Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘மூச்சுவிடக்கூட நேரமில்லை!’

‘மூச்சுவிடக்கூட நேரமில்லை!’

‘மூச்சுவிடக்கூட நேரமில்லை!’

ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிற பளுதூக்கும் வீரர்கள் தினந்தினம் சாதனை படைப்பதில்லை. அவர்கள் சின்னச் சின்ன எடைகளைத் தூக்கிப் பயிற்சி செய்துதான் கடைசியில் பெரிய எடையைத் தூக்குகிறார்கள். சக்திக்கு மிஞ்சிய எடைகளைத் தூக்குவதற்கு அவர்கள் சதா முயற்சி செய்தால் அவர்களுடைய தசைகளும் மூட்டுகளும் மிகவும் தளர்ந்துபோய்விடலாம்; பளுதூக்கவே முடியாதளவுக்கு அவர்கள் முடங்கிவிடலாம்.

அதுபோலவே, நீங்களும் பள்ளியில் ஓய்வுஒழிச்சல் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கலாம். கஷ்டமான வீட்டுப் பாடங்கள் அல்லது பரிட்சை என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், இன்னும் அதிகமாய் உங்களை வருத்திக்கொள்ள நீங்கள் தயாராய் இருப்பீர்கள், அப்படிச் செய்யவும் உங்களால் முடியும். * ஆனால், சதா சர்வகாலமும் பாடம், படிப்பென்றே நீங்கள் இருந்தால் என்ன ஆகும்? சாப்பாடும் இறங்காது, தூக்கமும் இருக்காது. இப்படியே உழன்றுகொண்டிருந்தால் சுகமில்லாமல் சுருண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், நீங்கள் ஏற்கெனவே அந்த நிலையில் இருப்பதாக நினைக்கலாம். *

தீராத ஹோம்வர்க்

“பெரிய கிளாஸுக்குப் போகப் போக ஹோம்வர்க் அதிகமாகிக்கொண்டே போகிறது, கஷ்டமாகிக்கொண்டும் போகிறது. அதைச் செய்து முடிப்பதற்குள் பொழுதே விடிந்துவிடுகிறது. எனக்கு மற்ற வேலையும் எத்தனையோ இருக்கிறது, ஆனால் ஹோம்வர்க்கை முதலில் முடித்தாக வேண்டும்; ஏனென்றால் அடுத்த நாளே டீச்சரிடம் காட்ட வேண்டும். சில சமயம் டென்ஷனில் எனக்குக் கைகால் உதறும்” என்று புலம்புகிறாள் ஜப்பானைச் சேர்ந்த 15 வயது மாணவி ஹீரோகோ. * ரஷ்யாவைச் சேர்ந்த 14 வயது மாணவியான ஸ்வியட்லானா என்ன சொல்கிறாள் தெரியுமா? “இப்போதெல்லாம் ஹோம்வர்க்கை முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. வருடாவருடம் பாடங்கள் கூடிக்கொண்டே போகின்றன, டீச்சர்களும் எக்கச்சக்கமான ஹோம்வர்க்கைக் கொடுத்துவிடுகிறார்கள். அதுமட்டுமா, ஒவ்வொரு டீச்சருக்கும் அவர்கள் நடத்துகிற பாடம்தான் முக்கியம், அவர்கள் கொடுக்கிற ஹோம்வர்க்கைத்தான் நாங்கள் முதலில் முடிக்க வேண்டும். ஆகமொத்தத்தில் திண்டாடுவது நாங்கள்தான். எல்லாவற்றையும் முடிப்பதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது.”

டீச்சர்கள் ஏன் மூட்டை மூட்டையாக ஹோம்வர்க் கொடுக்கிறார்கள்? பிரேசிலைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஸில்பர்ட்டோ சொல்வதைக் கேளுங்கள்: “‘இன்று எங்கு பார்த்தாலும் வேலைக்குப் போட்டா போட்டி நடக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், அதுக்காகத்தான் நாங்கள் இத்தனையும் செய்கிறோம்’ என்று டீச்சர்கள் சொல்கிறார்கள்.” அது ஒருவிதத்தில் நியாயமாக இருந்தாலும், ஒரு வண்டி ஹோம்வர்க்கைச் செய்ய வேண்டுமென்ற கவலையே உங்களை உருக்கிவிடலாம். ஆனாலும் இதைச் சமாளிக்க வழியிருக்கிறது; முதலாவதாக, ஹோம்வர்க் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்; அடுத்ததாக, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

