நீங்கள் படும் கஷ்டங்கள் கடவுள் தரும் தண்டனையா?
பைபிளின் கருத்து
நீங்கள் படும் கஷ்டங்கள் கடவுள் தரும் தண்டனையா?
கிட்டத்தட்ட 55 வயதுடைய ஒரு பெண்மணிக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. “ஆண்டவன்தான் என்னைத் தண்டிக்கிறான்” என்று அவள் புலம்புகிறாள். பல வருஷம் முன்பு தான் செய்த தவறை நினைத்து, “நான் செஞ்ச பாவத்துக்குத்தான் இப்படியெல்லாம் நடக்குது” என்று அங்கலாய்க்கிறாள்.
வாழ்க்கையில் துன்பமோ துயரமோ வரும்போது, கடந்த காலத்தில் செய்த தவறுக்காகக் கடவுள் தங்களைத் தண்டிப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். திடீரென பிரச்சினைகள் மலைபோல் வந்து குவியும்போது, “ஏன்தான் கடவுள் என்னைச் சோதிக்கிறாரோ? நான் அப்படி என்ன பாவம் செஞ்சேனோ?” என்று அவர்கள் புலம்புகிறார்கள். நமக்குக் கஷ்டங்கள் வந்தால், கடவுள் நம்மைக் கைவிட்டுவிட்டாரென முடிவு செய்துவிட வேண்டுமா? வாழ்க்கையில் நமக்கு வருகிற எல்லா துன்பங்களும் கடவுள் கொடுக்கிற தண்டனையா?
கடவுளின் உண்மை ஊழியர்களுக்கும் துன்பம் வந்தது
யோபு என்ற மனிதருக்கு என்ன நடந்ததென்று பைபிள் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள். திடீரென எல்லாச் சொத்துக்களும் அவர் கையைவிட்டுப் போயின. அடுத்து, அவருடைய பத்துப் பிள்ளைகளும் புயலுக்குப் பலியானார்கள். சில நாட்களில், ஒரு கொடிய வியாதி அவரைத் தாக்கியது. (யோபு 1:13–19; 2:7, 8) இப்படித் துன்பத்திற்குமேல் துன்பம் வந்ததால், “கடவுளுடைய கரம் என்னை தாக்கிவிட்டது” என்று சொல்லி யோபு அழுது புலம்பினார். (யோபு 19:21, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) இன்றுள்ள அநேகர் நினைப்பதைப் போலவே, கடவுள்தான் தன்னை தண்டிக்கிறார் என யோபுவும் நினைத்தார்.
என்றாலும், யோபுவின் சோதனைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, கடவுள் அவரை ‘உத்தமனும் சன்மார்க்கனும், தமக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமானவன்’ என்று புகழ்ந்ததாக பைபிள் சொல்கிறது. (யோபு 1:8) கடவுளுடைய வாயிலிருந்து வந்த இந்தப் பாராட்டு, யோபுவுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கடவுள் கொடுத்த தண்டனை அல்ல என்பதைக் காட்டுகிறது.
சொந்த வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்த நேர்மையான ஆட்களைப் பற்றிய விவரப் பதிவுகள் பைபிளில் ஏராளம் உள்ளன. யோசேப்பு கடவுளுக்கு விசுவாசமாய் இருந்தபோதிலும், பல ஆண்டுகள் அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.(ஆதியாகமம் 39:10–20; 40:15) உண்மையுள்ள கிறிஸ்தவரான தீமோத்தேயு ‘அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக் குறைவால்’ அவதிப்பட்டார். (1 தீமோத்தேயு 5:23, NW) ஒருபோதும் தவறு செய்யாத இயேசு கிறிஸ்துவும்கூட ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்டு குரூரமாய்க் கொல்லப்பட்டார். (1 பேதுரு 2:21–24) ஆகவே, நமக்கு வரும் துன்பமெல்லாம் கடவுளிடமிருந்து வரும் தண்டனை என்று நினைப்பது தவறு. துன்பத்திற்குக் கடவுள் காரணர் அல்ல என்றால், வேறு யார் காரணம்?
