Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகைக் கவனித்தல்

உலகைக் கவனித்தல்

உலகைக் கவனித்தல்

◼ “அமெரிக்க நாட்டு இளம் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் 20 வயதை எட்டுவதற்கு முன்பே தாய்மை அடைகிறார்கள்.”—நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள், அ.ஐ.மா.

◼ வீட்டில் வன்முறைக்கு ஆளானவர்களைக் குறித்த ஓர் ஆய்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டது; 420 ஆண்களைப் பேட்டி கண்டதில், அவர்களில் “கிட்டத்தட்ட பத்தில் மூன்று பேர் வீட்டில் அடிவாங்கியிருந்தார்கள் அல்லது வேறு விதங்களில் கொடுமைக்கு ஆளாகியிருந்தார்கள்.”—அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின்.

பிள்ளைகளும் பல பாஷைகளும்

சிறுபிள்ளைகளுக்கு வேறொரு மொழியைக் கற்றுக்கொடுத்தால், தாய்மொழியை அவர்களால் சரளமாகப் பேச முடியாமல் போய்விடுமோ என்று பெற்றோர் பலர் பயப்படுகிறார்கள். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர்மாறாகவே நடப்பதாகக் கனடாவிலுள்ள டோரான்டோவில் நரம்பியல் நிபுணரான லாரா-ஆன் பட்டிடோவின் தலைமையில் செயல்படும் ஓர் ஆய்வுக் குழு தெரிவிக்கிறது. “மொழியைக் கற்றுக்கொள்ளும் திறனை அளிக்கும் நரம்பு திசு நாம் பிறக்கும்போதே . . . செயல்படத் தயாராக இருக்கிறது, அது பல மொழிகளைக் கற்கும் திறனை அளிக்கிறது” என்கிறார் பட்டிடோ. பள்ளியில், ஒரேவொரு மொழி தெரிந்த பிள்ளைகளைவிட பல மொழிகளைத் தெரிந்த பிள்ளைகள் பெரும்பாலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், “பல மொழிகள் பேசத் தெரிவதால் வரும் எல்லா நன்மைகளையும் சிறுபிள்ளைகள் பெற வேண்டுமென பெற்றோர் விரும்பினால், அவர்கள்தான் முயற்சியெடுத்து பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று டோரான்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. (g09 10)

ஆபாசத்தால் அதிர்ச்சியடையும் அரும்புகள்

இப்போதெல்லாம் பிள்ளைகள் சின்னஞ்சிறு வயதிலேயே கெடுதல் விளைவிக்கிற ஆபாசக் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் இன்டர்நெட் வீடியோக்களில் பார்க்கிறார்கள். மொழிநூல் வல்லுநர்களின் ஜெர்மானியக் குழுத் தலைவரான ஹைன்ட்ஸ்-பேட்டர் மைடிங்காவின் கருத்துப்படி, 12 வயதை எட்டிய அல்லது அவ்வயதைத் தாண்டிய சிறுவர்களுக்கு, பயங்கர வன்முறைக் காட்சிகளையோ படுமோசமான ஆபாசக் காட்சிகளையோ எந்த வெப்சைட்டுகளில் எப்படிக் கண்டுபிடிப்பதென தெரிகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், பிள்ளைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுபோல் தெரியலாம்; ஆனால் உள்ளுக்குள், அவர்கள் அந்தக் காட்சிகளால் அதிர்ச்சி அடைகிறார்கள், அமைதி இழக்கிறார்கள். பிள்ளையின் மனதில் என்ன இருக்கிறதெனத் தெரிந்துகொள்வதில் பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மைடிங்கா சொல்கிறார்; அதேசமயத்தில், பிள்ளையின் கம்ப்யூட்டர்மீது அவர்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். (g09 10)

விவாகத்திற்கு முன்பே விவாகரத்திற்குத் திட்டம்

சிட்னியில் வெளியாகும் சன்டே டெலிகிராஃப் அறிக்கையிடுகிறபடி, ஆஸ்திரேலியர்களில் என்றுமில்லாத அளவுக்கு அதிகமானோர் இன்று திருமணத்திற்கு முன்பாக ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறார்கள்; அவற்றில், திருமணத்திற்குப் பின் தங்கள் மணத்துணை இன்னின்னபடிதான் இருக்க வேண்டுமென எழுதி கையெழுத்திடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒப்பந்தங்களில், ஒருவேளை விவாகரத்து செய்துகொண்டால் சொத்துக்களை எப்படிப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென விவரமாக எழுதிவிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன வாழ்க்கைப்பாணியைப் பின்பற்றினால்தான் சேர்ந்து வாழ முடியும் என்பதைக்கூட பலர் எழுதிவிடுகிறார்கள். சமைப்பது யார், சுத்தம்செய்வது யார், வண்டி ஓட்டுவது யார், நாயை ‘வாக்கிங்’ கூட்டிப்போவது யார், குப்பையைக் கொண்டுபோய் கொட்டுவது யார், செல்லப்பிராணிகளை வளர்க்கலாமா கூடாதா, ஒவ்வொருவரின் உடல் எடையும் எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம்கூட சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். மக்களுக்கு, “தங்கள் மணவாழ்வு என்றும் நீடிக்குமென்ற நம்பிக்கை மிகக் குறைவாக இருக்கிறது” என க்ரிஸ்டின் ஜெஃப்ரெஸ் என்ற வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். (g09 10)

பாசமறியாத பெற்றோர்

“பெற்றோர் பலருக்கு, தங்கள் சின்னஞ்சிறுசுகளை எப்படி நடத்த வேண்டுமென விளக்கும் கையேடு தேவையாக இருக்கிறது; ஏனென்றால், இயல்பாகவே பாசம் காட்டும் திறன் அவர்களுக்கு இல்லாததுபோல் தெரிகிறது” என நியூஸ்வீக் போல்ஸ்கா என்ற போலந்து நாட்டுப் பத்திரிகை சொல்கிறது. பிள்ளைகளை அள்ளி அணைப்பது, அவர்களோடு விளையாடுவது, அவர்களுக்காகப் பாட்டுப் பாடுவது போன்ற சாதாரண விஷயங்களைக்கூட அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் பிள்ளை நன்கு வளருவதற்கு மிக அவசியம். ஆனால் ஓர் ஆராய்ச்சியின்படி, “போலந்து நாட்டில் பொதுவாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடும் காரியங்களில் முதல் இடம் பிடிப்பது, டிவி பார்ப்பதும், கடைக்குப் போவதும்தான்.” சேர்ந்து விளையாடுவது ஆறாவது இடத்தையே பிடித்திருக்கிறது. (g09 10)