Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுவது எப்படி?

என் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

என் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுவது எப்படி?

“நான் நான்கு மணிக்கு ஓர் இடத்தில் இருக்க வேண்டுமென்றால் மூன்று மணிக்கே என்னை வரச் சொல்ல வேண்டும் என்று ஒருவர் கிண்டலடித்தது என் காதில் விழுந்தது. அப்போதுதான், என் நேரத்தை இன்னும் பொறுப்பாகச் செலவிடுவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தேன்!”—ரிக்கி. *

ஒரு நாளில் இன்னும் எத்தனை மணிநேரத்தை உங்களால் மிச்சப்படுத்த முடியும்? அந்த நேரத்தை நீங்கள் எதற்காகப் பயன்படுத்துவீர்கள்?

நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்கு

தூங்குவதற்கு

படிப்பதற்கு

உடற்பயிற்சி செய்வதற்கு

மற்றவற்றிற்கு

தினமும் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு மேல் இருந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை! அப்படியென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? கூடுதல் மணிநேரங்களைப் பெற ஆலாய்ப் பறக்கிற இளைஞர்கள் ஓர் அனுபவப் பாடத்தைப் படித்திருக்கிறார்கள்; அதாவது, கையிலிருக்கும் நேரத்தைப் பொறுப்பாகச் செலவிட்டாலே தேவைப்படுகிற கூடுதல் மணிநேரம் கிடைத்துவிடுமெனத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் நேரத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவிடும்போது மன அழுத்தம் குறைவதையும், நல்ல மார்க் வாங்க முடிவதையும், பெற்றோர் தங்களை அதிகம் நம்புவதையும் கண்டிருக்கிறார்கள். நேரத்தைப் பொறுப்பாகச் செலவிடுவது உங்களுக்கு எப்படி உதவுமெனக் கவனிக்கலாம்.

சவால் #1 அட்டவணை போடுவது

எது முட்டுக்கட்டையாக இருக்கலாம்? அட்டவணை போட வேண்டுமென்ற நினைப்பே உங்களைக் கட்டுப்படுத்துவதுபோல் நீங்கள் உணரலாம்! எதையும் திட்டமிடாமல் நினைத்த நேரத்தில் செய்ய நீங்கள் விரும்பலாம்; அட்டவணை என்ற ஒன்று உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கட்டுப்படுத்துவதை நீங்கள் விரும்பாதிருக்கலாம்.

ஆனாலும் ஏன் செய்ய வேண்டும்? “கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 21:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) சாலொமோனுக்கு நிச்சயமாகவே நிறைய வேலைகள் இருந்திருக்கும். அவர் கணவராகவும் தகப்பனாகவும் ராஜாவாகவும் இருந்தார், அதுவும் 20 வயதை எட்டுவதற்கு முன்பே! அதன் பின்பு, அவர் இன்னும் நிறைய வேலைகளில் ஈடுபட்டார். அதேபோல், இப்போது நீங்களும் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கலாம். ஆனால், வயதாக வயதாக நீங்கள் இன்னும் ஓய்வொழிச்சல் இல்லாமல் ஓட வேண்டியிருக்கலாம். இப்போதே எல்லாவற்றையும் ஒழுங்காகத் திட்டமிட்டு செய்வது நல்லது!

உங்களைப் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? “சுமார் ஆறு மாதத்திற்கு முன்பிருந்து, தவறாமல் அட்டவணை போட ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் சுலபமாகச் செய்ய முயற்சி செய்தேன். அட்டவணை போட்டது மிக உதவியாய் இருந்தது!”—ஜோயி.

“அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென எழுதி வைத்துக்கொள்வது எனக்கு உதவியாக இருக்கிறது. கூடுதல் வேலைகள் செய்ய வேண்டியிருந்தால் நானும் என் அம்மாவும் உட்கார்ந்து எல்லாவற்றையும் எழுதுவோம்; அவற்றைச் செய்து முடிக்க ஒருவருக்கொருவர் எப்படி ஒத்தாசையாய் இருக்கலாமெனப் பார்ப்பதற்காகவே அப்படிச் செய்வோம்.”—மாலரி.

எது உங்களுக்கு உதவும்? இதை இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் எங்கோ காரில் போகத் தயாராகிறீர்கள். வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பைகளை காரின் டிக்கியில் கன்னாபின்னாவெனத் தூக்கி வீசுகிறார்கள். கடைசியில் பார்த்தால் பாதி சாமான் வெளியில் இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? எல்லாவற்றையும் வெளியே எடுத்துவிட்டு, மறுபடியும் அடுக்க ஆரம்பிப்பீர்கள். பெரிய பெரிய பைகளை முதலில் வைத்த பிறகு சின்னப் பைகளும் டிக்கியில் அடங்கிவிடும்.

