Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி?

“ஆறு மாசமா நாங்க ரெண்டுபேரும் உயிருக்கு உயிரா காதலிச்சு வந்தோம்; அதுக்கு முன்னாடி அஞ்சு வருஷமா நண்பர்களா பழகி வந்தோம். திடீர்னு அவருக்கு என்ன தோனுச்சோ தெரியல, உறவை முறிச்சிக்க நெனச்சாரு, அதை என்கிட்ட எப்படி சொல்றதுன்னு அவருக்குத் தெரியல. அதுக்காக என்னோட பேசறதையே நிறுத்திட்டாரு. அத என்னால தாங்கிக்கவே முடியல. அவர் இப்படி செய்வாருன்னு கனவுலகூட நான் நினைச்சு பாக்கல. ‘நான் என்ன தப்பு பண்ணிணேன், அவர் ஏன் இப்படி பண்ணினாரு?’ன்னு நாள் முழுக்க யோசிச்சிட்டே இருப்பேன்.”—ரேச்சல். *

சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த உங்கள் காதல் படகை மூழ்கடித்துவிட்டு உங்களை கண்ணீர் கடலில் தள்ளிவிடுகிறது காதல் தோல்வி. இரண்டு வருடங்களாக காதல் வானில் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த ஜெஃப்பையும் சூசனையும் பற்றி இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். நாளுக்கு நாள் அவர்களுக்கு இடையே உணர்வுப்பூர்வமான ஒரு நெருக்கம் வேர்விட்டுக்கொண்டிருந்தது. நாள் முழுக்க ஒருவருக்கொருவர் எஸ்எம்எஸ் மூலம் அன்பு மொழிகள் பறிமாறிக்கொண்டார்கள். 24 மணிநேரமும் அவள் நினைவாகவே வாழ்ந்துகொண்டிருப்பதைக் காட்டுவதற்கு பல காதல் பரிசுகளை அள்ளி வழங்கினான் ஜெஃப். “என்ன வேலை இருந்தாலும் சரி, அதையெல்லாம் விட்டுவிட்டு நான் சொல்றத ஜெஃப் காதுகொடுத்து கேட்பாரு. என்னை நல்லா புரிஞ்சிக்க முயற்சி செஞ்சாரு. ‘நீதான் என்னுடைய உயிர்’ன்னு மூச்சுக்கு மூச்சுக்கு சொல்வாரு” என்று உருகுகிறாள் சூசன்.

கொஞ்ச காலத்துக்குள் ஜெஃப்பும் சூசனும் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாணமான பிறகு எங்கு குடியிருப்பார்கள் என்பதையும் திட்டமிட்டார்கள். ஒருசமயம் சூசனுடைய மோதிர அளவைக்கூட கேட்டு வைத்துக்கொண்டான் ஜெஃப். ஆனால், திடீரென ஒருநாள் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்! சூசன் தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது. அன்றாட வேலைகளை செய்து வந்தாலும் அவள் ஒரு நடைப்பிணமாகவே சுற்றி வந்தாள். “என் மனசுலேயும் உடம்புலேயும் எந்தச் சலனமுமில்லாமல் செத்தவ மாதிரி கிடந்தேன்” என்று அவள் சொல்கிறாள். *

ஏன் இந்த ரண வேதனை?

சூசனுடைய இடத்தில் நீங்கள் இருந்தால், ‘இந்தத் துயரத்திலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவேனா?’ என்று ஒருவேளை யோசிக்கலாம். (சங்கீதம் 38:6) உங்களுடைய வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. காதல் தோல்வி என்பது நெஞ்சைப் பிளக்கும் படுபயங்கரமான ஓர் அனுபவமாக இருக்கலாம். காதல் தோல்வியடைந்த சிலர், உயிர் பிரிந்த உடலாய் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒருவரை மரணத்தில் பறிகொடுத்தது போன்ற வலியை ஒருவேளை நீங்களும்கூட அனுபவிக்கலாம்:

மறுப்பு. ‘இது உண்மையாக இருக்க முடியாது. நாளைக்குக் கண்டிப்பா அவன் மனசுமாறி என்னிடம் வந்திடுவான்.’

கோபம். ‘அவன் எனக்குச் செய்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது!’

