Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் எப்படிப்பட்ட இயல்புடையவர்?

கடவுள் எப்படிப்பட்ட இயல்புடையவர்?

பைபிளின் கருத்து

கடவுள் எப்படிப்பட்ட இயல்புடையவர்?

“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என பைபிள் விளக்குகிறது. கடவுளுடைய இயல்பை, ஆம், அவர் ஆவியாயிருக்கிறார் என்பதை இந்த வசனம் தெளிவாகக் காட்டுகிறது. (யோவான் 4:19–24) இருந்தாலும், பைபிள் அவரை ஒரு தனி நபராக சித்தரிக்கிறது. அவருடைய பெயர் யெகோவா என்றும் சொல்கிறது.​—சங்கீதம் 83:⁠17.

கடவுளுடைய இயல்பை புரிந்துகொள்ள முடிவதில்லையென பைபிள் வாசகர்கள் சிலர் சொல்கிறார்கள். கடவுள் ஆவியாயிருக்கிறார் என்றால் அவருக்கு கண், காது, மூக்கு, இருதயம், புயங்கள், கைகள், விரல்கள், பாதங்கள் இருப்பதுபோல் பைபிள் ஏன் வர்ணிக்கிறது? * மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்வதால் கடவுளுக்கு மனித சாயல் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், பைபிளைக் கூர்ந்து ஆராயும்போது இந்தக் குழப்பமெல்லாம் தீர்ந்துவிடும்.​—ஆதியாகமம் 1:⁠26.

ஏன் மனித இயல்புகள்?

கடவுளுடைய இயல்பை மனிதர்கள் புரிந்துகொள்வதற்காக, சர்வ வல்லவருக்கு மனித இயல்புகள் இருப்பதுபோல் பைபிள் எழுத்தாளர்கள் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள்; கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்தான் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்கள். இதுபோன்று சித்தரிக்கப்படும் பதங்களை ஆங்கிலத்தில் ஆன்த்ரோபோமார்ஃபிக் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் அர்த்தம், கடவுளுக்கு “மனித இயல்பு அல்லது மனித குணங்கள் இருப்பதுபோல் சித்தரிப்பதாகும் அல்லது கற்பனை செய்துகொள்வதாகும்.” மனிதனின் மொழிகளால் மெய்க் கடவுளான யெகோவாவை முழுமையாக விவரிக்க முடியாது என்பதையே இந்தப் பதங்கள் காட்டுகின்றன. கடவுளுடைய இயல்பு மற்றும் குணத்தின் முக்கிய அம்சங்களைச் சிறப்பித்துக்காட்டி, மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குவதே இந்தப் பதங்களின் நோக்கமாகும். இந்தப் பதங்களை நாம் அப்படியே சொல்லுக்குச் சொல் அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், கடவுளை “கன்மலை,” ‘சூரியன்,’ ‘கேடகம்’ என்றெல்லாம் பைபிள் சொல்லும்போது நாம் அவற்றை அப்படியே சொல்லுக்குச் சொல் எடுத்துக்கொள்வதில்லையே!​—உபாகமம் 32:4; சங்கீதம் 84:⁠11.

அதுபோலவே, யெகோவாவின் குணங்களை மனிதனும் ஓரளவு பெற்றிருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவே, மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. அதற்காக, மனிதன் ஆவியாயிருக்கிறான் என்றோ கடவுளுக்கு மனித உருவம் இருக்கிறது என்றோ அர்த்தமில்லை.

கடவுள் ஆணா பெண்ணா?

கடவுளுக்கு மனித குணங்கள் இருப்பதுபோல் வர்ணித்திருப்பதை எப்படிச் சொல்லுக்குச் சொல் எடுத்துக்கொள்ளக் கூடாதோ அதேபோலத்தான் அவரை ஆண்பாலில் விவரித்திருப்பதையும் சொல்லுக்குச் சொல் எடுத்துக்கொள்ளக் கூடாது. பால் வேறுபாடு என்பது பூமியிலுள்ள ஜீவராசிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றாகும். எனவே, மனிதனின் மொழிகளில் சர்வவல்ல கடவுளான யெகோவாவை முழுமையாக விவரிக்க முடியாது.

