துணைக்குத் துரோகம் செய்வது என்றால் என்ன?
பைபிளின் கருத்து
துணைக்குத் துரோகம் செய்வது என்றால் என்ன?
பெரும்பாலோர் தங்களுடைய மணத்துணை கற்புநெறி தவறாமல் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். மணத்துணைகள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற கருத்தை பைபிளும் வரவேற்கிறது. “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காமல் இருங்கள்” என்று எபிரெயர் 13:4 சொல்கிறது.
மணமான ஒருவர் இன்னொருவருடன் உடலுறவு கொள்ளாதவரை துணைக்குத் துரோகம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியென்றால், அடுத்தவருடைய துணையுடன் உல்லாசமாய் இருப்பதுபோல் பகல் கனவு காண்பதைக் குறித்து என்ன சொல்வீர்கள்? எதிர்பாலாருடன் நெருக்கமாக உறவாடுவது ஏதாவதொரு விதத்தில் “கற்புக்கு களங்கம்” விளைவிக்கக்கூடுமா?
“உல்லாசக் கனவு” காண்பதில் தவறில்லை—உண்மையா?
செக்ஸ் என்பது மணவாழ்வில் இயல்பானது; மணவாழ்வின் ஓர் அங்கம் அது; ஆண்-பெண் இருவருக்குமே இன்பமும் திருப்தியும் அளிக்கும் ஒரு புனித உறவு என பைபிள் வர்ணிக்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19) ஆனால் நவீனகால நிபுணர்கள் பலர், மணமான ஒருவர் வேறொருவருடன் உல்லாசமாய் இருப்பதுபோல் கனவு காண்பது இயல்பானது, ஆரோக்கியமானதும்கூட என்று சொல்லி அந்தப் புனித உறவைக் கொச்சைப்படுத்துகிறார்கள். உங்கள் கருத்து என்ன? அந்தக் கனவுகளை நனவாக்காதவரை எந்தத் தவறுமில்லை என்று நினைக்கிறீர்களா?
உல்லாசக் கனவு காணும் ஒருவர் சுயநலவாதியாக மாறிவிடுகிறார்; தன்னுடைய ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ளவே துடிக்கிறார். தம்பதியருக்கு பைபிள் தரும் ஆலோசனைக்கு இது முரணாக இருக்கிறது. செக்ஸ் உறவுகள் பற்றி பைபிள் தெளிவான அறிவுரை கூறுகிறது: “மனைவிக்குத் தன் உடல்மீது அதிகாரம் இல்லை, அவளுடைய கணவனுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது; அதேபோல், கணவனுக்குத் தன் உடல்மீது அதிகாரம் இல்லை, அவனுடைய மனைவிக்கே அந்த அதிகாரம் இருக்கிறது.” (1 கொரிந்தியர் 7:4) நாம் உல்லாசக் கனவுகள் காணும்போது மனதில் காம இச்சைகள் வளர்கின்றன; ஆனால், பைபிள் தரும் இந்த அறிவுரையைப் பின்பற்றினால், செக்ஸ் என்பதை நமது சுயநல ஆசைகளை மட்டுமே திருப்தி செய்கிற ஒன்றாகக் கருதமாட்டோம். அப்போது கணவன் மனைவி இருவருமே மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பர்.—அப்போஸ்தலர் 20:35; பிலிப்பியர் 2:4.
திருமணமான ஒருவர் வேறொருவரைப் பற்றி உல்லாசக் கனவு காணும்போது அவருடன் செக்ஸில் ஈடுபடுவதுபோல் கற்பனை செய்கிறார். அவ்வாறு கற்பனை செய்வது, தனது துணையின் மனதில் ஆழமான காயங்களை ஏற்படுத்தும் ஒரு காரியத்தைச் செய்ய தன்னைத் தயார்படுத்துவதற்கு சமமாகும். அப்படியென்றால், உல்லாசக் கனவில் மிதப்பது துணைக்குத் துரோகம் செய்வதற்கு வழிவகுக்குமா? ஒரே வார்த்தையில் சொன்னால், வழிவகுக்கும். சிந்தைக்கும் செயலுக்கும் இடையே உள்ள தொடர்பை பைபிள் மிக அழகாகச் சொல்கிறது: “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது.”—யாக்கோபு 1:14, 15.
“காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:28) கற்பைக் களங்கப்படுத்தும் கனவுகளில் மிதப்பதைத் தவிர்த்தீர்கள் என்றால், உங்கள் ‘இருதயத்தைக் காத்துக்கொள்வீர்கள்,’ உங்கள் திருமண பந்தத்தையும் பாதுகாத்திடுவீர்கள்.—நீதிமொழிகள் 4:23.
ஏன் மனதளவிலும் கற்புநெறி காக்க வேண்டும்?
மணவாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் மணத்துணைக்கு உங்களை “மொத்தமாய் அர்ப்பணம்” செய்துவிட வேண்டும். (உன்னதப்பாட்டு 8:6, NW; நீதிமொழிகள் 5:) அப்படியென்றால் என்ன? எதிர்பாலாருடன் நட்பு வைத்துக்கொள்வது தவறில்லை என்றாலும், உங்களுடைய நேரத்தையும் கவனத்தையும் பலத்தையும் பெறும் முதலுரிமை உங்கள் துணைக்கு மட்டுமே இருக்கிறது. உங்கள் துணைக்கே உரியதை வேறு யாருக்குக் கொடுத்தாலும் அது துணைக்குத் “துரோகம்” செய்வதாகும். நீங்கள் உடலுறவில் ஈடுபடவில்லையென்றாலும் அது துரோகம்தான். 15-18 *
இப்படிப்பட்ட உறவுகள் எப்படி உருவாகலாம்? உங்கள் துணைவரைவிட ‘அவர்’ கவர்ச்சியானவராக, கனிவானவராகத் தோன்றலாம். வேலை செய்யுமிடத்திலோ மற்ற இடங்களிலோ அவரோடு நேரம் செலவிடும்போது, உங்கள் அந்தரங்க விஷயங்களை. . . மணவாழ்வின் ஏக்கங்களை. . . ஏமாற்றங்களை. . . பற்றியெல்லாம் அளவளாவ நேரிடலாம். உணர்ச்சி ரீதியில் அவருக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு உருவாகிவிடலாம். அவருக்கு நீங்கள் ஃபோன் போட்டு பேசினால், அல்லது அவருடன் ஆன்லைனில் ‘சாட்டிங்’ செய்தால் நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய விஷயங்கள் வீதிக்கு வந்துவிடலாம். அதனால், சில விஷயங்கள் தங்களுக்குள் மட்டுமே ‘ரகசியமாய்’ இருக்க வேண்டுமென மணத்துணைகள் எதிர்பார்ப்பது நியாயமே.—நீதிமொழிகள் 25:9.
ஒருவர்மீது உங்களுக்குக் காதல் உணர்வுகள் இருக்கும்போது, “எனக்கு அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் இல்லை” என்று சொல்லி நியாயப்படுத்தாதீர்கள்! ‘இதயம் வஞ்சகம் மிக்கது’ என்று எரேமியா 17:9 (பொது மொழிபெயர்ப்பு) முன்னெச்சரிக்கிறது. எதிர்பாலாருடன் நீங்கள் நெருங்கிப் பழகும்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கும் அவருக்கும் உள்ள உறவை நியாயப்படுத்துகிறேனா அல்லது இரகசியமாய் வைக்கிறேனா? நாங்கள் இருவரும் பேசுவது என் துணையின் காதில் விழுந்தால் நான் சங்கடப்படுவேனா? ஒருவேளை என் துணை என்னைப்போல் நடந்துகொண்டால் நான் எப்படி உணர்வேன்?’—மத்தேயு 7:12.