அதிகமதிகமான ஹோம்வர்க் கொடுக்கப்படும்போது, வாழ்க்கையில் முன்னுக்குவர உங்களுக்கு அளிக்கப்படுகிற பயிற்சியாக அதைக் கருதுங்கள். ஹோம்வர்க்கைச் செய்யச் செய்ய தீரவே தீராது என நீங்கள் நினைக்கலாம்; ஆனால், உங்கள் பள்ளிப் படிப்பு ஒருநாள் தீர்ந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், பட்ட பாடுகளுக்கெல்லாம் கைமேல் பலன் கிடைத்ததை நினைத்து ஆனந்தப்படுவீர்கள். ஆம், பள்ளியில் நீங்கள் பட்ட ‘பிரயாசத்தின் பலனை அநுபவிப்பீர்கள்.’—பிரசங்கி 2:24.

சுயக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இருந்தால் சோர்வைப் பெருமளவு குறைக்க முடியும். ( “சோர்வைக் குறைக்க நடைமுறை வழிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நீங்கள் எப்போதுமே ஹோம்வர்க்கை உடனுக்குடன் செய்து கொடுத்தால் டீச்சர்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை வரும், உங்களுக்கு உதவ வேண்டுமென்ற ஆசையும் வரும். உங்கள் டீச்சரிடம் அப்படிப்பட்ட நல்ல பெயரை நீங்கள் வாங்கியிருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, ஏதோவொரு காரணத்திற்காக ஹோம்வர்க்கை நேரத்துக்கு முடிக்க முடியாதென நீங்கள் முன்னதாகவே டீச்சரிடம் போய்ச் சொன்னால் அவர் உங்களுக்குச் சலுகை காட்டுவார், அல்லவா? கடவுளுடைய ஊழியர்களில் ஒருவரான தானியேல், ‘உண்மையுள்ளவராக இருந்தபடியால் . . . யாதொரு குற்றமும் குறைவும் [அவரிடம்] காணப்படவில்லை.’ அவர் தன்னுடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்ததால் ராஜாவின் பாராட்டையும் நம்பிக்கையையும் பெற்றார். (தானியேல் 6:4) நீங்கள் கண்ணும் கருத்துமாக ஹோம்வர்க் செய்தால் தானியேலைப் போல நல்ல பெயரெடுக்க முடியும், தேவைப்படும்போது சலுகையும் பெற முடியும்.

வகுப்பில் கவனமாய்க் கேட்டு, வீட்டில் ஹோம்வர்க்கைக் கரெக்டாகச் செய்தால் போதுமா? டென்ஷன் பறந்துவிடுமா? அப்படிச் சொல்ல முடியாது. ஏனென்றால், நிறைய மார்க் வாங்க வேண்டுமென்ற ஆசையால் உங்களுக்கு ஓரளவு டென்ஷன் இருக்கத்தான் செய்யும். அதனால், ஹோம்வர்க் செய்யாமல் தப்பித்துக்கொள்ள வழி தேடுவதற்குப் பதிலாக, இன்னும் நன்றாகப் படிக்கவும் முன்னேறவும் விரும்புவீர்கள்.

இப்படிப்பட்ட டென்ஷன் இருப்பது நல்லதுதான், இது தேவையும்கூட. ஆனால், தேவையற்ற டென்ஷனும் வரலாம், அது உங்களுக்குக் கெடுதலையே விளைவிக்கும்.

மூச்சுவிடக்கூட நேரமில்லை

கார் ஓட்டுகிற ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் எப்போதுமே காரை மின்னல் வேகத்தில் ஓட்டுகிறார். சிக்னலில் நிற்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்டென பிரேக் போட்டு ‘கிரீச்’ என்று வண்டியை நிறுத்துகிறார். மறுபடியும் ஆக்சிலரேட்டரை அழுத்துகிறார், வண்டி பறக்கிறது. காரை அவர் இந்தப் பாடுபடுத்தினால் கடைசியில் அதற்கு என்னவாகும்? அதன் என்ஜினும் மற்ற பாகங்களும் பாழாகிவிடும். ஏன், அதற்கு முன்பேகூட அந்தக் கார் பயங்கர விபத்தில் சிக்கி அப்பளமாய் நொறுங்கிவிடும்.

