உங்கள் மதத்தை மாற்றிக்கொள்வது தவறா?
பைபிளின் கருத்து
உங்கள் மதத்தை மாற்றிக்கொள்வது தவறா?
அவ்தார் என்ற பெண் பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்; அது அவருடைய சீக்கிய குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய நாட்டில் ஒருவர் மதத்தை மாற்றிக்கொண்டால் எல்லாரும் அவரை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். மதத்தின் அடிப்படையில்தான் எல்லாருக்கும் பெயர் வைக்கப்படுகிறது. ஒருவர் மதத்தை மாற்றிக்கொண்டால், அவருக்குரிய அடையாளத்தை தூக்கியெறிந்துவிட்டதாகவும் குடும்பத்தை அவமதித்துவிட்டதாகவும் நினைக்கப்படுகிறது.”
அவ்தார் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாறினார். அவர் தன் மதத்தை மாற்றிக்கொண்டது தவறா? தவறுதான் என்று அவருடைய குடும்பத்தாரைப் போல் நீங்களும் நினைக்கலாம். உங்கள் மதம் உங்களுடைய வம்சத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப்பிணைந்திருக்கிறது என்றும் அதை மாற்றிக்கொள்ளக் கூடாது என்றும் நீங்கள் நினைக்கலாம்.
நாம் நம்முடைய குடும்பத்தாருக்கு மதிப்பு கொடுப்பது முக்கியம்தான். “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:22) ஆனால், நம்மைப் படைத்தவரையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையைத் தேடிப்பார்ப்பது அதைவிட முக்கியம். (ஏசாயா 55:6) அந்த உண்மையைத் தேடிப்பார்க்க முடியுமா? முடியுமென்றால், நீங்கள் அதைத் தேடிப்பார்ப்பது எந்தளவுக்கு முக்கியம்?
உண்மையைத் தேடி . . .
உலகிலுள்ள மதங்கள் முரண்படும் கருத்துகளைக் கற்பிக்கின்றன. நியாயமாகப் பார்த்தால், அந்த எல்லாக் கருத்துகளுமே உண்மையாயிருக்க முடியாது. ஆகவே, பைபிள் சொல்கிறபடி அநேகருக்கு “கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது . . . ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் அல்ல.” (ரோமர் 10:2) என்றாலும், 1 தீமோத்தேயு 2:4-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பது” கடவுளுடைய சித்தமாக இருப்பதாய் அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். அப்படிப்பட்ட திருத்தமான அறிவை எப்படிக் கண்டடைய முடியும்?
பைபிளை அலசிப்பார்ப்பது ஏன் அவசியம் என்பதற்கான காரணங்களைக் கவனியுங்கள். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிளை எழுதியவர்களில் ஒருவரான பவுல் இவ்வாறு சொன்னார்: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கு . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16) உண்மையைத் தேடும் படலத்தில், பைபிளிலுள்ள இந்த வார்த்தைகள் நிஜம் என்பதற்கான அத்தாட்சியை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். பைபிளில் நிகரற்ற ஞானம் பொதிந்திருப்பதையும், சரித்திரப்பூர்வமாக அது துல்லியமாய் இருப்பதையும், அதிலுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருப்பதையும் நீங்களே அலசிப் பாருங்கள்.
எல்லா மதங்களும் ஒரே கடவுளிடம் செல்லும் வெவ்வேறு பாதைகள் என்று பைபிள் சொல்வதில்லை; மாறாக, கேள்விப்படுவதையெல்லாம் நம்பிவிடுவதற்குப் பதிலாக, “கடவுளால் அருளப்பட்டதாகத் தோன்றுகிற செய்திகள் . . . கடவுளிடமிருந்துதான் வந்திருக்கின்றனவா என்று சோதித்துப் பாருங்கள்” எனச் சொல்கிறது. (1 யோவான் 4:1) உதாரணத்திற்கு, நிஜமாகவே கடவுளிடமிருந்து வந்திருக்கும் ஒரு போதனை, அவருடைய முக்கியக் குணமாகிய அன்புடனும் மற்ற குணங்களுடனும் ஒத்திருக்க வேண்டும்.—1 யோவான் 4:8.
