கருக்கலைப்பு செய்துகொள்ளாததற்குக் காரணம்
கருக்கலைப்பு செய்துகொள்ளாததற்குக் காரணம்
கருக்கலைப்பு செய்துகொள்ளப் போவதில்லையென விக்டோரியா தன் காதலன் பில்லிடம் சொன்னாள். “என் வயிற்றில் ஒரு உயிர் உருவாகியிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், பில்லுடன் தொடர்ந்து பழகினால், வாயும் வயிறுமாக இருக்கிற எனக்கு எவ்விதத்திலும் உதவ மாட்டார் என்று புரிந்தது; ஆகவே, அவரைவிட்டுப் பிரிந்தேன்” என்று விக்டோரியா சொல்கிறாள்.
ஆனால் பிற்பாடு, பில் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்; தன்னை மணம் செய்துகொள்ளும்படி விக்டோரியாவிடம் கேட்டார். இருந்தாலும், மகன் பிறந்தபோது அவனைக் கவனித்துக்கொள்வது பெரும் பாடாகத் தெரிந்தது. “எங்களிடம் காசு இல்லை, துணிமணி இல்லை, மற்ற எந்தப் பொருளும் இல்லை. பில்லுக்கு ரொம்ப ரொம்பக் குறைவான சம்பளம், அதனால் வசதியே இல்லாத வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம், ஆனாலும் எல்லாவற்றையுமே பொறுத்துக்கொண்டோம்” என்று விக்டோரியா சொல்கிறாள்.
மற்றவர்களும்கூட, எதிர்பாராமல் கருத்தரித்ததால் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார்கள். இருந்தாலும், கருக்கலைப்பு செய்துகொள்ள அவர்களும் மறுத்திருக்கிறார்கள். இத்தீர்மானத்தில் உறுதியாயிருக்க அவர்களுக்கு எது உதவியது? எதிர்பாராமல் அல்லது விரும்பாமல்கூட பெற்றுக்கொண்ட குழந்தையை வளர்க்கும் சவாலைச் சமாளிக்க அவர்களுக்கு எது உதவியது? பைபிளில் பொதிந்துள்ள முத்தான அறிவுரையே.
அவசரப்படாமல், நடைமுறை திட்டங்களைப் போடுங்கள்
பைபிள் இந்த ஞானமான வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது: “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.”—நீதிமொழிகள் 21:5, பொது மொழிபெயர்ப்பு.
கான்னி என்பவர் மூன்று மகன்களுக்குத் தாய்; அதில் ஒரு மகன் உடல் ஊனமுற்றவன். இந்நிலையில், இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றிய நினைப்பே பயமுறுத்துவதாக இருந்தது. “இருக்கிற ஜீவன்களுக்குச் சோறு போடுவதே பெரும் பாடாக இருந்தது. அதனால் கருக்கலைப்பு செய்துகொள்ளத் தீர்மானித்தோம்” என்று அவர் சொல்கிறார். ஆனால் அவசரப்பட்டு ஒரு முடிவெடுப்பதற்குப் பதிலாக, தன்னுடன் வேலை பார்த்த கே என்ற பெண்ணிடம் அதைப் பற்றி மனந்திறந்து பேசினார். அவர் ஓர் உயிரை தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்ததை கே அவருக்குப் புரிய வைத்தார்; அவரும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
இருந்தாலும், சரியாகத் திட்டமிட கான்னிக்கு நடைமுறை உதவி தேவைப்பட்டது. அந்தப் பகுதியில் கான்னியின் பெரியம்மா வசித்து வந்ததால், அவரைச் சந்திக்கும்படி கே ஆலோசனை தந்தார். அப்படிக் கான்னி போய் அவரைச் சந்தித்தபோது, அவர் சந்தோஷத்தோடு உதவி செய்தார். அதுமட்டுமல்லாமல், கான்னியின் கணவர் இன்னுமதிக நேரம் வேலை செய்தார்; மேலும், குறைந்த வாடகைக்குக் கிடைத்த ஓர் அப்பார்ட்மென்ட்டுக்கு குடும்பமாகக் குடிமாறினார். இவ்வாறு, அவர்களால் இன்னொரு குழந்தையையும் கவனித்துக்கொள்ள முடிந்தது.
