Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புழக்கத்திலுள்ள மொழியில் ஒரு பைபிள்

புழக்கத்திலுள்ள மொழியில் ஒரு பைபிள்

புழக்கத்திலுள்ள மொழியில் ஒரு பைபிள்

கடவுள் மனிதகுலத்துக்குக் கொடுத்திருக்கும் புத்தகம்தான் பைபிள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், கடவுள் நம்மோடு பேச்சுத்தொடர்பு கொள்கிறார் என்று அர்த்தம். . . . உங்கள் மதம் உங்கள் மொத்த வாழ்க்கையின் மீதே செல்வாக்கு செலுத்துகிறதா? அப்படியானால், உங்கள் [பைபிளின்] மொழி புழக்கத்திலுள்ள மொழியில் இருக்கிறதென அர்த்தம்.” பைபிள் மொழிபெயர்ப்புகள்: எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற ஆங்கில புத்தகத்தில் இப்படி எழுதினார் அறிஞர் ஆலன் டத்தி.

கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிற ஆட்கள் இதை மனதார ஒத்துக்கொள்கிறார்கள். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) பைபிள் வெற்று வாசகங்கள் உள்ள பழங்கால மதப் புத்தகம் அல்ல. அது, “உயிருள்ளது, வல்லமையுள்ளது,” வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வுகளை அளிக்கிறது. (எபிரெயர் 4:12) ஆனால், மக்கள் அந்தப் பரிசுத்த புத்தகத்தில் உள்ளவற்றை புரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டுமானால், புழக்கத்திலுள்ள மொழியிலேயே அது இருக்க வேண்டும். சொல்லப்போனால், பைபிளில், “புதிய ஏற்பாடு” என அழைக்கப்படுகிற பகுதி, பிளாட்டோ போன்ற தத்துவஞானிகள் பயன்படுத்திய இலக்கிய கிரேக்கில் எழுதப்படவில்லை; அப்போது புழக்கத்திலிருந்த கொய்னி கிரேக்கிலேயே எழுதப்பட்டது. ஆம், பொதுமக்கள் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்திலேயே பைபிள் எழுதப்பட்டது.

பைபிளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சமீப வருடங்களில் அநேக நவீன மொழிபெயர்ப்புகள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, பெரும்பாலும் அதிக நன்மைகள் கிடைத்திருக்கின்றன. பரிசுத்த வேதாகமம் ஏராளமானோரின் கைகளை எட்டியிருக்கிறது. என்றாலும், அத்தகைய புதிய மொழிபெயர்ப்புகள் பல, தனிப்பட்ட மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் திருத்தமாகவும் இல்லை, ஒத்திசைவாகவும் இல்லை. உதாரணமாக, இறந்தவர்களின் நிலையைப் பற்றியும், ஆத்துமாவைப் பற்றியும், உண்மையான கடவுளுடைய பெயரைப் பற்றியும் பைபிள் கற்பிக்கிற தெளிவான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாதபடி சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கின்றன.

ஆகையால், கடவுளுடைய வார்த்தையை நேசிப்பவர்கள், தமிழில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த நவீன மொழிபெயர்ப்பின் வெளியீட்டைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் 2008-ல் அறிவித்தார்கள். மனிதர்களுடைய மதக் கோட்பாடுகளால் துளியும் கறைபடாத இந்த மொழிபெயர்ப்பு ஈடிணையற்ற விதத்தில் திருத்தமாக இருக்கிறது; பைபிள் எழுதப்பட்ட பண்டைய மொழிகளை அறியாதவர்களுக்குக் கிடைக்காதிருந்த ஆழமான புரிந்துகொள்ளுதலை இந்த மொழிபெயர்ப்பு இப்போது கிடைக்கச் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட அருமையான பைபிளை மொழிபெயர்த்தது யாரென நீங்கள் யோசிக்கலாம்.