அவரைப்போல்தான் அநேக மாணவர்கள் நடந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திலும்சரி மற்ற நேரத்திலும்சரி, அவர்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் படாத பாடுபடுத்துகிறார்கள். டெனிஸ் கிளார்க் போப் என்ற பெண்மணி, தான் சந்தித்த பல மாணவர்களைப் பற்றி பள்ளியில் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பெரியவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையைத் துவங்குவதற்கு ஓரிரு மணிநேரம் முன்பே மாணவர்கள் தங்கள் பள்ளியில் படிக்கத் துவங்கிவிடுகிறார்கள். பள்ளிக்குப் பிறகு, கால்பந்து பயிற்சி, நடன ஒத்திகை, ஆலோசனைக் கூட்டம், பகுதிநேர வேலை, ஹோம்வர்க் என எல்லாவற்றையும் முடித்துவிட்டுப் படுப்பதற்கு இரவு வெகு நேரம் ஆகிவிடுகிறது.”

மாணவர்கள் இராப்பகலாக இப்படிப் பம்பரமாய் சுழன்றால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். அவர்கள் தங்களையே ரொம்ப வருத்திக்கொள்வதால், வயிற்றுக் கோளாறு, தலைவலியென அவதிப்படலாம். எப்போது பார்த்தாலும் அவர்களைக் களைப்பும் சோர்வும் வாட்டுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோய் அவர்கள் வியாதிப்படலாம். அப்போது, அவர்களுடைய ஓட்டமெல்லாம் திடீரென ஓய்ந்துவிடுகிறது; உடல் தேறி பழையபடி ஓடுவதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது. இதுபோல் உங்களுக்கும் நடந்திருக்கிறதா?

சிறந்த லட்சியங்களுக்காகக் கடினமாய் உழைப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் எவ்வளவு திடகாத்திரமாய் இருந்தாலும் ஓரளவு வேலைகளைத்தான் ஒரு நாளில் செய்ய முடியும். “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருக்கட்டும்” என்ற முத்தான அறிவுரையை பைபிள் தருகிறது. (பிலிப்பியர் 4:5) ‘நியாயமானவர்களாய்’ இருப்பது, “மிதமிஞ்சிப் போகாதவர்களாகவும்,” “நிதான புத்தியுள்ளவர்களாகவும்” இருப்பதைக் குறிக்கிறது. நியாயமானவர் தனக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் தீர்மானங்களை எடுக்க மாட்டார். அவர் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார். இந்த உலகில் அப்படி நடந்துகொள்வது அதிமுக்கியம். ஆகவே, நீங்களும் நியாயமானவர்களாய் நடந்துகொள்ளுங்கள்; நீங்கள் ஏற்கெனவே செய்து வருகிறவற்றில் முக்கியமில்லாதவற்றை விட்டுவிடுங்கள். அப்போது உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வீர்கள்.

சொத்துகளைக் குவிக்க

நியாயமாய் நடந்துகொள்வது லட்சியங்களை எட்டுவதற்குரிய ஏணியாய் இல்லாமல் முட்டுக்கட்டையாய் இருப்பதாக சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி காண, கைநிறைய சம்பாதிப்பதும் சொத்துசுகம் சேர்ப்பதுமே வழியென அவர்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எண்ணம் இளைஞர்களின் மனதில் குடிகொண்டிருப்பதை, முன்னர் குறிப்பிடப்பட்ட போப் என்ற பெண்மணி அவர்களிடம் பேசித் தெரிந்துகொண்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அதிக நேரம் தூங்க வேண்டும், உடம்பைத் தேற்றிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் மாணவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், பள்ளி, வீடு, வேலை என மூச்சுவிட நேரமில்லாமல் அல்லாடிக்கொண்டிருப்பதால் இவர்களுடைய ஆசை நிறைவேறுவதில்லை. அதேபோல், நண்பர்களோடு சேர்ந்து நிறைய நேரத்தைச் செலவிடவும், வேறு காரியங்களைச் செய்யவும், சில நாட்கள் ஓய்வெடுக்கவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், இதையும் செய்துவிட்டு, நல்ல மார்க்கும் வாங்க வேண்டுமென்றால் அது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கதைதான் என்று அவர்களில் பலர் நினைக்கிறார்கள். ஏதோ ஒன்றைத்தான் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பதால் தற்கால சந்தோஷத்திற்குப் பதிலாக எதிர்கால சந்தோஷத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.”

