Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குண்டுக் குழந்தைகள் என்ன தீர்வு?

குண்டுக் குழந்தைகள் என்ன தீர்வு?

குண்டுக் குழந்தைகள் என்ன தீர்வு?

வரவர குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை பல நாடுகளில் பெருத்துக்கொண்டே போகிறது. உலகில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் 2.2 கோடி பிள்ளைகள் அதிக எடையுள்ளவர்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஸ்பெயினில் தேசியளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மூன்று பிள்ளைகளில் ஒன்று அதிக எடை உடையதாக அல்லது பருமனாக இருக்கிறது. பத்தே வருடங்களில் (1985-⁠1995) ஆஸ்திரேலியாவில் குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை மும்மடங்கு ஏறிவிட்டது. அமெரிக்காவில், கடந்த 30 ஆண்டுகளில் 6-⁠க்கும் 11-⁠க்கும் இடைப்பட்ட குண்டுப் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாய் ஊதிவிட்டது.

வளரும் நாடுகளிலுள்ள பிள்ளைகளும்கூட குண்டாகி வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஊட்டக்குறைவைவிட உடல் பருமன்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறதெனக் கூறுகிறது சர்வதேச எடை குறைப்பு நிறுவனம். 2007-⁠ல், கொழுத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை மெக்சிகோ பிடித்தது. மெக்சிகோ நகரில் மட்டுமே, பிள்ளைகள் மற்றும் இளம்பருவத்தினரில் 70 சதவீதத்தினர் எடைகூடி இருப்பதாக அல்லது தடித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. “உடல் பருமனால் விளையும் கோளாறுகள் காரணமாக பெற்றோர் இறப்பதற்கு முன்பு இறக்கும் முதல் தலைமுறை” இந்தத் தலைமுறையாக இருக்கலாம் எனக் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஃபிரான்ஸிஸ்கோ கோன்ஸாலீஸ் எச்சரிக்கிறார்.

உடல் பருமனால் என்ன கோளாறுகள் வருகின்றன? அவற்றில் மூன்று.. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய். ஒருகாலத்தில் இந்தக் கோளாறுகள் எல்லாம் பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான் இருந்தன. ஆனால், அமெரிக்க மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வு நம்மை அதிர வைக்கிறது; 2000-⁠ல் அமெரிக்காவில் பிறந்த 30 சதவீத ஆண் பிள்ளைகளுக்கும் 40 சதவீத பெண் பிள்ளைகளுக்கும் உடல் பருமனோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை நீரிழிவு நோய் வரும் ஆபத்து இருக்கிறது!

குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென ஏறுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை ஏற ஏற உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையும் ஏறுகிறது. “உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்படி உயர்ந்துகொண்டே போவதைக் கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் அதிகமான இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இதய நோய் வரும்” என எச்சரிப்பு மணி அடிக்கிறார் ஜார்ஜியா அட்லாண்டாவிலுள்ள மோர்ஹவுஸ் மருத்துவ கல்லூரி டாக்டர் ரெபேக்கா டின் டிஸித்ஹம்.

காரணிகள்

உலகமுழுவதும் குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருவாரியாகப் பெருகுவதற்கு என்ன காரணம்? இதற்கு ஜீன்கள் ஓரளவு காரணமாக இருக்கலாம். என்றாலும், சமீப பத்தாண்டுகளில் உலகெங்கும் குண்டுக் குழந்தைகள் பெருகியிருப்பதைப் பார்க்கும்போது ஜீன்கள் மட்டுமே முழு காரணமில்லை என்று தெரிகிறது. “உடல் பருமன் அதிகரிப்பிற்கு ஜீன்களைப் பழிசுமத்த முடியாது. வெறும் முப்பதே ஆண்டுகளில் நம்முடைய ஜீன்களை மாற்ற முடியாது” என்கிறார் ஸ்டீபன் ஓராஹிலி; இவர் இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிர்-⁠வேதியியல் மற்றும் மருத்துவப் பேராசிரியர்.

“குழந்தைகள் குண்டாவதற்குச் சில சமயங்களில் ஜீன்களும் ஹார்மோன்களும் காரணமாக இருந்தாலும், பெருந்தீனியும் உடற்பயிற்சி இல்லாததுமே முக்கியக் காரணம்” என உடல் பருமனுக்கான காரணங்களைப் பற்றி அமெரிக்காவில் உள்ள மாயோ கிளினிக் சொல்கிறது. இன்று உணவுப் பழக்கங்களில் மாறிவரும் போக்கை பின்வரும் இந்த இரண்டு உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

முதலாவதாக, வேலைக்குப் போகிற பெற்றோருக்குச் சமைக்க நேரமும் சக்தியும் இல்லாததால் துரித உணவு இன்று அநேகரின் ஆகாரமாகிவிட்டது. உலகெங்கிலும் துரித உணவகங்கள் எக்கச்சக்கமாக முளைத்துவிட்டன. அமெரிக்காவில், 4-⁠19 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒன்று தினமும் துரித உணவு ஐட்டம் சாப்பிடுவதாக ஓர் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. மணக்க மணக்க, ருசிக்க ருசிக்க அதிகளவில் பரிமாறப்படும் இவ்வகை உணவுகளில் சர்க்கரைக்கும் கொழுப்புக்கும் பஞ்சமே இல்லை.

