உடலைத் தகனம் செய்வது தவறா?
பைபிளின் கருத்து
உடலைத் தகனம் செய்வது தவறா?
ஒருவருடைய உடலைத் தகனம் செய்வது—அதாவது எரித்துச் சாம்பலாக்குவது—அந்த நபரை அவமதிப்பதற்கு, அவரைப் பற்றிய நினைவைச் சுத்தமாக அழித்துவிடுவதற்கு, சமம் என்று சிலர் கருதுகிறார்கள். ‘இந்தப் பழக்கம் பொய் மதத்திலிருந்து தோன்றியதால் கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டுமென’ வாதாடுகிறார்கள். ஆனால், இறந்தவருடைய உடலை அழிப்பதற்குத் தகனம் செய்வதே சிறந்த முறை, கண்ணியமான முறை என்று மற்றவர்கள் நம்புகிறார்கள். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் காலத்தில், இறந்தவர்களை அடக்கம் செய்வதுதான் வழக்கம். உதாரணத்திற்கு, ஆபிரகாம் தன் மனைவி சாராளை ஒரு குகையில் அடக்கம் பண்ணினார். கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட ஓர் அறையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டது. (ஆதியாகமம் 23:9; மத்தேயு 27:60) அப்படியானால், அடக்கம் செய்வது மட்டும்தான் சரியென பைபிள் சொல்கிறதா? தகனம் செய்வதை கடவுளுடைய பண்டைக்கால ஊழியர்கள் ஆட்சேபித்ததாக பைபிள் குறிப்பிடுகிறதா?
கடவுள் ஏற்கவில்லை என்பதற்கு அத்தாட்சிகள்?
பைபிளை மேலோட்டமாகப் பார்த்தால், கடவுளுடைய தயவை இழந்தவர்களின் உடலே எரிக்கப்பட்டதென நிறைய வசனங்கள் சொல்வதுபோல் தோன்றலாம். எடுத்துக்காட்டாக, யெகோவாவுக்கு ஆசாரிய சேவை செய்பவருடைய மகள் வேசித்தனம் செய்தால், அவளைக் கொன்று, ‘அக்கினியிலே சுட்டெரிக்க வேண்டுமென்று’ மோசேயின் சட்டம் சொன்னது. (லேவியராகமம் 20:10; 21:9) அதேபோல், இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தாரிடம் தோல்வி அடைந்ததற்குக் காரணமாயிருந்த ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் அவனுடைய ஊர்க்காரர்கள் எல்லாரும் கல்லெறிந்து கொன்று, ‘அக்கினியில் சுட்டெரித்துப் போட்டார்கள்.’ (யோசுவா 7:25) அவமானப்பட்டு இறந்தவர்களுக்கும் நல்லடக்கத்திற்குத் தகுதியில்லாத குற்றவாளிகளுக்கும் இதுதான் நேர்ந்தது என்று அறிஞர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
அதோடு, யோசியா ராஜா யூதாவிலிருந்து விக்கிரகாராதனையை ஒழித்தபோது, பாகால் தெய்வத்திற்குப் பலி செலுத்திய ஆசாரியர்களின் கல்லறைகளைத் தகர்த்தெறிந்து அவர்களுடைய எலும்புகளை அந்தப் பலிபீடங்களிலேயே சுட்டெரித்தார். (2 நாளாகமம் 34:4, 5) அப்படியென்றால், இப்படி சுட்டெரிக்கப்பட்ட எல்லாருக்குமே கடவுளுடைய தயவு இல்லை என்று அர்த்தமா? இல்லவே இல்லை. இதற்கு மற்றொரு பைபிள் பதிவைக் கவனியுங்கள்.