படிப்பே உலகம் என்றிருக்கிற மாணவர்களே, மாமேதையான இயேசு கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தைகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: “ஒருவர் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துபோனால் என்ன பிரயோஜனம்? உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?” (மத்தேயு 16:26) ஆகவே, இந்த உலகில் நாம் அடைய விரும்புகிற லட்சியங்களுக்காக, நம் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கடவுளோடுள்ள பந்தத்தையும் பறிகொடுப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லையென அவர் எச்சரித்தார்.

உளவியல் வல்லுனரான மாடலன் லவைன் என்பவர், அந்தஸ்தின் விலை என்ற தன்னுடைய ஆங்கிலப் புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “பணம், படிப்பு, அதிகாரம், அந்தஸ்து, சொத்துசுகம் என எதுவுமே சந்தோஷத்தையோ நிம்மதியையோ தராது.” முன்னர் குறிப்பிடப்பட்ட போப் என்ற பெண்மணி இவ்வாறு சொன்னார்: “எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்க ஆலாய்ப் பறக்கிற எத்தனையோ மாணவர்களையும் பெற்றோர்களையும் நான் பார்த்திருக்கிறேன்; வாழ்வில் வெற்றிகாண இதுவே வழியென அவர்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். . . . உண்மையில், ஆரோக்கியமான உடலையும் உள்ளத்தையும் சிந்தையையும் பெறவே நாம் பெருமுயற்சி செய்ய வேண்டும்.”

காசு பணத்தைவிடவும் முக்கியமான சில விஷயங்கள் உண்டு. அவை: ஆரோக்கியம், சந்தோஷம், நல்மனசாட்சி, கடவுளுடன் பந்தம். அவையெல்லாம் கடவுள் தரும் மதிப்புமிக்க பரிசுகள். பணத்தையும் புகழையும் தேடுவதில் அவற்றையெல்லாம் தொலைத்துவிட்டீர்களென்றால் மறுபடியும் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம். இதை நீங்கள் மனதில் வைத்து, இயேசு என்ன கற்பித்தாரெனக் கவனியுங்கள்: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது.மத்தேயு 5:3.

இந்த உண்மையைப் பல இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நன்கு படித்தாலும், பள்ளியில் கொடிகட்டிப் பறப்பதோ வாழ்க்கையில் கோடிகோடியாகக் குவிப்பதோ நிரந்தர சந்தோஷத்தைத் தராது என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த லட்சியங்களை அடையத் துடிப்பது, தேவையில்லாத டென்ஷனை விலைகொடுத்து வாங்குவதாக இருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியை’ திருப்தி செய்துகொள்வதுதான் சந்தோஷமான எதிர்காலத்திற்கு அடிப்படை என்பதைக் கற்றிருக்கிறார்கள். நீங்களும் அவ்வாறு செய்து சந்தோஷம் காண விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்கள் அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராய் இருக்கிறார்கள். (g 4/09)

[அடிக்குறிப்புகள்]

^ நல்ல மார்க் வாங்காத அல்லது சரியாகப் படிக்காத மாணவர்கள் சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு, “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் பள்ளியில் இன்னும் நன்றாக படிக்க முடியுமா?” என்ற கட்டுரையை மார்ச் 22, 1998 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 20-22-ல் காண்க.

^ இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு, “இளைஞர் கேட்கின்றனர் . . . இவ்வளவு அதிக வீட்டுப்பாடத்தைப்பற்றி நான் என்ன செய்யமுடியும்?” என்ற கட்டுரையை ஜூலை 8, 1993 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 13-15-ல் காண்க.

^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]

நீங்கள் எவ்வளவு திடகாத்திரமாய் இருந்தாலும் ஓரளவு வேலைகளைத்தான் ஒரு நாளில் செய்ய முடியும்

[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]

உங்களைப் படைத்த கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதே தலைசிறந்த கல்வி

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

 சோர்வைக் குறைக்க நடைமுறை வழிகள்

❑ பேப்பர்களையும் நோட்டுப் புத்தகங்களையும் குப்பை மாதிரி போட்டு வைத்திருப்பதால் ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதிலேயே உங்கள் நேரமெல்லாம் வீணாகிறதா? எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த சிலருக்கு உதவி தேவைப்படுகிறது. ஆகவே, மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கத் தயங்காதீர்கள்.

