Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பறவைகள் கட்டிடங்களில் மோதுகையில்

பறவைகள் கட்டிடங்களில் மோதுகையில்

பறவைகள் கட்டிடங்களில் மோதுகையில்

அன்று பட்டப்பகலாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு மரங்கொத்திப் பறவை வானுயர்ந்த கட்டிடம் ஒன்றில் நேராகப் போய் மோதி கீழே ‘பொத்’ என்று விழுந்தது. பாவம், அங்கு கண்ணாடி இருந்தது அந்தப் பறவைக்குத் தெரியவில்லை. அந்தப் பக்கமாகப் போன ஒரு நல்ல மனுஷன், பொறிகலங்கிய அந்த மரங்கொத்தியைப் பார்த்தார்; அது பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதையே கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மரங்கொத்தி ‘கீச்கீச்’ என்று கத்தியது; பின்பு எழுந்து நின்று, சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு, அங்கிருந்து பறந்து போனது. *

ஆனால், கட்டிடங்களில் மோதும் எல்லாப் பறவைகளும் இதுபோல் பிழைத்துக்கொள்ளாதது பரிதாபமான விஷயம். வீடுகள்மீது மோதுகிற பறவைகளில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி உயிரிழந்துவிடுகின்றன. ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் மட்டுமே வருடாவருடம் 10 கோடிக்கும் அதிகமான பறவைகள் பலவித கட்டிடங்களில் மோதி இறந்துபோவதாக அடூபன் சொஸைட்டி தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 கோடியாகக்கூட இருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆனால், பறவைகள் ஏன் கட்டிடங்களில் போய் மோதிக்கொள்கின்றன? அவற்றின் உயிரைப் பாதுகாக்க ஏதாவது செய்ய முடியுமா?

“கொலையாளிகள்”—கண்ணாடியும் கண்கூசும் ஒளிவிளக்குகளும்

கண்ணாடிகள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தானவை. கண்ணாடி ஜன்னல்கள் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்போது, படுவேகமாகப் பறந்து வரும் அப்பாவிப் பறவைகள் நேராய் அவற்றில் போய் மோதிக்கொள்கின்றன. ஏன்? அவை கண்ணாடியின் மறுபக்கம் உள்ள செடிகொடிகளையோ வானத்தையோ பார்த்து, நிற்காமல் பறக்கின்றன; அல்லது, அறைக்கு உள்ளே இருக்கிற அலங்காரச் செடிகளைக் கண்டு அவற்றில் போய் உட்காரப் பார்க்கின்றன.

பிரதிபலிக்கிற கண்ணாடியாலான ஜன்னல்களும் ஆபத்தானவைதான். ஏனென்றால், உலோகப் பூச்சுள்ள அந்தக் கண்ணாடி உள்ளே இருப்பவற்றைக் காட்டாமல் வெளியே உள்ளவற்றையே பிரதிபலிக்கிறது. ஆகவே, பறவைகள் அந்தக் கண்ணாடி இருப்பதைக் கவனிக்காமல் அதில் தெரியும் சுற்றுப்புறத்தையோ வானத்தையோ பார்த்து, வழக்கம்போல் சோக முடிவைச் சந்திக்கின்றன. பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் சரணாலயங்களிலும்கூட இதே கதைதான்! அங்கு பார்வையாளர்களுக்கான கோபுரங்களிலும் மையங்களிலும் இருக்கிற கண்ணாடிகளிலேயே பல பறவைகள் மோதி இறந்துபோயிருக்கின்றன. பறவையியல் வல்லுநரும் உயிரியல் பேராசிரியருமான டாக்டர் டானியல் க்ளெம் ஜூனியர் இப்படிச் சொல்கிறார்: ‘பறவைகளின் இருப்பிடங்களை மனிதன் அழிப்பதால் கணக்குவழக்கில்லாத பறவைகள் சாகின்றன; இதுதவிர, ஜன்னல்களில் மோதுவதால்தான் மிக அதிகமான பறவைகள் இறக்கின்றன.’

