Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிஸ்லெக்ஸியா என்னை முடக்கிவிடவில்லை

டிஸ்லெக்ஸியா என்னை முடக்கிவிடவில்லை

டிஸ்லெக்ஸியா என்னை முடக்கிவிடவில்லை

மைக்கல் ஹென்போ சொன்னது

எனக்கு டிஸ்லெக்ஸியா கோளாறு இருப்பதால் படிப்பது சிரமம். அப்பா அம்மாவுக்கு, மூன்று தம்பிமாருக்கு என்னால் ரொம்ப தொல்லை. என் தாய்மொழி டேனிஷ். ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டுத்தான் வாசித்தேன். பள்ளிப் படிப்பும் பெரும் போராட்டமாகத்தான் இருந்தது. ஆனால், எல்லாரும் எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள், உற்சாகம் அளித்தார்கள், முக்கியமாக என் குடும்பத்தினர்.

நான்கு தலைமுறைகளாக என் குடும்பத்தினர் யெகோவாவின் சாட்சிகள். வாசிப்பது எங்கள் வீட்டுப் பழக்கம், முக்கியமாக பைபிளை, பைபிள் பிரசுரங்களை. நானும் என் தம்பி ஃபிளெம்மிங்கும் அப்பாவுடன் தவறாமல் ஊழியத்துக்குப் போவோம். அதனால், எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம் என்பது பசுமரத்தாணிபோல் எங்கள் மனதில் பதிந்திருந்தது.

சின்ன வயதிலிருந்தே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் வாசித்தேன். ஒரு பத்திரிகையைப் படித்து முடிக்க 15 மணிநேரம் ஆகிவிடும்! அதோடு, முழு பைபிளையும் வாசித்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். பிறகு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்தேன். இந்தப் பள்ளி உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடக்கிறது. பெரிய கூட்டத்திற்கு முன்பு நின்று நன்கு வாசிக்கவும், திறமையாகப் பேசவும், சொற்பொழிவு ஆற்றவும் இந்தப் பள்ளி பயிற்சி அளிக்கிறது. இப்படியெல்லாம் போராடி டிஸ்லெக்ஸியா கோளாறை ஓரளவு சமாளித்தேன். ஆனால், இன்னும் பல போராட்டங்களைச் சந்திக்கப்போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது சொல்கிறேன், கேளுங்கள்.

ஆங்கிலம் பயின்றேன்

1988-⁠ஆம் வருடம் அது. எனக்கு 24 வயது. அப்போது பயனியர் சேவையில் இறங்கினேன். பயனியர் என்றால் நற்செய்தியை முழுநேரமாக அறிவிக்கிற ஊழியர். அந்தச் சமயத்தில் அயல்நாட்டவர்கள் டென்மார்க்கில் குடியேற அனுமதி இருந்தது; அப்படி அங்கு வந்தவர்களிடம் பைபிள் சத்தியங்களைச் சொல்ல விரும்பினேன். இந்தச் சேவையைத் திறம்படச் செய்வதற்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, அது ஓர் இமாலயப் பணிபோல இருந்தது. ஆனாலும், நான் விட்டுவிடவில்லை, தனியாக ஒரு டீச்சர் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். காலப்போக்கில், என்னுடைய சொந்த ஊரான கோபன் ஹாகனில் வசித்த ஆங்கிலம் பேசிய அயல்நாட்டவரிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தேன். ஆரம்பத்தில் தப்பும் தவறுமாகத்தான் பேசினேன். இருந்தாலும், அந்த மொழியைக் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடவில்லை.

ஆங்கிலம் கற்றுக்கொண்டதால், பல நாடுகளுக்குச் சென்று யெகோவாவின் சாட்சிகளுடைய கட்டுமானத் திட்டங்களில் தொண்டராகச் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதலில் கிரீஸ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டேன், பிற்பாடு ஸ்பெயின், மாட்ரிட் கிளை அலுவலகக் கட்டுமானப் பணியில் உதவி செய்தேன்.

பிரசங்க வேலையை இன்னும் மும்முரமாய்ச் செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் ஊழியப் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பித்தேன். மணமாகாத கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எட்டு வார விசேஷ பயற்சி அளிக்கிறது இந்தப் பள்ளி. ஊழியர்கள் அதிகமாய்த் தேவைப்படும் இடங்களில் சேவை செய்ய தயாராய் இருப்பவர்களுக்கு இந்தப் பள்ளி பயிற்சி அளிக்கிறது. (மாற்கு 13:10) சுவீடனில் நடத்தப்பட்ட அந்த ஆங்கிலப் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு கிடைத்தது.

