உங்கள் எதிர்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா?
பைபிளின் கருத்து
உங்கள் எதிர்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா?
எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி தங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பதாகவும் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் அநேகர் நம்புகிறார்கள். கருவறை முதல் கல்லறை வரை, எல்லாமே ஆண்டவன் விதிப்படிதான் நடக்குமென அவர்கள் நினைக்கிறார்கள். ‘கடவுள்தான் சர்வசக்தி படைத்தவர் ஆயிற்றே, அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே, அதனால் ஆதிமுதல் அந்தம்வரை நம்மைப் பற்றி அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்’ என அவர்கள் சொல்கிறார்கள்.
உங்கள் அபிப்பிராயம் என்ன? நம்முடைய வாழ்க்கையையும் முடிவையும் கடவுள் முன்னரே தீர்மானித்துவிட்டாரா? வேறு வார்த்தையில் சொன்னால், சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர் நமக்குக் கொடுத்திருப்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
எல்லாவற்றையும் முன்னறிகிறாரா அல்லது சிலவற்றைத்தானா?
கடவுளுக்கு முன்னறியும் திறமை இருக்கிறது என்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்கிறது. ‘ஆதிமுதல் அந்தம்வரை’ அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார் என்று ஏசாயா 46:10 (NW) கூறுகிறது. ஏன், மனிதர்களைச் செயலர்களாகப் பயன்படுத்தி பல தீர்க்கதரிசனங்களை அவர் பதிவு செய்திருக்கிறாரே. (2 பேதுரு 1:21) சொல்லப்போனால், அவர் உரைத்த எல்லாத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி இருக்கின்றன; ஏனென்றால், அச்சுப்பிசகாமல் எல்லாவற்றையும் துல்லியமாக நிறைவேற்றும் சக்தியும் ஞானமும் கடவுளுக்கு இருக்கிறது. எனவே, கடவுள் நினைத்தால் அவரால் எதிர்காலத்தை முன்னறியவும் முடியும், முன்தீர்மானிக்கவும் முடியும். அதற்காக, ஒவ்வொரு மனிதனுடைய எதிர்காலத்தை அல்லது அழிவிலிருந்து தப்பிப்பிழைக்கிறவர்களின் எண்ணிக்கையை அவர் முன்தீர்மானிக்கிறார் என்று அர்த்தமா? இல்லை என்பதே பைபிளின் பதில்.
கடவுள் தம்முடைய முன்தீர்மானிக்கும் திறனைத் தேவையான சமயங்களில் மட்டுமே பயன்படுத்துகிறார் என பைபிள் கற்பிக்கிறது. உதாரணமாக, இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படும்போது நீதியுள்ள “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” தப்பிப்பிழைப்பார்கள் எனக் கடவுள் முன்னறிவித்தார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆனால், எத்தனை பேர் தப்பிப்பிழைப்பார்கள் என்று இந்த வசனத்தில் கடவுள் திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். காரணம்? எல்லாருடைய வாழ்க்கையையும் கடவுள் முன்விதிப்பதில்லை. சொல்லப்போனால், ஒரு பெரிய குடும்பத்தின் அன்பான தகப்பனைப் போல் கடவுள் இருக்கிறார். தமது பிள்ளைகள் சிலராவது தம் அன்புக்கு அடிபணிவார்களென அவர் அறிந்திருக்கிறார், ஆனால் எத்தனைப் பேர் என்பதை அவர் முன்னரே தீர்மானிப்பதில்லை.
முன்தீர்மானிக்கும் திறனையும் தமது வல்லமையையும் கடவுள் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். கடவுளுக்கு எல்லையற்ற வல்லமை இருப்பதால் அவர் சர்வவல்லவர். (சங்கீதம் 91:1; ஏசாயா 40:26, 28) ஆனால், அந்த வல்லமையை எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் பயன்படுத்துகிறாரா? இல்லவே இல்லை. உதாரணமாக, பூர்வ இஸ்ரவேலின் எதிரியான பாபிலோனை அழிப்பதற்கு ஏற்ற சமயம் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். அதைக் குறித்து அவரே இவ்வாறு கூறினார்: “நீண்ட காலமாக . . . என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன்.” (ஏசாயா 42:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) முன்னறியும் திறனையும் முன்தீர்மானிக்கும் திறனையும் பயன்படுத்தும் விஷயத்திலும் அவர் இப்படியேதான் நடந்துகொள்கிறார். நமக்குக் கொடுத்திருக்கிற உரிமையை, அதாவது சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையை, மதித்து யெகோவா தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்.
இப்படிச் செய்வதால் அவர் திறமையற்றவராகவோ குறைபாடுள்ளவராகவோ ஆகிவிடுவதில்லை. சொல்லப்போனால், அது அவருடைய மகத்துவத்தைத்தான் எடுத்துக்காட்டுகிறது; அதோடு நம்மையும் அவரிடம் ஈர்க்கிறது. ஏனென்றால், எல்லாம் அறிந்த கடவுள் தமது அரசதிகாரத்தை நம்மீது செலுத்துகையில் வெறுமனே வல்லமையோடு செயல்படாமல், புத்திக்கூர்மையுள்ள மனிதனின் சுயமாய்த் தீர்மானிக்கும் உரிமையை மதித்து அன்போடு செயல்படுகிறார்.
