நம்பகமான வழிகாட்டி—எங்கே?
நம்பகமான வழிகாட்டி—எங்கே?
உண்மையான வெற்றிக்கு யார் வழிகாட்ட முடியும்? ‘அதென்ன உண்மையான வெற்றி?’ என்று கேட்கிறீர்களா? இது, பொதுவாக உலகம் நினைக்கும் வெற்றியல்ல. மாறாக, வாழ்க்கையில் நிஜ திருப்தியை அடைந்த உணர்வுதான் இது. முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, உண்மையான வெற்றி என்பது ஆஸ்தியையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெற்றிருப்பதோடு அல்ல, மாறாக, உயர்ந்த நன்னெறிகளோடும் உன்னத நோக்கத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
உயர்ந்த நன்னெறிகளையும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில்களையும் நாம் எங்கே கண்டுபிடிக்க முடியும்? இவற்றை நாமே கண்டுபிடித்துவிட முடியுமா? நாமெல்லாரும் குறைபாடுள்ள மனிதர்கள், நம்மை தவறான பாதையில் வழிநடத்துகிற தவறான ஆசைகள்தான் நமக்குள் வேர்விட்டிருக்கின்றன என்பது நிதர்சனம். (ஆதியாகமம் 8:21) எனவேதான், ‘உடலின் இச்சை, கண்களின் இச்சை, பகட்டான வாழ்க்கை’ என்று பைபிள் விவரிக்கிற மாயையைக் கோடிக்கணக்கானோர் நாடுகிறார்கள். (1 யோவான் 2:16, NW) இவற்றை அடைவதே உண்மையான வெற்றிபோல் தோன்றினாலும், நிஜத்தில் இவையெல்லாம் போலியே. இவை ஏமாற்றத்திலும் சோகத்திலும்தான் கொண்டுபோய் தள்ளும். அதனால்தான், வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த அர்த்தமுள்ள கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க அநேகர் நம்முடைய படைப்பாளரையே நோக்கியிருக்கிறார்கள். *
ஏன் கடவுளை நோக்கியிருக்க வேண்டும்?
படைப்பாளரை நோக்கியிருப்பது ஏன் நியாயமானது? ஏனென்றால், நம்மை ஏன் படைத்தார், அதனால் நம் வாழ்க்கைக்கு என்ன நோக்கமிருக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே அறிந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நம்மை எப்படிப் படைத்திருக்கிறார் என்பதையும் அவரே அறிந்திருக்கிறார். ஆகையால், எப்படிப்பட்ட நன்னெறிகளைப் பின்பற்றினால் மனிதர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதோடு, கடவுள் அன்பின் உருவாக இருப்பதால் நாம் உண்மையான சந்தோஷத்தைப் பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறார். (1 யோவான் 4:8) அன்புள்ள அந்தக் கடவுள் தரும் வழிநடத்துதலை நாம் எங்கே காணலாம்? பரிசுத்த பைபிளில். மனிதர்களில் சுமார் 40 பேரை செயலாளர்களாகப் பயன்படுத்தி கடவுள் அதை நமக்காக எழுதிவைத்தார். * (2 தீமோத்தேயு 3:16, 17) அந்தப் புத்தகத்திலுள்ள வழிநடத்துதலை ஏற்று நடப்பது நல்லது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
“ஞானமானது அதன் பிள்ளைகளால் [அதாவது, செயல்களால்] நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்” என கடவுளின் முக்கிய பிரதிநிதியான இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 11:19; யோவான் 7:29) கடவுளுடைய ஞானம், ‘சகல நல் வழிகளிலும்’ நம்மை நடத்துகிறது; அதாவது, வெற்றி எனும் பாதையில் வழிநடத்தி, நிரந்தர மகிழ்ச்சி எனும் பரிசை அளிக்கிறது. மறுபட்சத்தில், மனிதனுடைய ஞானமோ தோல்விக்குத்தான் வழிநடத்துகிறது; அதனால், நமக்கு சோகமே மிஞ்சுகிறது.—நீதிமொழிகள் 2:8, 9; எரேமியா 8:9.
1960-களில் உலக மேடையில் காட்சியளித்த ஹிப்பி சகாப்தத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். பழங்கால தலைமுறையினரின் நெறிமுறைகளையும் 2 தீமோத்தேயு 3:1–5.