நம் பிரச்சினைகளுக்குக் காரணம்
யோபுவுக்கு வந்த எல்லாத் துயரங்களுக்கும் பிசாசான சாத்தானே காரணமென பைபிள் காட்டுகிறது. (யோபு 1:7–12; 2:3–8) மேலும், இன்றைக்கு நமக்கு வரும் பிரச்சினைகளுக்கும் சாத்தானே மூலகாரணம் என்றும் அது சொல்கிறது. ஏனென்றால், “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று பைபிளில் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதி”யாக இருப்பதால், கெட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு அநேகரைத் தூண்டியிருக்கிறான், அதன் விளைவுதான் இன்று மண்டிக்கிடக்கும் துயரமும் வேதனையும்.—யோவான் 12:31; சங்கீதம் 37:12, 14. *
ஆனால், நமக்கு வருகிற எல்லாத் துன்பத்திற்கும் பிசாசுதான் காரணமென உடனே அவனைக் குற்றம்சாட்டிவிடக் கூடாது. ஆதாமிடமிருந்து வழிவழியாக வந்த பாவத்தின் காரணமாக நாம் குறைபாடுள்ளவர்களாய் இருக்கிறோம், அதனால் ஞானமற்ற தீர்மானங்களைச் செய்து அடிக்கடி பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறோம். (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) உதாரணமாக, ஒருவர் சரியாகச் சாப்பிடுவதில்லை, போதிய ஓய்வெடுப்பதில்லை என வைத்துக்கொள்ளுங்கள். அதன் விளைவாக அவருடைய உடல்நிலை மோசமானால், பிசாசை அவர் குற்றம்சாட்ட முடியுமா? இல்லை, தவறான தீர்மானம் எடுத்ததால் வந்த கசப்பான விளைவுகளைத்தான் அவர் அறுவடை செய்கிறார். (கலாத்தியர் 6:7) “மனிதனுடைய முட்டாள்தனம் அவன் வாழ்க்கையைச் சீரழிக்கிறது” என்ற பைபிள் நீதிமொழி எவ்வளவு உண்மை!—நீதிமொழிகள் 19:3, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
அதோடு, “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன;” இதன் காரணமாகவும் நம் வாழ்க்கை மேடையில் அநேக சோகக் காட்சிகள் அரங்கேறுகின்றன. (பிரசங்கி 9:11, NW) திடீரென ஒருவர் புயல் மழையில் சிக்கிக்கொள்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் லேசாக நனைவாரா அல்லது முழுக்க முழுக்க நனைவாரா என்பது மழை கொட்டும்போது அவர் எங்கே நின்றுகொண்டிருப்பார் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. அதைப் போலவே, ‘சமாளிப்பதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ மோசமான சூழ்நிலைகள் நொடிப்பொழுதில் துன்பமெனும் அடைமழையாக மாறிவிடலாம். (2 தீமோத்தேயு 3:1–5, NW) நாம் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறோம் என்பது அந்த வேளையையும் சூழ்நிலைகளையும் பொறுத்திருக்கிறது; அவற்றைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை. அப்படியானால், துன்பமெனும் அடைமழையில் காலமெல்லாம் நனைந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா?
எல்லாத் துன்பத்திற்கும் முடிவு விரைவில்
வெகு விரைவில் எல்லாத் துன்பத்திற்கும் யெகோவா தேவன் முடிவுகட்டுவார்; இந்தச் செய்தி மனதிற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! (ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 1:3; 21:3, 4) தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிற இந்த அற்புதமான எதிர்காலத்திற்காக வழிமீது விழிவைத்து காத்திருப்போமாக. இதற்கிடையில், நாம் துன்பங்களைச் சமாளிப்பதற்கு ‘தேவ வசனத்திலிருந்து’ நமக்குப் ‘போதனையையும்’ ‘ஆறுதலையும்’ அளித்து, கடவுள் நம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார். (ரோமர் 15:4; 1 பேதுரு 5:7) அந்த அற்புதமான எதிர்காலம் வரும்போது, அவருடைய பார்வையில் நல்மனம் படைத்த மக்கள் அனைவரும் புத்தம் புது பூமியில்—எவ்வித துன்பமும் இல்லாத உலகில்—முடிவில்லா வாழ்வை அனுபவித்து மகிழ்வார்கள்.—சங்கீதம் 37:29, 37. (g 1/09)
[அடிக்குறிப்பு]
^ “பைபிளின் கருத்து: சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?” என்ற கட்டுரையை பிப்ரவரி 2007 விழித்தெழு! இதழில் காண்க.
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ தப்புச் செய்கிறவர்களுக்கு மட்டும்தான் துன்பம் வருகிறதா?—யோபு 1:8.
◼ நம் பிரச்சினைகளுக்கெல்லாம் பிசாசுதான் காரணமா?—கலாத்தியர் 6:7.
◼ துன்பம் ஒழியவே ஒழியாதா?—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
“எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன.”—பிரசங்கி 9:11, NW