Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விளம்பரங்களின் மயக்கும் சக்தி

விளம்பரங்களின் மயக்கும் சக்தி

விளம்பரங்களின் மயக்கும் சக்தி

போலந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மெய் மறந்த நிலையில் டிவியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான், டோமெக். வசீகரிக்கும் விளம்பர செய்திகள் அவன் காதில் அருவி போல் வந்து விழுகின்றன: “உங்கள் செல்லப் பிள்ளை விளையாட்டு நட்சத்திரம் போல் ஜொலிக்க, மாவீரனாய் திகழ, நண்பர்கள் பார்த்து பொறாமைப்பட, இதோ சூப்பர் மாடல் டிரெஸ்! உங்கள் பிள்ளைக்குப் போட்டு மகிழுங்கள்!!” உடனே டோமெக் ஓடிப்போய் அப்பா கழுத்தைக் கட்டிக்கொண்டு, வசீகரிக்கும் அந்த விளம்பரத்தை அதே ராகத்தில் பாடிக் காட்டுகிறான். “டாடி, டாடி எனக்கும் அதை வாங்கித்தாங்க டாடி?”

விளம்பரத்தில் வருவதையெல்லாம் வாங்க வேண்டுமென பிள்ளைகள் ஏன் துடிக்கிறார்கள்? “எல்லாரும் வைத்திருப்பதால் தங்களுக்கும் வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு முன்பு தங்களைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்” என போலிஷ் நாட்டின் ரெவ்யா பத்திரிகையில் குறிப்பிட்டார் ஒரு கல்வியாளர். பிள்ளைகள் அழுது அடம்பிடித்தால், முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டால் போதும், உடனே பெற்றோர் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிள்ளைகளைக் குறிவைக்கிற விளம்பரங்கள் படுவசீகரமாய் இருப்பதற்கு என்ன காரணம்? பொருள்களின் “விலையோ தரமோ உபயோகமோ முக்கியப்படுத்திக் காட்டப்படுவதில்லை” என்று விளக்குகிறார் மனநல நிபுணர் ஜோலான்டா வான்ஸ். மாறாக, மக்களின் “மனதை மயக்கும் விதத்தில்” விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. “விளம்பரத்தில் வரும் கதையைப் பற்றி பிள்ளைகள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. . . . அதில் வரும் தகவல்களை தங்களுக்குத் தெரிந்த விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுமில்லை” என்கிறார் வான்ஸ். அப்படியே அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தாலும், அது அவர்களுடைய புத்திக்கு எட்டாது, பொருளின் தரத்தை அவர்களால் துல்லியமாகக் கணிக்கவும் முடியாது.

விளம்பரங்களின் மாய வலையில் உங்கள் பிள்ளைகள் விழாமலிருக்க என்ன செய்யலாம்? முதலாவதாக, “ஒருவர் எந்த பிராண்டு ஷூ போடுகிறார், எந்த பிராண்டு [டிரஸ்] போடுகிறார் என்பதைப் பொறுத்து அவருடைய மதிப்பு கூடுவதில்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறது ரெவ்யா. புதுப் புதுப் பொம்மைகள் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்க முடியும் என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். இரண்டாவதாக, நம் பிள்ளைகள்மீது விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். முக்கியமாக, “நம்முடைய குழந்தைக்கு எது நல்லது என்பதை விளம்பரம் தீர்மானிக்க விட்டுவிடக்கூடாது” என்கிறார் வான்ஸ்.

முடிவாக, பைபிள் தருகிற பின்வரும் அறிவுரையிலிருந்து எல்லாத் தாய் தந்தையரும் பயனடையலாம். “உலகத்திலுள்ள அனைத்தும், அதாவது உடலின் இச்சையும், கண்களின் இச்சையும், பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளும் பரலோகத் தகப்பனிடமிருந்து தோன்றுவதில்லை. இந்த உலகத்திடமிருந்தே தோன்றுகின்றன” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.​—⁠1 யோவான் 2:​15, 16, NW.

பெரும்பாலான விளம்பரங்கள் ‘கண்களுக்கு இச்சை’ ஊட்டி, சிறியோர் பெரியோர் அனைவரையும் தங்களுடைய ‘பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்ளவே’ தூண்டுகின்றன. ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று அப்போஸ்தலன் யோவான் தொடர்ந்து சொன்னார்.​—⁠1 யோவான் 2:17.

பிள்ளைகளிடம் பயனுள்ள விஷயங்களைப் பேச பெற்றோர் தவறாமல் நேரம் செலவிடும்போது, கடவுளுடைய தராதரங்களையும் நன்னெறிகளையும் அந்தப் பிஞ்சு மனதில் பதியவைக்க முடியும். (உபாகமம் 6:5–7) அப்படிச் செய்தால், மயக்கும் சக்தி படைத்த இந்த உலகின் விளம்பரங்களைப் பார்த்து பிள்ளைகள் மதிமயங்கிவிட மாட்டார்கள். அவை எவ்வளவு வசீகரமாக இருந்தாலும் சரி, எப்படியாவது பெற்றோரை நச்சரித்து வாங்கிவிட அவர்களைத் தூண்டும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரி, பிள்ளைகள் அதற்கு மசிய மாட்டார்கள். (g 12/08)