Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?

என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?

இளைஞர் கேட்கின்றனர்

என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?

“அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுவும் அவன் என் ஆருயிர் நண்பன் வேறு.”​​—⁠ ஜேம்ஸ். *

“முதல்ல எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. என் ஃபிரெண்ட்ஸ் செய்ற தப்ப நான் காட்டிக்கொடுத்ததால அவங்க எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க.”​—⁠ ஆன்.

“உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:​24, பொது மொழிபெயர்ப்பு) இப்படிப்பட்ட நண்பர் உங்களுக்கு இருக்கிறாரா? அப்படியென்றால், நீங்கள் உண்மையிலேயே பெரும் பாக்கியசாலிதான்.

ஆனால், கிறிஸ்தவ நண்பர் ஏதாவது தப்பு செய்தால் என்ன செய்வது? அவர் ஒருவேளை ஒழுக்கக்கேட்டிலோ, புகைப்பிடிக்கும் பழக்கத்திலோ, குடிப்பழக்கத்திலோ, போதைப்பொருள் எடுப்பதிலோ ஈடுபட்டிருந்தால் அல்லது வேறு ஏதாவது பயங்கரமான தப்பு செய்திருந்தால் என்ன செய்வது? (1 கொரிந்தியர் 6:​9, 10; 1 தீமோத்தேயு 1:​9, 10) அதைக் குறித்து தப்பு செய்த உங்கள் நண்பனிடம் பேச வேண்டுமா? உங்கள் பெற்றோரிடம் பேச வேண்டுமா? அவனுடைய பெற்றோரிடம் பேச வேண்டுமா? அல்லது சபை மூப்பரிடம் பேச வேண்டுமா? * அப்படிப் பேசினால், உங்கள் நட்பு முறிந்துபோகுமா? அல்லது பேசாமல் இருந்துவிடுவதே நல்லதா?

சொல்வதா வேண்டாமா?

தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. சொல்லப்போனால், ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாக’ இருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23) அதனால்தான் சிலர், பெரிய பாவக் குழியில் விழுந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, ‘தவறான’ வழியில் அடியெடுத்து வைக்கிறார்கள், அவர்களைத் திருத்தாமல் விட்டுவிட்டால் இன்னும் தவறுமேல் தவறு செய்வார்கள். (கலாத்தியர் 6:​1, ஈஸி டு ரீட் வர்ஷன்) பின்வரும் உண்மைச் சம்பவத்தைக் கவனியுங்கள்.

தன்னுடைய கிறிஸ்தவ ஃபிரெண்ட் ஆபாசமான படங்களும் பாடல்களும் அடங்கிய வெப் பக்கத்தை வைத்திருந்ததை சூசன் பார்த்துவிட்டாள். 

சிந்தியுங்கள்: சூசன் இருந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் ஃபிரெண்டை காப்பாற்ற ஏதாவது செய்வீர்களா? அல்லது ‘அவளுடைய வெப் பக்கத்தில் அவள் எதையோ வச்சிக்கிட்டு போறாள்னு’ சொல்லி சும்மா இருந்துவிடுவீர்களா? இந்த நிலைமையில் என்ன செய்வதென்று சூசன் உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்தால் என்ன சொல்வீர்கள்?

.....

சூசன் என்ன செய்ய தீர்மானித்தாள்: அந்த விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்தபின் அந்த ஃபிரெண்டுடைய பெற்றோரிடம் பேச முடிவு செய்தாள். “எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு” என்று அவள் சொல்கிறாள். “ஏனா, அவளுடைய அம்மா அப்பாவை எனக்கு நல்லா தெரியும். அவங்ககிட்ட சொல்வதற்குள் எனக்கு அழுகையே வந்திருச்சு.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சூசன் அப்படிச் செய்தது சரியா? அல்லது சொல்லாமல் விட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்குமா?

அவள் செய்தது நியாயமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளைச் சிந்தித்துப் பாருங்கள்:

உண்மையான நண்பன் என்ன செய்வான்? “நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்” என்று நீதிமொழிகள் 17:17 (பழமொழி ஆகமம், கத்தோலிக்க பைபிள்) சொல்கிறது. பைபிள் நியதிகளை ஒருவர் மீறி நடக்கிறார் என்றால் தெரிந்தோ தெரியாமலோ அவர் ‘துன்பத்தில்’ இருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, ‘மிஞ்சின நீதிமானாயிருப்பது’ சரியில்லை என்றாலும், ஒருவர் பைபிளுக்கு விரோதமாக நடப்பதைப் பார்க்கும்போது உண்மையான நண்பர் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட மாட்டார். (பிரசங்கி 7:16) தவறைப் பார்த்தும் பார்க்காததைப் போல் விட்டுவிடுவது நிச்சயம் சரியல்ல.​—லேவியராகமம் 5:⁠1.