கடவுளை “பிதா” என்று பைபிள் அழைப்பதால், நம்முடைய படைப்பாளர் அன்பும் அக்கறையும் நிறைந்த ஓர் அப்பாவைப் போல் இருக்கிறாரென நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (மத்தேயு 6:9) அதற்காக, கடவுள் அல்லது பரலோகத்திலுள்ள ஆவி சிருஷ்டிகள் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களை அப்படியெல்லாம் பால் வேறுபாட்டுடன் பிரிக்க முடியாது. பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கடவுளுடைய குமாரர்களாக மகிமைப்படுத்தப்பட்ட பிறகும் ஆணாகவே அல்லது பெண்ணாகவே இருக்கப்போவதில்லை என பைபிள் சொல்வது அக்கறைக்குரியது. கடவுளுடைய குமாரர்களாக மகிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுக்குள் “ஆணென்றும் பெண்ணென்றுமில்லை” என அப்போஸ்தலன் பவுல் கூறினார். அடையாள அர்த்தத்தில், அவர்கள் ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளுக்கும் அவருடைய ஒரே மகனாகிய இயேசுவுக்கும் மற்ற ஆவி சிருஷ்டிகளுக்கும் மனித இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.​—கலாத்தியர் 3:​26, 28; வெளிப்படுத்துதல் 21:9; 1 யோவான் 3:​1, 2.

பைபிள் எழுத்தாளர்கள் ஆண்களின் பங்கை சரியாகப் புரிந்துகொண்டதால் கடவுளை ஆண் பாலில் விவரித்திருக்கிறார்கள். பூமியிலுள்ள தமது பிள்ளைகளிடம் தகப்பனைப் போல் அன்பும் அக்கறையும் காட்டுகிற யெகோவாவை அவருடைய தராதரங்களைக் கடைப்பிடிக்கும் மனிதனால் மட்டுமே படம்பிடித்துக் காட்டமுடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.​—மல்கியா 3:17; மத்தேயு 5:45; லூக்கா 11:11–13.

கடவுளின் தலைசிறந்த பண்பு

உன்னத பேரரசர் ஆவியாய் இருந்தாலும், அவர் ஒருபோதும் அக்கறையற்றவராகவோ, புரியாப் புதிர் நிறைந்தவராகவோ, தொடர்புகொள்ள முடியாதவராகவோ இல்லை. நல்மனமுள்ளவர்கள்​—⁠அன்பு, வல்லமை, ஞானம், நீதி ஆகிய அவருடைய குணங்களைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள்​—⁠அவரை நெருங்கிச் செல்வதற்கு அவர் ஆவியாயிருப்பது தடையாக இருப்பதில்லை. இந்தப் பண்புகளெல்லாம் அவருடைய இயல்பை எடுத்துக்காட்டுகின்றன, படைப்பும் அவற்றை பறைசாற்றுகின்றன.​—ரோமர் 1:​19-21.

என்றாலும், கடவுளுடைய இயல்பை விளக்குவதற்கு அவருடைய பிரதான குணமாகிய அன்பு ஒன்றே போதும். இந்தக் குணம் அந்தளவுக்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருப்பதால், கடவுள் அன்பே உருவாக இருக்கிறார் என சொல்லப்பட்டிருக்கிறது. (1 யோவான் 4:8) இந்தக் குணத்தில் கருணை, மன்னிக்கும் தன்மை, நீடிய பொறுமை போன்ற குணங்களும் புதைந்திருக்கின்றன. (யாத்திராகமம் 34:6; சங்கீதம் 103:8–14; ஏசாயா 55:7; ரோமர் 5:8) யெகோவா உண்மையிலேயே அன்புள்ள கடவுளாக இருக்கிறார்; மனிதர்களாகிய நம்மை தம்மிடம் நெருங்கி வரும்படியும் அழைக்கிறார்.​—யோவான் 4:23. (g 10/08)

[அடிக்குறிப்பு]

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

◼ கடவுளுடைய பெயர் என்ன?​—⁠சங்கீதம் 83:⁠17.

◼ கடவுளுடைய பண்புகளை நாம் எங்கே காணலாம்?​—⁠ரோமர் 1:​19-21.

◼ கடவுளுடைய பிரதான குணம் என்ன?​—⁠1 யோவான் 4:⁠8.