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. சின்னச் சின்னக் காரியங்களுக்கு உங்கள் நேரத்தையெல்லாம் கொடுத்துவிட்டால், முக்கியமான காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும் ஆபத்திருக்கிறது. பெரிய காரியங்களுக்கு முதலில் இடமளியுங்கள்; அப்போது மற்றவற்றிற்கு எக்கச்சக்கமான நேரமிருப்பதைப் பார்த்து மலைத்துவிடுவீர்கள்!—பிலிப்பியர் 1:10.

நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் யாவை?

.....

முக்கியமான காரியங்களை முதலாவது பட்டியலிடுங்கள். அவற்றில் அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை வரிசைப்படுத்துங்கள். பெரிய காரியங்களை நீங்கள் முதலாவது செய்தால், சின்னக் காரியங்களைச் செய்ய எத்தனை நேரம் மீதமிருக்கிறது என்பதைப் பார்த்து அசந்துவிடுவீர்கள். ஆனால், மாற்றிச் செய்தால் பலன் கிடைக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்!

நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களை வரிசைப்படுத்த பாக்கெட் டைரியை வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பின்வரும் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

செல்ஃபோனிலுள்ள காலண்டர்

சிறிய நோட்டுப்புத்தகம்

கம்ப்யூட்டரிலுள்ள காலண்டர்

மேஜையில் வைக்கும் காலண்டர்

சவால் #2 அட்டவணையைக் கடைப்பிடிப்பது

எது முட்டுக்கட்டையாக இருக்கலாம்? ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஓய்வாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் டிவி பார்க்க நீங்கள் ஆசைப்படலாம். அல்லது பாடங்கள் படிப்பதற்குத் திட்டமிடலாம், ஆனால் சினிமாவுக்கு வரும்படி யாராவது உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். உங்களால் சினிமா நேரத்தை ஒத்திப்போட முடியாது, ஆனால் படிப்பு நேரத்தை ராத்திரிக்கு ஒத்திப்போட முடியும். ‘அதுவும் இல்லாமல், கொஞ்சம் டென்ஷன் இருந்தால்தான் என்னால் அக்கறையோடு படித்து முடிக்க முடியும்’ என நீங்கள் நினைக்கலாம்.

ஆனாலும் ஏன் செய்ய வேண்டும்? மனம் சுறுசுறுப்பாக இருக்கும்போது படித்தால்தான் நல்ல மார்க் வாங்க முடியும். அதோடு, உங்களுக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட டென்ஷன் இருக்கிறது, அல்லவா? அப்படியிருக்கும்போது, பரிட்சைக்காகக் கடைசி நேரத்தில் உட்கார்ந்து அரக்கப்பரக்கப் படித்து இன்னும் ஏன் டென்ஷனைக் கூட்ட வேண்டும்? விடிந்தால் என்ன நடக்கும்? நீங்கள் வெகு நேரம் தூங்கிவிடுவீர்கள், இன்னும் அதிக டென்ஷனோடு எழுந்திருப்பீர்கள், வேக வேகமாகப் புறப்படுவீர்கள், கடைசியில் ஸ்கூலுக்கு லேட்டாகப் போய்ச் சேருவீர்கள்.—நீதிமொழிகள் 6:10, 11.

உங்களைப் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? “டிவி பார்ப்பதற்கும் கிட்டார் வாசிப்பதற்கும் நண்பர்களோடு இருப்பதற்கும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதெல்லாம் தப்பில்லைதான்; ஆனால், சில சமயங்களில் அவை மிக முக்கியமான காரியங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதால் அவற்றை அவசர அவசரமாகச் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.”—ஜூல்யன்.

எது உங்களுக்கு உதவும்? நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை மட்டுமே பட்டியலிடாதீர்கள்; நீங்கள் செய்கிற விரும்புகிற காரியங்களையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். “எனக்கு விருப்பமான காரியங்களைச் செய்யப்போகிறேன் என்பதை நினைக்கும்போது, செய்ய வேண்டிய காரியங்களை என்னால் எளிதாகச் செய்துவிட முடிகிறது” என்று ஜூல்யன் சொல்கிறான்.

இன்னொரு ஆலோசனை: பெரிய இலக்கை வையுங்கள்; அதை அடைவதற்குச் சின்னச் சின்ன இலக்குகளையும் வையுங்கள். அப்போதுதான் உங்கள் லட்சியத்தை எட்ட முடியும். முன்னர் குறிப்பிடப்பட்ட 16 வயது ஜோயி இவ்வாறு சொல்கிறான்: “பைபிளை முழுநேரம் மற்றவர்களுக்குக் கற்பிக்க ஆசைப்படுகிறேன். அந்த இலக்கு என் அட்டவணையைக் கடைப்பிடிக்க எனக்கு உதவுகிறது; எதிர்காலத்தில் பைபிளைக் கற்பிக்கிற வேலையில் மும்முரமாய் ஈடுபட என்னை இப்போதே அது தயார்படுத்துகிறது.”

நீங்கள் என்ன செய்யலாம்? அடுத்த ஆறு மாதங்களில் நீங்கள் எட்ட முடிந்த ஓரிரண்டு நடைமுறையான இலக்குகள் யாவை?

.....