1994 செப்டம்பர் 1-⁠ஆம் தேதி அந்தப் பள்ளி தொடங்கியது. நன்கு தயார் செய்துவிட்டுப் போக வேண்டுமென நினைத்தேன்; அதனால், எட்டு மாதத்திற்குத் தினமும் 4 மணிநேரம் மாய்ந்துமாய்ந்து ஆங்கிலம் படித்தேன். அதோடு, ஆங்கிலச் சபைக்குப் போனேன். பின்பு, பள்ளியும் ஆரம்பித்தது. இந்தப் பள்ளியில் படித்து முன்னேற என் குறைபாடு முட்டுக்கட்டையாய் இருக்க நான் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு, போதனையாளர் கேள்வி கேட்டால், ஆங்கிலத்தில் எப்படிப் பதில் சொல்வதென்று சரியாகத் தெரியாவிட்டாலும் கையைத் தூக்கினேன். பட்டம் பெற்ற பிறகு கோபன் ஹாகனில் பயனியர் சேவை செய்வதற்கு நியமிப்பு கிடைத்தது. படாதபாடுபட்டு ஒருவழியாக ஆங்கிலம் கற்றேன், இப்போது அதைவிடப் பெரிய கஷ்டம் காத்துக்கொண்டிருந்தது.

தமிழிலும் தேர்ச்சி பெற்றேன்

1995 டிசம்பர் மாதம் டேனிஷ் நகரான ஹெர்னியில் இருந்த தமிழ் சபைக்கு நியமிக்கப்பட்டேன். தமிழ்தான் உலகத்திலேயே மகா கஷ்டமான மொழியாய் இருக்குமென நினைத்தேன். அதில் 31 எழுத்துக்கள் இருக்கின்றன. உயிர்மெய் எழுத்துக்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 250!

ஆரம்பத்தில் டேனிஷ் மொழியில்தான் சபையில் பேச்சு கொடுப்பேன், யாராவது மொழிபெயர்ப்பு செய்வார்கள். பின்பு ஒருவழியாக, தமிழில் பேச்சு கொடுத்தேன், எத்தனை பேருக்குப் புரிந்ததோ(!?) அங்கு இருந்த அநேகருக்கு நான் பேசிய தமிழ் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் பவ்யமாக உட்கார்ந்து கேட்டார்கள். இந்தப் பாஷையை வேகமாகக் கற்றுக்கொள்வதற்காக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கிற ஒரு நாட்டுக்கு, அதாவது இலங்கைக்குப் போகத் தீர்மானித்தேன்.

1996 அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து சேர்ந்தபோது உள்நாட்டு போரினால் அந்த நாடு அல்லோலகல்லோலபட்டுக் கொண்டிருந்தது. இருதரப்பினரிடையே போர் நடந்துகொண்டிருந்த எல்லைப் பகுதியான வவுனியாவில்தான் சில காலம் தங்கியிருந்தேன். அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் ஏழ்மையில் வாடினாலும் அவர்கள் காட்டிய அன்பும் உபசரிப்பும் என்னைத் திக்குமுக்காட வைத்தது. எனக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் ரொம்பவும் பிரயாசப்பட்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் அல்லாதவர்கள் என்னைப் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால், அயல்நாட்டிலிருந்து வந்து தமிழ் பேசும் ஒரே ஆள் நான்தான். அங்குள்ள மக்கள் என்னைப் பாராட்டினார்கள், தாழ்மையுள்ள அந்த மக்களிடம் பைபிளைப் பற்றிப் பேசுவது எனக்குச் சுலபமாய் இருந்தது.

ஜனவரி 1997-⁠ல் நான் டென்மார்க்குக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அதற்கடுத்த வருடம் கமிலா என்ற பயனியரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். நான் மறுபடியும் இலங்கைக்குப் போக வேண்டியிருந்தது. அதனால் டிசம்பர் 1999-⁠ல் இலங்கைக்குத் திரும்பினேன், ஆனால் இந்தத் தடவை என் மனைவியுடன். அங்கு போன கொஞ்ச நாட்களிலேயே பல குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தோம். அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் படிப்புகளுக்கு போனோம். ஊழியம் செய்வதிலும் மொழி பயில்வதிலும் நாங்கள் மூழ்கியே போய்விட்டோம்!