எதிர்பாராமல் கருத்தரிப்பவர்களுக்கு உதவுவதற்கென்றே இயங்கும் சில நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும் கான்னிக்கு கே உதவினார். அநேக நாடுகளில், அப்படிப்பட்ட நிறுவனங்கள் புதிய தாய்மாருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. பொது நூலகங்கள் பலவற்றில் பெரும்பாலும் காணப்படும் இன்டர்நெட் அல்லது ஃபோன் டைரக்டரிகள் மூலம் இந்நிறுவனங்களைக் கண்டுபிடிக்கலாம். உண்மைதான், உதவி பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம், ஆனால் ‘திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவருக்குத்தான்’ வெற்றி கிடைக்கும்.
கருவும் ஓர் உயிர் என்ற உண்மையை உணருங்கள்
“ஞானியின் கண்கள் அவன் தலையிலே இருக்கின்றன. மூடனோ இருளில் நடக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 2:14, கத்தோலிக்க பைபிள்.
உண்மையிலேயே ஞானமுள்ள ஒரு பெண் உண்மைக்குத் தன் கண்களை மூடிக்கொண்டு ‘இருளில் நடக்க’ மாட்டாள். அவள் தன் ‘தலையிலே இருக்கிற கண்களை’ பயன்படுத்துவாள்; அதாவது, தன் அறிவுக்கண்களைப் பயன்படுத்துவாள். இது, அவளுடைய செயல்களின் விளைவுகளைச் சரியாக மதிப்பிட அவளுக்கு உதவுகிறது. ஆகவே, ஞானமுள்ள பெண், வயிற்றில் உருவாகியிருக்கும் உயிரைப் பற்றிய உண்மைக்குக் கண்களை மூடிக்கொள்ளும் பெண்ணைப் போல் இருக்க மாட்டாள்; அதற்குப் பதிலாக, தன் வயிற்றில் வளரும் ஜீவனைப் பாசத்தோடும் பரிவோடும் பாதுகாப்பாள்.
ஸ்டெஃபனி என்ற சிறுபெண் கருக்கலைப்பு செய்துகொள்ள நினைத்தாள்; ஆனால், தன் வயிற்றிலிருந்த இரண்டு
மாதக் குழந்தையை சோனோகிராமில் அவள் பார்த்தாள். “அப்போது, நான் கதறி அழுதேன். உயிருள்ள ஒரு ஜீவனை நான் எதற்காகக் கொல்ல வேண்டுமென நினைத்தேன்” என்று ஸ்டெஃபனி சொல்கிறாள்.டனிஸ் என்ற இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தாள். உயிருள்ள ஒரு ஜீவனைத் தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த உண்மையை அவளும் உணர்ந்தாள். அவளுடைய காதலன் அவளிடம் பணம் கொடுத்து, “கலைத்துவிடு” என்று சொன்னபோது, “கருவையா கலைக்கச் சொல்கிறீர்கள்? என்னால் முடியவே முடியாது!” என்று சொல்லிவிட்டாள். ஆம், தன் குழந்தையைக் கொல்ல அவள் மறுத்துவிட்டாள்.
மனித பயத்தின் பிடி
கருக்கலைப்பு செய்துகொள்ளும்படி மற்றவர்கள் வற்புறுத்தும்போது, ஆரம்பத்தில் சிலர் அப்படிச் செய்துவிட நினைக்கலாம்; அவர்கள் பைபிளிலுள்ள இந்த நீதிமொழியைக் குறித்துச் சிந்திப்பது புத்தியான செயல்: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”—நீதிமொழிகள் 29:25.
