மொட்டுகள் மலர்ந்து மணம்வீச . . .
மொட்டுகள் மலர்ந்து மணம்வீச . . .
கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
◼ “டிவி மூலம் அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள முடியும் . . . [ஆனால்] எதையும் செய்யாமல் குத்துக்கல்போல் மணிக்கணக்காக சின்னத்திரைமுன் உட்கார்ந்துகொண்டிருப்பது சிறுவர்களின் உடலையும் உள்ளத்தையும் சீரழிக்கிறது” என்று த நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. ஆம், டிவி கற்பனைத் திறனை வளர்த்துக்கொள்ள முட்டுக்கட்டையாய் அமைகிறது, கற்றுக்கொள்வதற்குத் தடைவிதிக்கிறது, சமூக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது; இப்படியாக, பிள்ளைகள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் திருடிக்கொள்கிறது.
அமெரிக்கா, வாஷிங்டன், சீயட்டில் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டிவி பார்க்கும் பழக்கமுள்ள 2,500 பிள்ளைகளை வைத்து ஆராய்ச்சி நடத்தினார்கள். அவர்களது முடிவு? “ஒரு வயதுமுதல் மூன்று வயதுவரை சின்னத்திரையை அதிகம் பார்க்கும் சின்னஞ்சிறுசுகள் ஏழு வயதாகும்போது கவனம் செலுத்த முடியாத பிரச்சினைகளால் அதிகம் அவதிப்படுவதாக அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது. இந்தப் பிள்ளைகள் மகா முரடர்களாக, துளியும் பொறுமை இல்லாதவர்களாக, அதிக நேரம் கவனம் செலுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். “இப்படிப்பட்ட பிள்ளைகளை உடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகள் டிவி பார்ப்பதைத் தடை செய்து பார்த்தார்கள்; அப்போது பிள்ளைகள் கவனம் செலுத்துவதில் நல்ல முன்னேற்றம் செய்ததைக் கண்டுபிடித்தார்கள்” என்று கல்விசார்ந்த உளவியல் நிபுணரான டாக்டர் ஜேன் எம். ஹிலி சொல்கிறார்.
பிள்ளைகள் டிவி பார்க்கும் நேரத்தைக் குறைப்பதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்? அந்த அறிக்கை பின்வரும் ஆலோசனைகளைத் தந்தது: ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளை எப்போது டிவி பார்க்க வேண்டும், எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்ற வரம்புகளை வையுங்கள். சின்னத்திரையை உங்கள் பிள்ளையின் “ஆயா” ஆக்கிவிடாதீர்கள். மாறாக, முடிந்தவரை உங்கள் பிள்ளையையும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துங்கள். எந்தெந்த நிகழ்ச்சிகளைப் பிள்ளை டிவியில் பார்க்கலாம் என முடிவுசெய்யுங்கள்; அந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் டிவியை அணைத்துவிடுங்கள். உங்களுக்கு முடிந்தபோதெல்லாம், அந்த நிகழ்ச்சிகளை உங்கள் பிள்ளையோடு சேர்ந்து பாருங்கள்; அதைப் பற்றி பேசுங்கள். கடைசியாக, நீங்கள் டிவி பார்ப்பதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
கற்பனை வளத்தையும் எல்லாருடனும் சகஜமாகப் பழகுவதற்கான திறனையும் பிள்ளைகளில் ஊட்டி வளர்ப்பதற்கு நேரமும் திடதீர்மானமும் சுயகட்டுப்பாடும் அவசியம். இதற்கு நீங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் வீணாகாது, கைமேல் பலன் கிடைக்கும். இதைப் பூர்வகால பழமொழி ஒன்று உறுதிப்படுத்துகிறது. ‘நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவன் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டான்’ என்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 22:6, பொது மொழிபெயர்ப்பு) பிள்ளைகளை இப்படிப் பழக்குவதில், சரியான ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுப்பது முக்கிய அம்சமாய் இருக்கிறது.
அந்த ஒழுக்கநெறிகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி, பலன் அடைகிறார்கள். பெற்றோரே, மொட்டுப் பருவத்திலேயே உங்கள் பிள்ளைகளுடன் நன்கு பேசுங்கள், அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது, நிரந்தரமான நன்மைகளை நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகள் பொறுப்பானவர்களாகவும் பண்பானவர்களாகவும் வளர்ந்து ஆளாவதைக் கண்குளிரப் பார்ப்பதைவிட உங்களுக்கு வேறென்ன வேண்டும்? (g 6/09)