இரண்டாவதாக, இப்போதெல்லாம் பாலையும் தண்ணீரையும்விட குளிர்பானங்களையே மக்கள் விரும்பி குடிக்கிறார்கள். உதாரணமாக, மெக்சிகோ மக்கள் முக்கியமான பத்து வகை உணவுக்குச் செலவு செய்யும் தொகையைவிட கோலாவுக்கு ஒவ்வொரு வருடமும் செலவு செய்யும் தொகையே அதிகம். ஒரு நாளைக்கு 600 மில்லி குளிர்பானம் குடித்தால் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 11 கிலோ எடை கூடிவிடும் என்கிறது குழந்தைகள் குண்டாவதைத் தடுக்க வழி என்ற ஆங்கில புத்தகம்.

உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மறைந்துபோனதைக் குறித்து ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு நடத்தியது. மூன்று வயது பிள்ளைகள் ஒரு நாளைக்கு 20 நிமிடம்தான் ‘ஓரளவு சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள்’ எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கொலரடோ பல்கலைக்கழகத்தில் குழந்தைகள்/மருத்துவப் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் ஜேம்ஸ் ஹில் அந்த ஆய்வைப் பற்றி இவ்வாறு கூறினார்: “பிள்ளைகள் மந்தமாய்ச் செயல்படும் போக்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் பரவி வருகிறது.”

என்னதான் தீர்வு?

பிள்ளைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு விதித்தால் அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதால் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதைச் சிபாரிசு செய்வதில்லை. மாயோ கிளினிக் தரும் ஆலோசனையைக் கவனியுங்கள்: “உங்கள் குண்டுக் குழந்தைகளின் எடையைக் குறைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், குடும்பத்தில் எல்லாருமே ஆரோக்கிய உணவு சாப்பிட வேண்டும், அவரவர் வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்.”​—⁠பெட்டியைக் காண்க.

ஆரோக்கிய உணவு சாப்பிடுவதையும் உடற்பயிற்சி செய்வதையும் உங்கள் குடும்பப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அதுவே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைமுறையாக ஆகிவிடும், பெரியவர்களாக வளர்ந்த பிறகும்கூட அதைக் கடைப்பிடிப்பார்கள். (g 3/09)

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

பெற்றோருக்கு சில டிப்ஸ்..

1 நிறைய காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிக் கொடுங்கள். துரித உணவுகளைத் தவிருங்கள்.

2 அதிக கொழுப்புச் சத்தும், சர்க்கரையும் உள்ள பலகாரங்களையோ குளிர்பானங்கள், சோடா போன்றவற்றையோ வாங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக, தண்ணீரையோ கொழுப்புச் சத்து குறைவாய் உள்ள பாலையோ ஆரோக்கியமான பலகாரங்களையோ வாங்கிக் கொடுங்கள்.

3 கொழுப்புச் சத்தைக் குறைக்கும் முறையில் உணவு தயாரியுங்கள்; பொரிக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக அவித்த, சுட்ட, ஆவியில் வேக வைத்த உணவைக் கொடுங்கள்.

4 ஒரே சமயத்தில் மூக்குமுட்ட சாப்பிட விடாதீர்கள்.

5 தின்பண்டங்களைப் பிள்ளைகளுக்கு ‘லஞ்சமாக’ அல்லது பரிசாகக் கொடுக்காதீர்கள்.

6 காலைச் சிற்றுண்டியைப் பிள்ளைகள் தவறவிட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால், பிற்பாடு நிறையச் சாப்பிட்டுவிடுவார்கள்.

7 மேஜையில் வைத்துச் சாப்பிடச் சொல்லுங்கள். டிவி முன்பாகவோ கம்ப்யூட்டர் முன்பாகவோ உட்கார்ந்து சாப்பிட்டால் அளவுக்குமீறி சாப்பிட்டுவிடலாம். வயிறு நிரம்பினாலும் தெரியாது.

8 பிள்ளைகளை ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள்; உதாரணமாக, சைக்கிள் ஓட்டலாம், பந்து விளையாடலாம், ஸ்கிப்பிங் ஆடலாம்.

9 பிள்ளைகள் டிவி பார்ப்பதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதையும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும் கட்டுப்படுத்துங்கள்.

10 குடும்பமாகச் சேர்ந்து சிற்றுலா செல்லுங்கள். உதாரணத்திற்கு, மிருகக் காட்சி சாலையைப் பார்ப்பதற்கோ, நீச்சல் அடிப்பதற்கோ அல்லது விளையாட்டுப் பூங்காவிற்கோ அழைத்துச் செல்லுங்கள்.

11 சின்னச் சின்ன வேலைகளை, உடலை வருத்திச் செய்கிற வேலைகளை, பிள்ளைகளுக்குக் கொடுங்கள்.

12 ஆரோக்கியமான உணவு உண்பதிலும் உடற்பயிற்சி செய்வதிலும் முன்மாதிரி வையுங்கள்.

[படத்திற்கான நன்றி]

மூலம்: தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் மாயோ கிளினிக்