கடவுளுக்குப் புகழ்சேர்த்த மொழிபெயர்ப்பாளர்கள்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் தமிழ் மொழி பேசும் மக்களுக்குப் புதியது என்றாலும், அது 1950-ஆம் ஆண்டு முதற்கொண்டே புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அந்த ஆண்டில், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டி அதை ஆங்கிலத்தில் வெளியிட்டது; இந்த சொஸைட்டி பல ஆண்டுகளாக பைபிளைப் பிரசுரித்து வந்திருக்கிற ஒரு சர்வதேச பைபிள் சொஸைட்டியாகும். புதிய உலக மொழிபெயர்ப்பின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “பழைய ஏற்பாடு”, “புதிய ஏற்பாடு” என பைபிளைப் பகுதிகளாகப் பிரிக்கும் பாரம்பரிய வழக்கம் கடைப்பிடிக்கப்படவில்லை; இந்த மொழிபெயர்ப்பு நிகரற்ற மொழிபெயர்ப்பாகத் திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம். செப்டம்பர் 15, 1950-ன் ஆங்கில காவற்கோபுரம் சொன்னதாவது: “பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் தாங்கள் உயிரோடிருக்கையிலும் சரி, தாங்கள் இறந்த பிறகும் சரி, தங்கள் பெயர் வெளியிடப்படக் கூடாதென்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். உயிருள்ள உண்மைக் கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர வேண்டும் என்பதே இந்த மொழிபெயர்ப்பின் நோக்கம்.”

பின்பு, 1961-ஆம் வருடம், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற தலைப்பிலே முழு பைபிளும் ஒரே தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதன் மொழிபெயர்ப்பாளர்களுடைய பெயர்கள் இன்றுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது; என்றாலும், அவர்கள் நல்லெண்ணத்தோடும் பயபக்தியோடும்தான் இந்த வேலையைச் செய்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 1984-ஆம் வருடப் பதிப்பின் முகவுரை இவ்வாறு குறிப்பிட்டது: “பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்ப்பதென்பது கடவுளாகிய யெகோவாவின் சிந்தனைகளையும் வார்த்தைகளையும் வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பதைக் குறிக்கிறது. . . . இந்த பைபிளின் மொழிபெயர்ப்பாளர்கள், பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியரான கடவுள்மீது அன்பும் பயபக்தியும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே, அவருடைய சிந்தனைகளையும் செய்திகளையும் முடிந்தவரை திருத்தமாக மொழிபெயர்ப்பதற்கு விசேஷித்த விதத்தில் அவருக்குக் கடமைப்பட்டிருப்பதாக உணருகிறார்கள்.”

மொழிபெயர்ப்புக் குழுவினர் நல்லெண்ணம் உள்ளவர்களாக இருந்தபோதிலும் மொழிபெயர்ப்பதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தார்களா? மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களும் அவர்களுடைய கல்வித் தகுதிகளும் அதில் வெளியிடப்படாததால், அதை அனுபவமற்றவர்களின் மொழிபெயர்ப்பாக எண்ணி ஒதுக்கிவிட வேண்டும் என திருப்தியற்ற சில அறிஞர்கள் வாதம் செய்தார்கள். ஆனால், எல்லா அறிஞர்களுமே அத்தகைய நியாயமற்ற முடிவுக்கு வரவில்லை. ஆலன் எஸ். டியூத்தி என்பவர் இவ்வாறு எழுதினார்: “ஒரு பைபிள் மொழிபெயர்ப்பை யார் மொழிபெயர்த்தார்கள் அல்லது பிரசுரித்தார்கள் என்று தெரிந்தால்தான் அது நல்ல மொழிபெயர்ப்பா இல்லையா என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது. அதைத் தீர்மானிக்க அந்தந்த மொழிபெயர்ப்பின் அம்சங்களை ஆராய்வதுதான் ஒரே வழி.” *

இதைத்தான் ஆயிரக்கணக்கான வாசகர்கள் செய்திருக்கிறார்கள். இதுவரை, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் 15,40,00,000-க்கும் அதிகமான பிரதிகள் முழுமையாகவோ பகுதிகளாகவோ 77 மொழிகளில் உலகெங்கும் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதை வாசித்த அநேகர் அதில் என்னவெல்லாம் கண்டிருக்கிறார்கள்?

கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும் மொழிபெயர்ப்பு

மத்தேயு 6:9-ல், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபம் செய்ய இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இருந்தாலும், பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் கொடுக்கப்படவே இல்லை, “தேவன்” அல்லது “கர்த்தர்” என்ற பட்டப்பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூல எபிரெய வேதாகமத்தில் அவ்வாறு இருக்கவில்லை. கடவுளுடைய பெயர் “யெகோவா” என்று சுமார் 7,000 தடவை அதில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17) என்றாலும், பிற்காலத்தில் யூதர்கள் மூடநம்பிக்கையினாலும் பயத்தினாலும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார்கள். இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப் பின்பு, அந்த மூடநம்பிக்கை கிறிஸ்தவ சபைக்குள்ளும் நுழைந்தது. (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 20:29, 30; 1 தீமோத்தேயு 4:1) கிரேக்க வேதாகமத்தைப் பிரதியெடுத்தவர்கள் கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதற்குப் பதிலாக கிரியோஸ் மற்றும் தியோஸ் என்ற கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்; அவற்றுக்கு முறையே “எஜமானர்” என்றும் “கடவுள்” என்றும் அர்த்தம்.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் (“புதிய ஏற்பாட்டில்”) யெகோவா என்ற பெயர் வருகிற 237 இடங்களிலும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் அதைப் பயன்படுத்தியிருப்பது தைரியமான செயலாகும், அது சந்தோஷமான விஷயமும்கூட. மொழிபெயர்ப்பாளர்கள் ஏதோ ஆசைப்பட்டதால் அல்ல, ஆனால் அறிவுப்பூர்வமாகவும் கவனமாகவும் ஆராய்ந்து பார்த்ததால்தான் இந்தப் பெயரை அதற்குரிய இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, ஏசாயா 61:1-லுள்ள வார்த்தைகளை லூக்கா 4:18 மேற்கோள் காட்டுகிறது. மூல எபிரெய வேதாகமத்தில் ஏசாயா புத்தகத்திலுள்ள அந்த வசனத்தில் யெகோவா என்ற பெயர் காணப்படுகிறது. * எனவே, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் லூக்கா 4:18-ஐ மிகச் சரியாகவே இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது; ஏனென்றால், ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்.”

இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ள வசனங்கள், கடவுளாகிய யெகோவாவை அவரது ஒரே மகனான இயேசு கிறிஸ்துவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கும் உதவுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மத்தேயு 22:44-ஐ, “கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார்” என மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால் இங்கே, யார் யாரிடம் பேசுகிறார்? இந்த வசனம் சங்கீதம் 110:1-ஐ மேற்கோள் காட்டுகிறது; அதன் மூல எபிரெய பதிப்பில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. ஆகவே, இந்த வசனத்தை புதிய உலக மொழிபெயர்ப்பு, “யெகோவா என் எஜமானரை நோக்கி, ‘நான் உன்னுடைய எதிரிகளை உன் காலடியில் வீழ்த்தும்வரை, நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு’” என மொழிபெயர்த்திருக்கிறது. கடவுளாகிய யெகோவாவுக்கும் அவரது மகனுக்கும் இடையே வேதாகமத்தில் காட்டப்படுகிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது வெறுமனே அறிவை வளர்த்துக்கொள்வதற்காக அல்ல. (மாற்கு 13:32; யோவான் 8:17, 18; 14:28) மீட்புப் பெறுவதற்கு அது மிகமிக அவசியமானதாக இருக்கிறது. “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என அப்போஸ்தலர் 2:21 சொல்கிறது.