அதிகாரத்தையும் அடியோடு ஒதுக்கித்தள்ளிவிட்டு, போதைப்பொருள்களையும், ‘இன்றைக்கு மட்டுமே வாழும்’ கொள்கையையும், முறைகேடான வாழ்க்கை முறையையும் அநேக ஹிப்பிகள் முன்னேற்றுவித்தார்கள். இதெல்லாம் ஞானமான வாழ்க்கைக்கு வழிகாட்டியதா? வாழ்க்கைக்கு மெய்யான நோக்கத்தைக் கொடுத்ததா? உண்மையான மனநிம்மதிக்கும் நிரந்தர மகிழ்ச்சிக்கும் வழிநடத்தும் நெறிமுறைகளைக் கற்றுத் தந்ததா? இந்த வாழ்க்கை முறை, மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்கவில்லை, மாறாக மனித சமுதாயத்தின் ஒழுக்கத்தைத்தான் சீர்குலைத்தது என்பதையே வரலாற்று ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன.—பைபிள் ஞானம் மனித தத்துவங்களைப் போல் காலத்தால் அழிந்துவிடுவதில்லை. (ஏசாயா 40:8) ஏன் என்பதை அடுத்த கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள். உண்மையான சந்தோஷத்தையும் வெற்றியையும் அடைய உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கானோருக்கு உதவிய ஆறு பைபிள் நியதிகளை அதில் சிந்திக்கப் போகிறோம். (g 11/08)
[அடிக்குறிப்புகள்]
^ “ வெற்றி முயற்சியை முறியடிக்கும் கொள்கைகள்” என்ற பெட்டியைக் காண்க.
^ கடந்த வருடம் நவம்பர் 2007-ல் வெளிவந்த விழித்தெழு! சிறப்பிதழ், “பைபிள் நம்பத்தக்க புத்தகமா?” என்ற தலைப்பில் பேசுகிறது. பைபிள் கடவுளுடைய சக்தியின் உதவியால் எழுதப்பட்டது என்பதற்கு தொல்லியல் சான்றுகளையும், வரலாற்று சான்றுகளையும், விஞ்ஞான சான்றுகளையும் அந்தக் கட்டுரை அளிக்கிறது.
[பக்கம் 5-ன் பெட்டி]
வெற்றி முயற்சியை முறியடிக்கும் கொள்கைகள்
கடவுள் இல்லை என்று அநேகர் வாதாடுகிறார்கள். இன்னும் சிலர், ஆதாரமே இல்லாத பரிணாம கோட்பாட்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்புவது உண்மையென்றால், உயிர் என்பது வெறுமனே தொடர்ச்சியாக ஏற்பட்ட ரசாயன மற்றும் உயிரியல் மாற்றங்களால் தற்செயலாகத் தோன்றிய ஒன்றாகவே இருக்கும். அதோடு, வாழ்க்கையின் நோக்கத்திற்கான நம்முடைய தேடலுக்கும், உலகமே ஏற்றுக்கொள்ளும் நன்னெறிகளுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
வேறு சிலரோ கடவுள் நம்மைப் படைத்தார், ஆனால் பிற்பாடு கைவிட்டுவிட்டார் என்று நம்புகின்றனர். இந்தக் கருத்து உண்மையென்றால், ஆன்மீக ரீதியில் நாம் அனாதைகளாகவும் வாழ்க்கைக்கு உண்மையான நோக்கமோ நெறிமுறைகளோ இல்லாதவர்களாகவும் இருப்போம். இதைச் சிந்தித்துப் பாருங்கள்: விலங்குகள் ஒவ்வொன்றும் அது படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் அவற்றுக்கு இயல்புணர்ச்சி ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். அதன் விளைவாக, நம்மைச் சுற்றியுள்ள உலகில் அவருடைய மகா ஞானத்தைக் காண முடிகிறது. அப்படியிருக்கும்போது, அதே படைப்பாளர் நம்மை உண்டாக்கிவிட்டு, இருளில் தட்டுத்தடுமாறும்படி விட்டுவிடுவாரா? நிச்சயம் விட்டுவிட மாட்டார்!—ரோமர் 1:19, 20.
நாத்திக கொள்கைகள் வாழ்க்கையின் நோக்கத்திற்கான நம் தேடலையும் உலகமே ஏற்றுக்கொள்கிற நன்னெறிகளையும் அர்த்தமற்றதாக்கி, வெற்றிபெற எடுக்கும் முயற்சியை முறியடிக்கின்றன.
[பக்கம் 5-ன் படம்]
பைபிள் ஞானம் அதன் பலன்களால் நீதியுள்ளதென நிரூபிக்கப்படுகிறது