நீங்கள் பெற்றோராக இருந்தால்? ‘என் பையனோ பொண்ணோ வெப் பக்கத்தில் இப்படி ஆபாசமான விஷயங்களை வைத்திருப்பதை யாராவது அறிந்திருந்தால் அதை என்னிடம் சொல்லணும்னுதானே எதிர்பார்ப்பேன்? விஷயம் தெரிந்தும் என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

கடவுளுடைய தராதரங்கள்? எது சரி என்று தெரிந்தபின் மௌனம் காக்க கூடாது. பதிலாக, பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய நீதியைக் காக்க வேண்டும். ஆம், சரியானதைச் செய்வதற்கு முன்வரும்போது உங்கள் படைப்பாளரின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறீர்கள். (நீதிமொழிகள் 27:11) அதேசமயம், உங்கள் நண்பனின் நன்மைக்காகவே இப்படிச் செய்தீர்கள் என்பதால் நீங்களும் சந்தோஷப்படுவீர்கள்.​—எசேக்கியேல் 33:⁠8.

“பேச ஒரு காலமுண்டு”

“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:7) குறிப்பிட்ட சூழ்நிலைமையில் என்ன செய்தால் சரியாய் இருக்குமென்பதை சிறு பிள்ளைகளால் நிதானிக்க முடியாது. நண்பர்கள் யாராவது தவறு செய்கையில், ‘நான் ஏன் என் ஃபிரெண்டை வம்புல மாட்டிவிடணும்’ அல்லது ‘கடைசியில அவனுக்கும் எனக்கும் எதுக்கு வம்பு’ என்று அவர்கள் நினைக்கலாம். இவையே அவர்கள் மனதில் நிறைந்திருந்தால், ‘மவுனமாயிருப்பதுதான்’ சரியென்று தோன்றும்.

ஆனால், நீங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது உங்கள் கண்ணோட்டமே வித்தியாசமாக இருக்கும். அதில் ஒரு முதிர்ச்சி தெரியும். உங்கள் நண்பர் ஆபத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவை என்பதை அப்போது உணர்ந்துகொள்வீர்கள். ஒருவேளை அந்த உதவியை அளிப்பதற்கு உங்களால்கூட வழி செய்ய முடியும். உங்கள் நண்பர் பைபிளுக்கு விரோதமாக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறார் என்றால், நீங்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதானா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், சில சமயங்களில் அது ஒரு வதந்தியாகக்கூட இருக்கலாம். (நீதிமொழிகள் 14:15) பதின் வயது கேட்டியின் அனுபவம்: “என் ஃபிரெண்ட் ஒருத்தி, மத்தவங்ககிட்ட என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி வந்தாள். எனக்கு நெருக்கமானவங்க எல்லாரும் அவள் சொன்னதை உண்மைன்னே நம்பினாங்க. எல்லாருக்குமே என் மேல நம்பிக்கை இல்லாம போயிடுமோன்னு பயந்தேன்!” ஆனால், ‘காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் [இயேசு] தீர்ப்புச் செய்யமாட்டார்’ என்று பைபிள் முன்னறிவித்தது. இதே வசனத்தை கன்டம்ப்பிரரி வர்ஷன் இவ்வாறு மொழிபெயர்க்கிறது: ‘வதந்திகளைக் கேட்க மாட்டார்.’ (ஏசாயா 11:3) இதிலிருந்து என்ன பாடம்? உங்கள் காதில் விழுவதெல்லாம் உண்மையென்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். உண்மை என்னவென்று தீர ஆராயுங்கள். பின்வரும் நிஜ சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஜேம்ஸ், தன்னுடைய நெருங்கிய நண்பன் ஒரு பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கேள்விப்பட்டான்.

சிந்தியுங்கள்: ஜேம்ஸ் இருந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நீங்கள் கேள்விப்பட்டது உண்மையா என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

.....

ஜேம்ஸ் என்ன செய்ய தீர்மானித்தான். முதலில், தன் காதில் எதுவுமே விழாதது போலவும், அவனுக்கு எதுவுமே தெரியாதது போலவும் இருந்துகொண்டான். ஆனால், பிற்பாடு “என் மனசாட்சி என்னை உறுத்திக்கிட்டே இருந்துச்சு, என் ஃபிரெண்டுகிட்ட இதைப் பற்றி பேசணும்னு நினைச்சேன்.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிளுக்கு விரோதமாக உங்கள் ஃபிரெண்ட் நடந்திருக்கிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டால், முதலில் அவனிடமே பேசுவதில் என்ன நன்மைகள் இருக்கின்றன?

இதைப் பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் பேச உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் வேறு என்ன செய்யலாம்?

.....

பார்ட்டியில் தான் போதைப்பொருள் உட்கொண்டதை ஜேம்ஸுடைய ஃபிரெண்ட் ஒத்துக்கொண்டான். அதேசமயம் இதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று ஜேம்ஸிடம் கேட்டுக்கொண்டான். ஆனால், சரியானதைச் செய்ய வேண்டுமென ஜேம்ஸ் விரும்பினான். அதேசமயம் தன் நண்பனும் சரியானதையே செய்ய வேண்டுமென நினைத்தான். அதனால், ஒரு வாரத்திற்குள் சபை மூப்பர்களிடம் போய் உண்மையைச் சொல்லிவிடும்படி தன் நண்பனிடம் சொன்னான்; இல்லாவிட்டால், தானே சொல்லிவிடுவதாக ஜேம்ஸ் கூறினான்.