மானிக்கா என்ற 17 வயது பெண், கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் கர்ப்பமானாள். ஐந்து பிள்ளைக்குத் தாயாகவும் விதவையாகவும் இருந்த அவளுடைய அம்மா நொறுங்கிப்போனார். மானிக்கா ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென அவர் ஆசைப்பட்டார். வேறு வழி தெரியாமல், கருக்கலைப்பு செய்துகொள்ளும்படி அவர் மானிக்காவை வற்புறுத்தினார். “கருக்கலைப்பு செய்துகொள்வதில் எனக்குச் சம்மதமா என்று டாக்டர் கேட்டபோது, ‘இல்லை’ என்று சொன்னேன்” என்கிறாள் மானிக்கா.
மானிக்காவின் எதிர்காலமே பாழாகிப்போனதைப் பார்த்து அவளுடைய அம்மா இடிந்துபோனார்; மானிக்காவின் குழந்தையையும் வளர்க்க எவ்வளவு பாடு பட வேண்டுமென்று நினைத்து மனம் புழுங்கினார்; கடைசியில், வீட்டை விட்டு வெளியேறும்படி மானிக்காவிடம் சொல்லிவிட்டார். மானிக்கா தன் பெரியம்மாவுடன் தங்கினாள். சில வாரங்களுக்குப் பின், அவளுடைய அம்மாவின் மனம் இளகியது, அதனால் மறுபடியும் அவளை வீட்டில் சேர்த்துக்கொண்டார். குழந்தை லீயோனைப் பெற்றெடுத்து வளர்க்க அவளுக்கு உதவினார்; பாட்டியின் பாச மழையில் நனைந்தான் லீயோன்.
ராபன் என்ற மணமான பெண்ணுக்கு வேறு விதத்தில் சோதனை வந்தது. அவர் சொல்கிறார்: “எனக்கு வந்திருந்த சிறுநீரகத் தொற்றுக்கு டாக்டர் முதலில் சிகிச்சை அளித்தார்; அதன்பின்பே, கருத்தரித்திருக்கிறேனா என்று பரிசோதனை செய்தார். அதனால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி மிக மிகக் குன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக என்னிடம் சொன்னார்.” பின்பு, கருக்கலைப்பு செய்துகொள்வதுதான் நல்லதென டாக்டர் உறுதியாகச் சொன்னார். “உயிரைப் பற்றிய பைபிளின் கருத்தை நான் அவருக்கு விளக்கினேன்; என்னால் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியாதென்றும் சொல்லிவிட்டேன்” என்கிறார் ராபன்.
டாக்டரின் கவலை நியாயமானதுதான்; ஆனால், அப்போதைக்கு ராபனின் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை. * “என் மகள் பிறந்தபோது, பரிசோதனைகள் செய்யப்பட்டன; அவள் மூளைவாதத்தால் லேசாக மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்போது அவளுக்கு 15 வயது, நன்றாக இருக்கிறாள். வாசிப்பதிலும் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறாள். அவள்தான் என் உலகம்; அவளை எனக்குக் கொடுத்ததற்காகத் தினமும் பல முறை நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்” என்று ராபன் சொல்கிறார்.
கடவுளுடன் உள்ள நட்பின் வலிமை
“யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களுக்கே அவருடைய நட்பு கிடைக்கும்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 25:14, அமெரிக்கன் ஸ்டான்டர்டு வர்ஷன்.