துல்லியமும் தெளிவும்

இன்னும் பல சிறப்பம்சங்களும் இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பில் உள்ளன. வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் வெகு திருத்தமான கிரேக்க மூலப் பதிப்பையே இந்த மொழிபெயர்ப்பு அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மூல கிரேக்க வேதாகமத்தை முடிந்தவரை திருத்தமாகவும் சொல்லர்த்தமாகவும் எளிய, நவீன மொழியில் மொழிபெயர்ப்பதற்குப் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டது. இதனால், மூல பைபிளுக்கே உரிய சொற்சுவையையும் எழுத்துநடையையும் இந்த மொழிபெயர்ப்பில் வெகுவாகத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது; அதுமட்டுமா? அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுவதில் ஒரு புதிய சகாப்தத்தையே அது தொடங்கி வைத்தது.

உதாரணத்திற்கு, ரோமர் 13-ஆம் அதிகாரம் 1-ஆம் வசனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “மேலான அதிகாரங்களுக்கு,” அதாவது உலக அரசாங்கங்களுக்கு “கீழ்ப்படிய” வேண்டுமென அதில் அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். உலக அரசாங்கங்கள் “கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கின்றன” அல்லது “கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று அநேக மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கின்றன. (கிங் ஜேம்ஸ் வர்ஷன்; ஜெருசலேம் பைபிள்) சில ஆட்சியாளர்கள் தங்கள் கொடுங்கோல் ஆட்சியை நியாயப்படுத்த இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், உள்ளதை உள்ளபடியும், திருத்தமாகவும் சொல்வதில் தனிச்சிறப்புடன் திகழ்கிற புதிய உலக மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை, “தமக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. * இந்த வசனத்திலிருந்து நம்மால் எதைப் புரிந்துகொள்ள முடிகிறது? கடவுள் தனிப்பட்ட விதமாக உலக ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும், ஒருவருக்கொருவர் மேலான ஸ்தானத்திலோ கீழான ஸ்தானத்திலோ இருந்து அதிகாரம் செலுத்த அவர்களை அனுமதித்திருக்கிறார்; அதேசமயத்தில், எப்போதும் அவருக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானத்திலேயே இருக்க அனுமதித்திருக்கிறார்.

கிரேக்க வினைச் சொற்களின் நுட்ப வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதற்கும்கூட புதிய உலக மொழிபெயர்ப்பு முயற்சி எடுத்திருக்கிறது. பெரும்பாலான நவீன மொழிகளில், ஒரு செயல் நடந்தது இறந்த காலத்திலா, நிகழ் காலத்திலா, அல்லது எதிர் காலத்திலா என்பதைத் தெரியப்படுத்தும் விதத்தில் வினைச் சொற்கள் இணைக்கப்படுகின்றன. கிரேக்க வினைச் சொற்களும்கூட, ஒரு செயல் அப்போது நடக்கிறதா, முற்றுப் பெற்றுவிட்டதா, அல்லது தொடர்ந்து நடைபெறுகிறதா என்பதைக் காட்டுகின்றன. மத்தேயு 6:33-லுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். “நாடுங்கள்” என்பதற்கான கிரேக்க வினைச் சொல், தொடர்ந்து நடைபெறுகிற செயலைக் குறிக்கிறது. அதனால்தான் இந்த மொழிபெயர்ப்பு, “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று குறிப்பிடுகிறது; இவ்வாறு, இயேசுவின் வார்த்தைகளில் புதைந்துள்ள கருத்தை முழுமையாகத் தருகிறது. இதைப் போலவே மத்தேயு 7-ஆம் அதிகாரம் 7-ஆம் வசனமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது இப்படியாக வாசிக்கிறது: “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.”—இவற்றையும் காண்க: ரோமர் 1:32; 6:2; கலாத்தியர் 5:15.

