Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதையாவது பயன்படுத்தி ஜெபிப்பது சரியா?

எதையாவது பயன்படுத்தி ஜெபிப்பது சரியா?

பைபிளின் கருத்து

எதையாவது பயன்படுத்தி ஜெபிப்பது சரியா?

புத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மதத்தவர்கள் ஆகியோர் எதையாவது ஒன்றைப் பயன்படுத்தியே ஜெபிக்கிறார்கள். அப்படிச் செய்யும்போது கடவுளிடம் நெருங்கிச் செல்லவும் அவருடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறவும் முடியுமென கிட்டத்தட்ட எல்லா நாட்டவரும் நம்புகிறார்கள். இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

ஜெபிக்கும்போது ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. உதாரணமாக, பூர்வ நினிவே பட்டணம் இருந்த இடத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, “புனித மரத்தின் முன்பு இறக்கைகளைக் கொண்ட இரண்டு பெண்கள் . . . இடது [கையில்] ஜெபமாலையை வைத்துக்கொண்டு ஜெபம் செய்வதுபோன்ற” ஒரு சிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்.​—⁠த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா.

ஜெபமாலைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? “ஒரு ஜெபத்தை பலமுறை சொல்ல வேண்டிய சமயங்களில் சிரமப்பட்டு விரல்களாலேயே எண்ணிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக எளிய முறையில் எண்ணுவதற்கு ஏதாவதொரு கருவி பயன்படுத்தப்பட்டதாக” அதே என்ஸைக்ளோப்பீடியா பதிலளிக்கிறது.

ஜெபங்களை எண்ணுவதற்கு அதைவிட சுலபமான வழி, பிரார்த்தனை சக்கரங்களைப் பயன்படுத்துவதாகும். அந்தச் சக்கரத்தை கையால், காற்றால், தண்ணீரால் அல்லது மின்சாரத்தால் ஒரு முறை சுழற்றினால் ஒரு ஜெபம் செய்ததற்குச் சமம். மந்திரங்கள் அல்லது வாசகங்கள் சொல்லும்போது பொதுவாக இந்தப் பிரார்த்தனை சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைக் குறித்து கடவுளுடைய கண்ணோட்டத்தைச் சிந்தித்துப் பார்க்கலாம்.

“சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்”

கிறிஸ்தவர் அல்லாதவர்களாலும் கடவுளுடைய தீர்க்கதரிசி என ஏற்றுக்கொள்ளப்படுகிற இயேசு கிறிஸ்து, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி ஜெபிப்பதைக் குறித்து படைப்பாளருடைய கருத்தைச் சொன்னார்: “ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போல் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்; அநேக வார்த்தைகளைச் சொல்வதால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.” *மத்தேயு 6:​7, NW.

‘சொன்னதை திரும்பத்திரும்பச் சொல்வதையே’ கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்றால், அதற்கு உதவியாயிருக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வாரா? ஜெபமாலை, பிரார்த்தனை சக்கரங்கள் போன்ற எதையும் கடவுளுடைய உண்மை ஊழியர்கள் பயன்படுத்தியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஜெபத்தின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பதற்கான காரணங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடவுளைப் பிரியப்படுத்தும் ஜெபங்கள்

பரமண்டல ஜெபத்தைக் கற்பித்தபோது, கடவுளை “எங்கள் பிதா” என்று இயேசு அழைத்தார். ஆம், நம்முடைய படைப்பாளர் உணர்ச்சியற்றவரோ மாய சக்தியோ அல்ல. அதனால், மாய மந்திரங்கள் சொல்லியோ, சடங்குகள் செய்தோ கடவுளைப் பிரியப்படுத்த வேண்டியதில்லை. மாறாக, அவர் ஓர் அன்பான தகப்பன்; அதை உணர்ந்து அவர்மீது நாம் அன்புகூர வேண்டுமென அவர் விரும்புகிறார். “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்று இயேசு கூறினார். (யோவான் 14:31) “[யெகோவாவே,] நீர் எங்களுடைய பிதா” என்று பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசியும் சொன்னார்.​—ஏசாயா 64:⁠8.

நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் எப்படி நெருங்கிச் செல்ல முடியும்? (யாக்கோபு 4:8) எந்தவொரு உறவுக்கும் இரு சாராருமே பேச்சுத்தொடர்பு கொள்வது அவசியம். கடவுளிடம் நெருங்கிச் செல்லும் விஷயத்திற்கும் இது பொருந்தும். கடவுள் தமது வார்த்தையாகிய பைபிளின் மூலம் நம்மிடம் “பேசுகிறார்;” அதில் அவருடைய செயல்களையும் ஆளுமையையும் நமக்கான நோக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16) நாமோ, ஜெபம் செய்வதன் மூலம் கடவுளிடம் பேசுகிறோம்; அதனால், உள்ளப்பூர்வமாகவும் அன்னியோன்னியமாகவும் ஜெபிக்க வேண்டும். அது, எந்த உணர்ச்சியுமின்றி ஆசாரமாகச் செய்யப்படும் ஒன்றைப் போல் இருக்கக்கூடாது.

