Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

ஏன் நேரத்தோடு வீட்டுக்கு வரவேண்டும்?

ஏன் நேரத்தோடு வீட்டுக்கு வரவேண்டும்?

உங்கள் நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு வீட்டுக்கு லேட்டாக போகிறீர்கள். உங்கள் அப்பா அம்மா சொன்ன நேரம் தாண்டிவிட்டது. இப்போது எப்படியும் அவர்கள் கண்ணில் படாமல் வீட்டுக்குள் நுழைய முடியாது. ‘என்ன சொல்லி சமாளிக்கலாம்?’ என்று உங்கள் மனம் யோசிக்க ஆரம்பிக்கிறது. ‘அப்பா அம்மா இந்நேரத்திற்கு தூங்கியிருப்பாங்க’ என்று நினைத்துக்கொண்டு, பூனை போல் மெதுவாக கதவைத் திறக்கிறீர்கள். எதிரிலேயே அவர்கள் இரண்டு பேரும் நிற்கிறார்கள்​—⁠மணியைப் பார்த்துக்கொண்டு, நீங்கள் சொல்லப்போகிற சாக்குப்போக்கை கேட்பதற்காக.

ஏதோ பழக்கப்பட்ட அனுபவம் போல் இருக்கிறதா? அப்பா அம்மா சொல்கிற நேரத்திற்குள் வீட்டுக்கு வருவது மகா கஷ்டமாக இருக்கிறதா? இதனால் உங்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சண்டை வருகிறதா? “நாங்க இருக்கிறது ரொம்ப பாதுகாப்பான ஏரியாதான். இருந்தாலும், இராத்திரி லேட்டா வந்தா வீட்ல கலவரமே வெடிச்சிடும்” என்கிறாள் 17 வயது டெபோரா. *

பெற்றோர் சொல்கிற நேரத்திற்குள் வீட்டுக்கு வருவது ஏன் உங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கலாம்? நிறைய சுதந்திரம் வேண்டுமென ஆசைப்படுவது தவறா? இதுபோன்ற கட்டுப்பாடுகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

பிரச்சினைகள்

‘இத்தனை மணிக்குள் நீ வீட்டுக்கு வந்திடணும்’ என்று உங்கள் பெற்றோர் சட்டம் போட்டால், முக்கியமாக உங்கள் நண்பர்களோடு ஜாலியாக இருப்பதற்கு அது தடையாக இருந்தால் உங்களுக்குக் கோபம் கோபமாக வரலாம். இதைக் குறித்து 17 வயது நட்டாஷா சொல்வதைக் கேளுங்கள்: “‘இத்தனை மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடு’ என்று கட்டுப்பாடு விதிப்பதெல்லாம் எனக்குக் கொஞ்சங்கூட பிடிக்கல. ஒரு சமயம், இரண்டே வீடு தள்ளியிருந்த என் ஃபிரெண்ட் வீட்ல சினிமா பார்த்திட்டிருந்தேன். இது என் அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் வருவதற்கு இரண்டு நிமிஷம்தான் லேட்டாகிவிட்டது, அதுக்குள்ள ஃபோன் பண்ணி ஏன் இன்னும் வரலைன்னு கேட்டு ரகள பண்ணிட்டாங்க!”

மற்றொரு பிரச்சினையைப் பற்றி ஸ்டேஸி சொல்கிறாள். “நாங்க தூங்க போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து சேருன்னு அப்பா அம்மா சொல்வாங்க. ஒருவேளை நான் வர லேட்டாகிடுச்சுன்னா ரொம்ப டென்ஷனாயிடுவாங்க. நான் ஏதோ பெரிய தப்பு செஞ்ச மாதிரி என்னை பிடிச்சு கன்னாபின்னான்னு திட்டுவாங்க. அது என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கும், ஏன் எனக்காக காத்துக்கிட்டு இருக்கணும், பேசாம தூங்க வேண்டியதுதானே!” இதுபோன்ற பிரச்சினையால் தவித்துக்கொண்டிருந்தால் நீங்களும் 18 வயது கேட்டியைப் போலவே உணரலாம். அவள் சொல்கிறாள்: “நான் அவங்களிடம் நச்சரிக்காம அவங்களாவே எனக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கணும்னு விரும்புறேன்.”

இந்த இளசுகளைப் போலவே நீங்களும் உணரலாம். அப்படியென்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

நான் ஏன் நிறைய நேரம் வெளியவே இருக்க விரும்புகிறேன்?

  • சுதந்திரமாக இருக்க முடிகிறது.

  • கவலைகளிலிருந்து விடுபட முடிகிறது.

  • ஃபிரெண்ட்ஸோடு ஜாலியாக இருக்க முடிகிறது.