❑ எதையும் உடனுக்குடன் செய்யாமல் தள்ளிப்போடுவது உங்கள் பழக்கமா? ஒரு மாறுதலுக்கு, ஹோம்வர்க்கை முன்னதாகவே செய்து முடிக்க முயற்சி எடுங்கள். அதில் கிடைக்கும் நிம்மதியையும் திருப்தியையும் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அதற்குப்பின் ஹோம்வர்க்கைத் தள்ளிப்போட உங்களுக்கு மனதே வராது.

❑ வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போது உங்கள் மனம் ஊர் சுற்றுகிறதா? ஒரு மாதத்திற்கு இப்படிச் செய்து பாருங்கள்: பாடம் நடத்தப்படும்போது கூர்ந்து கவனியுங்கள், தேவைப்படுகையில் எடுத்துப் படிப்பதற்கு வசதியாக முக்கியக் குறிப்புகளை எழுதிக்கொள்ளுங்கள். அப்போது, ஹோம்வர்க் செய்வது வெகு சுலபமாகிவிட்டதைப் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைவீர்கள். இது பள்ளியில் உங்கள் டென்ஷனைக் குறைக்கும்.

❑ நிறையப் படிப்பதற்கு எக்ஸ்ட்ரா வகுப்புகளுக்கோ கோச்சிங் கிளாசுகளுக்கோ போகிறீர்களா? அவை உங்கள் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகின்றனவா? அப்படியென்றால், அவை அவசியம்தானா என்று யோசியுங்கள். இதைப் பற்றி உங்கள் அம்மா அப்பாவிடம் பேசுங்கள். படிப்பை அதற்குரிய இடத்தில் வைக்கத் தெரிந்த ஒருவரிடம் அபிப்பிராயம் கேளுங்கள். அந்த எக்ஸ்ட்ரா வகுப்புகள் உங்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அந்தளவு அவசியமில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

[பக்கம் 6-ன் பெட்டி]

கற்பனைக் கோட்டை

“செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப் போன்றது என எண்ணுகின்றனர்.” (நீதிமொழிகள் 18:11, ஈஸி டு ரீட் வர்ஷன்) பண்டைய கால மக்கள், எதிரிகளின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கோட்டைகளையே பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், நீங்கள் ஒரு கற்பனைக் கோட்டையில் குடியிருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். அது கற்பனை அல்ல நிஜம் என்று எவ்வளவுதான் உங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டாலும் எதிரிகளிடமிருந்து அது உங்களைப் பாதுகாக்காது.

செல்வத்தைத் தேடி அலைகிற இளைஞர்கள் இப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள்; அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். நீங்கள் ஒரு பெற்றோரா? உங்கள் மகனோ மகளோ பொருளாசையில் சிக்காதபடியும், கற்பனைக் கோட்டையில் குடியிருக்காதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல, பைபிளிலுள்ள இந்த எதார்த்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்:

◼ பணத்தால் சில பிரச்சினைகள் தீரும், ஆனால் பல பிரச்சினைகள் வரும். “செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.”பிரசங்கி 5:12, பொது மொழிபெயர்ப்பு; 1 தீமோத்தேயு 6:9, 10.

◼ சந்தோஷத்திற்குப் பணத்தைவிட நல்ல திட்டமிடுதலே தேவை. “கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும்.”நீதிமொழிகள் 21:5, ERV; லூக்கா 14:28.

◼ பிழைப்புக்கு வேண்டிய வருமானம் இருந்தாலே திருப்தியாக வாழலாம். “எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்.”நீதிமொழிகள் 30:8, பொ.மொ. *

[அடிக்குறிப்பு]

^ பொருளாசையால் வரும் ஆபத்தைப் பற்றிக் கூடுதல் தகவலறிய மே 8, 2003 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 16-17-ஐக் காண்க.

[பக்கம் 7-ன் படங்கள்]

ஹோம்வர்க்கைத் தலைவலியாக நினைக்காமல் சொந்தக் காலில் நிற்பதற்கான பயிற்சியாகப் பாருங்கள்

[பக்கம் 7-ன் படம்]

எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொண்டால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது