Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்கத் திணறும் தளிர்களுக்கு உதவி

படிக்கத் திணறும் தளிர்களுக்கு உதவி

படிக்கத் திணறும் தளிர்களுக்கு உதவி

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஸ்டீவனுக்கு, வாசிக்கவே வராது. வகுப்பில் டீச்சர் வாசிக்கச் சொல்வார்களென்று தெரிந்தால் போதும், அவனுக்கு வயிற்றுவலி வந்துவிடும்.

மரியாவுக்கு டீச்சர் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார்கள், ஆனால், அவளால் தெளிவாக எழுத முடியவில்லை; மணிக்கணக்காக உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருப்பாள்.

நோவாவுக்கு விழுந்து விழுந்து படித்தாலும் எதுவுமே மனதில் நிற்காது. பரிட்சையிலும் ஃபெயிலாகி விடுவான்.

ஸ்டீவன், மரியா, நோவா மூன்று பேருக்குமே டிஸ்லெக்ஸியா கோளாறு, அதாவது கற்றுக்கொள்ளும் கோளாறு இருக்கிறது. இந்தக் கோளாறு உள்ள பெரும்பாலோர் வாசிக்கத் தடுமாறுவார்கள். உதாரணமாக, ‘டிஸ்லெக்ஸியா’ கோளாறு உள்ளவர்கள் ஒரே மாதிரியான எழுத்துக்களைப் பார்த்தால் குழம்பிப் போவார்கள். ‘டிஸ்கிராஃபியா’ கோளாறு உள்ளவர்கள் எழுத முடியாமல் திணறுவார்கள். ‘டிஸ்கால்குலியா’ கோளாறு உள்ளவர்கள் கணக்குப் போட கஷ்டப்படுவார்கள். என்றாலும், இப்படிப்பட்ட கோளாறுகளால் அவதிப்படும் பெரும்பாலோருக்குப் புத்திக்கூர்மை நன்றாகவே இருக்கும்.

இப்படிப்பட்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் சில: தாமதமாகவே பேச ஆரம்பிப்பார்கள், அடுக்குமொழியைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுவார்கள், தப்புத்தப்பாக உச்சரிப்பார்கள், மழலைப் பேச்சு பேசுவார்கள், எழுத்துக்களையும் எண்களையும் கற்றுக்கொள்ளச் சிரமப்படுவார்கள், எளிய வார்த்தைகளைக்கூட உச்சரிக்கத் தடுமாறுவார்கள், ஒரேமாதிரி ஒலிக்கிற வார்த்தைகளைக் கேட்டால் குழம்பிவிடுவார்கள், ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் சொன்னால் கிரகித்துக்கொள்ள மாட்டார்கள். *

உங்கள் பிள்ளைக்கு உதவ . . .

கற்றுக்கொள்ளும் கோளாறு உங்கள் பிள்ளைக்கு இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? முதலில், அவர்களுடைய கண்களையும் காதுகளையும் பரிசோதனை செய்து ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். * அப்படி எந்தக் குறையும் இல்லையென்றால், உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொள்ளும் கோளாறு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அந்தக் கோளாறு இருப்பதை மருத்துவர் உறுதி செய்தால், உங்கள் பிள்ளைக்கு நீங்கள் மனதளவில் பக்கபலமாக இருப்பது அவசியம். ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: கற்றுக்கொள்ளும் கோளாறு இருப்பதால் உங்கள் பிள்ளைக்கு அறிவுத்திறன் இல்லையென்று அர்த்தமாகாது.

உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் தனியாக டியூஷன் சொல்லிக்கொடுப்பது போல் ஏதாவது விசேஷ ஏற்பாடு இருந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களோடு ஒத்துழைக்கும்படி ஆசிரியரையும் கேட்டுக்கொள்ளுங்கள். வகுப்பறையில் அவனை முதல் வரிசையில் உட்கார வைக்கும்படியும், பள்ளிப் பாடங்களை எழுதி முடிக்க அவனுக்கு அதிக நேரம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளுங்கள். ஆசிரியர் அவனுக்கு அறிவுரைகள் கொடுக்க வேண்டுமென்றால், அவற்றை எழுதிக் காட்டுவதோடு வாய்மொழியாகவும் சொல்ல வேண்டும். பரிட்சை வைக்கும்போது பதில்களை எழுதச் சொல்லாமல், ஒப்பிக்க வைக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் கோளாறு உள்ள பிள்ளைகளுக்குப் பொதுவாக மறதி அதிகம். பொருள்களை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். அதனால், வீட்டில் அவர்கள் பயன்படுத்துவதற்காக இன்னொரு ‘செட்’ பாட புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். ‘ஸ்பெல்-⁠செக்’ புரோகிராம் உள்ள கம்ப்யூட்டரை வகுப்பில் பயன்படுத்துவதற்கோ வீட்டுப்பாடம் செய்வதற்கோ கொடுக்கலாம்.

