Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வினோதமான விசில் மொழி

வினோதமான விசில் மொழி

வினோதமான விசில் மொழி

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மெக்சிகோவிலுள்ள ஆக்ஸகா மலைத்தொடரில் வசிக்கிறார்கள் மாசாடெக்கோ மக்கள். இவர்களிடம் மொபைல் ஃபோனும் இல்லை, வேறு எந்த ஃபோனும் இல்லை. ஆனாலும், இரண்டு கிலோமீட்டர் தூரத்திலோ அதற்கு அப்பாலோ இருக்கிறவர்களிடம்கூட சிரமம் இல்லாமல் பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, மலைச்சரிவுகளில் உள்ள காப்பித் தோட்டங்களில் வேலை செய்யும்போது இப்படிப் பேசிக்கொள்கிறார்கள். இந்த அதிசயத்தின் ரகசியம்? வெகு காலத்திற்குமுன், மாசாடெக்கோ மக்கள் தங்களுடைய மொழிக்கு ஒருவித விசில் வடிவைக் கொடுத்தார்கள். அதைப் பற்றிச் சொல்கிறார், இளைஞரான பெட்ரோ: “மாசாடெக்கோ மொழி, தொனி சார்ந்த மொழி. ஆகவே, பேசும்போது உபயோகிக்கிற அதே தொனியிலும் ஓசைநயத்திலும் விசிலடிக்கிறோம். அதுமட்டுமல்ல, நாங்கள் வாயில் விரல்களை வைத்து விசிலடிப்பதில்லை, வெறுமனே உதடுகளால் விசிலடிக்கிறோம்.” *

ஃபிடென்ஸியோ என்பவர் பெட்ரோவின் நண்பர். விசில் மொழியிலுள்ள நன்மைகளை அவர் விளக்குகிறார்: “பொதுவாக, தூரத்தில் இருக்கிறவர்களிடம் எதையாவது சுருக்கமாகச் சொல்வதற்கு இந்த மொழியில் பேசுவோம்; உதாரணத்திற்கு, ஒரு அப்பா ரொட்டி வாங்கிவர தன் மகனைக் கடைக்கு அனுப்பியிருப்பார், ஆனால் தக்காளியை வாங்கிவரச் சொல்ல மறந்துவிட்டிருப்பார். பேச முடியாத தூரத்திற்கு மகன் போய்விட்டிருந்தால், அவர் விசிலடித்தே அவனுக்குச் செய்தியைச் சொல்லிவிடுவார்.”

யெகோவாவின் சாட்சிகளும் சிலசமயங்களில் விசிலடித்து ஒருவரோடொருவர் பேசிக்கொள்கிறார்கள். பெட்ரோ சொல்கிறார்: “ஒதுக்குப்புற பகுதிகளுக்கு இன்னொரு யெகோவாவின் சாட்சியை என்னோடு அழைத்துச் செல்ல நான் நினைத்தால் அவருடைய வீடுவரை போக வேண்டியதில்லை. விசிலடித்தாலே போதும் வந்துவிடுவார்.

‘பேசுவது’ யாரென்று தெரிவதற்காக ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் விசிலடிப்போம். பொதுவாக, மாசாடெக்கோ ஆண்கள்தான் விசில் மொழியில் பேசுவார்கள். பெண்கள் அம்மொழியைப் புரிந்துகொள்வார்கள், வீட்டில் இருக்கும்போது அம்மொழியில் பேசவும் செய்வார்கள்; ஆனால், கண்ட ஆண்களோடெல்லாம் அம்மொழியில் பேச மாட்டார்கள். ஏனென்றால், அது அநாகரிகமெனக் கருதப்படுகிறது.”

விசில் மொழிக்குச் சொந்தக்காரர்கள் மாசாடெக்கோ மக்கள் மட்டுமே அல்ல; கேனரி தீவுகள், சீனா, பாப்புவா-நியூ கினி ஆகிய இடங்களிலும் ‘விசில் மன்னர்களைப்’ பார்க்க முடிகிறது. இவர்கள் மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் வசிப்பவர்கள். இன்று, உலகெங்கும் 70-க்கும் அதிகமான விசில் மொழிகள் இருக்கலாமெனக் கருதப்படுகிறது; அவற்றில் 12 மொழிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மனிதனின் படைப்பாற்றலைக் கண்டு நாம் வியந்து போகிறோம், அல்லவா? அந்த ஆற்றலும் பேசுவதற்கான துடிப்பும் இணையும்போது எத்தனை எத்தனையோ புதுமைகளை அவன் படைக்கலாம். அதே சமயத்தில், அவனுக்கு எந்தளவு கற்பனை வளம் இருக்கிறதோ அந்தளவு மட்டுமே அவனால் புதுமைகள் படைக்க முடியும். அவனுடைய கற்பனை வளத்திற்குத்தான் எல்லையேதும் இல்லாததாகத் தெரிகிறதே! (g 2/09)

[அடிக்குறிப்பு]

^ ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “மாசாடெக்கோ மக்கள், விசிலின் வேகத்தையும், தொனியையும், சத்தத்தையும் மாற்றி மாற்றி கணக்குவழக்கில்லாத விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள்.”