தகாத உறவுகளால் உங்கள் மணவாழ்வு வெடித்துச் சிதறலாம்; ஏனென்றால், உணர்ச்சி ரீதியில் ஆரம்பமாகும் நெருக்கம் கடைசியில் உடல்ரீதியில் போய் முடியலாம். “மணத்துணைக்குத் துரோகம்” செய்யும் எண்ணம் முதலில் “இருதயத்திலிருந்தே” பிறக்கிறது என்று இயேசு எச்சரித்தார். (மத்தேயு 15:19) ஒருவேளை அந்த உறவு துணைக்குத் துரோகம் செய்யுமளவுக்குப் போகாமல் இருக்கலாம். என்றாலும், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளான துணைக்குப் படுபயங்கரமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்; அதைச் சரிசெய்வது அவ்வளவு சுலபமல்ல. “என் வீட்டுக்காரர் இன்னொருத்தியோடு ஒருநாளைக்குப் பல தடவை ஃபோனில் இரகசியமாய் பேசுவது தெரியவந்தபோது என் இதயம் சுக்குநூறாய் உடைந்துவிட்டது. ‘எங்களுக்கு இடையே வேறெந்த உறவும் இல்லை’ என்று அவர் சொன்னபோது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இனிமேல் அவர்மீது எனக்கு நம்பிக்கை வருமா என்றுகூடத் தெரியவில்லை” என்று குமுறினார் கேரன் என்ற இல்லத்தரசி. *
எப்போதும் எதிர்பாலாருடன் அளவோடு வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் தவறான எண்ணங்கள் எழுந்தால் அசட்டை செய்துவிடாதீர்கள், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என நியாயப்படுத்தாதீர்கள். எதிர்பாலாருடன் நீங்கள் பழகுவது உங்கள் மணவாழ்வுக்கு உலை வைக்குமென நீங்கள் உணர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்; அவரோடுள்ள உறவைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது அந்த உறவையே துண்டித்துவிடுங்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 22:3.
ஓருடல் பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள்
பந்தங்களிலேயே திருமண பந்தம்தான் மிகவும் நெருக்கமான பந்தமாய் இருக்க வேண்டுமென்பது நம் படைப்பாளரின் விருப்பம். கணவனும் மனைவியும் “ஓருடலாய் இருக்க வேண்டுமென” அவர் கூறினார். (ஆதியாகமம் 2:24, NW) ஓருடல் பந்தம் என்பது பாலியல் நெருக்கத்தை மட்டுமே குறிப்பதில்லை. அது ஓர் உணர்வுப்பூர்வமான, நெருக்கமான பந்தம்; சுயநலம் கருதாத பந்தம். நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் இருக்கும்போதுதான் அந்தப் பந்தம் பலப்படும். (நீதிமொழிகள் 31:11; மல்கியா 2:14, 15; எபேசியர் 5:28, 33) இந்த உன்னத நெறிமுறைகளைப் பின்பற்றும்போது, மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உங்கள் துணைக்கு உண்மையாய் இருப்பீர்கள், உங்கள் மணவாழ்வும் செழிக்கும். (g 4/09)
[அடிக்குறிப்புகள்]
^ என்றாலும், துணையல்லாத ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது மட்டுமே விவாகரத்துக்குக் காரணமாக இருக்க வேண்டுமென பைபிள் சொல்வதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.—மத்தேயு 19:9.
^ நிஜப் பெயர்கள் அல்ல.
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ உல்லாசக் கனவுகள் செக்ஸுக்கு வழிவகுக்குமா?—யாக்கோபு 1:14, 15.
◼ உங்கள் துணை அல்லாத ஒருவரோடு நெருக்கமாக உறவாடினால் உங்கள் மணவாழ்வு பாதிக்கப்படுமா?—எரேமியா 17:9; மத்தேயு 15:19
◼ உங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?—1 கொரிந்தியர் 7:4; 13:8; எபேசியர் 5:28, 33.
[பக்கம் 19-ன் சிறுகுறிப்பு]
“காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.”—மத்தேயு 5:28