டிஸ்லெக்ஸியா கோளாறு உள்ள பிள்ளையைத் தினமும் வாசிக்க வையுங்கள்; ஒரேயடியாக இல்லாமல் கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு வாசிக்க வையுங்கள். பிள்ளையைச் சத்தமாக வாசிக்கச் சொல்வது நல்லது. அப்போதுதான், அவன் வாசித்தது எப்படி இருந்தது என்பதைச் சொல்லவும் அவனைத் திருத்தவும் உங்களால் முடியும். முதலில் நீங்கள் சத்தமாக வாசித்து அவனைக் கவனிக்கச் சொல்லுங்கள். அடுத்து, இரண்டு பேரும் சேர்ந்து சத்தமாக வாசியுங்கள். பின்பு, அவனை மட்டும் வாசிக்கச் சொல்லுங்கள். ஒவ்வொரு வரிக்குக் கீழேயும் அடிக்கோலை வைத்து நகர்த்திக்கொண்டே வாசிக்கும்படிச் செய்யுங்கள். கஷ்டமான வார்த்தைகளைக் குறித்து வைக்க ‘ஹைலைட்டரை’ பயன்படுத்த சொல்லுங்கள். இப்படிச் செய்வதற்குத் தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.

நடைமுறையான வழிகளில் அவனுக்குக் கணக்கு சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, மளிகை சாமான்களை அளந்து காட்டுவதன் மூலமும், தச்சுப் பட்டறையில் உள்ள அளவுகோலை வைத்து அளக்கக் கற்றுக்கொடுப்பதன் மூலமும், கடைக்கு அழைத்துச் செல்வதன் மூலமும் அவனுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கலாம். கிராஃப் ஷீட், வரைபடங்கள் பயன்படுத்தியும் சொல்லிக் கொடுக்கலாம். கையெழுத்து தெளிவாக இல்லாவிட்டால், அகலமான வரிகளுள்ள பேப்பரையும் தடிமனாக எழுதும் பென்சிலையும் வாங்கிக் கொடுக்கலாம். காந்தம் பொருத்தப்பட்ட எழுத்துக்களை வாங்கி வீட்டிலுள்ள தகரப் பொருள்களில் ஒட்ட வைத்தால், உங்கள் பிள்ளை அவற்றைப் படித்து உச்சரிக்கக் கற்றுக்கொள்வான்.

ADHD கோளாறையும் சமாளிக்க நல்ல வழிகள் உள்ளன. கவனக்குறைவால் அவதிப்படுகிற ஒரு பிள்ளையுடன் பேசுவதற்கு முன்பு முதலில் அவனுடைய கண்களைப் பாருங்கள், பிறகு பேசுங்கள். அமைதியான சூழலில் வீட்டுப்பாடம் செய்ய வழிசெய்து கொடுங்கள்; எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்ய வைப்பதற்குப் பதிலாக, விட்டுவிட்டுச் செய்ய வையுங்கள். அவனுடைய துடுக்குத்தனத்தைப் பிரயோஜனமாய்ப் பயன்படுத்திக்கொள்ள ஏதாவது வேலை கொடுங்கள். நாயை வெளியே அழைத்துச் செல்வது போன்ற வேலைகளைக் கொடுங்கள்.

வெற்றி நிச்சயம்

அவனிடம் ஏற்கெனவே இருக்கிற திறமைகளை இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்ள உதவுங்கள். அவன் செய்யும் சிறிய சிறிய சாதனைகளைக்கூட புகழ்ந்துப் பாராட்டி, பரிசு கொடுங்கள். பெரிய பெரிய வேலைகளாய் இருந்தாலும் அவனால் செய்ய முடிகிற அளவுக்குச் சின்னச்சின்னதாய்ப் பிரித்துக்கொடுங்கள்; அப்போதுதான் அவனுக்கும் சாதனை படைத்த உணர்வு உண்டாகும். அவன் செய்ய வேண்டிய வேலையைப் படிப்படியாகச் செய்து முடிக்க அதைப் படம் போட்டுக் காட்டுங்கள்.

வளரவளர அவன் நன்றாக வாசிக்க.. எழுத.. கணக்குப் போட.. கற்றுக்கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்கள் கவலைப்பட வேண்டாம், நல்ல ஊக்குவிப்பும் தகுந்த உதவியும் அளித்தால் அவன் நிச்சயம் கற்றுக்கொள்வான். ஆனால், மற்ற பிள்ளைகளைவிடச் சற்று வித்தியாசமாக, தாமதமாகக் கற்றுக்கொள்வான், அவ்வளவுதான். (g 1/09)

[அடிக்குறிப்புகள்]

^ கற்றுக்கொள்ளும் கோளாறுடன் சேர்ந்து பொதுவாகக் கவனக்குறைவு-⁠துடுக்குத்தனம் என்ற கோளாறும் (Attention Deficit Hyperactivity Disorder [ADHD]) வருகிறது. இந்தக் கோளாறு உள்ளவர்கள் துருதுருவென இருப்பார்கள், ஒரு நிமிஷம்கூட சும்மா இருக்க மாட்டார்கள், எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். பிப்ரவரி 22, 1997 விழித்தெழு! இதழில் பக்கங்கள் 5-⁠10-⁠ஐக் காண்க.

^ டிஸ்லெக்ஸியா கோளாறும் ADHD கோளாறும் ஒரு பையனுக்கு இருப்பதாக இந்தக் கட்டுரை விவரிக்கிறது. ஏனென்றால், இந்தக் கோளாறு பெண் பிள்ளைகளைவிட பையன்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

[பக்கம் 26-ன் பெட்டி]

சோதனையைச் சாதனையாய் மாற்றியவர்

“நான் ஏதாவது புத்தகத்தைப் புரட்டினால் எழுத்துக்கள் எல்லாம் இறைந்து கிடப்பதுபோல் இருக்கும், வரிகள் தாறுமாறாகத் தெரியும். ஏதோ அந்நிய மொழி புத்தகத்தைத் திறந்துவிட்டதுபோல் எனக்குத் தோன்றும். யாராவது சத்தமாக வாசித்தால் மட்டுமே வார்த்தைகள் எனக்குப் புரியும், இல்லையென்றால் ஒன்றுமே புரியாமல் முழித்துக்கொண்டிருப்பேன். சோம்பேறி, அடங்காதவன், பகல் கனவு காண்பவன் என்றெல்லாம் என் டீச்சர்கள் என்னைத் திட்டினார்கள். ஆனால், அவர்களுக்கு என் பிரச்சினை புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் ரொம்பக் கஷ்டப்பட்டு கவனித்தேன், கற்றுக்கொள்ள துடித்தேன். ஆனால், எழுதவோ படிக்கவோ எனக்குச் சுத்தமாக வரவில்லை. கணக்குப் பாடம் எனக்கு ஓரளவு புரிந்தது. சின்ன வயதிலேயே, விளையாட்டு, கைத்தொழில், படம் வரைவது போன்றவற்றைச் சட்டென்று கற்றுக்கொண்டேன். படிப்பது, எழுதுவது தவிர, எல்லாக் கைவேலைகளிலும் எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்தது.

“அதனால், பெரியவனான பிறகு, ஒரு கைத்தொழிலைத்தான் தேர்ந்தெடுத்தேன். யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய கட்டுமானத் திட்டங்களில் ஐந்து முறை வேலை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் ரொம்ப முயற்சியெடுத்து வாசித்ததால், படித்த விஷயங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருந்தன. இந்த ஞாபக சக்தி கிறிஸ்தவனான எனக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, கிறிஸ்தவ ஊழியத்தில் இது எனக்கு அதிக உதவியாக இருக்கிறது. அதனால்தான், எனக்கு இருக்கிற இந்தக் கோளாறை நான் சோதனையாகக் கருதாமல் அதைச் சாதனையாக மாற்றி வருகிறேன்.”​—⁠பீட்டர், டிஸ்லெக்ஸியா கோளாறுள்ளவர், யெகோவாவின் சாட்சிகளின் முழு நேர ஊழியர்.

[பக்கம் 25-ன் படம்]

கவனித்துக் கேட்கும் குறிப்புகளைப் படமாக வரைவதில் பிள்ளைகள் கில்லாடிகள்