கருக்கலைப்பைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதைச் சிந்தித்துப் பார்த்ததாலேயே அநேகர் கருக்கலைப்பு செய்துகொள்ள மறுத்திருக்கிறார்கள். கடவுளுடன் நட்பை அனுபவிப்பதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும்தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. முன்பு குறிப்பிடப்பட்ட
விக்டோரியாவின் விஷயத்திலும் இதுவே உண்மை. “கடவுளே உயிர் அளிக்கிறார் என்றும், அவர் அளிக்கிற உயிரை எடுக்க எனக்கு உரிமையில்லை என்றும் உறுதியாக நம்பினேன்” என்று அவள் சொல்கிறாள்.விக்டோரியா ஊக்கமாக பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, கடவுளுடன் அவளுக்கு இருந்த நட்பு வளர்ந்தது. அவள் சொல்கிறாள்: “கருக்கலைப்பு செய்யக் கூடாதென்ற தீர்மானம் என்னைக் கடவுளிடம் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல வைத்தது; அதோடு, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையைத் தூண்டியது. அவருடைய வழிநடத்துதலுக்காக நான் ஜெபம் செய்தேன், எல்லாம் நல்லபடியாக நடந்தது.”
உயிரின் ஊற்றுமூலராகிய கடவுளுடன் நட்பு வைத்துக்கொள்வது, கருவிலுள்ள உயிரின்மீது நமது மதிப்புமரியாதையைக் கூட்டுகிறது. (சங்கீதம் 36:9) அதுமட்டுமல்ல, எதிர்பாராத கருத்தரிப்பால் வரும் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களையும் சமாளிக்க ஒரு பெண்ணுக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் கடவுள் “இயல்புக்கு மிஞ்சிய சக்தி”யைக் கொடுத்து உதவுவார். (2 கொரிந்தியர் 4:7) கடவுளைப் போல் உயிருக்கு மதிப்புமரியாதை காட்டியதால் கருக்கலைப்பை மறுத்தவர்கள், இப்போது அந்தத் தீர்மானத்தைக் குறித்து எவ்வாறு உணருகிறார்கள்?
வருத்தமே இல்லை
கருக்கலைப்பை மறுத்த பெற்றோர் குற்ற உணர்வினாலோ குழந்தையை இழந்த நீங்கா வேதனையினாலோ தவிப்பதில்லை. ‘கர்ப்பத்தின் கனி’ சாபமல்ல, ஆசீர்வாதமே என்பதை அவர்கள் காலப்போக்கில் உணர்ந்திருக்கிறார்கள். (சங்கீதம் 127:4) இந்த உண்மையை, குழந்தை பிறந்த இரண்டே மணிநேரத்தில் ஒப்புக்கொண்டார், முன்பு குறிப்பிடப்பட்ட கான்னி! சந்தோஷம் தாளாமல், தன்னுடன் வேலை பார்த்த கே-யுக்கு போன் செய்து, தன் செல்ல மகளை வளர்க்கப் போவதை நினைத்துப் பூரித்துப்போயிருப்பதாகச் சொன்னார். “தமக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை” என்றும் மகிழ்ச்சிபொங்க சொன்னார் கான்னி.
உயிரைக் குறித்த கடவுளுடைய கண்ணோட்டத்திற்கு இசைவாக நடந்துகொள்வது ஏன் மிகவும் பயனுள்ளது? ஏனென்றால், உயிரின் ஊற்றுமூலரான கடவுள் பைபிளில் ‘[நம்] நன்மைக்கென்றே’ சட்டதிட்டங்களைக் கொடுத்திருக்கிறார்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விக்டோரியா, பில் தம்பதியின் அனுபவத்தின்படி, கருக்கலைப்பு செய்துகொள்ளக் கூடாதென்று தீர்மானித்தது அவர்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்: “நாங்கள் எந்நேரமும் போதைப்பொருளும் கையுமாக இருந்தோம்; அப்படியே இருந்திருந்தால் செத்தே போயிருப்போம். ஆனால், எங்களுக்குப் பிறக்கவிருந்த குழந்தையின் உயிருக்கு மதிப்பு கொடுத்தது, எங்களுடைய உயிரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வைத்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியோடு, நாங்கள் எங்களையே மாற்றிக்கொண்டோம்.”