சில பறவைகள் மற்ற பறவைகளைவிட அதிகமாக இந்த அபாயத்தில் சிக்கிக்கொள்கின்றன. உதாரணத்திற்கு, இடம் பெயருகிற பாடும் பறவைகளில் பெரும்பாலானவை இரவில்தான் பறந்து போகின்றன; அதோடு, ஓரளவுக்காவது நட்சத்திரங்களைப் பார்த்துத்தான் பயணிக்கின்றன. இதனால், உயரமான கட்டிடங்களிலுள்ள கண்கூசும் ஒளிவிளக்குகளைக் கண்டு அவை குழம்பிப்போகலாம். சொல்லப்போனால், சில பறவைகள் திக்குத் தெரியாமல் இங்குமங்கும் பறந்து திரிந்து கடைசியில் சக்தியில்லாமல் சுருண்டு விழுந்துவிடுகின்றன. இரவு நேரங்களில் மழை பெய்யும்போதோ, மேகமூட்டமாக இருக்கும்போதோகூட பறவைகளுக்குத் திண்டாட்டம்தான். அந்நேரங்களில் பறவைகள் தாழப் பறப்பதால் அவை உயரமான கட்டிடங்களில் மோதும் ஆபத்து அதிகம்.

பறவைகளின் எண்ணிக்கை என்னாகிறது?

அமெரிக்காவில், இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ளது சிகாகோ நகரம். இங்குள்ள ஒரேவொரு உயரமான கட்டிடத்தால், இடப்பெயர்ச்சி காலத்தில் சுமார் 1,480 பறவைகள் இறந்துபோனதாக ஓர் அறிக்கை காட்டுகிறது. அடுத்தடுத்த 14 வருடங்களில், அந்த ஒரே கட்டிடத்தால் சுமார் 20,700 பறவைகள் பலியாகியிருக்கின்றன. அந்தக் கட்டிடத்தில் மோதிய பறவைகளின் மொத்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதைச் சொல்லவே வேண்டாம். அதுமட்டுமல்ல, அவை “புறா, கடற்பறவை, வாத்து” போன்ற பறவைகள் அல்ல, . . . ஆனால் அழிந்துவரும் பட்டியலிலுள்ள பறவைகள்” என்கிறார், “வெளிச்சத்தின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வு திட்டத்தின்” இயக்குநரான மைக்கேல் மெஷர்.

எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவில் சமீப ஆண்டின்போது, கிட்டத்தட்ட 30 ஸ்விஃப்ட் கிளிகள் கண்ணாடியில் மோதி இறந்தன; அந்த இனத்தில் 2,000 கிளிகளே மீந்திருக்கின்றன. அமெரிக்க அருங்காட்சியகங்களில் மாதிரிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாக்மான்ஸ் வார்பளர் என்ற காட்டு இசைக்குருவிகள் பல, ப்ளோரிடாவிலுள்ள ஒரேவொரு கலங்கரைவிளக்கத்தில் மோதி உயிரிழந்தவை; இந்தப் பறவையினம் இப்போது அழிந்தே போயிருக்கலாம்.

கட்டிடங்களில் மோதியும் உயிர்தப்புகிற பறவைகளில் அநேகம் பலத்த காயமடைகின்றன அல்லது பலவீனமடைகின்றன. இப்படிச் சம்பவிப்பது இடம் பெயருகிற பறவைகளுக்கு முக்கியமாய் ஆபத்தானது. ஏனென்றால், அவை காயமடைந்து கட்டிடங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் விழுந்தால் பட்டினியில் மடிந்துவிடும் அல்லது மிருகங்களுக்கு இரையாகிவிடும்; சில மிருகங்கள் இப்படிப்பட்ட அரிய விருந்துக்காகவே காத்துக்கிடக்கின்றன.

பறவைகளைப் பாதுகாக்க முடியுமா?

பறவைகள் கண்ணாடியில் மோதாதிருக்க, கண்ணாடி இருப்பதைக் கவனிக்க வேண்டும், அது ஒரு திடப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்காகச் சிலர், படங்களையோ ஸ்டிக்கர்களையோ பளிச்சென்ற வேறு பொருள்களையோ ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டிவைத்திருக்கிறார்கள்; தங்களால் வெளியில் இருப்பதை முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அப்படிச் செய்திருக்கிறார்கள். நாம் என்ன படங்களை அல்லது ஸ்டிக்கர்களை ஒட்டுகிறோம் என்பதைவிட அவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்கிறார் க்ளெம். அவருடைய ஆராய்ச்சிப்படி, அவை ஐந்து சென்டிமீட்டர் அகலத்திற்கும் பத்து சென்டிமீட்டர் உயரத்திற்கும் அதிகமாய் இருக்கக்கூடாது.