மனச்சோர்வு. ‘என்னை நேசிக்க இந்த உலகத்தில ஒரு ஜீவனும் இல்லை. என்னை யாருக்கும் பிடிக்காது.’

ஏற்றுக்கொள்ளுதல். ‘இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும். மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு, ஆனா இப்போ எவ்வளவோ பரவாயில்ல.’

தைரியமாக இருங்கள், உங்களாலும் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும். அதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்பது பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. அதாவது, நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு காலமாகப் பழகி வந்திருக்கிறீர்கள், . . . எந்தளவுக்கு பழகி இருக்கிறீர்கள் . . . என்பதையெல்லாம் பொறுத்திருக்கிறது. அதுவரைக்கும் உங்கள் காதல் தோல்வியை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

முன்னோக்கிச் செல்லுங்கள்

‘காலந்தான் காயத்திற்கு மருந்து’ என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். நீங்கள் இரண்டு பேரும் பிரிந்த சமயத்தில் இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கசப்பாகத் தொனித்திருக்கலாம். ஏனென்றால், காலம் கடந்தாலும் பிரச்சினைக்கு ஓரளவுதான் தீர்வு கிடைக்கும். உங்கள் உடலில் காயம் ஏற்பட்டுவிடுகிறது என வைத்துக்கொள்ளுங்கள், சில நாட்களில் அது சரியாகிவிடும், ஆனால், இப்போது அது உங்களுக்கு வலிக்கத்தான் செய்யும். இரத்தம் கசிவதை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். வலியை குறைக்க ஏதாவது மருந்து தடவ வேண்டும். அதில் தொற்று ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். மனதில் காயம் ஏற்பட்டாலும் இப்படித்தான். காயம் ஏற்பட்ட சமயத்தில் அது வலிக்கத்தான் செய்யும். ஆனால், அந்த வலியைக் குறைக்க, மனக்கசப்பு எனும் தொற்று ஏற்படாமல் இருக்க நீங்கள் சில காரியங்களைச் செய்ய வேண்டும். காலம் அதன் பங்கைச் செய்தாலும் நீங்களும் உங்கள் பங்கைச் செய்ய வேண்டும். எப்படி? பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்.

வாய்விட்டு அழுங்கள். உங்கள் மனதுக்குள் இருக்கும் பாரத்தை வெளியே கொட்டி அழுவதில் எந்தத் தவறுமில்லை. “அழ ஒரு காலமுண்டு . . . புலம்ப ஒரு காலமுண்டு” என்று பைபிளும் சொல்கிறது. (பிரசங்கி 3:1, 4) அழுதால் நீங்கள் ஒரு கோழை என்று அர்த்தமில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாவீதும்கூட—நெஞ்சுரம் படைத்த மாவீரனாய்த் திகழ்ந்தவரும்கூட“இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” என்று சொல்லி குமுறினார்.—சங்கீதம் 6:6.

உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். காதல் தோல்வியால் நீங்கள் உணர்ச்சி ரீதியில் மிகவும் துவண்டு போயிருப்பீர்கள். இழந்த சக்தியை மீண்டும் பெற உடற்பயிற்சியும் ஊட்டச்சத்துமிக்க உணவும் உங்களுக்குக் கைகொடுக்கும். ‘உடற்பயிற்சி நன்மை தரும்’ என்று பைபிளும் சொல்கிறது.—1 தீமோத்தேயு 4:8.

◼ உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தெந்த விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்?

.....

எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். ஒருபோதும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளா(ல்லா)தீர்கள்—முக்கியமாக இப்போது நீங்கள் இருக்கும் நிலைமையில். (நீதிமொழிகள் 18:1) உங்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டுகிறவர்களுடன் நேரம் செலவழித்தால் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?

.....