ஒருவேளை இந்த உலகில் நடக்கும் அனைத்தையும்—பயங்கரமான எல்லா விபத்துகளையும் இதுவரை நடந்த எல்லாக் கெட்ட செயல்களையும்—கடவுள் முன்விதித்தார் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படியென்றால், இந்த உலகத்திலுள்ள எல்லா வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் அவர்தான் காரணராய் இருப்பார். ஆனால், நாம் கூர்ந்து ஆராயும்போது, உண்மை அதுவல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். முன்விதித்தல் என்ற போதனை கடவுளை மகிமைப்படுத்துவதில்லை, மாறாக அவரை அவமானப்படுத்துகிறது; எப்படியென்றால், அவரைக் கொடூரமானவராக, அநீதியானவராக, அன்பற்றவராக சித்தரிக்கிறது. பைபிளோ அவரை முற்றிலும் வித்தியாசமானவராக விவரிக்கிறது.—உபாகமம் 32:4.
தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்
தம்முடைய ஊழியரான மோசே வாயிலாக இஸ்ரவேல் மக்களிடம் கடவுள் இப்படிச் சொன்னார்: ‘நான் ஜீவனையும் மரணத்தையும், . . . உனக்குமுன் வைத்தேன். . . . ஆகையால், நீ ஜீவனைத் தேர்ந்தெடு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.’ (உபாகமம் 30:19, 20) இஸ்ரவேலரில் இன்னாரெல்லாம் தம்மை நேசித்து ஜீவனைப் பெறுவர், இன்னாரெல்லாம் மரண தண்டனையைப் பெறுவர் என்று கடவுள் முன்விதித்திருந்தால், அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்தமற்றவையாக, உண்மையற்றவையாக இருந்திருக்கும். “நியாயத்தை விரும்புகிற” கடவுள், அதுவும் அன்பே உருவான கடவுள், இப்படிக் கண்மூடித்தனமாக நடந்துகொள்வாரென நீங்கள் நினைக்கிறீர்களா?—சங்கீதம் 37:28; 1 யோவான் 4:8.
ஜீவனைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் சொன்ன அந்த வார்த்தைகள் இன்று நம் காதில் பேரொலியாய் ஒலிக்கின்றன. ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவு வேகமாய் நெருங்கிக்கொண்டிருப்பதை நிறைவேறிவரும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. (மத்தேயு 24:3-9; 2 தீமோத்தேயு 3:1-5) சரி, நாம் எப்படி ஜீவனைத் தேர்ந்தெடுப்பது? இந்த விஷயத்தில் பூர்வகால இஸ்ரவேலர் வைத்த அதே முன்மாதிரியை நாமும் பின்பற்றலாம்.
நீங்கள் ‘ஜீவனைத் தேர்ந்தெடுப்பது’ எப்படி?
‘தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்வதன்’ மூலமும், ‘அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பதன்’ மூலமும் ‘அவரைப் பற்றிக்கொள்வதன் மூலமும்’ நாம் ஜீவனைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்காக, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்து, அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? கடவுளிடம் ஜெபம் செய்தபோது இயேசு கிறிஸ்து அதைச் சுட்டிக் காட்டினார்: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.’—யோவான் 17:3.
விலையேறப்பெற்ற அந்த அறிவை பரிசுத்த பைபிளிலிருந்து நாம் பெற முடியும். அதனால்தான் கடவுளுடைய வார்த்தை என பைபிள் அழைக்கப்படுகிறது. (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16) கடவுள் நம்முடைய எதிர்காலத்தை முன்விதிக்கவில்லை, ஆனால் தாம் அளித்திருக்கிற தகவல்களின் அடிப்படையில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டுமென விரும்புகிறார் என்பதை அவர் கொடுத்திருக்கும் பைபிள் எனும் அரும்பெரும் பரிசு வெளிப்படுத்துகிறது.—ஏசாயா 48:17, 18.
‘மனிதகுலத்திற்கும் இந்தப் பூமிக்கும் இதுவே என்னுடைய நோக்கம், முடிவில்லா வாழ்வைப் பெற இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். நான் சொல்வதைக் கேட்பதா வேண்டாமா என்று தீர்மானிப்பது உங்கள் கையில் இருக்கிறது’ என்று பைபிளின் வாயிலாகக் கடவுள் நம்மிடம் சொல்வது போல் இருக்கிறது. ஆம், சுயமாகத் தேர்ந்தெடுக்கும் நம்முடைய உரிமையை மதித்து, தமது முன்தீர்மானிக்கும் திறனை எவ்வளவு கட்டுப்பாட்டுடன் கடவுள் பயன்படுத்துகிறார்! ‘[கடவுளுடைய] சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வதன் மூலம்’ நீங்கள் ஜீவனைத் தேர்ந்தெடுப்பீர்களா? (g 2/09)
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ முன்னறியும் திறனைக் கடவுள் எந்தளவு பயன்படுத்துகிறார்?—உபாகமம் 30:19, 20; ஏசாயா 46:10.
◼ மக்களுக்கு ஏற்படும் தீமை உட்பட உலகில் நடக்கும் எல்லாவற்றையும் கடவுள் ஏன் முன்தீர்மானிப்பதில்லை?—உபாகமம் 32:4.
◼ நம்முடைய எதிர்காலம் எதைச் சார்ந்திருக்கிறது?—யோவான் 17:3.
[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]
கடவுள் தம்முடைய முன்தீர்மானிக்கும் திறனைத் தேவையான சமயங்களில் மட்டுமே பயன்படுத்துகிறார் என பைபிள் கற்பிக்கிறது