்பிடுகிறது: “டிசம்பர் 25-ஆம் தேதியை கிறிஸ்மஸ் தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணமெனத் தெளிவாகத் தெரியவில்லை; குளிர்கால சங்கராந்தி பண்டிகை சமயத்தில் கொண்டாடப்பட்ட புறமத பண்டிகைகளும் கிறிஸ்மஸும் ஒரே தினத்தில் வர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதென பொதுவாக நம்பப்படுகிறது; ‘சூரியனின் மறுபிறப்பு’ கொண்டாடப்படும் சங்கராந்தி நாட்களில் பகல்வேளை நீண்டிருக்கும். . . . இதே சமயத்தில்தான் சாட்டர்நேலியா என்ற ரோம பண்டிகையும் (இது, வேளாண் தெய்வமாகிய சாட்டர்னுக்கும், புதுப் பலத்துடன் மீண்டும் எழுந்துவரும் சூரியனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகை) கொண்டாடப்பட்டது.” இந்தப் பண்டிகை, ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கும் கும்மாளத்திற்கும், கட்டுக்கடங்காத களியாட்டத்திற்கும் பேர்போனது. இதுதானே இன்று கிறிஸ்மஸ் பண்டிகைகளிலும் பொதுவாக நடக்கிறது?

கிறிஸ்துவை கனப்படுத்துவது எப்படி

இயேசு பிறந்த தேதி எதுவாக இருந்தாலும்சரி, கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடியே தீரவேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். கண்ணியமான முறையில் அதைக் கொண்டாடி, கிறிஸ்துவை கனப்படுத்துவது சரியே என்பது அவர்களுடைய வாதம்.

இயேசுவின் பிறப்பு உண்மையிலேயே முக்கியமான சம்பவம் என்பதை பைபிள் விவரப்பதிவு காட்டுகிறது. இயேசு பிறந்த சமயத்தில், ஏராளமான தூதர்கள் திடீரென தோன்றி கடவுளைப் புகழ்ந்து பாடியதாக பைபிள் கூறுகிறது: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” (லூக்கா 2:​13, 14) இயேசுவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென பைபிளில் எந்த இடத்திலும் ஜாடைமாடையாகக்கூட சொல்லப்படவில்லை என்பது அக்கறைக்குரிய விஷயம். ஆனால், அவருடைய மரணத்தை நினைவுகூரும்படி தெளிவான கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது, இதை ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் சாட்சிகள் செய்துவருகிறார்கள். (லூக்கா 22:19) இயேசுவை கனப்படுத்த இது ஒரு வழி.

பூமியில் தம்முடைய கடைசி இரவன்று இயேசு இவ்வாறு கூறினார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” (யோவான் 15:14) “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்றும் சொன்னார். (யோவான் 14:15) இயேசுவின் போதனைகளைக் கற்று அதன்படி நடப்பதே அவரைக் கனப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி. (g 12/08)