மனச்சோர்வு மனதைவிட்டு மறைய
பல வருடங்களாக மனச்சோர்வோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற ரூத் சொல்கிறார்: “நானும் என் கணவரும் சேர்ந்து ஒரு சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தோம், வாழ்க்கைப்பாணியில் மாற்றங்களைச் செய்தோம், எனக்கு ஏற்றபடி தினசரி அலுவல்களை அரும்பாடுபட்டுத் திட்டமிட்டோம். நாங்கள் தேர்ந்தெடுத்த சிகிச்சை இப்போது பலன் அளிப்பதாகத் தெரிகிறது, நான் தேறியிருக்கிறேன். ஆனால், எதுவுமே பலனளிக்காததுபோல் தோன்றிய சமயத்தில், என் கணவரும் நண்பர்களும் தொடர்ந்து காட்டிய அன்புதான் தாக்குப்பிடிக்க எனக்கு உதவியது.”
ரூத்தின் அனுபவம் காட்டுகிறபடி, தீரா மனச்சோர்வால் அவதிப்படும் நோயாளிகளுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு தேவை, தக்க மருத்துவ உதவியும் தேவை. மனச்சோர்வை அசட்டை செய்வது ஆபத்தானது; ஏனென்றால், சிகிச்சை அளிக்காமல் விடப்படும்போது அது உயிருக்கே உலை வைக்கலாம். ‘வியாதியுள்ளவர்களுக்கு மருத்துவர் தேவை’ எனக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார்; ஆகவே, தேவையான உதவியை மருத்துவர்களால் அளிக்க முடியுமென்பதை அவர் ஒப்புக்கொண்டார். (மாற்கு 2:17) உண்மையில், மனச்சோர்வடைந்த நோயாளிகளின் வேதனையை மருத்துவர்களால் பெருமளவு குறைக்க முடியும். *
சில உதவிக் குறிப்புகள்
மனச்சோர்வுக்குப் பல சிகிச்சைகள் இருக்கின்றன; மனச்சோர்வின் அறிகுறிகளையும் தீவிரத்தையும் பொறுத்து அவை வேறுபடுகின்றன. ( “என்ன விதமான மனச்சோர்வு?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நிறையப் பேருக்கு அவர்களுடைய குடும்ப டாக்டரே உதவி செய்யலாம்; ஆனால் சிலருக்கு, மருத்துவ நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது. மனச்சோர்வை நீக்கும் மருந்துகளை அல்லது வேறு விதமான சிகிச்சைகளை மருத்துவர் சிபாரிசு செய்யலாம். சிலர் மூலிகை மருந்துகளினால், பத்திய சாப்பாட்டினால், அல்லது உடற்பயிற்சியினால் நல்ல பலன் கண்டிருக்கிறார்கள்.
பொதுவான பிரச்சினைகள்
1. அக்கறையுள்ள நண்பர்கள் மருத்துவ ரீதியில் அனுபவமற்றவர்களாக இருந்தாலும், எந்தச் சிகிச்சைமுறையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது எதை மறுக்க வேண்டுமெனச் சொல்வார்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் மூலிகை மருந்துகளைத்தான் சாப்பிட வேண்டும் என்றோ டாக்டர்கள் தரும் மருந்துகளைத்தான் சாப்பிட வேண்டும் என்றோ எந்தச் சிகிச்சையையும் எடுக்கக் கூடாது என்றோ அவர்கள் ‘சட்டம்’ போடலாம்.
உங்கள் கவனத்திற்கு: நம்பகமான ஆலோசனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கவனமாய் இருங்கள். முடிவில், நீங்கள்தான் எல்லாவற்றையும் அலசிப்பார்த்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும்.
2. மனவாட்டம் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெறுவதை நிறுத்திவிடலாம்; சிகிச்சையில் பலன் எதுவும் கிடைக்காததால் அல்லது மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுவதால் அவர்கள் அப்படிச் செய்யலாம்.
உங்கள் கவனத்திற்கு: “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.” (நீதிமொழிகள் 15:22) டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருந்தால் சிகிச்சை பெரும்பாலும் பலன் தரும். உங்கள் கவலைகளை டாக்டரிடம் மனம்விட்டுச் சொல்லுங்கள், உங்களிடம் தென்படும் அறிகுறிகளையும் விளக்குங்கள்; பின்பு, உங்கள் சிகிச்சையை மாற்ற வேண்டுமா அல்லது பலன் கிடைக்கும்வரை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டுமா என்று கேளுங்கள்.
3. மிதமிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாக, நோயாளிகள் சற்று தேறியதும் சில வாரங்களிலேயே சிகிச்சையைத் திடீரென நிறுத்திவிடுகிறார்கள். சிகிச்சையை ஆரம்பிப்பதற்குமுன் எவ்வளவு மோசமான நிலைமையில் அவர்கள் இருந்தார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
உங்கள் கவனத்திற்கு: டாக்டருடைய ஆலோசனையைக் கேட்காமல் திடுதிப்பெனச் சிகிச்சையை
நிறுத்திவிடுவது விபரீதமானது, அது உயிருக்கே ஆபத்தாகலாம்.பைபிள் ஒரு மருத்துவ புத்தகமாக இல்லாவிட்டாலும், அது நம்மைப் படைத்த யெகோவா தேவன் தந்த புத்தகம். மனச்சோர்வில் திண்டாடுகிறவர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் பைபிள் தரும் ஆறுதலையும் ஆலோசனையையும் பற்றி அடுத்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும். (g 7/09)
^ விழித்தெழு! எந்தவொரு சிகிச்சைமுறையையும் சிபாரிசு செய்வதில்லை. அவரவர்தான் எல்லாவற்றையும் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்துச் சொந்தமாய்த் தீர்மானிக்க வேண்டும்.