நாம் கடவுளை “கண்டுபிடிக்க வேண்டும்” என அவரே விரும்புவதாக பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:) நாம் உண்மையைத் தேட வேண்டுமென நம் படைப்பாளர் விரும்புவதால், நாம் கண்டறிகிற அத்தாட்சிக்கேற்ப நடப்பது தவறாக இருக்காது; அதற்காக நம் மதத்தை மாற்றிக்கொள்வதும் தவறாக இருக்காது. என்றாலும், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது? 26, 27
குடும்பத்துக்கு உண்மையாய் இருப்பதில் சமநிலை
ஒருவர் தன் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளும்போது, மதச் சடங்குகளிலோ பண்டிகைகளிலோ கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானிக்கலாம். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு அவர்மீது கோபமும் வருத்தமும் ஏற்படுவது இயல்புதான். இப்படி நடக்குமென இயேசுவும் ஒப்புக்கொண்டார். “தகப்பனுக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்” என்று தம் சீடர்களிடம் அவர் சொன்னார். (மத்தேயு 10:35) அப்படியென்றால், பைபிள் போதனைகள் பிரிவினையையும் பகையையும் கட்டாயம் ஏற்படுத்துமென்றா இயேசு சொன்னார்? இல்லை. குடும்பத்திலுள்ள ஒருவர் வித்தியாசமான மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகையில் என்ன நடக்கலாம் என்பதை அவர் வெறுமனே முன்னறிவித்தார்.
குடும்பத்தில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளுமே எழாதிருக்க வேண்டுமா? பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் மனைவிகள் தங்களுடைய கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும் பைபிள் போதிக்கிறது. (எபேசியர் 5:22; 6:1) என்றாலும், கடவுளை நேசிப்பவர்கள் ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்’ என்று அது அறிவுறுத்துகிறது. (அப்போஸ்தலர் 5:29) ஆகவே, சிலசமயங்களில் கடவுளுக்கு உண்மையாய் இருப்பதற்காக, குடும்பத்திலுள்ள சிலருக்குப் பிடிக்காத ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம்.
உண்மையான போதனைகளையும் பொய்யான போதனைகளையும் பைபிள் தெள்ளத்தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது; என்றாலும், எதைத் தேர்ந்தெடுப்பதென்ற சுதந்திரத்தைக் கடவுள் அவரவரிடமே விட்டுவிடுகிறார். (உபாகமம் 30:19, 20) பிடிக்காத விதத்தில் கடவுளை வணங்கும்படி யாரும் ஒருவரை வற்புறுத்தக் கூடாது; அதோடு, மத நம்பிக்கைகள் முக்கியமா, குடும்பத்தார் முக்கியமா என்று தீர்மானிக்கும்படி யாரும் அவரை வற்புறுத்தக் கூடாது. பைபிளைப் படித்தால் குடும்பம் பிளவுபடுமா? இல்லை. சொல்லப்போனால், வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற கணவனும் மனைவியும் பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டுமென்றே பைபிள் ஊக்குவிக்கிறது.—1 கொரிந்தியர் 7:12, 13.
பயத்தை விரட்டியடித்தல்
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நீங்கள் பயப்படலாம். மரியாம்மா என்ற பெண்மணி இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டார் என்று நினைத்து என் குடும்பத்தார் கவலைப்பட்டார்கள். அதனால் நான் பைபிள் படிப்பதை எதிர்த்தார்கள்.” ஆனாலும் மரியம்மா யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பைபிளைப் படித்தார். (சங்கீதம் 37:3, 4) நீங்களும் அப்படியே செய்யலாம். என்ன நடக்குமோவென்று பயப்படுவதற்குப் பதிலாக என்ன நன்மைகள் கிடைக்குமென்று நினைத்துப் பார்க்கலாம். பைபிளிலுள்ள செய்தி வாழ்க்கைக்கு வளமூட்டுகிறது, மனித சுபாவத்தைச் செதுக்கி சீராக்குகிறது. பைபிளைப் படிப்பவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் சுயநலமில்லாத அன்பு காட்ட கற்றுக்கொள்கிறார்கள். வாய்ச்சண்டை, அடிதடி, குடிவெறி, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 7:1) பற்று, நேர்மை, சுறுசுறுப்பு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள பைபிள் உதவுகிறது. (நீதிமொழிகள் 31:10-31; எபேசியர் 4:24, 28) நீங்கள் பைபிளைப் படித்து, அது கற்பிக்கிறபடி நடப்பதால் வரும் நன்மைகளை ஏன் கண்கூடாகப் பார்க்கக் கூடாது? (g 7/09)
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ உங்கள் மத நம்பிக்கைகளை ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்?—நீதிமொழிகள் 23:23; 1 தீமோத்தேயு 2:3, 4.
◼ உண்மையான போதனைகளை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்?—2 தீமோத்தேயு 3:16; 1 யோவான் 4:1.
◼ குடும்பத்தார் எதிர்ப்பதால் நீங்கள் பைபிள் படிப்பதை விட்டுவிட வேண்டுமா?—அப்போஸ்தலர் 5:29.
[பக்கம் 31-ன் சிறுகுறிப்பு]
பைபிளிலுள்ள செய்தி வாழ்க்கைக்கு வளமூட்டுகிறது, மனித சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்குகிறது
[பக்கம் 31-ன் படம்]
கணவருடன் மரியாம்மா