இந்தக் காரணங்களெல்லாம் நியாயமானவைதான். நீங்கள் வளர்ந்து வரும்போது நிறைய சுதந்திரம் வேண்டுமென விரும்புவது இயல்புதான். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கலாம். ஏன், நல்ல நண்பர்களுடன் பழகும்படி பைபிளும் உற்சாகப்படுத்துகிறதே. (சங்கீதம் 119:63; 2 தீமோத்தேயு 2:22) எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைகோழி மாதிரி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டுமென்றால் அது கஷ்டம்தான்.

ஆனால், ரொம்ப கெடுபிடியாகத் தோன்றுகிற கட்டுப்பாடுகளை உங்களுக்கு விதிக்கும்போது நீங்கள் எப்படி இந்த மாதிரி சுதந்திரமாக இருக்க முடியும்? பின்வருபவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

சவால் #1: சிறு பிள்ளை போல் உங்களை நடத்துவதாக உணருகிறீர்கள்.

“எல்லாரும் சந்தோஷமா பொழுத கழிச்சிட்டிருக்கிற சமயத்தில ‘என்னை வீட்ல கொண்டுபோய் விடுங்களேன்’ என்று கேட்டு யாரையாவது தொந்தரவு செய்வது என்னை சிறு பிள்ளை போல் நினைக்க வச்சுது” என்கிறார் 21 வயது ஆன்ட்ரே.

உதவி: முதல் முறையாக நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். சில நாடுகளில், எங்கே, எப்போது, யாருடன் நீங்கள் வாகனம் ஓட்டிச்செல்ல வேண்டும் என்பதற்குச் சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட வயது வரையாவது நீங்கள் இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இந்நிலையில், “எனக்கு முழு சுதந்திரம் தரலைன்னா நான் வண்டியே ஓட்ட மாட்டேன்” என்று சொல்லி லைசன்ஸ் எடுக்காமல் விட்டுவிடுவீர்களா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டீர்கள்! லைசன்ஸ் எடுப்பதைப் பெரும் சாதனையாகத்தான் கருதுவீர்கள்.

அதேபோல், பெற்றோர் உங்களுக்கு விதிக்கும் வரம்புகளை உங்கள் முன்னேற்றத்திற்கு அறிகுறியாகக் கருதுங்கள்; நீங்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு உதவும் ஒரு படிக்கல்லாக எண்ணுங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளின் மீது கவனம் செலுத்தாமல், உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் சிறு பிள்ளையாக இருந்தபோது கிடைத்த சுதந்திரத்தைவிட இப்போது உங்களுக்கு நிறையவே சுதந்திரம் கிடைக்கிறதல்லவா?

பலன்: பெற்றோருடைய விதிமுறைகளை முட்டுக்கட்டையாகக் கருதாமல் அவற்றை மதித்து நடந்தால், பிற்காலத்தில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கலாம்.​—லூக்கா 16:⁠10.

சவால் #2: ஏன் இவ்வளவு சீக்கிரமாக வரச் சொல்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஒருகாலத்தில் பெரும் இம்சையாக கருதிய நிக்கி கூறுகிறாள்: “‘இப்படி செய்யாதே, அப்படிச் செய்யாதே’ என்று எப்போதும் ஏதாவது சட்டம் போட்டுக்கொண்டே இருப்பதென்றால் என் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.”

உதவி: நீதிமொழிகள் 15:​22-⁠ல் (NW) உள்ள நெறிமுறையைப் பின்பற்றுங்கள்: “மனம்விட்டு பேசவில்லை என்றால் திட்டங்கள் தோல்வியடையும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவை வெற்றியடையும்.” உங்கள் பிரச்சினைகளைப் பெற்றோருக்கு ஆற அமர எடுத்துச் சொல்லுங்கள். ஏன் ‘அந்த’ நேரத்திற்குள் வீட்டுக்கு வர வேண்டுமென சொல்கிறார்களென்று அவர்களிடமே கேளுங்கள். *

பலன்: உங்கள் பெற்றோர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டால், அவர்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். “நான் பத்திரமா வீடு திரும்பும்வரை அம்மா தூங்கவே மாட்டாங்கன்னு அப்பா சொன்னாரு. அதைப் பற்றி நான் யோசித்து பார்க்கவே இல்லை” என்கிறான் ஸ்டீஃபன்.

நினைவில் வையுங்கள்: எப்போதுமே பிரச்சினைகளை நிதானமாகப் பேசுவது மிகவும் நல்லது. இதைப் பற்றி நட்டாஷா சொல்வது: “கோபத்தில பொரிஞ்சி தள்ளினால் அதன் விளைவுகள சந்திக்க வேண்டியிருக்கும், இதை என் அனுபவத்தில பார்த்திருக்கேன். எப்பவெல்லாம் என் பெற்றோர்கிட்ட கோபத்தில வெடிச்சேனோ, அப்பவெல்லாம் இருக்கிற சுதந்திரமும் போய்விடும்.”

சவால் #3: உங்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவது போல் உணருகிறீர்கள்.

‘இத்தனை மணிக்கு நீங்கள் வீட்டுக்கு வர வேண்டும்’ என்ற சட்டம் உட்பட, வீட்டில் போடப்படும் எல்லா சட்டதிட்டங்களும் உங்களுடைய நன்மைக்காகத்தான் என்று பெற்றோர் சில சமயங்களில் சொல்லலாம். “அவங்க இப்படிச் சொல்றப்போ, நான் சொந்தமா தீர்மானம் எடுக்கிறதையோ என் கருத்தை சொல்றதையோ அவங்க விரும்புறதில்ல என்றே எனக்கு நினைக்கத் தோனுது” என்கிறாள் 20 வயது பிராண்டி.

உதவி: மத்தேயு 5:​41-⁠ல் (NW) உள்ள இயேசுவின் அறிவுரையை நீங்கள் பின்பற்றலாம்: “அதிகாரத்திலுள்ள ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரும்படி உங்களைக் கட்டாயப்படுத்தினால் அவருடன் இரண்டு மைல் தூரம் செல்லுங்கள்.” ஆஷ்லியும் அவளுடைய அண்ணனும் இந்த வசனத்திலுள்ள குறிப்பை நடைமுறையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசித்துப் பார்த்தார்கள். “நாங்கள் எப்போதும் அப்பா அம்மா சொன்ன நேரத்திற்கு 15 நிமிஷம் முன்னாடியே வீட்டுக்கு வந்துவிடுவோம்” என்கிறாள் ஆஷ்லி. நீங்களும் இதுபோலவே செய்ய முடியுமா?

பலன்: எதையும் கடமைக்காகச் செய்யாமல் விருப்பத்துடன் செய்தால் அதிக சந்தோஷம் கிடைக்கும்! இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட தீர்மானிக்கும்போது, நேரத்தை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். அதோடு, பிலேமோன் 14-⁠ல் உள்ள குறிப்புக்கு இசைவாகவும் நடக்கிறீர்கள்: ‘நீர் செய்யும் நன்மை கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய்ச் செய்ததாக [இருக்க வேண்டும்].’

நேரத்தோடு வீட்டுக்கு வந்தால், உங்கள் பெற்றோரின் நம்பிக்கையைச் சம்பாதிக்கலாம். அதனால், காலப்போக்கில் நிறைய சுதந்திரத்தையும் பெறலாம். “உங்க பெற்றோருடைய நம்பிக்கையைச் சம்பாதிச்சா உங்களுக்கு விதிக்கிற கட்டுப்பாட்டை கொஞ்சம் தளர்த்துவாங்க” என்கிறாள் 18 வயது வேடு.

பெற்றோரின் கட்டுப்பாட்டால் நீங்கள் எதிர்ப்படும் இன்னொரு பிரச்சினையை இங்கே எழுதுங்கள்.

இந்தப் பிரச்சினையை மேற்கொள்ள உங்களுக்கு எது உதவும்?

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

என்றைக்காவது ஒருநாள் உங்கள் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியே வாழ வேண்டியிருக்கும்; அப்போது உங்களுக்கு நிறையவே சுதந்திரம் இருக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள். “எல்லா விஷயத்திலும் உங்களுக்குச் சுதந்திரம் கிடைக்காம போகலாம். ஆனால், கட்டுப்பாடுகளுடன் வாழ கத்துக்கிட்டா உங்களுடைய டீன்-ஏஜ் பூராவும் கஷ்டப்பட வேண்டியிருக்காது” என்கிறாள் 20 வயது டிஃபனி. (g 10/08)

 

^ இக்கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப்பெயர்கள் அல்ல.

^ கூடுதல் ஆலோசனைகளுக்கு, டிசம்பர் 2006 விழித்தெழு! இதழில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?” என்ற கட்டுரையைக் காண்க.

சிந்திப்பதற்கு

  • பெற்றோர் உங்கள்மீது அக்கறை வைத்திருப்பது அவர்கள் போடும் விதிமுறையிலிருந்து எப்படித் தெரிகிறது?

  • ஏற்கெனவே உங்கள் பெற்றோர் சொன்னதை மீறி நடந்திருந்தால், மறுபடியும் அவர்களுடைய நம்பிக்கையை எப்படிச் சம்பாதிக்கலாம்?