இஸ்ரவேல் ராஜாவான சவுலைப் பெலிஸ்தியர் முறியடித்தபோது, அவருடைய உடலையும் அவரது மூன்று மகன்களுடைய உடலையும் அவமானப்படுத்துவதற்காக பெத்சான் என்ற நகரத்தின் மதிலில் கட்டிவைத்தார்கள். இருந்தாலும், இப்படி அவமரியாதையுடன் அவர்களுடைய உடல்களை மதிலோடு கட்டிப்போட்ட செய்தியைக் கேட்ட கீலேயாத் தேசத்தில் வசித்த யாபேஸ் பட்டணத்து இஸ்ரவேலர் அவர்களுடைய உடல்களை எடுத்து எரித்து, எலும்புகளைப் புதைத்தார்கள். (1 சாமுவேல் 31:2, 8–13) எடுத்த எடுப்பில் பார்த்தால், உடலை எரிக்கும் பழக்கத்திற்கு இது சாதகமாய் இருப்பதைப் போல் தோன்றலாம். அதேசமயம் சவுல் கெட்டவர், யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதையே எதிர்த்துச் சண்டை போட்டவர், கடைசியில் கடவுளுடைய தயவை இழந்து மாண்டுபோனவர் என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால், சவுலுடன் வேறு யாரெல்லாம் இறந்துபோனார்கள் என்பதைக் கவனியுங்கள். சவுலின் சடலத்திற்குக் கிடைத்த அதே “மரியாதைதான்” யோனத்தானின் சடலத்திற்கும் கிடைத்தது. ஆனால், யோனத்தான் கெட்டவர் கிடையாதே. அவர் தாவீதின் ஆருயிர் நண்பர். ‘தேவன் துணைநிற்க அவர் [யோனத்தான்] இன்று காரியத்தை நடப்பித்தார்’ என்று இஸ்ரவேலரே அவரைப் புகழ்ந்தார்கள். (1 சாமுவேல் 14:45) கீலேயாத் தேசத்தில் வசித்த யாபேஸ் பட்டணத்தார் செய்த காரியத்தை தாவீது கேள்விப்பட்டபோது அவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்: “நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம் பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.” சவுலுடைய உடலையும் யோனத்தானுடைய உடலையும் எரித்ததைக் குறித்து தாவீது வருத்தப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.—2 சாமுவேல் 2:4–6.
உயிர்த்தெழுதலுக்கு எதுவும் தடையில்லை
இப்போது ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் எண்ணற்ற இறந்தோரை யெகோவா தேவன் மீண்டும் உயிரடையச் பிரசங்கி 9:5, 10; யோவான் 5:28, 29) இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று வரும் காலத்தை வெளிப்படுத்துதல் அல்லது திருவெளிப்பாடு என்ற பைபிள் புத்தகம் தீர்க்கதரிசனமாக இவ்வாறு சொல்கிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” (வெளிப்படுத்துதல் 20:13) ஒருவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும்சரி, எரிக்கப்பட்டிருந்தாலும்சரி, கடலில் காணாமல் போயிருந்தாலும்சரி, மூர்க்க மிருகங்கள் சாப்பிட்டிருந்தாலும்சரி, அணுகுண்டு வெடிப்பில் ஆவியாகிப் போயிருந்தாலும்சரி, கடவுளால் அந்த நபரை உயிர்த்தெழுப்ப முடியும்.
செய்வாரென பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. (இறந்தவர்களுடைய உடலை என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பைபிள் திட்டவட்டமாக எதுவும் சொல்வதில்லை. அதேசமயத்தில், எரிப்பதை யெகோவா கண்டனம் செய்வதுமில்லை. ஆனால், சவ அடக்கம் செய்தாலும்சரி தகனம் செய்தாலும்சரி, கண்ணியமாகவும் மரியாதைக்குரிய விதமாகவும் செய்ய வேண்டும்.
ஒருவர் இந்த ஏற்பாடுகளைச் செய்யும்போது, தன்னுடைய ஊராரின் கருத்துகளையும் மனதில் வைத்து தீர்மானம் எடுக்க வேண்டும். பைபிள் நியமங்களுக்கு இசைவாக நடப்பவர்கள் அக்கம்பக்கத்தாருடைய மனதை அனாவசியமாகப் புண்படுத்துகிற எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அதேசமயத்தில், ஆத்துமா அழியாது போன்ற பொய் மதப் போதனைகளோடு தொடர்புடையதாய்த் தோன்றுகிற பழக்கத்தில் ஈடுபடவும் மாட்டார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தன்னுடைய உடலை அல்லது மற்றவருடைய உடலை அடக்கம் செய்வதா எரிப்பதா என்பதைத் தீர்மானிப்பது அவரவருடைய சொந்த விஷயம் அல்லது குடும்ப விஷயம். (g 3/09)
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ கடவுளுக்கு கடைசிவரை உண்மையாய் இருந்த எந்த நபருடைய உடல் எரிக்கப்பட்டதாக பைபிள் குறிப்பிடுகிறது?—1 சாமுவேல் 31:2, 12.
◼ சவுலின் உடலை எடுத்து எரித்தவர்களிடம் தாவீது என்ன சொன்னார்?—2 சாமுவேல் 2:4–6.
◼ ஒருவருடைய உடல் எரிக்கப்படுவதால் அவர் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியற்றவர் என்று நாம் ஏன் சொல்ல முடியாது?—வெளிப்படுத்துதல் 20:13.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
இறந்தவர்களுடைய உடலை என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பைபிள் திட்டவட்டமாக எதுவும் சொல்வதில்லை