ஜேம்ஸ் செய்தது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் சரி? ஏன் சரியில்லை?

.....

ஜேம்ஸின் நண்பன் மூப்பர்களிடம் போய் சொல்லவில்லை. அதனால், ஜேம்ஸே மூப்பர்களிடம் சென்று விஷயத்தை தெரிவித்தான். ஆனால், பிற்பாடு அவனுடைய நண்பன் தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான். அவன் மனந்திரும்பி, யெகோவாவுடன் நல்ல உறவுக்குள் வருவதன் அவசியத்தை மூப்பர்கள் அவனுக்கு உணர்த்தினார்கள்.

இப்படிச் செய்தால் நீங்கள் கோள்மூட்டுபவரா?

இருந்தாலும், ‘என் ஃபிரெண்ட் செஞ்ச தப்பை மத்தவங்ககிட்ட சொன்னா, என்னை கோள்மூட்டின்னு சொல்லமாட்டாங்களா? அதனால, எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்டா ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். இப்படி யோசித்தால் என்ன செய்யலாம்?

முதலாவதாக, பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்து நீங்கள் செய்யும் காரியம் எப்போதுமே அன்பான செயலாக இருக்காது. அதேசமயத்தில், அன்பான செயலை செய்வது எப்போதும் சுலபமானதல்ல. நண்பர் செய்த தவறை வெளியே சொல்வதற்கு தைரியம் தேவை. இதைப் பற்றி நீங்கள் ஏன் கடவுளிடம் ஜெபிக்கக் கூடாது? ஞானத்திற்காகவும் தைரியத்திற்காகவும் கடவுளிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குக் கண்டிப்பாக உதவுவார்.​—பிலிப்பியர் 4:⁠6.

இரண்டாவதாக, நடந்த விஷயத்தை மற்றவர்களிடம் சொல்வது, உங்கள் நண்பனுக்கு எந்த விதத்தில் நன்மையாக இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, நீங்களும் உங்கள் நண்பனும் செங்குத்தான ஒரு மலையில் ஏறுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்போது, உங்கள் நண்பர் கால் தவறி உருண்டு விழுந்துவிடுகிறார். மேலே வர வேண்டுமென்றால் உங்கள் நண்பருக்குக் கண்டிப்பாக உதவி தேவை. உதவி கேட்க சங்கோஜப்பட்டுக்கொண்டு அவரே மேலே ஏறி வந்துவிடுவதாகச் சொன்னால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது போராடி வரட்டும் என்று விட்டுவிடுவீர்களா?

கிறிஸ்தவ வாழ்க்கை பாதையில் ஒரு நண்பன் இடறிவிழுவதற்கும் இந்த உதாரணத்தை ஒப்பிடலாம். யாருடைய உதவியும் இல்லாமல் தானே ஆன்மீக ரீதியில் “எழுந்து” வரமுடியும் என அவன் நினைக்கலாம். ஆனால், அப்படி நினைப்பது சுத்த மடத்தனம். உண்மைதான், செய்த தவறை நினைத்து அவர் ஒருவேளை சங்கோஜப்படலாம். ஆனால், உதவிக்காக யாரையாவது நீங்கள் ‘அழைப்பது’ உங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்றலாம்.​—யாக்கோபு 5:⁠14.

ஆகவே, உங்களுடைய நண்பர் ஏதாவது தப்பு செய்துவிட்டால் அதைப் பற்றி பேசுவதற்குப் பயப்படாதீர்கள்? தேவையான உதவியைப் பெற வழி செய்வதன் மூலம், யெகோவா தேவனுக்கும் உங்களுடைய நண்பருக்கும் விசுவாசமாய் இருக்கிறீர்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் செய்த உதவிக்காக உங்கள் நண்பர் நன்றி சொல்வார். (g 12/08)

இளைஞர் கேட்கின்றனர் தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனை பெயர்களே.

^ யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், பயங்கரமான பாவத்தைச் செய்தவர்களுக்கு மூப்பர்கள் ஆன்மீக உதவி அளிக்கிறார்கள்.​—யாக்கோபு 5:14–16.

சிந்திப்பதற்கு

◼ நண்பர் செய்த தவறை மற்றவர்களிடம் சொன்னாலும் அவருக்கு விசுவாசமாகத்தான் இருக்கிறீர்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

◼ சோதனை மத்தியிலும் நண்பருக்கு உண்மையாயிருந்த பைபிள் கதாபாத்திரம் உங்கள் நினைவுக்கு வருகிறதா?

[பக்கம் 30-ன் படம்]

உங்கள் நண்பன் கிறிஸ்தவ வாழ்க்கை பாதையிலிருந்து இடறிவிழுந்தால் அவனுக்குத் தேவையான உதவி கிடைக்க வழி செய்யுங்கள்