முக்கிய வார்த்தைகளை முரண்பாடில்லாமலும் ஒரே விதமாகவும் மொழிபெயர்க்க புதிய உலக மொழிபெயர்ப்பு கடும் முயற்சி எடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஸ்டொரோஸ் என்ற கிரேக்க வார்த்தையை மற்ற மொழிபெயர்ப்புகள் “சிலுவை” என்றும் “மரம்” என்றும் மொழிபெயர்த்திருக்கின்றன; ஆனால் இந்தப் புதிய மொழிபெயர்ப்பு அந்த வார்த்தையை ஒரேவிதமாக “கழுமரம்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆகவே, கிறிஸ்தவ சர்ச்சுகள் கற்பிக்கிறபடி கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை என்றும் நேரான ஒரு மரக்கம்பத்தில்தான் இறந்தார் என்றும் வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.—மத்தேயு 10:38; 1 கொரிந்தியர் 1:17, 18; கலாத்தியர் 6:12, 14.

கடவுளுடைய வார்த்தையை உலகெங்கும் கிடைக்கச் செய்தல்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் தமிழில் வெளியிடப்பட்டது ஓர் ஆரம்பம் மட்டுமே. காலப்போக்கில் முழு பைபிளையும் மொழிபெயர்த்து முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஆங்கிலப் பதிப்பைப் போலவே தமிழ் பதிப்பும் திருத்தமாகவும் ஒத்திசைவாகவும் இருக்குமென வாசகர்கள் நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். ஏனென்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் நெருங்கிய மேற்பார்வையின்கீழ் இந்த மொழிபெயர்ப்பு வேலை நடந்திருக்கிறது. பைபிள் மொழிபெயர்ப்பை ஒரு குழுவாகச் செய்வதுதான் மிகச் சிறந்தது என ஞானமாகத் தீர்மானிக்கப்பட்டது. அதனால், உலகெங்கும் அநேக நாடுகளில் பைபிள் மொழிபெயர்ப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தக் குழுக்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எழும்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், பல்வேறு மொழிகளிலுள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு பதிப்புகள் ஒத்திசைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்கும் மொழிபெயர்ப்புச் சேவை என்ற இலாகா நியு யார்க், புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்தில் ஏற்படுத்தப்பட்டது. பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகிற அதிக பயனுள்ள கம்ப்யூட்டர் புரோகிராம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மொழிபெயர்ப்பு வேலைக்கு மனிதர்களுடைய உழைப்புதான் அதிகளவு தேவை. என்றாலும், பைபிள் மொழிபெயர்ப்புக் குழுக்களுடைய உயரிய லட்சியத்தை, அதாவது புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆங்கிலப் பதிப்பைப் போலவே திருத்தமாகவும் ஒத்திசைவாகவும் மொழிபெயர்க்க வேண்டுமென்ற லட்சியத்தை, எட்டுவதற்கு கம்ப்யூட்டர் வசதிகள் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு எபிரெய வார்த்தையும் கிரேக்க வார்த்தையும் ஆங்கிலப் பதிப்பில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த கம்ப்யூட்டர் புரோகிராம் காட்டுகிறது; மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழியில் அவற்றுக்கு இணையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.

இந்த ஏற்பாடுகள் எந்தளவுக்கு வெற்றி அளித்திருக்கின்றன என்பதை அவற்றிலிருந்து கிடைத்திருக்கும் பலன்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் பிரதியை நீங்களே வாசித்துப் பார்க்கும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். இந்தப் பத்திரிகையை வெளியிடுவோரிடமிருந்து நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த மொழிபெயர்ப்பிலுள்ள தெளிவான எழுத்துக்களையும், வசனங்களைச் சட்டெனக் கண்டுபிடிக்க உதவுகிற தலைப்பு வாசகங்களையும், அடிக்குறிப்புகளையும், விவரமான வரைபடங்களையும், ஆர்வத்தைத் தூண்டுகிற பிற்சேர்க்கையையும், இன்னும்பல விசேஷ அம்சங்களையும் பயன்படுத்தி மகிழ்வீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, இந்த பைபிள், கடவுள்தாமே சொன்ன வார்த்தைகளை புழக்கத்திலுள்ள மொழியில் திருத்தமாகத் தெரிவிக்கிறது என்ற நம்பிக்கையுடன் இதை நீங்கள் வாசிக்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

^ நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள்-ன் (1971) ஓரக் குறிப்புப் பதிப்பின் மேலுறையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது ஆர்வத்திற்குரிய விஷயம்: “எந்த அறிஞர்களின் பெயரையும் மேற்கோளுக்காகவோ சிபாரிசுக்காகவோ நாங்கள் குறிப்பிடவில்லை; ஏனென்றால், கடவுளுடைய வார்த்தை அதிலுள்ள தனிச்சிறப்புகளாலேயே மதிப்பிடப்பட வேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம்.”

^ கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் அடிப்படையிலேயே எபிரெய வேதாகமத்தின் வசனங்கள் “புதிய ஏற்பாட்டில்” மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், செப்டுவஜின்ட்டின் பிற்காலப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் காணப்படாததால், அப்பெயரை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமென அநேக அறிஞர்கள் வாதிடுகிறார்கள். இருந்தாலும், தற்போதுள்ள மிகப் பழமையான செப்டுவஜின்ட் பிரதிகளில் யெகோவா என்ற பெயர் மூல எபிரெய வடிவில் காணப்படுகிறது. ஆகவே, கிரேக்க வேதாகமத்தில் யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவது முற்றிலும் சரியே என்பது நிரூபணமாகிறது.

^ ஜி. அபாட்-ஸ்மித் எழுதிய புதிய ஏற்பாட்டின் ஒரு கிரேக்க கையேடு (ஆங்கிலம்), லிடெல் மற்றும் ஸ்காட் எழுதிய கிரேக்க-ஆங்கில அகராதி ஆகியவற்றைப் பாருங்கள். இவற்றின்படியும் இன்னும் பல நம்பகமான புத்தகங்களின்படியும், கிரேக்க பதத்தின் நேர்ப்பெயர்ப்பு, “வரிசைப்படி வைத்தல், உரிய இடத்தில் வைத்தல்” என்பதாகும்.

[பக்கம் 16-ன் படம்]

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் புதிய உலக மொழிபெயர்ப்பு

[பக்கம் 16-ன் படம்]

பைபிளை எழுதிய அப்போஸ்தலன் பவுலும் மற்ற எழுத்தாளர்களும் புழக்கத்திலிருந்த மொழியிலேயே அதை எழுதினார்கள்

[பக்கம் 18-ன் படம்]

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் சிறப்பம்சங்கள்:

[பக்கம் 18-ன் படம்]

பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் சினியாட்டிகஸின்படி, 1 தீமோத்தேயு 3:16.

[பக்கம் 18-ன் படம்]

மூல கிரேக்க வேதாகமத்தை முடிந்தவரை திருத்தமாகவும் சொல்லர்த்தமாகவும் எளிய, நவீன மொழியில் மொழிபெயர்ப்பதற்குப் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டது

[பக்கம் 18-ன் படம்]

தெளிவான எழுத்துக்கள்—பைபிளை ரசித்து வாசிக்க உதவுகின்றன

[பக்கம் 19-ன் படம்]

தலைப்பு வாசகங்கள்—வசனங்களைச் சட்டெனக் கண்டுபிடிக்க உதவுகின்றன

[பக்கம் 19-ன் படம்]

விவரமான வரைபடங்கள்—பைபிள் நில இயலை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன

[பக்கம் 20-ன் படம்]

“புதிய உலக மொழிபெயர்ப்பு” பைபிளின் தெளிவான மொழிபெயர்ப்பு, ஊழியத்திற்குப் பெரிதும் கைகொடுக்கிறது