Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனச்சோர்வு மனதை என்ன செய்யும்?

மனச்சோர்வு மனதை என்ன செய்யும்?

“எனக்கு அப்போது 12 வயதிருக்கும். ஒருநாள் காலையில் எழுந்து, என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து, ‘இன்றுதான் நான் சாக வேண்டிய நாளா?’ என்று யோசித்தேன்” எனச் சொல்கிறார் ஜேம்ஸ். * அவர் அப்போது கடும் மனச்சோர்வின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தார். “என் வாழ்நாளெல்லாம் இந்த மனநோயோடு போராடியிருக்கிறேன்” என்று 30 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறார் ஜேம்ஸ். சிறுவயதில் வாழ்வதற்கே யோக்கியதை இல்லாததுபோல் உணர்ந்ததால் அவர் தன் சிறுவயது ஃபோட்டோக்களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டார். “மற்றவர்கள் என்னை நினைத்துப் பார்ப்பதற்குக்கூட நான் அருகதை இல்லாதவன் என்று எண்ணினேன்” என அவர் சொல்கிறார்.

நாம் எல்லாருமே அவ்வப்போது சோக உணர்ச்சிகளோடு போராடுகிறோம்; ஆகவே, மனச்சோர்வு என்றால் என்னவென்று நமக்குத் தெரியுமென நாம் நினைக்கலாம். ஆனால், தீரா மனச்சோர்வு என்றால் என்ன?

கொடூரமான கள்வன்

தீரா மனச்சோர்வு என்பது எப்போதாவது எட்டிப்பார்க்கும் சோகம் அல்ல, அனுதின காரியங்களைக்கூட செய்ய முடியாதளவுக்கு அடிக்கடி ஒருவரை ஆட்டிப்படைக்கும் சோகம்.

உதாரணமாக, ஆல்வரூ என்பவர் 40 வருடங்களுக்கும் மேலாக “பயம், குழப்பம், கலக்கம், கடுந்துயரம்” ஆகிய உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். “மனச்சோர்வின் காரணமாக, மற்றவர்களுடைய அபிப்பிராயங்களை ஏற்றுக்கொள்வது எனக்குச் சிரமமாக இருந்தது. என்ன தப்பு நடந்தாலும் அதற்கு நான்தான் காரணமென்ற குற்றவுணர்வு எப்போதும் என்னை வாட்டியது” என அவர் சொல்கிறார். மனச்சோர்வுக்கு அவர் தரும் விளக்கம்? “எங்கே வலியென பிடிபடாதளவுக்குப் பயங்கர வலி இருக்கும், இனம்புரியாத பயம் மனதைக் கவ்விக்கொள்ளும்; இன்னும் கொடுமை என்னவென்றால், இதைப் பற்றி வாய் திறக்கவே பிடிக்காது.” ஆனால், இப்போது அவர் ஓரளவு பரவாயில்லை. என்ன காரணத்தால் தனக்கு இப்படியெல்லாம் ஆகிறதென அவர் அறிந்திருக்கிறார். “எனக்கிருக்கிற அதே பிரச்சினை மற்றவர்களுக்கும் இருப்பதைத் தெரிந்துகொண்டபோது ஆறுதலாக இருந்தது” என்று அவர் சொல்கிறார்.

பிரேசிலில் மாரியா என்ற 49 வயது பெண் மனச்சோர்வால் பீடிக்கப்பட்டிருந்தார்; அதனால், தூக்கம் வராமல் திண்டாடினார், வலியால் துடித்தார், எரிந்து எரிந்து விழுந்தார், “மனம் எப்போதும் கனத்திருந்ததுபோல் உணர்ந்தார்.” அவரை மனநோய் பாதித்திருப்பது முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, தன் அவஸ்தைக்குக் காரணம் அதுதான் என்பதைப் புரிந்துகொண்டு சற்று நிம்மதியடைந்தார். “ஆனால், மனச்சோர்வைப் பற்றி நிறையப் பேருக்குப் புரியாது என்பதையும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பதையும் நினைத்தபோது என் கவலை அதிகரித்தது” என்று அவர் சொல்கிறார்.

வருத்தப்பட வேண்டியதில்லையா?

சிலசமயங்களில், மனச்சோர்வு ஏற்பட திட்டவட்டமான காரணம் இருக்கலாம் என்றாலும், பெரும்பாலான சமயங்களில் அது கள்ளத்தனமாக ஒருவரது வாழ்வில் நுழைகிறது. “காரணமே இல்லாமல் திடீரென உங்கள் வாழ்க்கை சோக மேகங்களால் இருண்டுவிடும். உங்களுக்குத் தெரிந்த யாரும் இறந்திருக்க மாட்டார்கள், துயரச்சம்பவம் எதுவும் நிகழ்ந்திருக்காது. இருந்தாலும், வாழ்க்கையே வெறுத்துப்போய் பிரமைபிடித்தது போல் ஆகிவிடுவீர்கள். என்ன செய்தாலும் அந்த மேகங்களை விலக்க முடியாது. விரக்தியின் எல்லைக்கே போய்விடுவீர்கள், காரணம் உங்களுக்கே புரியாது” என்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு சொல்கிறார்.

மனச்சோர்வு வெட்கப்பட வேண்டிய விஷயமில்லை. ஆனாலும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தபோது, பிரேசிலைச் சேர்ந்த ஆனா கூனிக்குறுகிப்போனார். “சொல்லப்போனால், இப்போது எட்டு வருடங்கள் ஆன பிறகும் என்னைப் பற்றி நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது” என அவர் சொல்கிறார். குறிப்பாக, கடும் மனவேதனையைச் சமாளிப்பது அவருக்கு மிகக் கஷ்டமாக இருக்கிறது. “சிலசமயங்களில் மனம் வலியால் துடிதுடிக்கும்போது என் உடலும் சேர்ந்து வலிக்கும். உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒவ்வொரு தசையும் நோகும்” என்று அவர் விளக்குகிறார். அதுபோன்ற சமயங்களில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கக்கூட முடியாது. இன்னும் சில சந்தர்ப்பங்களில், ஆனாவால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாது. “நான் குமுறிக் குமுறி அழுது அப்படியே துவண்டுவிடுவேன்; இரத்த ஓட்டமே நின்றுவிட்டதுபோல் இருக்கும்” என்று அவர் சொல்கிறார்.

“காரணமே இல்லாமல் திடீரென உங்கள் வாழ்க்கை சோக மேகங்களால் இருண்டுவிடும்”

மனிதர்கள் உயிர் போகும் அளவுக்குத் துக்கத்தில் தவிக்கலாம் என்று பைபிள் ஒப்புக்கொள்கிறது. உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அவன் ‘ஒரேயடியாக வருத்தத்தில் ஆழ்ந்துவிட’ வாய்ப்பிருந்ததைச் சுட்டிக்காட்டினார். (2 கொரிந்தியர் 2:7) மனச்சோர்வடைந்த சிலர் எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் பித்துப்பிடித்ததைப் போல் ஆகிவிடுவதால், செத்தால் போதுமென நினைக்கிறார்கள். யோனா தீர்க்கதரிசியைப் போல், “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என்று அநேகர் நினைக்கிறார்கள்.—யோனா 4:3.

மனச்சோர்வடைந்தவர்கள், வேதனையளிக்கும் இந்த வியாதிக்கு என்ன சிகிச்சை பெறலாம், அதை எப்படிச் சமாளிக்கலாம்? (g 7/09)

^ இந்தத் தொடர் கட்டுரைகளில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.