மார்ச் 2000-⁠ல் நாங்கள் டென்மார்க்குக்குத் திரும்ப வேண்டியிருந்தது. இலங்கையிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடனும் எங்கள் பைபிள் மாணாக்கர்களுடனும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகிவிட்டதால் அவர்களை விட்டுப் பிரிந்தபோது எங்கள் இதயம் கனத்தது. ஆனால், எங்களுக்கு இன்னும் அநேக வேலைகள் காத்திருந்தன. அதில் ஒன்று இன்னொரு மொழியைக் கற்கும் சவால்!!!

தமிழுக்கு அடுத்து லாட்வியன்

மே 2002-⁠ஆம் வருடம், லாட்வியாவில் மிஷனரிகளாகச் சேவை செய்ய எனக்கும் கமிலாவுக்கும் அழைப்பு வந்தது​—⁠அப்போது எங்களுக்குக் கல்யாணமாகி நான்கு வருஷம் இருக்கும். டென்மார்க்குக்குக் கிழக்கே அமைந்திருந்த ஓர் ஐரோப்பிய நாடுதான் லாட்வியா. லாட்வியன் மொழியை கமிலா சட்டெனப் பிடித்துக்கொண்டாள், ஆறே வாரத்தில் பேச ஆரம்பித்துவிட்டாள்! என்னால் அது முடியவில்லை. சொல்லப்போனால், நான் இன்றுவரை அந்தளவுக்கு முன்னேறவில்லை, இத்தனைக்கும் எனக்கு நிறைய உதவி கிடைத்தது. இருந்தாலும், அதை எப்படியாவது கற்றுத் தீருவதென்று உறுதியாய் இருக்கிறேன். *

கமிலா எனக்கு ரொம்ப ஒத்தாசையாக இருக்கிறாள். நாங்கள் இரண்டு பேரும் மிஷனரி சேவையைச் சந்தோஷமாகச் செய்து வருகிறோம். நன்றியுள்ளம் படைத்த லாட்விய மக்கள் பலருக்கு பைபிள் படிப்பு நடத்தி வருகிறோம். ஏதாவது வார்த்தைகளை மறந்துவிடும்போது.. இலக்கணப் பிழை ஏற்படும்போது.. உள்ளூர் ஜனங்களும் எங்களிடம் பைபிள் கற்றுக்கொள்கிறவர்களும் கோபப்படாமல் நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். எனக்கு உதவியும் செய்கிறார்கள். இதனால், வெளி ஊழியத்தில் என்னால் நம்பிக்கையோடு ஈடுபட முடிகிறது; தயங்காமல் கிறிஸ்தவக் கூட்டங்களிலும் பேச்சு கொடுக்க முடிகிறது.

பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதுதான் எனக்குப் பெரும் சவாலாயிற்றே, அப்படியிருக்க நான் ஏன் முயற்சி செய்தேன் என்று கேட்கிறீர்களா? ஒரே வார்த்தையில் சொன்னால், அன்புதான்​—⁠மொழிமீது அல்ல, மக்கள்மீது. உண்மையான கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டு அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள ஒருவருக்கு உதவி செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! நற்செய்தியை மக்களுடைய தாய் மொழியில்​—⁠அவர்களுடைய இரத்தத்தில் கலந்துவிட்ட மொழியில்​—⁠சொல்லும்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். காலங்காலமாக எத்தனையோ மிஷனரிகள் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை இது.

இத்தனை வருடகால ஊழியத்தில், பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற நானும் என் மனைவியும் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறோம். இதற்குரிய புகழ் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே சேரும். நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை, சத்திய விதைகளைத் தூவி நீர் பாய்ச்சினோம், கடவுள்தான் விளையச் செய்தார்.​—1 கொரிந்தியர் 3:⁠6.