இரவில் இடம் பெயர்ந்து செல்கிற பறவைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? “விளக்குகளை அணைத்துவிட்டாலே போதும், . . . இரவு வேளைகளில் பறவைகள் கட்டிடங்களில் மோதுவதைப் பெருமளவு தடுத்துவிடலாம்” என்று சொல்கிறார் சூழியல் ஆராய்ச்சி ஆலோசகர் லெஸ்லி ஜே. இவான்ஸ் ஆக்டன். சில நகரங்களில், இரவில் சில மணிநேரங்களுக்கு, வானுயர்ந்த கட்டிடங்களிலுள்ள அலங்கார விளக்குகளின் ஒளி குறைக்கப்படுகிறது அல்லது அந்த விளக்குகள் அணைக்கப்படுகின்றன; முக்கியமாக, பறவைகள் இடம் பெயரும் காலத்தில் அவ்வாறு செய்யப்படுகின்றன. மற்ற சந்தர்ப்பங்களில், உயரமான கட்டிடங்களின் ஜன்னல்களில் வலைகள் பொருத்தப்படுகின்றன. ஆகவே, கண்ணாடியில் தெரியும் வானத்தைப் பார்த்துப் பறவைகள் குழம்பிப்போக வாய்ப்பில்லை.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள், பறவைகளின் சாவு எண்ணிக்கையை 80 சதவீதம்வரை குறைக்கலாம்; இப்படி, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பறவைகளின் உயிரைக் காப்பாற்றலாம். ஆனாலும், அடிப்படைப் பிரச்சினை தீராதெனத் தோன்றுகிறது; ஏனென்றால், விளக்குப் பிரியர்களுக்கும் கண்ணாடிப் பிரியர்களுக்கும் இந்த உலகில் பஞ்சமே இல்லை. ஆகவே, அடூபன் சொஸைட்டியைப் போல் பறவைகளின் நலனுக்காகப் பாடுபடும் அமைப்புகள், இயற்கை உலகைக் கட்டிக்காக்கும்படி கட்டிடக் கலைஞர்களிடமும் நிபுணர்களிடமும் பக்குவமாக எடுத்துச் சொல்ல முயற்சி செய்கின்றன. (g 2/09)

[அடிக்குறிப்பு]

^ காயமடைந்த பறவைகளுக்கு உதவுவது கொஞ்சம் ஆபத்தானது; ஏனென்றால், நாம் உதவ முயலுகிறோமென்று அவற்றிற்குத் தெரியாது. அதுமட்டுமல்ல, சில பறவைகள் நோய்க்கிருமிகளைச் சுமந்து செல்கின்றன; அவை மனிதர்களைத் தொற்றலாம். ஆகவே, காயமடைந்த ஒரு பறவைக்கு நீங்கள் உதவ விரும்பினால், கையுறைகளை அணியுங்கள்; பின்பு, கைகளை நன்றாகக் கழுவுங்கள். அந்தப் பறவையால் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்றோ அது உங்களைத் தாக்கிவிடும் என்றோ நீங்கள் நினைத்தால் அதற்கு அருகே போகாதீர்கள். தேவைப்பட்டால், வல்லுநர்களின் உதவியை நாடுங்கள்.

[பக்கம் 30-ன் பெட்டி]

பறவைகளெல்லாம் எங்கே?

அமெரிக்காவில் மனிதர்களால் வருடாவருடம் மடிகிற பறவைகளின் புள்ளிவிவரம்

◼ தொலைத்தொடர்பு கோபுரங்கள்—4 கோடி

◼ பூச்சிக்கொல்லிகள்—7 கோடியே 40 லட்சம்

◼ வீட்டுப் பூனைகள்—36 கோடியே 50 லட்சம்

◼ கண்ணாடி ஜன்னல்கள்—10 கோடிமுதல் 100 கோடிவரை

◼ இருப்பிடங்கள் அழிக்கப்படுதல்—அறியப்படவில்லை, ஆனாலும் இதுவே மிகப் பெரிய காரணமாக இருக்கலாம்

[பக்கம் 30-ன் படம்]

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டுமே குறைந்தது 10 கோடி பறவைகள் ஜன்னல்களில் மோதி உயிர்விடுகின்றன

[படத்திற்கான நன்றி]

© Reimar Gaertner/age fotostock