Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெற்றிக்கனி ஏன் கைக்கு எட்டுவதில்லை?

வெற்றிக்கனி ஏன் கைக்கு எட்டுவதில்லை?

வெற்றிக்கனி ஏன் கைக்கு எட்டுவதில்லை?

உலகப் புகழ் பெற்ற பாடகியாக மகுடம் சூட்டப்பட்டாள்; கோடிகளில் புரண்டாள். அவளுக்கு 20, 22 வயதுதான் இருக்கும். இத்தனை இளம் வயதிலேயே வெற்றிக்கொடி நாட்டி, பணம் குவித்தவர்கள் வெகு சிலரே. ஆனால், அவளுடைய வாழ்வில் அடுத்தடுத்து பூகம்பங்கள்.. இரண்டு முறையும் மணவாழ்வில் தோல்வி.. கடைசியில், மதுபானத்திற்கும் போதைப்பொருளுக்கும் அடிமையானாள்; மறுவாழ்வு மையங்களே அவளுடைய கதியானது. அவளுடைய முழு வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமானது.

இந்த இளம் மங்கையின் கதை ஒன்றும் வினோதமல்ல; பிரபலங்களின் சோகக் கதைகள் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடுகின்றன. பாரம்பரியமிக்க பிசினஸ் உலகிலும், “வெற்றி பெற்ற மாந்தர்களின்” வாழ்க்கையில் சோகக் காட்சிகள்தான் அரங்கேறுகின்றன. நியு யார்க் நகரில், பிசினஸில் வெற்றி கண்டவர்களைப் பற்றி ஒரு செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கையைக் கவனியுங்கள்: “கோடிகோடியாக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற அழுத்தம், வேலைக்கே உலைவைக்கிறது, குடும்பங்களைச் சிதைக்கிறது. கடைசியில், போதைப்பொருள் விற்பவர்களுக்குத்தான் கொண்டாட்டமாகிவிடுகிறது. . . . எக்கச்சக்கமாக போனஸ் கிடைப்பதால் வால் ஸ்ட்ரீட் வர்த்தகர்கள் சிலர் புகழின் சிகரத்தை எட்டிவிட்டதாக எண்ணி சந்தோஷத்தில் சிறகடிக்கிறார்கள்; வேறு சிலரோ வேலையில் சாதனை படைக்க வேண்டுமென்ற அழுத்தம் தாங்கமுடியாமல் மனசோர்வில் மூழ்கிவிடுகிறார்கள்; இன்னும் சிலர், உடலளவிலும் மனதளவிலும் சுக்குநூறாக உடைந்துபோய்விடுகிறார்கள்.”

சந்தோஷத்தையும் வெற்றியையும் குறுக்கு வழியில் அடைவதே இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமா? வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பணம் தேவைதான். ஆனால், பணமே வெற்றிக்கு அடிகோலா? ஆய்வுகளின் முடிவுகளோ வேறுவிதமாகச் சொல்கின்றன. உதாரணத்திற்கு, சராசரி வருமானம் 250 சதவீதம் உயர்ந்தபோதும்கூட வாழ்க்கையில் மக்கள் திருப்தியில்லாமல்தான் இருந்தார்களென சமீபத்தில் சீனாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது.

அப்படியானால், உண்மையான வெற்றி என்பது நல்ல வேலையோ, கார்-பங்களாவோ, உயர்தர கடிகாரமோ வைத்திருப்பதில் அல்ல, அவற்றைவிட நிலையான ஒன்றை அடைவதிலேயே இருக்கிறது. ‘ஒருவர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார், எப்படிப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார், வாழ்க்கையில் அவருடைய நோக்கம் என்ன?’ ஆகியவற்றை வைத்துத்தானே அவருடைய உண்மையான வெற்றியை அளவிட வேண்டும்? ஒருவர் புத்திசாலியாகவும் பலம் படைத்தவராகவும் இருக்கலாம்; ஆனால், ஒழுக்க விஷயத்தில் மோசமானவராக, அன்பின் வாசமறியாதவராக, நல்ல நண்பர்கள் இல்லாதவராக இருந்தால் என்ன செய்வது? அதேபோல் ஒருவருக்கு பொன்னும் பொருளும் பேரும் புகழும் இருக்கலாம்; ஆனால், ‘இதெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையே?’ என்று அவர் ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கலாம்.

உண்மையான வெற்றி காண்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியங்களுக்கே முதலிடம் கொடுப்பார்கள்; உயர்ந்த நெறிமுறைகள் அவர்களுடைய வாழ்வுக்கு வழிகாட்டியாக இருக்கும். அதன் பலனாக, மனநிம்மதியையும் சுயமரியாதையையும் மற்றவர்களுடைய நன்மதிப்பையும் சம்பாதிப்பார்கள். வாழ்க்கையில் சொந்த இலட்சியத்தை நாடாமல் ஓர் உன்னத நோக்கத்துடன் வாழ்வார்கள். அது அவர்களுக்கு அர்த்தமுள்ள வாழ்வை, திருப்தியுள்ள வாழ்வைத் தரும். சரி, அப்படியானால் ‘என்னென்ன நெறிமுறைகள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்? என்ன நோக்கம் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கும்?’ என்று சிலர் கேட்கலாம். இதுபோன்ற கேள்விகளுக்கு நாமே பதில் கண்டுபிடிக்க வேண்டுமா அல்லது வேறெங்காவது தேட வேண்டுமா? இதைப் பற்றி அடுத்த கட்டுரை அலசுகிறது. (g 11/08)

[பக்கம் 3-ன் பெட்டி]

வெற்றி பற்றிய தவறான கண்ணோட்டம்

இளம் விளையாட்டு வீரர்கள் பலரும், சாதனை படைப்பதற்காக உடலுக்குத் தீங்கிழைக்கும் ஊக்கமருந்துகளை (steroids) பயன்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் குறித்து எடுகேஷன் அப்டேட் ஆன்லைன் இவ்வாறு அறிக்கை செய்தது: “சமீபத்தில் கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சுற்றாய்வின்போது, ‘ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தினால் நீங்கள் போட்டியில் ஜெயிப்பீர்கள் அல்லது அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள், ஆனால் ஐந்து வருஷத்தில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று தெரிந்தால், அப்போதும் அவற்றைப் பயன்படுத்துவீர்களா?’ என்று கேட்டபோது, ஏறக்குறைய எல்லாருமே ‘பயன்படுத்துவோம்’ என பதிலளித்தார்கள். ‘இன்னும் ஐந்து வருஷத்தில் செத்துவிடுவீர்கள் என்று தெரிந்தால்?’ என்று அதே கேள்வியை கொஞ்சம் மாற்றிக் கேட்டபோது, அப்போதும் அவற்றைப் ‘பயன்படுத்துவோம்’ என்று 65 சதவீதத்தினர் சொன்னார்கள்.”