அவர்களுடைய மகன் லான்ஸுக்கு இப்போது கிட்டத்தட்ட 34 வயது; அவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. லான்ஸ் கூறுகிறார்: “சிறு வயதிலிருந்தே, பைபிளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இது எனக்கும் என் மனைவிக்கும் மகனுக்கும் மிகவும் பிரயோஜனமாய் இருந்திருக்கிறது; சொல்லப்போனால், அதுதான் எங்கள் சந்தோஷத்திற்கே காரணமாக இருந்திருக்கிறது.” ஆரம்பத்தில் அவருடைய அம்மாவைக் கருக்கலைப்பு செய்யச் சொன்ன அவருடைய அப்பா இப்போது என்ன சொல்கிறார்? “எங்கள் அருமை மகனைக் கிட்டத்தட்ட கொல்லவிருந்தோம் என்பதை நினைத்தாலே உடலெல்லாம் நடுங்குகிறது” என்று சொல்கிறார்.
தன் அம்மா வற்புறுத்தியபோதும் கருக்கலைப்பு செய்துகொள்ள மறுத்த மானிக்காவின் உதாரணத்தை மறுபடியும் சிந்திக்கலாம். “என் மகன் பிறந்து இரண்டு வாரங்களுக்குப் பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகள் என்னைச் சந்தித்தார்கள்; கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக என் வாழ்க்கையை எப்படி அடியோடு மாற்றுவதெனக் கற்றுக்கொடுத்தார்கள். சீக்கிரத்திலேயே, கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் நன்மையை என் மகன் லீயோனுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்; காலப்போக்கில், அவன் கடவுள்மீது பேரன்பை வளர்த்துக்கொண்டான். இப்போது அவன் யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணிகளில் ஒருவனாக இருக்கிறான்” என்று மானிக்கா சொல்கிறார்.
தன் அம்மா செய்த காரியத்தைக் குறித்து லீயோன் இவ்வாறு சொல்கிறார்: “எவ்வளவோ அழுத்தங்கள் மத்தியிலும் என்னைக் கொல்லாமல் வாழ வைத்த என் அம்மாவுக்கு என்மீது எவ்வளவு அன்பு என்று எனக்குப் புரிந்தது. இது, உயிரென்ற அருமையான பரிசைத் தந்த கடவுளுக்கு என் உள்ளப்பூர்வமான நன்றியைக் காட்டும் விதத்தில் வாழ என்னைத் தூண்டியது.”
உயிரைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டிருக்கும் அநேகர், தங்கள் கண்ணுக்குக் கண்ணான குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதை நினைத்து வருந்துவதே கிடையாது. “நாங்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளவில்லை!” என்று அவர்கள் பெருமிதத்துடன் சொல்ல முடியும். (g 6/09)
[அடிக்குறிப்பு]
^ பிரசவத்தின்போது, தாயின் உயிரைக் காப்பாற்றுவதா சேயின் உயிரைக் காப்பாற்றுவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்; நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். என்றாலும், அநேக நாடுகளில் நவீன மருத்துவ சிகிச்சைமுறைகள் கையாளப்படுவதால் மிக அரிதாகவே இப்படிப்பட்ட இக்கட்டான நிலை ஏற்படுகிறது.
[பக்கம் 13-ன் படம்]
வயிற்றிலிருந்த இரண்டு மாதக் குழந்தையை சோனோகிராமில் பார்த்தது, ஒரு முடிவுக்கு வர ஸ்டெஃபனிக்கு உதவியது
(வட்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது)
[பக்கம் 8-ன் படம்]
விக்டோரியாவும் லான்ஸும்
[பக்கம் 14, 15-ன் படம்]
இன்று விக்டோரியாவும் பில்லும், லான்ஸுடைய குடும்பத்துடன்
[பக்கம் 15-ன் படம்]
மானிக்காவும் அவரது மகன் லீயோனும்; 36 வருடங்களுக்குமுன் கருக்கலைப்பு செய்யும்படி மானிக்கா வற்புறுத்தப்பட்டும் உறுதியாக அதை மறுத்ததை நினைத்து இருவரும் பெருமிதப்படுகிறார்கள்