உங்கள் உணர்ச்சிகளை கடவுளிடம் கொட்டுங்கள். இந்த மாதிரியான சமயங்களில் ஜெபிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். காதலில் தோல்வியுற்ற சிலர், கடவுளே தங்களுக்கு மோசம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ‘எனக்கு ஒரு நல்ல துணை கிடைக்கணும்னு இராப்பகலா ஜெபம் செஞ்சேன். இப்போ இப்படி ஆயிடுச்சே!’ என்று சொல்லி அவர்கள் புலம்புகிறார்கள். (சங்கீதம் 10:1) ஆனால், கடவுள் என்ன விண்ணுலகத் திருமணத் தரகரா? அப்படி நினைப்பது சரியாக இருக்குமா? இல்லவே இல்லை. காதலன் உங்களை விட்டுப் பிரிவதற்கும் கடவுள் பொறுப்பாளி அல்ல. ஆனால் யெகோவா ‘உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’ என்பது மட்டும் நிச்சயம். (1 பேதுரு 5:7) அதனால் அவரிடம் ஜெபிக்கும்போது உங்கள் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டுங்கள். “உங்கள் விண்ணப்பங்களை . . . கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று பைபிள் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.—பிலிப்பியர் 4:6, 7.

காதல் தோல்வியால் வரும் மனவேதனையிலிருந்து மீண்டுவர நீங்கள் முயற்சி செய்கையில் குறிப்பாக என்ன விஷயங்களுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம்?

.....

அடுத்து என்ன செய்யலாம்

நீங்கள் மீண்டு வந்தபிறகு உங்கள் பழைய காதலில் என்ன நடந்ததென்று கவனமாக யோசித்துப் பார்க்கலாம். அதைச் செய்யுமளவுக்கு உங்கள் மனம் பக்குவமடைந்துவிட்டால் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் எழுதுங்கள். இப்படிச் செய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களைவிட்டுப் பிரியும்போது அவன் ஏதாவது காரணம் சொன்னானா? அந்தக் காரணம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைக் கீழே எழுதுங்கள்.

.....

வேறு என்ன காரணங்கள் இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

.....

நடந்ததை யோசித்துப் பார்க்கும்போது, இப்படி நடந்திருக்காமலிருக்க உங்கள் பங்கில் ஏதாவது செய்திருக்க முடியுமா? அப்படியென்றால் என்ன செய்திருக்க முடியும்?

.....

ஆன்மீக அல்லது உணர்ச்சி ரீதியில் முன்னேற இந்த அனுபவத்திலிருந்து ஏதாவது பாடம் கற்றுக்கொண்டீர்களா?

.....

அடுத்தமுறை யாருடனாவது நீங்கள் பழகும்போது என்ன செய்யலாமென நினைக்கிறீர்கள்?

.....

உங்கள் காதல் வாழக்கையில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் புயலில் சிக்கிக்கொள்ளும்போது கார் மேகங்களும் கொட்டும் மழையும்தான் உங்கள் கண்ணில் தெரியலாம். ஆனால், பிற்பாடு மழை ஓய்ந்து வானம் நிர்மலமாய்க் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்வீர்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கையும் கால ஓட்டத்தில் சகஜ நிலைக்குத் திரும்பியது. நீங்களும் சகஜ நிலைக்குத் திரும்புவீர்கள் என்பதில் உறுதியாய் இருங்கள்! (g 2/09)

இளைஞர் கேட்கின்றனர் தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இக்கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் நபர்கள் பெண்களாக இருந்தாலும், இதிலுள்ள குறிப்புகள் ஆண்களுக்கும் பொருந்தும்.

சிந்திப்பதற்கு

◼ உங்கள் பழைய காதலிலிருந்து உங்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

◼ எதிர்பாலாரைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?

◼ காதல் தோல்வியால் நீங்கள் தவித்தால் அதை யாரிடம் மனம்விட்டுப் பேசலாம்?

[பக்கம் 24-ன் பெட்டி]

யோசனை

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சூசன், சில வசனங்களை எழுதி எப்போது கைவசம் வைத்திருந்தாள். எப்போதெல்லாம் மனம் பாரமாக இருந்ததோ அப்போதெல்லாம் அவற்றை எடுத்து படித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். இந்தக் கட்டுரையில் சில வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்களும்கூட அவற்றில் சிலவற்றை எழுதி வைத்துக்கொள்ளலாம்.

[பக்கம் 23-ன் படம்]

காதல் தோல்வி என்பது உங்கள் உடலில் ஏற்படும் காயம் போல்—இப்போது வலித்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்