இதைச் சிந்தியுங்கள்: அன்பும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரிடம் எப்படிப் பேசுவார்கள்? சொன்ன வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்வார்களா? எத்தனை முறை சொன்னார்கள் என்பதைக் கணக்கெடுக்க ஏதாவது கருவியைப் பயன்படுத்துவார்களா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டார்கள்? பதிலாக, மனதிலிருந்து பேசுவார்கள்; அர்த்தமுள்ள வகையில், மரியாதைக்குரிய விதத்தில் பேசுவார்கள்.

கடவுளிடம் நாம் ஜெபிக்கும்போதும் அப்படியே செய்ய வேண்டும். பார்க்கப்போனால், நம் மனதிலுள்ள எந்த விஷயத்தையும் கடவுளிடம் சொல்லலாம். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, . . . தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என்று பிலிப்பியர் 4:​6, 7 சொல்கிறது. நமக்கு ஏதாவது கவலை இருந்தால் அதைக் குறித்து அடிக்கடி ஜெபிப்பது இயல்புதான். ஆனால், இதற்கும் சொன்ன வார்த்தையையே திரும்பத்திரும்ப சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.​—மத்தேயு 7:7–11.

கடவுளுக்குப் பிரியமான பல ஜெபங்களும் சங்கீதங்களும் இயேசுவே செய்த ஜெபங்களும் பைபிளில் பதிவாகியுள்ளன. * (17, 86-ஆம் சங்கீதத்தின் தலைப்புகள்; லூக்கா 10:​21, 22; 22:40–44) இயேசு செய்த ஒரு ஜெபம் யோவான் 17-ஆம் அதிகாரத்தில் காணப்படுகிறது. சற்று நேரமெடுத்து அதை வாசியுங்கள். இயேசு தம் மனதில் உள்ளதைக் கொட்டி ஜெபம் செய்ததை அதில் கவனிப்பீர்கள். அதோடு, கொஞ்சம்கூட சுயநலம் இல்லாமல் ஜெபித்ததைக் கவனிப்பீர்கள். தம் சீடர்களை அவர் எந்தளவு நேசித்தார் என்பதை அந்த ஜெபம் வெளிப்படுத்துகிறது. ‘பரிசுத்த பிதாவே’ ‘தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருளும்’ என்று ஜெபித்தார்.​—யோவான் 17:​11, 15; பொது மொழிபெயர்ப்பு.

இயேசு செய்த ஜெபத்தில் உணர்ச்சியற்ற தன்மையோ இயந்தரத்தனமோ இருந்ததா? துளிக்கூட இருக்கவில்லை! ஜெபம் செய்யும் விஷயத்தில் இயேசு நமக்கு சிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார். உண்மைக் கடவுளிடம் நெருங்கி வர விரும்பும் அனைவரும் அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு, அன்பினால் தூண்டப்பட்டு, கடவுளுக்குப் பிரியமில்லாத மதச் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது “நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.​—2 கொரிந்தியர் 6:​17, 18. (g 11/08)

[அடிக்குறிப்புகள்]

^ பரமண்டல ஜெபத்தை இயேசு சொல்லிக்கொடுத்தபோது, ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய ஜெபமாவது’ என்று குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் மேலே சொன்னதற்கு அது முரண்பாடாக இருந்திருக்கும். மாறாக, ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது’ என்றே சொன்னார். (மத்தேயு 6:9–13) அதில் அவர் சொல்ல வந்த குறிப்பு என்னவென்றால், பொருளாதார காரியங்களைவிட ஆன்மீக காரியங்களுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே.

^ பல்வேறு சந்தர்ப்பங்களில் சங்கீதங்கள் பாடப்பட்டன என்றாலும், மந்திரங்களைப் போல் அவை திரும்பத்திரும்பச் சொல்லப்படவும் இல்லை; ஜெபமாலைகள், பிரார்த்தனை சக்கரங்கள் போன்ற ஏதோவொன்றைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சடங்குகளில் அவை பாடப்படவும் இல்லை.

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

◼ ஜெபிக்கும்போது சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதைக் கண்டித்து இயேசு கொடுத்த அறிவுரை, ஜெபமாலைகளையும் பிரார்த்தனை சக்கரங்களையும் பயன்படுத்துவதற்கும் பொருந்துகிறதா?​—⁠மத்தேயு 6:⁠7.

◼ கடவுளைப் பற்றிய நம் உள்ளான உணர்ச்சிகளை நம் ஜெபங்கள் வெளிப்படுத்துகின்றனவா?​—⁠ஏசாயா 64:⁠8.

◼ மதங்கள் கற்பிக்கும் பொய் போதனைகளை நாம் புறக்கணித்தால், கடவுள் நம்மைக் குறித்து எப்படி உணருவார்?​—⁠2 கொரிந்தியர் 6:​17, 18.