தீமையிலும் நன்மை

டிஸ்லெக்ஸியா கோளாறு எனக்கு ஒரு தடைக்கல்லாக இருக்கிறபோதிலும் அதுவே எனக்கு ஒரு படிக்கல்லாகவும் இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? சபையில் பேச்சு கொடுக்கும்போது அடிக்கடி குறிப்புத்தாளையே பார்த்துக்கொண்டிருக்காமல் சபையாரைப் பார்த்து சகஜமாகப் பேசுவேன். அதோடு, என் பேச்சில் நிறைய உவமைகளைப் பயன்படுத்துவேன், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது சுலபம். இப்படிச் சில விஷயங்களில் என்னுடைய போதிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

‘தேவன் . . . பலமுள்ளவற்றை வெட்கப்படுத்தும்படி உலகிலுள்ள பலவீனமானவற்றைத் தேர்ந்தெடுத்தார்’ என்று கிறிஸ்தவரான அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 1:27) என்னுடைய குறைபாட்டின் காரணமாக சில விஷயங்களில் நான் ‘பலவீனனாக’ உணர்ந்திருக்கிறேன். ஆனால், யெகோவாவால் நம்முடைய குறைபாட்டை நிவிர்த்தி செய்ய முடியும். இதை நான் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் உணர்ந்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சின்னச் சின்ன குறிக்கோள்களை வைப்பது.. நியாயமான எதிர்பார்ப்புகளுடன் வாழ்வது.. கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்வது.. பின்பு நாம் வைத்த குறிக்கோளை அடைய முயற்சி செய்வது.. அவ்வளவுதான். (g 2/09)

[அடிக்குறிப்பு]

^ லாட்வியாவில் ஆறு வருடங்களாகச் சேவை செய்த பிறகு ஹென்போ தம்பதியினர் சமீபத்தில் கானாவுக்கே திரும்பவும் நியமிக்கப்பட்டார்கள்.

[பக்கம் 20-ன் பெட்டி]

டிஸ்லெக்ஸியா பற்றிய உண்மைகள்

டிஸ்லெக்ஸியா என்றால் என்ன? “டிஸ்லெக்ஸியா” என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் “தெளிவற்ற பேச்சு.” இந்தக் கோளாறு வாழ்நாள் முழுக்க இருக்கும். டிஸ்லெக்ஸியா என்பது மொழியோடு சம்பந்தப்பட்ட கோளாறைக் குறிக்கிறது. முக்கியமாக இந்தக் கோளாறு உள்ளவர்கள் வாசிக்கக் கஷ்டப்படுவார்கள். இப்படிப்பட்ட ஆட்கள், எழுத்துக்களையும் அதற்குரிய உச்சரிப்புகளையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கச் சிரமப்படுவார்கள். குறிப்பிட்ட சில அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம்.

டிஸ்லெக்ஸியா எதனால் ஏற்படுகிறது? இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. என்றாலும், பரம்பரை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூளையின் வளர்ச்சியும் செயல்பாடும் மாறுபட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் இது அவர்களுடைய அறிவுத்திறனையோ கற்கும் ஆர்வத்தையோ பாதிப்பதில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சொல்லப்போனால், மொழியோடு சம்பந்தப்படாத விஷயங்களில் இவர்கள் பெரும்பாலும் படு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியாவுக்கு என்ன சிகிச்சை? இந்தக் கோளாறை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவது இன்றியமையாதது. முக்கியமாக கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற பல்வேறு புலன்களைப் பயன்படுத்தி மொழியைக் கற்றுக்கொள்ள அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுக்கலாம். இந்த மாணவர்கள் பலருக்குத் தனிக்கவனம் தேவைப்படுகிறது. அப்போதுதான் அவர்களுடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு ஏற்ப அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். ஸ்கூலில் வருகிற பிரச்சினைகள் அவர்களுடைய மனதைப் பாதிக்கலாம், அதைச் சமாளிக்க அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். கடின முயற்சியெடுத்து, தனிப்பட்ட விதமாகச் சொல்லிக்கொடுக்கும்போது, இந்த மாணவர்கள் நன்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வார்கள். *

[அடிக்குறிப்பு]

^ மேற்கூறப்பட்டவை சர்வதேச டிஸ்லெக்ஸியா சங்கம் கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்ளன. இந்த இதழில் உள்ள “படிக்கத் திணறும் தளிர்களுக்கு உதவி” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

[பக்கம் 21-ன் படம்]

இலங்கையில் ஒரு சகோதரருடன்

[பக்கம் 21-ன் படம்]

லாட்வியாவில் கமிலாவுடன்