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நீங்கள் எட்ட முடிந்த நடைமுறையான இலக்கு எது, அதை எட்டுவதற்கு இப்போதே நீங்கள் என்ன செய்ய ஆரம்பிக்க வேண்டும்?

.....

சவால் #3 சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருத்தல்

எது முட்டுக்கட்டையாக இருக்கலாம்? சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பது, உங்கள் நேரத்தைப் பொறுப்பாகச் செலவிட எப்படி உதவுமென ஒருவேளை உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதே சமயத்தில், எல்லாவற்றையும் அலங்கோலமாகப் போட்டு வைப்பது எளிதாகத் தோன்றலாம். உங்கள் அறையை நாளைக்குச் சுத்தம் செய்துகொள்ளலாம் என நினைக்கலாம்; அல்லது எதற்குச் சுத்தம் செய்ய வேண்டுமென அப்படியே போட்டு வைக்கலாம்! உங்களுக்கு அது பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். ஆனால், அது உண்மையிலேயே பெரிய விஷயம் இல்லையா?

ஆனாலும் ஏன் செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்கும்போது எந்தவொரு பொருளையும் தேடி நேரத்தை வீணாக்க வேண்டியிருக்காது. இது உங்களுக்கு மிகத் தேவையான மனநிம்மதியையும் தரும்.—1 கொரிந்தியர் 14:40.

உங்களைப் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? “சில சமயங்களில் என் துணிமணிகளைச் சரியாக எடுத்து வைக்க எனக்கு நேரமில்லாமல் போய்விடும்; அப்போது, எனக்கு வேண்டிய பொருள் அடியில் எங்காவது சிக்கிக்கொள்ளும்!”—மாண்டி.

“என் பர்ஸை எங்கே வைத்தேன் எனத் தெரியாமல் ஒரு வாரமாகத் தேடினேன். அதனால் எனக்கு ஒரே டென்ஷன். ஒருவழியாக என் அறையைச் சுத்தப்படுத்தியபோது அதைக் கண்டுபிடித்தேன்.”—ஃபிராங்க்.

எது உங்களுக்கு உதவும்? முடிந்தவரை சீக்கிரமாக எல்லாவற்றையும் எடுத்த இடத்திலேயே வைக்க முயலுங்கள். நிலைமை கைமீறிப் போகும்வரை காத்திருக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால், வேலையும் சுலபமாக முடியும், பொருள்களையும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் என்ன செய்யலாம்? சுத்தமாக இருப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; இது எந்தளவுக்கு வாழ்க்கையில் டென்ஷனைக் குறைக்கிறதெனப் பாருங்கள்.

சின்ன அளவில் முயற்சி செய்ய ஆரம்பியுங்கள், அதையும் இன்றே செய்ய ஆரம்பியுங்கள்! இந்தக் கட்டுரையிலுள்ள எந்தெந்த ஆலோசனைகள் உங்களுக்கு அதிகப் பயனுள்ளவையாய் இருந்தன?

.....

இந்த ஆலோசனைகள் பயனளிக்கின்றனவா என்று ․․․․․․ வாரத்திற்கு/வாரங்களுக்கு முயன்று பார்ப்பேன். (g 6/09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிந்திப்பதற்கு

◼ நீங்கள் சுறுசுறுப்பாய்ச் செயல்படுவதற்கு எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்?

◼ அட்டவணை போட நீங்கள் யாரிடம் உதவி கேட்கலாம்?

◼ நீங்கள் ஏற்கெனவே ஓர் அட்டவணையைக் கடைப்பிடித்து வருகிறீர்கள் என்றால் அதில் என்ன மாற்றங்களைச் செய்யலாம்?

[பக்கங்கள் 22, 23-ன் பெட்டி/படம்]

8-18 வயதுள்ள இளைஞர்கள் ஒரு வாரத்தில் தங்கள் நேரத்தை இப்படித்தான் செலவழித்தார்கள்:

17

தங்கள் பெற்றோருடன்

30

பள்ளியில்

44

டிவி பார்ப்பதில், வீடியோ கேம்ஸ் விளையாடுவதில், எஸ்எம்எஸ் அனுப்புவதில், இசையைக் கேட்பதில்

என் நேரத்தை எதற்கெல்லாம் செலவிடுகிறேன்?

ஒவ்வொரு வாரமும் நீங்கள் செலவிடும் நேரத்தைக் கணக்கிடுங்கள்

டிவி பார்க்க: ................

வீடியோ கேம்ஸ் விளையாட: ...............

கம்ப்யூட்டர் பயன்படுத்த: ................

இசை கேட்க: ................

மொத்தம்: ..............

மிக முக்கியமான காரியங்களுக்குச் சிரமமில்லாமல் நான் பயன்படுத்த முடிந்த நேரம்: ............

[பக்கம் 22-ன் படம்]

நீங்கள் சின்னச் சின்னச் சாமான்களை முதலில் வைத்துவிட்டால் முக்கியமான சாமான்களுக்கு இடமில்லாமல் போய்விடும்